ஐயன் பந்தி - 22
நெருப்பு
திருவாடல் - 9
தூயதை மட்டும் கோரும் தெய்வங்களுக்கு கொடுக்க நம்மிடம் எதுவுண்டு? இனி வருபவளோ பெருங்கருணையின் பேரூற்று, எளியவள், எச்சிலும், மிச்சிலும் கூட போதும் என வந்தவள். நம் மனதை விட எச்சிலான பண்டம் எது? அதை விடவும் அழுக்கும் குப்பையும் நிறைந்த இடமொன்று உண்டா? நம் மனமெனும் குப்பைக் குவியலின் மேல் அரியணையென வீற்றிருந்து யாழ் மீட்டுபவள். இவளைப்போல் மானிடரின் குறை அறிந்து ஏற்கும் இன்னொரு தெய்வம் இவ்வுலகிலில்லை. குற்றங்கள் மட்டுமே கொண்டவரையும் விலக்காமல் அவர் குற்றங்களையே குணங்கள் எனக் கொள்பவள்! நாமனைவரும் எளிய கை கால் உதறி விளையாடும் மழலைகளே அவள் மடியில். அவள் வயிற்றில் சுமந்திருக்கும் கருவுக்குள் நிறைந்து, அவளையே உண்டு அவளின் உள்ளேயே உறங்கும் குழந்தைகள். எதன் பொருட்டும் கைவிடாத ஒரே தெய்வம். குறைகள் முற்றும் இல்லாத முழுமையும் தூயதான ஒருவன் அவளைக் கடந்து போகக்கூடும். அப்போதும் அவள் கைவிட்டதால் அல்ல.
இவளே உங்களுக்கு மூன்றாம் மகவாக பிறப்பாள். முறிந்த பழஞ்சுளவால் ஏந்தி, பழந்துணியால் சுற்றி வையுங்கள். புளித்த பனங்கள்ளை நகக்கண் அளவு தொட்டு அவள் நாவில் சேனை தீட்டுங்கள். நாம் உண்டு வயிறு நிறைந்த பின், அதன் மிச்சிலை ஊட்டினாலும் மகிழ்வாள். மகிழ்வு என்பது தவிர வேறொன்றையும் அவள் அறிவதே இல்லை. துயர் அவளை அண்டுவதே இல்லை. என்றும் இனிமை இனிமை என்றே நிறைந்திருப்பவள். அவளுக்கு புறம்பானது என எதுவும் இங்கில்லை. ஊருக்கு புறம்பில் ஈமக்கடன் கழியும் இடங்களிலே கூட சென்று கோவில் கொண்டு அமர்வாள்.
அவளைச் சினம் கொள்ளச் செய்வது, ஒன்றே ஒன்று தான். எளியோரின் மேல் கருணை கொள்ளாத வலிமையை அவள் வெறுக்கிறாள். அத்தகைய கருணை துளியுமற்ற வலியவரின் உடல் கிழித்து அள்ளிய குடலை பின்னி மாலையாக சூடிக்கொள்வாள். சுடலை நெருப்பென அவர்கள் மேல் பற்றி எரிந்து நடலை ஆடுவாள். கொடுமைகள் பல செய்தவராயினும், பிழையுணர்ந்து ஒரு முறை 'அம்மா' என அழைத்தாலும் போதும் கருணைகொண்டு மீண்டும் மழலை என அவர்களை தன் மடியில் ஏந்திக்கொள்வாள். அறிக! பிழையுணராதவரை மட்டும், அவள் ஒருபோதும் பொருப்பதில்லை.
அவ்வாறு முதுவன் சொன்னபடி, எண்ணாகங்களில், ஒருவனான கார்கோடகனின் அருளால் அரவரசியாள் மூன்றாவது முட்டையை இட்டாள். பேறாச்சி அலரி அம்முட்டையை உலைந்த பழஞ்சுளவால் ஏந்தி, மெல்ல ஓடு உடைத்து, கிழிந்த பழந்தானைகளால் பொதிந்து வைத்தாள். உடல்முழுதும் கருத்திருந்த அரவசரசியாள் முதல் முலையூட்டிய பின், புளித்த பனங் கள்ளின் துளியை குழந்தையின் நாவில் சேனையாக வைத்தாள். அதையும் சொட்டையிட்டு உண்டு, மகிழ்ந்து உறங்கியது குழந்தை. பறந்து விரிந்த கண்களை கொண்டிருந்த அவளுக்கு அங்காளி எனவும் அங்கண்ணி எனவும் பெயரிட்டார் முதுவன். கரிய நிறமும் அழகும் கொண்டு பொலிந்தாள் அங்காளி.
ராக்காயி பிறந்து ஆறு முழு நிலவுக்காலங்கள் கழிந்து, சுருண்ட நாக வெள்ளி தோன்றிய கரு இரவில், அரசியாளையும், வளைஞனையும் அருகமர்த்தி, கார்கோடகன் எனும் கருநாகத்தின் மந்திரத்தை அருளினார் முதுவன். "மண்ணில் வேர்கள் பின்னியிருப்பது போல, இவ்வுலகின் ஆதாரம் என அமைந்தவை நாகங்கள். அவை பின்னி பின்னி உண்டாக்கி முடைந்த ஒரு கூடையே இவ்வுலகு. அதில் மூன்றாவதாகிய கார்கோடகனை தொழுதிருங்கள். அன்னையின் பாலிலும் துளி நஞ்சுண்டு. அந்நஞ்சு என கரந்துரைபவன் அவனே" என்றார்.
அவ்வாறு முதுவன் கூறிய வரைமுறைப்படி தொழுது வணங்கியிருந்த போது, மலையின் மேல் புறத்தில் பெருமழை பெய்து பெரும் பிரவாகமாக நதி ஒன்று ஓடி வந்து தாழ்வாரம் நிறைத்தது. பதினோரு நாட்கள் விடாது பெய்த பெருமழை வெரித்து வெள்ளம் வடிந்தபோது, முகடு பின்னி நின்ற தண்டு பருத்த இரட்டை வேங்கை மரத்தின் இடையில் வந்து சேர்ந்திருந்த அதனை மலைச் சரிவில் ஏறி அண்டியிருந்த மக்கள் கண்டனர். கொடும் இரவொன்று கழிந்து புது ஒளி பாய்ச்சி உயர்ந்த கதிரவனின் கிரணங்கள் அதன் மேல் விழுந்து ஊடுருவி பசிய நிறம்கொண்டு மின்னி ஒளிர்ந்தது. அவ்வொளியைக் கண்டு கூவிச் சிரித்தபடி முதலில் இறங்கி ஓடினாள் பூங்கன்னி. அவள் தாழ்வாரம் அடைந்து பொன்னொளி என பூத்து தலை விரித்து நின்ற வேங்கை மரங்களின் கீழே, சலத்து சலத்து ஓடும் புது நதிக்குள் இறங்கி, நீரை அலைந்து கலைத்தப்படி சென்று, அந்த பசுமை ஒளிரும் கல்லை தூக்கி தலைக்கு மேல் உயர்த்திய கணத்தில் ஓங்காரமாய் அலறி துள்ளி திரும்பி நின்றாள். அது கண்ட மன்று திகைத்து நின்ற இடத்தில் நின்றது. பொன்மகுடம் சூடி நின்ற வேங்கை மரங்களின் தலைப்பின் கீழ் கரிய பெருநிழல் என்ற அவளைக்கண்டிருந்த, அனைவரின் கைகளும் அவர்கள் அறியாது தலைக்கு மேல் கூப்பி உயர்ந்தன. புல், பூண்டு, இலை தலைப்பில் ஊரும் சிறு புழுக்கள் முதல் யானை வரை மண்ணிலும் விண்ணிலும் உள்ள அனைத்துக் காணுயிர்களும், வானுயிர்களும் ஒருகணம் மிளிரும் கண்ணொளிர அவள் நின்ற திசை நோக்கி திரும்பின. காற்றும் நின்று அவளை நோக்கிக்கொண்டிருந்தது. அவை அறிந்தன, அதுவே கருணை என்று. அன்னையின் உடல் வெப்பத்தில் சிறகுகளுக்குள் ஒடுங்கும், சிறு குஞ்சு பறவைகளென, அவை மெல்ல உடல் குழைந்தன. எல்லாம் முழுமை கொண்ட ஒற்றை பேரண்டம் ஒன்று தோன்றியது அக்கணம். அங்கு குறைகள் என்பதே இல்லை. குறைகள் என எதனையும் அவள் காண்பதில்லை. மெல்லிய புன்னகையோடு பூவை நீரில் சரிந்தாள். அவள் தொட்டு தூக்கியிருந்த பச்சைக்கல், நிமிர்ந்து ஒளிர்ந்தபடி, அவள் கைபிடிக்குள் இறுக அகப்பட்டு அவள் மார்பின் மேல் அமர்ந்திருந்து. அவ்வொளியையே கண்டபடி மன்றின் மக்கள் அனைவரும் 'அம்மா' என அரற்றிக்கொண்டு ஓடி வந்தனர். மண்ணின் மேல், நீரில் உடல் மூழ்கி மல்லாக்க சரிந்து, மார்பில் பச்சைகல்லோடு, அசைவில்லாது கிடந்தாள் பூங்கன்னி.
சூழ்ந்து நின்ற மன்றுக்கு பின்னாலிருந்து முதுவனின் குரல் மட்டும் எழுந்தது, "அவள் தெய்வமானாள்". பின் தண்டூன்றி மெல்ல கூட்டத்தை கலைத்துக்கொண்டு முன்னால் வந்தார். பூவை வயிறு நிறைந்திருந்தாள் என்பதை முன்பே அறிந்திருந்த அலரி, மெல்ல அவள் வயிற்றை தடவி பார்த்துவிட்டு "அண்டமும் நிறைந்தது" என்றாள். முதல் மகளான பேச்சியின் பிறப்புக்கு பின் மலையாள வனக்குடியில் மெல்ல கன்றுகாலிகள் சினை பிடிக்கத்துவங்கின, அதன் பின் பெண்களில், முதன் முதலில் கருக்கொண்டவள் பூங்கன்னியே.
"புற்று மண்கொண்டு வந்து, இங்கையே அவளுக்கு நிலையம் விடுங்கள்" என்றார் முதுவன்.
ஆணும், பெண்ணும் மன்றில் உள்ள அனைவரும் சேர்ந்து, புற்றுக்கள் படர்ந்திருந்து வட்டவன மலையின் தென் சரிவில், புற்றுகளை சீண்டாமலும், ஆழத்தோண்டாமலும் , மேல் தரையை மட்டும் கிளறி, மண்ணை அள்ளிவந்து அவளைச் சூழவும் கொட்டி மூடினர். அவள் கையில் பிடித்திருந்த கல்லை மட்டும் மண்மேட்டுக்கு மேல் நிற்க விட்டு அவளது உருவத்தின் வடிவிலேயே நிலையம் சமைத்தனர்.
"முதுவனே, இவளுக்கு பலியும் படையலும் என்ன?" என்றாள் அலரி.
"இவளே இனி பிறக்கப்போகிறவள். உரிய காலம் வரும் போது அவளே அறிவிப்பாள். அதுவரை காத்திருப்போம். இவளை விடவும் கருணை கூர்ந்த தெய்வம் இவ்வுலகில் இல்லை. அவள் எதையும் ஏற்பாள்" என்று முதுவன் கூறிய போது தெற்கில் இருந்து சுழன்று வந்த காற்றில், தங்கள் தலைகளை சிலுப்பி, மஞ்சள் பூக்களை உதிர்த்தன வேங்கை மரங்கள்.
"தெய்வம் எழுந்தருள பீடம் காத்திருக்கிறது" என்றாள் அலரி.
"ஆம். இந்நீரின் வழி சற்றே விலகி வடபுறமாக ஒதுங்கி செல்லும். இவளைச்சுற்றி, எண்ணாகங்களும் புற்றிடங்கொண்டு குடியேறும். இவ்வனம் முழுதும் வாழும் பல குடிகளிலும், நெருப்பை பேணி, இறந்த உடலை நெருப்பினால் சுட்டு மீண்டும் இவ்வுலகிற்கே திருப்பி அளிப்பது இம்மலையாள வனக்குடி மட்டுமே. இனி அவ்வீமக்கடன்கள் இங்கே இவள் அருகிலேயே நிகழட்டும். கரையேற்றி விடும் தெய்வம்"
அது நடந்த மூன்றாம் நாளில், மலையேறி வட்டவன முகட்டில், அரசியாளுக்கும், வளைஞனுக்கும், நடந்தது அறிவிக்க சென்ற போது, அரசிக்கு நாட்கள் தள்ளி சென்றிருப்பதை அறிந்து கொண்டாள் அலரி.
இவ்வாறு கார்கோடகனைத் தொழுது, அங்காளியை அரவரசியாள் கருக்கொண்டதும், பெற்றதும் ஏட்டிலிருந்து படித்துவிட்டு, ஏடுகளின் குறுக்கே, அவற்றை சேர்த்து கட்டியிருந்த நூலையே இட்டு, அடையாளம் வைத்தான் நாகன்.
"கன்னியே, எப்பேர்பட்ட தவமிது, தெய்வங்களே வந்து அரவரசியாளின் மடி நிறைகின்றன" என்றான் நாகன்.
திண்ணையில், நான் சொன்ன கதையை கேட்டு கொண்டிருருந்தனர் அனைவரும்.
"எல்லாம் ஒரே கதை தான் இல்லயா?" என்றார் ஐயர்.
"காலம்பூரா ஓடுற ஆறு, எல்லாக்கரையிலையும் அதே தண்ணீ தான" என்றார் கோவிந்தன் தாத்தா.
"ஆமா டா, கோவிந்தா, அதனால தான, காலத்தை சக்கரம்னு சொல்றா " என்றார் ஐயர்.
"இதுல நாகன் ஏட்டுல இருந்து படிக்கிற கதை, உங்க பேச்சி கதைலையும் உண்டா" என்று மலைகாணியை பார்த்து கேட்டார் தாத்தா.
"ஆமாயா, அவ தான் மூணாவது முட்டையில இருந்து பிறந்த அங்கண்ணி" என்றார் மலைக்காணி
"அண்ணேன், அப்ப அடுத்து பிறக்கிறது, முப்பிடாரியா ?" என்றேன் ஆர்வம் மேலிட.
"ஆமாம், இளையா அவ தான்" என்றார் மலைக்காணியும்.
மீனாக்ஷி பாட்டி "அது சரி" என ஒருமுறை கையைக் கொட்டி சிரித்து விட்டு, "அப்ப அடுத்த கதைய நீ சொல்லு வைரம்" என்றாள்.
"அதுக்கு முன்ன இந்த மகிஷன் என்னானானு சுந்தரம் சொல்லி முடிச்சிடட்டுமே" என்றார் ஐயர்
"ம்.. சரி" என்றாள் ஆச்சி.
மகிஷபுரி பட்டிணம் விட்டு, மரவுரி உடுத்து, தண்டும், கோளும் கொண்டு கயிலை நோக்கி பொழுது அணையத்துவங்கிய போது புறப்பட்டான் மகிஷன். அவன் கோட்டை விட்டு ஏழு காத தூரம் கடந்த போது, இருளில் புகையென, கொடு நச்சரவின் வாசம் வந்து சூழ்ந்து, அவனை நிலைகுலையச் செய்தது. திகைத்து நால் புறமும் நோக்கினான். அப்போதும், கரிய நிறத்தில் ஆடை உடுத்தி, மற்றோர் நீண்ட கருஞ்சேலையால் முக்காடிட்டு அவள் வந்தாள்
"யார் நீ?" என்றான் மகிஷன்
"காரி, எண்ணாக குலங்களில், கார்கோடக குலத்தில் பிறந்தவள்" என்றாள்
"என்ன?"
"ஒரு தாக்கல் சொல்லிவிட்டு செல்லலாம் என வந்தேன்"
"தவக்கோலம் பூண்டிருப்பது தெரியவில்லையா, கோட்டைக்கு சென்று முறியிடுக, அங்கு நிர்வாகிகள் எண்மர் உண்டு"
"இல்லை மகிஷனே, இது உனக்கு மட்டுமே தெரிவிக்கபட வேண்டிய ஒன்று"
"என்னை பெயர் சொல்லி அழைக்கிறாயா ?, அரசர்கரசன் என அழை" என்றான்.
"எனக்கு, இப்பிறவியில் ஒரே அரசி தான் உண்டு. அது நீயல்ல" என நகைத்து விட்டு, "தவம்புரிய செல்பவனுக்கு ஏது அரசு?"
"சரி, நானே தவமிருக்க செல்கிறவன், என்னிடம் சொல்ல உனக்கு என்ன இருக்கிறது" என்று சற்றே உதடு நெளிய கேட்டான்.
அக்கணம், தன் தலையில் முக்காடாக இட்டிருந்த கரிய போர்வையை வலக்கையால் சுழற்றி நீக்கி, மூன்றரைச்சுருளாக சுருண்டு கருமை மின்னும் உடலுடன், மகிஷனின் தலைக்கும் மேலே உயர்ந்து, சொடுக்கிய கருநாக படமென விரிந்தாள் காரி . நிகழ்ந்தது என்னவென்று அறியும் முன்னே, மகிஷனின் கைகள் அவளை நோக்கி தொழுதிருந்தன. அவள் முன் தலை குனிந்து ஒரு முறை வணங்கி நிமிர்ந்த போது, காரியாள் மீண்டும் எளிய மானுட உருக்கொண்டு அவன் முன் நின்றாள்.
"வா" என்று அழைத்துவிட்டு, ராஜபாட்டை விட்டிறங்கி, கரிய இலைத்தலைப்புகளை விலக்கிக்கொண்டு, அதன் பக்கவாட்டில் இருந்த வனப்பகுதிக்குள் நுழைந்தாள். அவள் அழைத்த திசையில் அவளோடு கூட அவனும் சென்றான். ஒரு முறை மானுடப்பெண்ணென செல்பவள் மறுமுறை கரிய நாகம் என ஊர்ந்தாள். திகைத்த விழிகளுடன் அவளை தொடர்ந்தான் மகிஷன். ஊர்ந்து வளைந்து சென்ற ஒற்றைவழி பாதை. முழு நிலவின் ஒரு கீற்றும் உள்ளே நுழையாத படி இறுகி இலைகளும், கிளைகளும் ஒன்றோடு ஒன்று பின்னி முடைந்து கூறையாக மூடியிருந்ததனின், கீழே, என்னவென்று அறியவியலா சாம்பல் நிற வெளிறலில், கருநாகத்தின் திண்ணென்ற உடல் போல கிடந்தது அவ்வழி. கரிய புகை போல, பனி சூழ்ந்து உடல் குளிர்ந்தது. அவ்வாறு அவ்வழி நடந்து முழு முற்றும் திறந்தகிடந்த ஒரு பெருவெளிக்கு வந்து சேர்ந்தனர். மெல்லிய புழுதியாக திரிந்த மண் விரிந்த பெருவெளி, அதன் மேல் நக்ஷத்திரங்கள் விதைத்த வளைந்த விதானத்தின், மையத்தில் வெண்மஞ்சள் நிறத்தில் நிலவு சுடரென ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவ்விரவிலும் அம்மண் கனலென கனன்று கொண்டிருந்தது.
அவ்வெளியின் மையத்தில் வட்டமான மண் திண்ணையில், எட்டு திசைகளை நோக்கி எட்டு நாகவடிவங்கள் ஊன்றி வைக்கப்படடிருந்தன. திண்ணையை சுற்றியும் மண்ணில், பலவகை பால் மரங்களில் இருந்து எடுத்த பாலும், மரப்பிசினும் கலந்து கட்டப்பட்ட, கவிழ்த்திட்டு கலங்கள் போலிருந்த வீடுகள் வரிசையாக இருந்தன. இங்கும் அங்குமாக ஆண்களும் பெண்களும் சீறி மூச்சு விட்டபடி அலைந்து கொண்டிருந்தனர். இங்கிருந்து அங்கே நடந்து சென்றவர்கள், சில அடிகள் கடந்த போது நாகமென மாறி ஊர்வது போல தோன்றினர். சிலர் நாகங்கள் என அருகில் வந்து, மனிதர்களாக எழுந்தனர். சிலர் மனிதர்கள் என அருகணைந்து சீறி நாகங்களாக மாறி ஊர்ந்தனர். காண்பது நாகங்களையா மனிதர்களையா என்பது புலனுக்கோ, புத்திக்கோ எட்டவில்லை. அவர்கள் எவரும் விழிகளை இமைக்கவில்லை. யாரும் யாருடனும் உரையாடிக் கொள்ளவுமில்லை. அங்கு மூச்சின் சீரல் ஒலி மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது என்பது அறிந்து திகைத்தான் மகிஷன்.
காரி திரும்பி அவனிடம், "எவர் கண்களையும் நோக்க வேண்டாம்" என்றாள். ஆனால், அவள் உண்மையில் திரும்பவும் இல்லை, ஒரு சொல்லையும் உச்சரிக்கவும் இல்லை. சிலீர் என உடல் சொடுக்க அச்சம் ஒன்று எழுந்தது உள்ளில்.
"அச்சம் வேண்டாம்" என்றாள். அது ஒலிக்கவே இல்லை, ஆனால் கேட்டது. "இங்கு எதுவும் புலன்களின் வழி நிகழ்வதில்லை. மனத்தாலேயே அத்தனையும்" என்றாள்.
"உள்ளத்தில் நினைப்பதை.."
"நீ ஒருவரை மட்டும் குறித்து சொல்ல நினைப்பவை அவருக்கு மட்டும் கேட்கும். குறிப்பிட்டு எவரையும் நினைக்காத போது, அனைவரும் அறிவர்" என்றாள் காரி
"ஓ.." என நினைத்தான்.
"அலறாதே... மிக மெல்லிய எண்ணமும், இங்கு பலமடங்கு பெருகியே கேட்கும்" என்றாள் காரி
"சரி" என்றான்
"கூச்சமாக இருக்கிறதா, நாம் எண்ணுவதை எல்லாம் மற்றவர் கேட்பது ஒருவகையில் நிர்வாணமாக இருப்பது போலத்தான்."
"எவ்வாறு உங்களைத் தவிர மற்றவர்கள் குரல் எனக்கு கேட்கவில்லை"
"இங்குள்ள அனைவருக்கும் அவரவர் எண்ணங்களின் மீதும் நல்ல கட்டுப்பாடு உண்டு, அவர்களே விரும்பாத எவ்வெண்ணமும் அவர்களுக்குள் உருவாவதே இல்லை. உன்னைக்குறித்து அவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள்"
"ஆ,"
"அலறிக்கொண்டே இருக்கிறாய், ஓயாது என்ன என்னவோ கூச்சலிடுகிறாய். மற்றவர்களுக்கும் அது தொந்தரவாகும்"
"கஷ்டம்"
"சிரமம் தான் பழகிவிடுவாய்", என்று அவன் சிரசில் கைவைத்தாள். சிரசை தொட்ட போதும், அவள் அவனை நோக்கி திரும்பியிருக்கவேயில்லை. மகிஷனுக்கு முதலில் மூச்சு சமனம் கொண்டது, அவன் அதை மட்டும் நோக்க துவங்க, எண்ணங்களும் சமனம் கொள்ளத்துவங்கின.
"ஆம், அவ்வாறு தான், அமைதி கொள்" என்றாள் காரி
"நாககுலங்களுக்கு எளிதில் கை வரக்கூடிய வித்தை இது. எங்களது நீண்ட உடலும், மூச்சு விடும் விதமும் அதற்கு ஏது செய்கின்றன. மூச்சு சீர்பட்டால், மனமும், உடலும் சீர்படும்."
"ஏன்"
"நான் உனக்கு ஏன் உதவுகிறேன் என கேட்கிறாயா? இல்லை. உண்மையில் நான், உன்னை என் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள போகிறேன். அதன் வழியாக ஒருவேளை நானும் உனக்கு உதவக்கூடும். இப்பிரபஞ்சம் என்னும் பெருநெசவில் நீயும் நானும் இரு சரடுகள்"
மகிஷன் எதுவும் எண்ணாமல் காத்திருந்தான்.
"அதற்குள் பழகிவிட்டாய்" என மெல்ல நகைத்தாள். "இம்மண்ணின் குணம் அப்படி. இங்கு மண் அல்லாது எதுவும் இல்லை. இம்மண்ணின் கீழே பல நூறடி ஆழத்திற்கு கூட நீர் சரமே இல்லை, ஏன் ஒரு சிறு ஈரம் கூட கிடையாது. இங்கு எதுவுமே முளைப்பதோ, விளைவதோ இல்லை. பறவைகள் இதன் மேல் பறப்பதில்லை. நாகங்கள் அல்லாத வேறு விலங்குகளோ, பூச்சிகளோ இதன் உள் நுழைவதில்லை. இதன் மேல் மேகங்கள் ஒருபோதும் கடப்பதில்லை. காற்றும் வறண்டே வீசும், முற்றிலும் உயிர்ப்பில்லாத மண்ணாலான வெளி, கொடும் நெருப்பென எப்போதும் எரிந்துகொண்டிருப்பது. இங்கு வரும் எவருக்கும் மனம் சமனம் கொள்ளும். இங்கிருந்து மீண்டும் காட்டினுள் ஒரு அடி எடுத்து வைத்தாலும் புலன்கள் மறுபடி செயல்படத் துவங்கும். மனம் குருடும் செவிடுமாக, கண்களும் காதுகளும் திறந்து கொள்ளும்"
கண்களை மூடி அங்கேயே அம் மண்ணின் மேல் அமர்ந்துகொண்டான் மகிஷன். காரி எங்கு சென்றாள் , என்ன செய்கிறாள் என்பதை பொருட்படுத்தவே இல்லை. அதற்கான அவசியமில்லை என்பது அவனுக்கு விளங்கியிருந்தது.
"எதனால் என்று பின்னர் சொல்கிறேன். முதலில் நீ என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்கிறேன் கேள். மரணத்தை வெல்லும் வரம் வேண்டி வந்திருக்கிறாய். ஒருவகையில் அதை நீ அடையவும் செய்வாய். அது நீ விரும்பும் விதமான ஒன்றா என்பதை நான் அறியேன். நீ வரமாக கேட்க வேண்டியது என்னவென்று அறிந்தே வந்திருப்பாய். நீரை அள்ளி கலத்தில் இங்கு கொண்டுவருவது இயலாது. அதனால் நீர் கொண்டு சங்கல்பம் செய்யவும் முடியாது. உன் உடலின் ஏதேனும் ஒரு பகுதியை, சற்று கீறி ஒரு துளி குருதியை இம்மண்ணில் விட்டு, நீ விரும்பிவந்ததை கூறி, சிவபெருமானை எண்ணி ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு இரு. முதலில் எண்ணங்கள் கூச்சலாக அலறியபடி இருக்கும், பின்னர் நீ உள்ளே உச்சரிக்கும் மந்திரம் மட்டுமே கேட்கும், அதை அனைவரும் கேட்பர். பின்னர் உனக்கு மட்டும் கேட்கும். அது தாண்டி நீயும் மந்திரத்தை கேட்காமல் ஆகும் போது அறிவாய், அருளப்பட்டதை" எனக்கூறி ஒரு குறுங்கத்தியை நீட்டினாள் காரி.
வலக்கரத்தால் அக்கத்தியை வாங்கி, இடக்கரத்திற்கு மாற்றி வலக்கரத்து உள்ளங்கையை கீறினான். உள்ளங்கையை குவித்து திரண்ட குருதியை கைகளில் ஏந்தி, அவனுக்குள்ளாகவே மந்திரி சொல்லி அனுப்பியதை தவத்திற்கு சங்கல்பமாக கூறினான்.
"ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ள எவ்வித தாவரங்களாலும், முட்டையிலிருந்து பிறந்த பறவைகள், ஊர்வன, நீர்வாழ் உயிரினங்களாலும். தாயின் உடல் பிளந்து உதிக்கும் பூச்சி முதலான உயிர்களாலும், பெண்ணின் யோனிவழி குழந்தையாக பிறந்த எவ்வுயிராலும் எனக்கு மரணம் வரக்கூடாது"
அவன் அவ்வாறு சொன்னதும், காரி "குழந்தையாக" என்பதை மட்டும் மெல்ல நினைத்து, நகைத்துக்கொண்டாள்.
தவநோக்கத்தை அறிவித்ததும், உள்ளங்கையில் தேங்கியிருந்த ரத்த துளிகளை, அவனுக்கு முன்பாக மண்ணில் விட கையை கவிழ்த்தான். அவன் உள்ளங்கையில் இருந்து சிந்திய ரத்த துளிகள் மண்ணை தீண்டும் முன்னரே மறைந்தது. உள்ளங்கையிலும் எவ்வித கீறலும் இல்லை. பின்னரே அவன் அறிந்தான் காரி அவனிடம் எந்த கத்தியையும் கொடுக்கவில்லை என்பதை.
"இவ்வெளி எவர் கண்ணிலும் படாது. எங்களில் ஒருவர் அழைத்து வராமல் ஒருவரும் உள்ளே வரவும் முடியாது. நான் அழைத்து வந்ததால் மட்டுமே நீ இதனை அறிந்தாய், இதனுள் நுழைந்தாய். உணவுக்கும், மற்றுள்ள அன்றாட தேவைகளுக்கும் நீயாகவே இனி புறத்தே சென்று வரலாம். உன் தவத்தை இங்கேயே தொடர்ந்து செய்க. ஆள் ஒழிந்த இம்மண் வீடுகளில் ஏதேனும் ஒன்றில் பகலில் நிழல் கொள்க." என்று காரி அங்கிருந்து மறைந்தாள்.
சூழ்ந்து இருக்கும் வனத்தில் பருவங்கள் மாறி மாறி வந்தபோதும், இரவு பகலும், நிலவின் தேய்வும் வளர்வும் தவிர வேறு மாற்றங்களை மண் வெளியில் அறியக்கூடவில்லை. கதிரவன் ஒளி பகலில் பற்றி எரிந்து கொண்டிருந்தது எந்நாளும் ஒன்றே போல். அங்கிருந்து புறத்திறங்கும் போது மட்டுமே கால மாற்றத்தாலான காற்றையோ, மழையோ அறிய முடியும். இவ்வாறாக மகிஷன், அங்கே, பன்னிரு முழு வியாழ வட்ட காலங்கள் தவமியற்றினான். அதன் பின் நல்ல கோடை இரவொன்றில் அம்மண்ணில் அவன் அமர்ந்திருந்த போது, அவன் உச்சரிக்கும் மந்திரத்தின் ஒலியை அவனே கேட்காமல் ஆனான். எண்ணாகங்களில் தென் முகமாக வீற்றிருந்த கார்கோடகனின் முன் அமர்ந்திருந்த அவன் மேல், ஒரு துளி நீர் வந்து விழுந்தது. எங்கிருந்தோ குளிர்ந்த காற்று வந்து மேற்தோல் வறண்டு பிளவு கொண்டிருந்த உடலை மூடி பொதிந்தது. அவன் சிரசின் மேல் மேக கொத்துகள் திரண்டன. மோதி மின்னலாக வெட்டி சிறியதும் பெரியதுமாக துளிகள் அவன் மீதும் அவனை மட்டும் சூழவும் மண்ணின் மீதும் விழுந்து சிதறின. அதனை அங்கிருந்த வேறு எவரும் அறியவில்லை. மண்ணின் மனம் எழுத்து நாசி கீறியது. வெடித்த தோலில் சுரீர் சுரீர் என மழை நீர் பட பட கொடு நெருப்பென உடலே பற்றி எரிந்தது. பெருந்துளிகளாகி, பின் பெருமழையாகி பொழிந்தது. மகிஷன் பெருநெருப்பு ஜுவாலையாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தான். எரிந்து அடங்கியபின் உடல் முழுதும் குளிர்ந்தது. மேகங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக பின்னி உயர்ந்து ஒரு ஜடா மகுடமானது, அதன் இருபுறமும் கருமேகங்களே மூன்று மூன்று பிரிகளாகி நீண்டு விரிசடையாக வீசி பறந்தன. அதன் இடைவெளிகளில் ஒன்றில் எட்டாம் நாள் நிலவு வானில் மின்னியது. அச்ஜடா மகுடத்தின் மையத்தில் துள்ளி எழுந்த ஒரு நீர் சாட்டை மேல் நோக்கி பாய்ந்து அங்கிருந்து கீழ் நோக்கி சரிந்து, அவன் மீது மழையாக பெய்து கொண்டிருந்தது. அவ்வாறு அவன் எத்தனை காலம் இருந்தான் என்பதை அவன் அறியவில்லை.
அவனை மெல்ல தன் வலக்கரத்தால் தொட்டு எழுப்பினால் காரி. அவன் கண்விழித்த போது அவனைச்சூழவும் பசுமரங்கள் பின்னி நிற்க, அதன் கிளைகள் எங்கும், மலர்களும், கனிகளும் செறிந்திருந்தன . அணில்கள் இங்கும் அங்கும் தாவி விளையாடி டிவிட் டிவிட் என ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. பச்சிகள் சிலம்பி பறந்து கிளைகள் மாறி அமர்ந்தன. பொன் என மின்னி கதிரவன் எழுந்து கொண்டிருந்தான்.
காரி அவனிடம் சொன்னாள் "மகிஷனே உன் தவம் சித்தித்தது, மரணமின்மையை எய்துவாய், ஆயினும் நீ நினைக்கும் வண்ணமாய் இருக்காது என்பதையும் அறிந்து கொள்"
"நன்றி தாயே" என்று பல நாள் கழித்து அவன் குரலை அவனே கேட்ட போது, வேறு எவரோ ஒருவருடையது என ஒலித்தது.
"மகிஷனே கேள், இனி ஏன் என்பதை சொல்கிறேன்" சரி என்றோ இல்லை என்றோ எதுவுமே சொல்லாமல் மகிஷன் அவள் முன் அமர்ந்திருந்தான்.
"நாங்கள், எண்ணாக குலத்தை சேர்ந்தர்வர்களும் எங்களுடைய நாகலோகத்தில், தனித்தனி நாடும், கோலும் கொண்டு ஆண்டு வாழ்ந்திருந்தோம். ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனி அரசர்கள், அவர்களுக்குரிய வழமைகளும் முறைமைகளும். எங்கள் எட்டு குடிக்கும் பொதுவில் பேரரசன் என எவரும் இருந்ததில்லை. எட்டு குடி பேராயும் மட்டுமே உண்டு. வருடத்திற்கு ஒருமுறை எண் குலத்தரசர்களும் ஓரிடத்தில் கூடி, அதுவரையான வளமும் நலமும் உரைத்துக்கொள்வார்கள். குறைகள் அல்லது பிணக்குகள் என எதுவும் இருந்தாலும் அது அங்கேயே பேசி தீர்க்கப்படும். எண் குலத்தாரும் ஒருவருக்கொருவர் எல்லாவிதத்திலும் உதவிக்கொள்வார்கள். பெண் கொடுத்தும் எடுத்தும் உறவு பேணுவார்கள். அவ்வாறு வாழ்ந்திருந்த காலத்தில் தக்ஷக குலத்தின் தற்போதைய தக்ஷக அரசன், பேராசை கொண்டான். எண் பேராயத்தை மாற்றி, ஒரு அரச அமைப்பை உருவாக்க விரும்பினான். அதற்கு தன்னையே தலைவனாக்கி பேரரசன் என முடி சூடி கொள்ள ஆசை கொண்டான். முதலில் மற்ற ஏழு குலங்களிலும் எதிர்ப்பு கிளம்பிய போது, அனைவரின் நன்மை கருதியும், புறத்திருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பதற்கும் இதுவே நல்லது என்று வாதிட்டான். ஒரு சிலர் அதுவே சரி என்று கருதினர். ஒருவேளை ஒரு அற்றம் வரை அது சரியாகவும் இருக்க கூடும். ஆனால், மெல்ல வழிக்கு வராத மற்ற குலத்தரசர்கள் சிலருக்கு பொன்னும் பொருளும் கொடுத்தும் சிலபேருக்கு அதிகாரங்களை தருவதாக, வாக்களித்தும், சில பேரை படை பலத்தால் மிரட்டியும் பணிய வைத்தான் தக்ஷக மன்னன். அது அத்தனையையும் தாண்டி எதிர்த்து நின்றவர் என் தந்தையாகிய கார்கோடக அரசர் மட்டும் தான். "
அப்போதே அவர் பிராயம் முதிர்ந்தவர். அவர் ஒருவர் மட்டுமே அறிந்திருந்தார் அத்தனையையும் ஒற்றை படுத்துதல் தீங்கென்று. ஒன்றே போல் அனைத்தும் இவ்வுலகில் இல்லை. அனைத்திற்கும் அவயவற்றுக்கான இயல்புகளும், குணங்களும் உண்டு. அது போன்றே மனிதர்களும். அவர்களின் தேவைகளும், வாழ்வியலும் வெவ்வேறானவை. ஒரே விதமான வழமைகளுக்குள்ளும் முறைமைகளுக்குள்ளும் அனைத்தையும் கொண்டுவர இயலாது. அவ்வாறு ஒருவர் முயன்றால், அது உலகின் ஆதாரமான அடித்தளத்தையே அசைக்கும் .
"ஒன்றாய் கூடி ஒரே விதமாக வாழ்வது தவறா"
"ஒன்றாக கூடுதல் ஒருநாளும் தவறல்ல. அனைத்தையும் ஒன்றே போல் ஆக்குவதே பிழை. அது இயல்வதும் அல்ல. ஒருவருக்கு பொருந்துவது, அனைவருக்கும் பொருந்துவதாகி விடாது. தனித்துவங்களை மதிக்காத, எந்த ஒற்றைபடுத்தலும் பிழையே. அவரவர் தனிக்குணங்களுடன் ஒன்றாய் கூடி வாழ்வது சிறப்பு. அது தன்னியல்பாக நிகழும் ஒன்றே தவிர. சட்டமிட்டு நிகழ்த்துவது அல்ல. ஒன்றாய் கூடி வாழ அழைக்கிறோம் என்றே இவை துவங்குகின்றன, உண்மையில் வலியவர்கள் போல எளியவர்களை மாற்றுவதே அதன் வழியாக நடக்கிறது. எளியவர்கள் சிலர் தாங்கள் அறியாமலே வலியவர்களைப் போல் மாறுகிறார்கள். சிலர் வன்மையாக மாற்றபடுகிறார்கள். துயரம் கொள்வது எளியவர்களே. உடலுக்கேற்ற ஆடையை உடுத்தலாம் அரசே. உடைக்கு தகுந்தார் போலே உடலை தரிக்க முடியாது. இங்கு பலபடியாக, பலதளங்களிலுமாக இதுவே நிகழ்கிறது. கையையும் காலையும் முறித்து வலியோர் விரும்பிய கலங்களில் எளியோரை திணித்து அடைக்கிறார்கள். "
ஹிம்சை என்பது உடலால், உடலுக்கு மட்டும் நிகழ்வதல்ல மகிஷனே. அது உடல், வாக்கு, மனம், இம்மாதிரியான அதிகார அமைப்புகள் என எதன் வழியாகவும் நிகழலாம், எவ்விதமாகவும் பாதிக்கலாம். எவ்வகையாகினும் துயர், துயர் தான் அல்லவா? அதிலும் பெரும் அமைப்புகளால் உருவாகும் இம்சைகள், நாம் அறிவதை காட்டிலும் வலிவு கூடியது. பல பேரையும் பாதிக்க கூடியது. பல காலங்கள் கடந்தும் நிலைக்க கூடியது. அவ்வமைப்புகள் இடும் வட்டத்திற்குள் அடங்க மறுப்பவர்களை அது மிகக்கடுமையாக எதிர்க்கும், அதிகாரத்தை பயன்படுத்தி அழித்து ஒழிக்கும். அவர்களை இரண்டாந்தரமாக நடத்தி மானசீகமான அழுத்தத்தில் வைத்திருக்கும். அவ்வகை ஒற்றை படுத்தலை என் தந்தை எதிர்த்தார். அதனால், தக்ஷக மன்னன், என் சகோதரனை அவருக்கு எதிராக தூண்டிவிட்டார். எவரும் அறியாவண்ணம், என் தந்தையை, என் சகோதரனே நஞ்சிட்டுக்கொன்று தானே கார்கோடக குல அரசாக சூடிக்கொண்டான். நான் அங்கிருந்து புறப்பட்டு எவரும் அறியாமல் வாழ்ந்து தக்ஷக குலத்தில் பிறந்த வீர்யவான் என்னும் எளிய காவலனை மணந்தேன். பின் தக்ஷக குல இளவரசியின் வளர்ப்பன்னையாக விதி என்னை கொண்டு சேர்த்தது"
"ஒருவகையில், நானே அவ்வொற்றை படுத்துதலை செய்தவன் தான் இல்லையா"
"ஆம், அதுவே எனக்கு வேண்டும் எளிய நாக குலங்களை மட்டும் ஒன்றாக்க முயன்றவன் தக்ஷகன். நீயோ ஈறேழு பதினான்கு உலகங்களுக்கும் அதையே செய்தாய். உன்னைக்கொண்டே அவனுக்கு புத்தி புகட்ட முடியும்"
"நான் மறுத்தால்"
"மகிஷனே, ஒரு குருவென, நான் உனக்கு அருளியவற்றுக்கு நீ என்ன கொடுத்தாய்?" என்றாள் காரி. அப்போதே அறிந்தான் அது போகும் வழி என்னவென்று. அவனறியாமல் அவன் முகம் சுருங்கி, நாவில் ஒரு மெல்லிய கசப்பை உணர்ந்தான். மிடறு கூட்டி விழுங்கிய போது கசந்து எரிந்து அவன் தொண்டை வழி வழிந்து வயிற்றில் விழுந்தது அந்நஞ்சு. மீண்டும் எதுக்களித்து ஏப்பமாகி வாயெல்லாம் கசந்தது. விடுபட முடியாமல் இறுக பிணைக்கப்பட்டுவிட்டோம் என உணர்ந்து கொண்டான்.
மகிஷன் எழுந்து காரியை வணங்கி, பின் கூறினான் "தாயென வந்து அருளினாய், அனைத்துமாகியதை கண்டு இன்புற்றேன். தாய்ப்பாலிலும் துளி நஞ்சு உண்டு என்பதையும் நீயே அறியவைத்தாய். உன்னை வணங்குகின்றேன். இனி, தக்ஷணையாக என்ன தர, அருளுக" என்றான்.
"மகிஷனே நாக லோகத்தின் எண் குல அரசரையும் சிறை பிடித்து, நாக லோகத்தையே கைப்பற்றினாய். ஆனால் எவரும் அறியாமல், தக்ஷக மன்னனின் மகளும், அவள் கணவனான அனந்தர் குலத்தில் பிறந்த காவலனும், ஏழாம் கருங்கடலின் ஆழத்தில் மழலை வேண்டி தவமிருப்பதை நீயோ, உன் படையோ அறியவில்லை. அவர்களுக்கு எத்தனை மக்கள் பிறந்தாலும், அவர்கள் அனைவரின் குருதியாலும் எனக்கு நீர்விடாய் தீர்ப்பாயாக."
மகிஷன் ஒரு நொடி திடுக்கிட்டு பின் "அவ்வாறே ஆகுக எனக்கூறி, அதற்கு சாட்சியாக, தன் உள்ளங்கையை அருகில் கிடந்த கருவேல முள்ளால் கீறி. காரியின் காலடி அருகில் மண்ணில் விட்டான்" ஒரு புள்ளி நெருப்பு துளியென மண்ணில் விழுந்துறைந்து நிலைத்தது குருதி.
ஒருமுறை காரியின் முகத்தை நோக்கி, "இதற்கு நீ நாக கன்னியையே கொல்ல சொல்லியிருக்கலாமே?" என்றான்.
அவனைத் தாண்டி எங்கோ பார்வையைத் தழையவிட்டவள், நீரால் மின்னும் கண்ணொளிர மீண்டும் மகிஷனின் கண்களை கூர்ந்து நோக்கி "என்னவானாலும் என் முலையுண்டவள் அல்லவா?" என்றாள்.
மகிஷன் முகமன், வாழ்த்து என எதுவும் அறிவிக்காமல், முறைமைப்படி விடைபெறாமல், தலையை மட்டும் வணங்கிவிட்டு, ஐந்து பின்னடிகள் வைத்து நகர்ந்து, பின் திரும்பி நடந்து அவ்வனத்தை கடக்க துவங்கினான். காரியின் முன்னிருந்து நீங்கிய பின் ஒருமுறை கூட அவன் பின் திரும்பி, அவளையோ அவன் நடந்து கடந்துகொண்டிருந்த அவ்வனத்தையோ நோக்கவே இல்லை.
***
ஏப்ரல் தொடங்கியது
பதிலளிநீக்கு