ஐயன் பந்தி - 16
நெருப்பு
திருவாடல் - 3
முதல் நாள் கதை முடிந்து வீடு திரும்பிய போது, வானம் புலர சிறு பொழுதே இருந்தது. இன்னும் ஏழு நாள் கதை மீதம் இருக்கிறது. அக்கா குருவிகள் கொல்லைகளில் மரத்துக்கு மரம் அமர்ந்து சிலம்பும் அக்கோவ் குரல்கள் கேட்க தொடங்கியிருந்தன. நான் கோவிந்தன் தாத்தாவீட்டு திண்ணையிலே கையை தலைக்கு வைத்து படுத்து உறங்கிவிட்டேன். ஆச்சி தான் எழுப்பி உமிக்கரியும் செம்பில் நீரும் கொடுத்து பல் விளக்கச்சொல்லி, நீராகாரமும் கொடுத்தாள். என்றும் இல்லாத வழக்கமாக ஐயர் காலையிலேயே தெருவுக்குள் வந்தார். தாத்தா வழக்கம் போல கருக்கலிலேயே நீராடி நெற்றியில் இட்ட திருநீற்றோடு, முந்தைய இரவின் உறக்க சடவே இல்லாமல், அமர்ந்திருந்தார்.
ஐயர் திண்ணையில் அமர்ந்தபடி, உறக்கம் முழுதும் கலையாத என்னைப்பார்த்து, "என்னடா அம்பி வில்லடியா நேற்று" என்று விட்டு தாத்தாவிடம், என்ன கதைடா படிச்சான் என்றார்.
"அஷ்ட காளி கதை" என்றார் கோவிந்தன் தாத்தா.
"ஏன் டா, அம்பி சுந்தரம் நீ கேட்ட கதையை சொல்லேன் கேட்போம்" என்றார் ஐயர். நானும் நினைவில் இருந்து கதையை திரட்டி சொல்லத்துவங்கினேன். பாட்டியும் தாத்தாவும் கூட அருகில் அமர்ந்து மீண்டும் கேட்கத்துவங்கினார்கள்.
"கைலாயத்தில் இருந்து புறப்பட்ட தேவி வெள்ளி பனி மகுடம் சூடி, விண்ணை முட்டி நின்ற இமைய மலையின் ஆயிரம் சிரங்களையும் இருகை விரல் நுணிகளாலும் கிள்ளி எரிந்து விலக்கி வலக்கால் எடுத்து முதல் அடி வைத்தாள். அவள் வைத்த அடியில் பிரண்டு அழுந்தி உண்டான பள்ளத்தில், சிதறிய பனி மகுடங்கள் உருகி நீர் எனப் பெறுகின. அதை மானஸ தீரம் என்றனர், புலனொடு மனம், புத்தி, அகங்காரம் என அத்தனையும் அடக்கி, உள்ளத்தின் ஆழத்தில் வெண்ணிற ஒளியென காலம் அளவு இறுதி அறியாது அவள் திருவடியைத் தொழுதிருந்த ரிஷிமார்கள் அன்னம் என மலர்ந்து அங்கு நிறைந்தனர்."
அவள் திருவடி தீரத்தின் நீரள்ளி அகமும் ஆகமும் விளக்கி வெண்ணிற தாமரை மலர்கள் என மலர்ந்து அங்கும் இங்கும் மிதந்தன அன்னங்கள். வெண்ணிற மலைமுகடுகள் என எழுந்து பறந்தன. சுழன்று சுழன்று விரிந்தன, பின் இறங்கி சிறகு குழைய அமர்ந்தன. 16 வகை உபச்சாரங்களையும் முத்திரைகளாக்கி விரிந்தும், கூடியும், அகன்றும் தொழுதன அன்னையை. வெண்ணிறத்து அரியணை என்றும், திருவடி ஆசனம் என்றும் அமைந்து அவளை அமர் எனக் குழறல் குரல் கொண்டு கூவின. வெண் கொற்றக்குடை என அவள் சிரத்தின் மேல் கவிந்தன, வெண் சாமரங்கள் என இருபுறமும் குழைந்தன, விசிறியென வீசிக் கொடியென பறந்தன, மேல் வானத்தில் மறைந்த சூரியனின் சிவந்த கிரணங்களை தொட்டு அழியா மங்கலைக்கு திலகம் என தீட்டின, கீழ் வானத்தில் அப்போதே முளைத்த மூன்றாம் நாள் சந்திரனை அவள் சிரசிற்கு அணியென சூட்டின. பின் 108 பிரிகளாகி அகண்டம் எல்லாம் விரிந்த அவள் சடையினில் இறகுகள் என அமர்ந்தன. அன்னை எனகனிந்தவளுக்கு மனோண்மணி என்று பெயர்"
இரண்டாம் அடி எடுத்து வைத்த அன்னையின் திருவடியை, மாலையென சூழ கிழக்கு முகம் விட்டு உத்தரவாஹினியாக வட புறம் நோக்கி திரும்பினாள் கங்கை. இருமருங்கிலுமாக நீண்டு வருணை, அசி என்னும் இருகைகளால் தழுவிக்கொண்டாள். அக்கரை வாரணாசி என்றே பெயர்கொண்டது. கங்கை பொழுது ஒழியாது கொடுத்தும் பெற்றும் பேரன்னையென்று அருள் சூடி நின்றாள் அங்கே. தன் நீர் கரங்களால் உலகின் தலைகோதி அண்டியோர் பாவங்கள் அத்தனையையும் கழுவினாள். மயானங்களையே தன் பெரு மடி என விரித்து, வந்தணைந்த அத்தனை உயிர்களுக்கும் மோக்ஷம் நல்கினாள். அவள் அளித்த வாக்கினை அழிக்கும் ஒரு சொல்லும் இவ்வுலகத்தில் இல்லை. அன்னை அவள் மடியேறி விரிகுழலும், புரிவேலும் சூடி பைரவி என உன்மத்தம் கொண்டாடினாள். அள்ளி அள்ளி இருகைகளாலும் எறிந்த நிணம் உண்டாள். கரி நிறத்தவள் உடல் முழுதும் வெண்ணீறு பூசி, கோரைப்பல்லும், நுதல் விழியும் சூடி தாண்டவம் கொண்டாடினாள். அவள் திருவடியில் கனன்ற சதங்கைகள் தந்தம் துருத்திய ஆணைத் தலைகள். அக்கரை முழுதும் நிறைந்த எலும்புகள் அள்ளி கோர்த்திட்டு இடைவளைத்த மேகலைகள். முத்து வடம் என தொடுத்த வெண்ணிறத் தோள் மாலைகளில் எருக்கம் பூக்கள் என நெருங்கிய மனித தலைகள். இனியும் பிறப்பில்லா மண்ணுயிர்கள் மட்டும் அவளைக் கண்டு தொழுகின்றன என்றென்றும் அங்கு.
மாவலியின் சிரம் வைத்த ஊழி முதல்வனின் மூன்றாம் அடி என ஓரடி வைத்தாள் மாகாளி. அரசி என அரியணை ஏறி வாளும் செங்கோலும் சூடி நீல வண்ண பட்டுடுத்தி உலகு புறக்க அமர்ந்தாள். அவள் திருவடியை தாங்கின எண் கஜங்கள். அவள் அட்டகாச சிரிப்புக்கு அண்டங்கள் நடுங்கின. அவள் உதறி வீசிய பெருஞ் சாட்டை உலகு சூழ்ந்து கோட்டை என அமைந்திருந்தது. அவள் கண்ணின் இமைகளே முத்தொழிலும் புரிந்தன. அவ்விமைகள் விரிய திறந்த போது தோன்றலும் குவிந்து மூடிய போது ஊழியும் மாறி மாறி நிகழ்ந்தன. அவ்விழி விரிவுக்கும் குவிதலுக்கும் இடைபட்டதொன்றே காலம் என்று அறிக. செந்நிறத்தில் அலர்ந்த தன் இடத்தொடையில் மதுக்குடம் ஒன்றை பற்றி அமர்ந்திருந்தாள் அம்மை. முக்காலமும் அறிந்த சித்தர்கள் மட்டுமே அம்மதுவின் ஒரு துளி பருகி, அவள் கால் விரலின் நுனி கண்டு தொழுதவர்கள். அவர்களை பித்தர் என்று அழைத்தனர் ஏனையோர். பித்தரோ ஏனையோரை அறிவதே இல்லை. அவ்வுஜ்ஜைனி மகா காள வனத்தில் அவளை ஹரசித்தி என்றும் அழைத்தனர்.
தென் பாரதத்தின் மேற்கே மேலைக்கடலிற்கு இட்ட பச்சை நிறத்திரையென நீண்டு கிடந்த சஹ்யாத்ரி தேவி ஏழு கொம்புகள் என தன் கரங்களை நீட்டி அன்னையின் நான்காம் அடியைத் தாங்கிக்கொண்டாள். சஹ்யாத்ரியின் அவ்வேழு கரங்களை சப்த ஸ்ருங்கம் என்று அழைத்தனர். அம்மலை மேலே நின்ற அம்பிகைக்கு சப்த ஷ்ருங்க நிவாஸினி என்று பெயர். அவ்வம்மைக்கு மூவிழியோனும் முகுந்தனும் சூலத்தையும், சூழல் ஆழியையும் சமர்ப்பித்தனர். வருணன் தன் கைச்சங்கினை நல்கினான். அக்னி தேவன் கொடுத்தான் கனன்ற ஜுவாலைகளை. வாயுதேவன் வில்லும் அம்பும் கொடுத்தான். இந்திரனோ தன் ஒளிரும் வஜ்ரத்தையும், இடியென முழங்கும் மணியையும் சமர்ப்பித்தான். எமன் தன் தண்டத்தையும், தக்ஷன் அக்ஷமாலையையும், பிரம்மன் தன் கமண்டலத்தையும் நல்க, சூரியன் தன் ஒளிரும் கிரணங்களையே அவள் திருவடியில் வைத்தான். அவற்றோடு கூட காளி கொடுத்த வாளோடு கேடயமும், விஷ்வகர்மாவின் பரசும், குபேரன் படைத்த பான பாத்திரமும், கதையும், விரிந்த தாமரையும், பாசாங்குசம் என பதினெண் ஆயுதங்களும் பதினெண் கரங்களிலாக ஏந்தி, தாம்பூலத்தால் சிவந்த அதரங்களில் புன்னகையும் சூடி நின்றாள் அம்பிகை. அவளை மும்மூர்த்திகளும், இந்திராதி தேவர்களும் விண்ணில் இருந்து பதினெண்ணாயிரம் கோடி மலர் வகைகளால் முழுக்காட்டுகின்றனர் நித்தமும். அன்னை உளம் கணிந்து தன் விழிக்கருணையால் அவளைத் பணிந்தோர் மனைகளில் எல்லாம் மங்களமென பெறுகுகின்றாள், மழலைகளை அருள்கிறாள். அவளைத் தொழுதோர் உள்ளத்தில் எளியவளாக நிறைகின்றாள்.
கோலாபுரியே அம்பிகையின் ஐந்தாம் அடி அமைந்த இடம். பொன் இழை ஓடிய பொன்னாடை உடுத்தி இருகைகளிலும் கதை சூடி போர்க்கோலம் கொண்டு நின்றாள் அம்மண்ணில், அவளை மகா லக்ஷ்மி என்று கொண்டாடியது வேதம். அவளே அத்தனைக்கும் உடையவளாய் இருந்தாள். சுழற்றி அவள் திருவடியில் சமர்ப்பித்த வாள் கொண்டு உலகு வென்றனர் மாமன்னர்கள். வீரர்களின் காவல் என அவர்கள் வில்லின் நானிலும் அம்பின் முனையிலும் அமர்ந்து வெற்றிகொள்ளச் செய்தாள். அவளை வெற்றி திருமகள் என்றும் வைஷ்ணவி என்றும் கொண்டாடியது உலகு. சிந்தூர பொடி பூசிய அவள் திருப்பாதங்களே மாமன்னர்கள் சூடிய மாணிக்க மகுடங்கள் என அறிக.
ஆக்கலும், அழித்தலும், அதன் இடை நின்று காத்தாலும் தானென்று சுயம்பு வடிவு கொண்டு குடஜாத்திரியின் மணிமுடியில் தோன்றினாள் அன்னை ஆறாம் அடியில். கையில் சங்கும் சக்கரமும் சூடி, அபய வரதம் காட்டி பத்மாசினியாக அமர்ந்தாள். அவள் விடியலில் சரஸ்வதியாக, மத்தியான்னத்தில் நாராயணியாக, இரவில் நீல பட்டுடுத்தி காளியாக மூவுருவும் காட்டினாள். அறியாமை களைந்து ஞானமே வடிவென ஒளிர்ந்தாள். அன்னையென அவளடி கண்டு முற்றும் பணிந்தவரின் அறியாமையை தண்ணொளியால் எரித்து தனதென்றாக்கி தன்னையே ஞானம் என அருளியவளை மூகாம்பிகை என்றே அழைத்தது உலகு.
ஏழாம் அடியாள் அவள் அளந்த மண்ணை சாமுண்டி மலையென்று அழைத்தனர். அன்னை அங்கு சாமுண்டி என யோக ரூபம் கொண்டு அமர்ந்தாள். உடல் வற்றி எலும்புகள் துருத்தி, கோர வடிவினளாய் வீற்றிருந்த அன்னையின் திருவிழியில் மலர்ந்த கருணை மட்டும் என்றும் மாறாது பொழிந்திருந்தது. அவள் திருவடியை உலகு துறந்தோரே தொழுதற்கு ஆகும். அவள் விழிக்கருணையை மட்டும் நம்பி இல்லறத்தார் பணிந்தனர். ஒன்றின் புறம் மற்றோன்று என, இருளென்றும் ஒளியென்றும் எப்போதும் அவள் இருநிலை கொண்டு வீற்றிருந்தாள். கண்டோர் அவளைக் அவரவர் காண விளைந்த நிலையிலேயே கண்டனர். சிலருக்கு தன் இருளைக்காணும் கண்களையும் சிலருக்கு தன் ஒளியைக்காணும் கண்களையும் அவளே அருளுகின்றாள்.
ஒட்டியாண பீடம் என்றும் திரு கச்சி மூதூரும் என்றும் பெரும்புகழ் சூடி பாலாற்றங்கரையில் அமைந்திருந்த காமகோட்டப்பதியிலே அம்பிகை தன் எட்டாம் அடி வைத்து பொழிந்தாள். விஷ்ணு, ருத்ரன், பிரம்மனோடு, மஹேஸ்வரனும் கட்டிலின் கால் என்று நிலைக்க , சதாசிவனே அக்கட்டிலில் மஞ்சம் என அமைய செண்பகம், அசோகம், புண்ணாகம், சௌகந்திகம் என் நால்வகை மலர்களும்சூடி, நெளிந்தாடும் குழல் முடித்து, நான்கு கரங்களோடு, பாசமும், அங்குசமும், மலர் அம்புகளுடன் கருப்பு வில்லும் சூடி அரை பத்மாசன கோலத்தில் அரசர்க்கெல்லாம் அரசியென ராஜ ராஜேஸ்வரி என அமர்ந்தாள் அம்பிகை. மூவுலகாளும் அவ்வம்மையை திரிபுரை என்றும், லலிதா பரமேஸ்வரி என்றும் விண்ணவர் போற்றிட, கண்ணொளியாலே அருளும் அவளைக் காமாக்ஷி என்று தொழுதனர் மண்ணவர்.
"முன்னொரு யுகத்திலே மாயையால் உலகொன்றை உண்டாக்கி, அதில், சிவனும் அம்பிகையும், கணவனும் மனைவியுமாக நெடுவழி வந்த போது பூங்காவனம் ஒன்றைக்கொண்டு இளைப்பாறினார். நெடுந்தூரம் நடந்த களைப்பால், அம்பிகை நீர் விடாய் கொண்டாள். அம்பிகையின் தாகம் தணிக்க நீர் அள்ளச் சென்றார் கங்காதரர். நீர் கொண்டு வரச் சென்ற சிவன், மயானக்கரை ஒன்றைக்கான, வெந்த நீறள்ளி உடல் மீது பூசிக்கொண்டு அங்கேயே கொடுகொட்டி தாண்டவம் கொண்டாடத்துவங்கினார். ஆடியும் பின் ஒடுங்கியும் யுகங்கள் பல அவர் திருவடியில் தோன்றி மறைந்தன, ஆயினும் சிவனோ யோக நிலை துறவாது காலத்துக்கும் அப்பாலேயே இருந்தார். சதுர் யுகங்கள் பல கடந்தும் சிவன் அங்கு மீண்டு வராததால், அம்பிகை அகண்டத்தையும், அதில் உள்ள அத்தைனையும் ஒரு பிம்பம் என ஆக்கி சிறு விதை வடிவில், தன் உதரத்தில் அடக்கி நிரை மாத சூலியாக கிடந்த கோலத்தில் புற்றுருக்கொண்டு அங்கேயே அமைந்தாள். காஞ்சி மாநகரில் இருந்து புறப்பட்ட அம்பிகை இருகைகளோடு எளிய பெண்ணுருக்கொண்டு மலையரசன் பட்டினம் வந்து சேர்ந்தாள். மலையரசன் பட்டணத்திலே பூங்காவனத்திலே அப்புற்றேறிக் குடிகொண்டாள். அங்கே வாசுகி, ஆதிசேஷன், கார்கோடகன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன் என்னும் எட்டு நாகங்களும் சிறு குழவிகளென அவள் மடியேறி விளையாடின. பூங்காவனத்திலே புற்றிடங்கொண்டதால் அவளை பூங்காவனத்தம்மன் என்று வழிப்பட்டனர் எளியோர்." என்று நான் கதையை இடை நிறுத்திய போது, மலைக்காணி "இளையவர் சொல்ற கத எங்க பேச்சி கதை போலலா இருக்கு மூப்பரே" என்று தாத்தாவை பார்த்து சொன்னார்.
நான் கதை சொல்ல துவங்கிய சற்று நேரத்திலே, இருதோள்களிலும் மலைச் சரக்கு பொதிகளோடு வந்து சேர்ந்திருந்தார் மலைக்காணி. கதை நடப்பது அறிந்து தாத்தாவையும் ஐயரையும் புன்னகையோடு வணங்கிவிட்டு திண்ணையிலேயே பொதியை இறக்கிவிட்டு அமர்ந்து கொண்டார். அரவம் இல்லாமல் ஆச்சி மட்டும் உள்ளே சென்று நீரும் கருப்பட்டியும் எடுத்து வந்து மலைக்காணிக்கு கொடுத்திருந்தாள். அதுவரையும் பேசாது இருந்த தாத்தா, மலைகாணியிடம் பேசத்துவங்கினார்.
"வைரம், சுகமாருக்கியா? மலையில எல்லாம் எப்பிடி இந்தாண்டு?" என்றார்
"சுகமுண்டு சாமி, ஏழு அம்மைகளும் இருக்காகல்லா, ஒன்னும் குறையில்ல சாமி, நல்ல மழையும், விளைவும் உண்டுமே இந்தாண்டும்" என்று விட்டு வைரம். "இங்க எல்லாரும் நல்லாருக்கீகளா" என்று மலைத்தமிழும், நிலத்தமிழும் கலந்த பேச்சில் பொதுவாக கேட்டார். எல்லாம் நலம் என்பது போல தாத்தாவும் ஐயரும் தலை அசைக்க, நான் தான் "வைரம் அண்ணேன், அந்த பேச்சி கதைய சொல்லுங்க" என்று பேச்சை கதைக்கு திரும்பினேன்.
"இருடா, அவன் வந்த விவரம் என்ன ஏதுன்னு, ஒன்னும் பேச வேண்டாமா?" என்று என்னை மென்மையாக கடிந்து கொண்டார் தாத்தா.
"இருக்கட்டும் சாமி, இளையவருக்கு அம்மையோட கதைய கேட்கற வேகம், இளங்குருளைலலா, எனக்கும் பொழுது இருக்கு. சொல்றேன்" என்றுவிட்டு, ஆச்சியைப்பார்த்து, வாசல் மாடத்தில் இருந்த விளக்கை சுட்டிக்காட்டி, "அம்மையே அந்த மாடத்துல உள்ள விளக்கை இப்படி திண்ணையில கிழக்க பார்க்க வச்சு ஏத்தி, இரண் டுகண்ணி பூவும், இத்தினி பொரியும் வெல்லமும் சுளவுல போட்டு, ஒரு கலயத்தில நிறை தண்ணியும் அதுக்கு முன்னால வைக்கீகளா? பேச்சி கதைய சொல்லத் துவங்குனா அவ பிள்ளைக விளையாட வந்திருவாகல்லா, அவுக பசிச்சு சடைஞ்சு போகாம இருக்கணும்ல" என்றார் வைரம். ஆச்சி வைரம் சொன்னது போலவே சுளவில் பொரியும், வெல்லமும், எடுத்து வைத்து, நீரும் வைத்து, திண்ணையின் மேற்கு சுவரொட்டி மனையிட்டு விளக்கு ஏற்றி பிச்சி பூவும் சூட்டினாள். கூடவே இரண்டு பனை ஓலைக் கிளுகிளுப்பைகளையும் வைத்தாள்.
"பிள்ளைக விளையாடவா?" என்று ஆச்சியை பார்த்து சிரித்துவிட்டு மலைக்காணி பேச்சியின் கதையை சொல்ல துவங்கினார். என்னை நோக்கி
"இளையா இந்தக் கதை நடந்தது எங்க ஏழுமலை காட்டில இல்ல, இங்க மேற்க உள்ள செண்பக காவுல நடந்தது. அவுகள செண்பக மலைக்குடினு சொல்லுவாக. அந்த செம்பக வனகாட்டுக்கு ஒருகாலத்தில மூப்பத்தியா இருந்தவ தான் இந்த பேச்சியம்மை. அவளுக்கு ஏழு பிள்ளைகள, எட்டாவது சிசுவ அவ உதரத்தில் சுமந்து நிக்கைல தான் அவ மலைத்தெய்வம் ஆனா. செண்பக மலைக்குடி எங்களப் போல ஆண்வழிக் குடியில்ல, அம்மை வழி தான் அவுகளுக்கு குடிவழி. மூப்பத்தி மார்கள் பிறம்பும் கோலும் பிடிச்சு ஆளுற பெருங்குடி. எங்களைவிடவும் ஆதி குடின்னு எங்க மூப்பன்மார் சொல்லுவாக. அவுக மலைக்காட்டுலையும் தாழ்வாரத்துலையும் செண்பக மரங்க நிறைஞ்சிருந்ததால அத செம்பக மலைனும் அங்க குடியேறுன மக்கள செம்பக மலைக்குடினும் கூப்பிட்டாகலாம். அவுக எங்களைப்போல விளையவைக்க அறியாதவாக. காட்டுக்கு கனிகளோ, தேனோ. வேட்டையாடி கொண்டுவர மான்கறியோ, மிளா கறியோ தான் உணவு, அதிலேயும் முக்கியமா, மண்ணுக்கடியில் விளையிற வேரடிக்கிழங்குகள கிண்டி எடுத்து வேவிச்சு திங்குறது தான் அவுக வழக்கம். பேச்சியம்மை தானே மண்ணடியில புழுத்து அங்கு மக்கினது மயங்கினதையும் உண்டு, கிழங்கும் வேருமா மரமும் தாவரமுமா விளையிறானா, அவளுக்கு வேருக்கு அடியில மண்ணுக்குள்ள நீரா ஓடி ஊட்டுறவ அவ தங்கச்சி ராக்காச்சி, வேட்டைக்கு காவலா நிக்கிறவளும் அவ தான்னு சொல்லுவாக. ஆதியிலே இருந்து இந்த அக்காளும் தங்கையும் தான் அந்த குடிக்கு தெய்வம். ஆனாலும் அவுகளுக்குனு ஆதியில எந்த பேரும் இல்ல. மலைக்குடியில குடி மூப்பத்திகளா பேச்சியும், ராக்காச்சியுமா திரும்பவும் பிறந்து மாண்டு ஆயிகளா ஆன பின்னதான் பேர் வந்துச்சு அவுகளுக்கு. அம்மையோட பேறு கொண்ட வயித்தில தான் எல்லாம் விதையா உறங்கி கிடக்கு அங்க இருந்து தான் அத்தனையும் முளைச்சு வருதுனும் சொல்லுவாக. நாம உலகமா மண்ணுக்கு மேல காங்குறது அத்தனையும் அவ வயித்துல மண்ணுக்குள்ள உள்ளதோடு நிழல்லா. சுனைக்கரையில உள்ள மரத்தை சுனையில காங்குற மாதிரி" என்று நீண்ட பீடிகையோடு கதை சொல்ல துவங்கினார் மலைக்காணி. திண்ணையில் அவர் குரல் மட்டும் ஒரு கார்வையுடன் ஒலித்துக்கொண்டிருந்தது. வெயில் மெல்ல உச்சிக்கு ஏறத் துவங்கியிருந்தது. ஆச்சி கம்பங்கூழை ஆளுக்கொரு கலசத்திலாக ஊற்றிக்கொடுத்து, ஊறுகாயும் எடுத்து வைத்தாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக