ஐயன் பந்தி - 17
நெருப்பு
திருவாடல் - 4
மலைக்காணியின் கனத்த அடிக்குரல், பின்னிரவு பனியில் நனைந்த மரத்தின் இலை உதிர்க்கும் துளிகளென சொல் சொல்லாக விழுந்து கொண்டிருந்தது. கேட்பவர்கள் முகங்களில் இமைகொட்டும் சலனங்களன்றி வேறொரு சலனமும் இல்லை. உள்ளங்களோ, நிறைந்து வழிந்து பரவி ஒன்றென்றே கூடின. ஆடி மாதக்காற்றும் உச்சி போதில் சற்று சமனம் கொண்டிருந்ததால், ஏற்றிய தீபம் கூட ஆடாது அமைந்து எரிந்தது. காணியின் குரலில் பேச்சாக ஒலித்துக்கொண்டிருந்த 'பேச்சியின் கதை' வேகம் கூடி சந்தத்தோடு கவி என வடிவுகொண்டது. சாரல் என தூறல் என மாறி பின் பெருமழை என ஓலமிட்டு பொழிந்தது. பாட்டி கூர்ந்து தரையில் பார்த்தவாறு தன் காலில் அணிந்திருந்த தண்டையில் அதற்கேற்ப சன்னமாக தாளம் போல தட்டிக்கொண்டிருந்தாள். அவள் தண்டையின் உள்ளிருந்த பரல்கள் குலுங்கி அசங்குவது மலைக்காணியின் கார்வையோடு இசைந்து நீண்டது.
"ஆதியில செம்பக மலை குடின்னு அவுகளுக்கு பேரும் இல்ல, அவுக அந்த செம்பக வனத்தில குடியேறவும் இல்லை. அதுக்கும் மேக்க இன்னும் ஏழுமலைச் சரிவு தாண்டி பிச்சி பூத்த வனத்துல குடியிருந்தாக. அதுக்கு மலையாள வனம்னு பேரு. கருங்கல்லும் செங்கல்லும் நிறுத்தி அக்காலும் தங்கையும்னு சொல்லி வழிபட்டு வந்த குடியில ஆணை கூட்டம் போல அம்மைக தான் அதிகாரிக. ஆம்பளைக அவுகளுக்கு காவக்காரக. மூப்பத்திமார் சொன்ன சொல்ல மிஞ்ச அந்த வனத்துல எந்த ஆணுக்கும் அருகதை இல்லை. அந்த அம்மைமார்கள மாமங்கலைகனு சொல்லுவாக. இழுத்து உச்சந்தலையோடு கட்டின பெருங்கொண்டையில பிச்சி பூ முடிஞ்சு கருங்காலி பிரம்பையும் சுழட்டி காத்துல வீசி ஒத்தை ஒருத்தி இறங்கினா, மதம் பிடிச்ச கொம்பன் கூட வால சுருட்டி கவட்டில் வைச்சு மரத்தளைப்புல ஒளியும். அம்மைக்கு, முன்னோடியா ஒரு முழுத்த இளந்தாரிக்கு பட்டம் கட்டுவாக. அவன் தான் குடிகாவலும், வேட்டைக்குத் தலைமையும்." என்று மலைக்காணியின் குரல் மெல்லிய சல்லாத்துணியென அங்கிருந்த அனைவரையும் சூழ்ந்து பொதியத் துவங்கியது. மனையில் இட்ட விளக்கும் மயக்கம் என்றும் அல்லவென்றும் இரண்டு திரிகளாகி, பின் ஒன்றாகி அசைவற்று ஒளிர்ந்தது.
மலையாள வனத்தின் தென் எல்லையாக வானை முட்ட நின்ற தென்மலை மேல் தாமரை பூத்த தடாகம் ஒன்றுண்டு. கோடிட்டு எழுதியது போல வட்டமாக, அந்த தடாகத்தை சுற்றி பிச்சி செடிகள் புதர் என மண்டி அடர்ந்திருந்தன. காற்றின் கால் கொண்டு எட்டு திசையும் பரவும் அம்மலை வனத்தின் மலர் மணத்தால் மனம் பித்தேறும் என்று அறிந்த மலைக்குடியனர் அதன் அகமேறுவதேயில்லை. மலர் வேண்டி செல்பவர்களும் காவின் விளிம்பில் உள்ள மலர்களை மட்டும் பறித்து கூடைகளை நிறைத்துக்கொண்டு திரும்பி விடுவார்கள். மலைமேல் வனத்தின் வெளியே கீழ்ப்புறத்தில் குற்றால மரத்தடியில் அக்காளுக்கும் தங்கைக்கும் பலிக்கொடை கொடுக்கையிலும், வனத்தின் உள்ளே ஏறுவதில்லை. ஆளேறா அவ்வனத்தில், மண் எங்கும், அடர்ந்த சருகுகளின் அடியில், பூவின் மனத்தால் பித்துக்கொண்ட கருநாகமும் செந்நாகமும் மயங்கிச் சுருண்டு கிடக்கும். வட்டக்காவு நாகங்களுக்கும், நாக வடிவு கொண்டு அலையும் தெய்வங்களுக்கும், தாழ்வாரம் மனிதர்களுக்கு என்பதே வழக்கமாக இருந்ததங்கு.
அம்மலைக்குடியில் மூப்பத்தியாக அரவரசியாள் என்ற பெண்ணரசி ஆண்டு வந்த காலம் அது. அரவரசிக்கு துணையாக வளைஞன் என்ற அரசனும் உடனுறைந்தார். அரவரசியும் வளைஞனும் ஒப்பென்றும் உயர்வென்றும் மறறொருவரை சொல்லவியலா வண்ணம் அழகிலும் வீரத்திலும் பொலிந்து நின்றார்கள். 11 வகை தானைகளோடு, செம்மணியும், கருமணியும், வகைக்கு 16 ஆக கருங்காலி மரத்திலும் சந்தன மரத்திலும் கடைந்த வளையல்களும் கொடுத்து அரவரசியை, வளைஞன் ஊர் கூடிய மன்றில் கரம் பிடித்த மூன்றாம் நிலவில் அரவரசியின் அம்மை பெரிய முப்பத்தி உடலை விட்டாள். அது கழிந்து ஈரேழு நாளில் மூப்பத்திக்கு, தென் மேற்கு மூலையில், ஒற்றை பனையடியில் பெரும்பாறையில் மூப்பாத்திமார் விளக்குநிறையில், கல் அகல் வெட்டி வைத்து, காட்டுக்கோழி, மான், மிளாவு மூன்றும் பலியிட்டு, குருதியால் விடாய் தீர்த்து, ஆகவேண்டிய ஈமக்கடன் கழித்து முறைப்படி அரவரசிக்கு குடி முப்பத்தியாக பட்டம் கட்டினர்.
அரவரசி மன்றேறி குடி மூப்பத்தியாய் அமர்ந்த நன்நாளில் இருந்து வட்ட வன தெய்வங்கள் மகிழ்ந்து கனிய, வளமும், நலமும் பெருகியது வனம் முழுதும். கிழங்கு வகைகளும் கனிவகைகளும் எங்கும் விளைந்து கொழித்தன. கையில் மானோ, மிளாவோ, முயலோ அகப்படாமல் திரும்பிய ஒரு வேட்டையும் இல்லை . அன்றாடமும் வேட்டையால் வந்த இறைச்சி பெருகியதால், உப்பும், மஞ்சளும் தடவி, மலைப்பாறைகளை குடைந்தெடுத்த பெரிய பெரிய குழிகளில் காற்றுபுகாமல் மூடி புதைத்து வைத்தனர். உப்பிட்டு காய்ந்த கண்டங்களை அள்ளி கூடையில் நிறைத்து மலைக்காட்டில் நாலா புறமும் சென்று மற்றைய குடிகளில் கொடுத்து, அவர்களிடம் இருந்து வரகரிசியோ கம்பரிசியோ கூடை நிறைய பெற்று வந்து ஊர் சாவடியில் குவித்து சமமாக பங்கிட்டு கொண்டனர். அவரவர்க்கு பங்காக சேர்ந்த வரகும் கம்பும் மனைகளில் பெருக சிறு பிள்ளைகள் விளையாடுகையில் நடையெல்லாம் சிதறின. மேலாக வேட்டைக்கென ஆயுதங்கள் வாங்கி ஊண் கொழுப்பால் மினுக்கி, தோள் வாரும் உறையும் இட்டு பத்திரம் செய்து வைத்தனர். உரக்க சிரித்தும், ஓங்கி உரையாடியும் எந்நாளும் விழவென்றே வீங்கி நின்றது மலையாள வனம்.
12 ஆண்டுகளாக மலையாள வனம் கண்ட அவ்வளம், அன்று அம்மலையில் மூத்து பழுத்து நின்ற அன்னைமார் எவரும் அவர்கள் கண்ணாலன்றி சொல்லாலும் கூட அறிந்திராதது. அதனாலேயே ஐயுற்ற அன்னையரின் விழிகள் மெல்ல, பிறர் அறியாமல் மன்றில் ஆடும் பிள்ளைகளையும், மனையில் பூத்தமர்ந்த மங்கையரையும், தூரத்தே வானோடு முகடு உரசும் எண் திசையையம் சற்றே கவனித்த படி இருந்தன. ஒவ்வொரு களிப்பினுள்ளும், வெடித்த சிறப்பின் பின்னும் இன்னவென்று அறியா குறுங்கவலை ஒன்று இரவு வானில் திடீர் என மின்னி மறையும் மின்மினி என உதித்து மறைந்தது. அவர்கள், அறியா ஏதோ ஒன்றை எண்ணிக் காத்திருந்தனர். அது நல்லதா தீயதா என்பதையும் அறியாதிருந்தனர். தண்டக்காரன் முதுவன் மட்டும் வான் நோக்கிச் சொன்னான் 'விதை வலிகொண்டு பிளக்காமல் விருட்சங்கள் உதிப்பது இல்லை, துயருண்டு மக்களே! ஆனால் அன்னை உருக்கொண்டு எழுந்து விளையாட நம் மன்றையே குறித்துள்ளாள். வளத்தின் வடிவான ஆதி தெய்வம் எட்டுருக்கொண்டு திக்கிற்கு ஓன்றாக அன்னை என அமரும். உடன் காவல் என வீரர்கள் எண்மர் உதிப்பர். அவரோடு கூட பல வீரக்கொடி வழிகள் தோன்றி அன்னைமாரின் மடியேறி விளையாடும்' என்றபடி மலையேறினார். அவர் மேல் வந்து அருளுரைத்த பெயரில்லா அந்த தெய்வத்தை அவர்கள் 'பெரியவன்' என்றே அழைத்தனர்.
நிலம் பொலிவுற்றது, காடு பொலிவுற்றது, நீர் நிறைந்து ஆறுகளும் ஓடைகளும் பொலிவுற்றன. 12 ஆம் ஆண்டின், பதினொரு முழுநிலவுக்காலங்கள் கடந்து, பூமியும் கதிரவனை வலம்வந்து ஒரு சுற்றினை நிறைவு செய்யும் முன், 12 ஆம் முழுநிலவில், வட்டவன தெய்வங்களுக்கு பலியிட்டு பூசை செய்யும் வேனில் கொடைவிழவில், "மான் கன்றீன்ற காணிக்கையோ, பெண்டு மகவீன்ற காணிக்கையோ இடுங்கோள்" என்று கூவினான் 'முறைசாற்றி'. வழக்கமாக காணிக்கை விளி வந்தவுடன், அங்கங்கு இல்லங்களாக கூடிநின்ற கூட்டம் கலைந்து, முன்னும் பின்னும் வருவோர் போவோரோடு சிரிப்பும் பேச்சுமாக, முண்டி முன்னால் நகர்ந்து, அவரவர் காணிக்கையை விரித்த யானைத்தோலில் இட்டு பின்னடி வைத்து ஒழுங்கிற்கு வருவதற்குள் ஒரு போது கடந்து போகும். இன்றோ மெல்லிய சலசலப்போடு கூட்டம் கலையாது அங்கங்கேயே நின்றது. கடந்த ஒராண்டில் எவர் மனையிலும் வளர்ந்த பச்சிப்பேடைகள் முட்டையிடவில்லை, தறியில் கட்டி வளர்த்த மான்கள் கன்று ஈனவில்லை, பெண்டுகளும் மகவீனவில்லை, அதனால் காணிக்கையிட ஓரில்லமும் இல்லையென்பதை திடுக்கிடலோடு அப்போதுதான் அறிந்தனர் அனைவரும். காணிக்கை உரியை வெறுமனே திரும்ப பெறவேண்டாம் என 'முறை சாற்றி' ஒரு கைப்பிடி பிச்சிப்பூவை இட்டு, சுருட்டி எடுத்துவைத்தான். கொட்டும் குரவையுமாக பலி பூசை ஆனபோதும், உடல்கள் ஒடுங்கியே கைகூப்பினர் மக்கள். மூதன்னைகள் முகம் கவிய கண்ணீர் விட்டனர். பூசை நிறைவுற்ற பின், பலி யிட்ட உணவின் முதற்கூறு வாங்க வயிற்றில் பேறு நிறைந்த நங்கைகளும் எவரும் இல்லை. 'ஓய்' என ஓங்கி குரல் எழுப்பி, கொட்டும் குரவையையும் நிறுத்தி 'ஓரிரு நாளேனும் தள்ளிப்போய் குருதி வாராது காத்திருப்பவர் எவரேனும் உண்டா' என்று முறைசாற்றி மீண்டும் கூவிய போது, மன்று சொல்லோடு ஆவியும் அடங்கி நின்றது. அடர்ந்து கணத்த அம்முழுநிலவு இரவில், மரங்களும் அசையவில்லை, சருகுகள் உரசிப் புரளும் ஒலியும் கேட்கவில்லை.
மணமாகி மன்றேறிய, 12 ஆண்டுகளில், மக்கட்பேறு என்னும் ஒரு செல்வமட்டும் அறியாதிருந்த அரவரசியும் கண்ணில் நீர் சோர திகைத்து நினறாள். வளைஞனும் உள்ளமும் முகமும் கவிய நின்றான். பலியுணவின் முதற்கூறு வாங்க நிறை சூலி இல்லை என்றால், பலி மிச்சத்தை பிரிக்கவோ, நிறைகலசம் கலைத்து பூவும் நீரும் பெற்று வீடு திரும்பவோ ஏலாது. இனி செய்வது என்னவென்று அறியாது மன்று திகைத்து நின்ற வேளையில், இடைவரையும் முலை தழைந்த அலரிக்கிழவி தான், நீண்ட பெருமூச்சு ஒன்றைவிட்டு, 'முதுவனை கூட்டி வாருங்கோ' என மெல்ல கூறினாள். சொல்லவிந்து இருந்ததாலோ, அல்லது உள்ளங்களே அசைவற்று அமைந்திருந்ததாலோ அந்த மெல்லொலியே திடும் என ஒலித்த பேரொலியாகி அதிர்ந்து அனைவரையும் உடல் விதிர்க்க செய்தது. தெய்வமே ஆணையிட்டது என வில்விட்டு பாய்ந்த அம்பை போல வேறொரு சொல்லும் சொல்லாமல் வட்டவன முகடுவிட்டு தெற்கு சரிவில் இறங்கினான் 'முறைசாற்றி'. மக்கள் அறிந்திருந்தனர் தென்சரிவில் குகை என பிளந்து நிற்கும் பேரால மரத்தூரில் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தொங்கவிட்டு, சடை பற்றிய தலைமுடி விரிந்திருக்க, அரைக்கண்கள் மூடி அமர்ந்திருக்கும் முதுவனை அழைக்கச் செல்கிறான் முறைசாற்றி என.
முறைசாற்றி இறங்க துவங்கி அவன் தலை மறையும் முன்னமே, நீண்ட கழி ஒன்று பாறைகளில் ஓங்கி ஊன்றும் ஒலி அருகனைவதைக் கேட்டனர் மக்கள். முன்னடி வைத்து இறங்கிய முறைசாற்றி நின்ற இடத்தில் இருந்தே பின்னடி வைத்து மேலேறினான். அவன் மேலேறி வலப்பக்கமாக விலகியபோது, வெள்ளை நிலவில் தலையில் பரந்திருந்த வெண்முடிகள் ஒளிர, கரிய முகமும்,சற்றே மலர்ந்து சிரிக்கும் அதரமுமாக மேலேறினார் முதுவன். வலக்கையில் பிடித்திருந்த தண்டம் முதுவனின் வலத்தோள் வரை உயர்ந்திருந்தது. இடத்தோள் போர்த்தியிருந்த வெண்ணிற ஆட்டுத்தானையின், அடியில் ஓடி இடைவளைத்து வலப்புறமாக திரும்பியிருந்தது யானை முடியாலான மூன்று பிரிகொண்ட நூல் ஒன்று. இடையில் கரிய எருமையின் தோலால் ஆன இடையாடையை சுற்றி, உருண்டையாக தீட்டப்பட்ட வெண்ணிற கற்கள் கோர்த்து தைத்த இடைக்கச்சு இறுகியிருந்தது. அவர் ஒவ்வொரு அடியாக உயர்ந்து வர, அதுவரை அமைந்திருந்த காற்று தெற்கிலிருந்து சுழன்று முதுவனின் வலப்பக்கமாக ஏறி அக்காளும் தங்கையுமாக கிழக்கு நோக்கி வீற்றிருந்த அம்மைகளின் பீடங்களை தாண்டி வடபுறமாக நகர்ந்தது. எங்கோ அதிகாலை பச்சிகள் அறிவுற்றுச் சிலம்பத் துவங்கின. கூட்டத்தில் ஆசுவாச பெருமூச்சுகள் எழுந்தன. வலதுகாலை முதலில் வைத்து முகட்டில் ஏறி அதற்கிணையாக இடக்காலையும் ஊன்றி முதுவன் நின்ற போது, உடல் நடுங்க 'முறைசாற்றி' அவர் முன் நிலம் நோக்கி விழுந்தான். அவன் விழுந்தது கண்டு மன்றில் அனைவரும் முதுவனை நோக்கி விழுந்து வணங்கினர்.
"எழுந்திருக்கணும்" என்ற ஒற்றைச்சொல்லில் அனைவரையும் எழுப்பினார் முதுவன். அவர்களில் கடைசி ஆளும் எழுந்து சமநிலைக்கு வரும் வரை காத்திருந்து விட்டு, முதுவன் முன்னால் ஓரெட்டு வைத்த மழைக்குடிகள் அனைவர் முன்னும் தண்டத்தோடு தானும் விழுந்தார் 'ஹரிஹரி' என்றபடி. அரவரசி 'முறைசாற்றி'யை நோக்க, 'முறைசாற்றி' ஓரடி பின் வைத்து "எல்லோர் பொருட்டும் எழுந்திருக்கணும்" என்று கூவினான். முதுவன் எழுந்து அரவரசியையும், வளைஞனையும் தலையால் மட்டும் அசைத்து அழைத்து, "இருவரும் சேர்ந்து மடியால் முதற் பங்கை பெற்று, எட்டு பங்குகளாக்கி, பங்கிற்கு ஒரு பகுதியெடுத்து, அதை ஒன்று கூட்டி வட்டவன எல்லையில் காணும் முதல் புற்றில் இட்டு, எட்டுமுறை விழுந்து வணங்கி, எட்டு பகுதிகளில் மிஞ்சியதை ஒவ்வொன்றாக இருவரும் சேர்ந்து உண்ண வேண்டும்". என்று விட்டு மன்றை நோக்கி "அது கழிந்து பலி உணவை பங்கு பிரித்து மன்று திரும்பி பாராமல் வீடேகலாம் . அரசியாளும், வளைஞனும் இங்கயே இருக்கட்டும்." என்றார்
ஆணையென எழுந்த அக்குரலைக் கேட்டு அதிர்ந்தது கூட்டம், "முதுவனே. நிறைகலசம் கலைத்து பூவும் நீரும்கொடுத்தால், வேனில் காலம் முடிந்து, ஆற்றில் புது வெள்ளம் வரும் வரை, எவரும் முகட்டில் தங்கவோ, திரும்பி வரவோ வட்டவன தெய்வங்கள் சம்மதிப்பதில்லை என்பது நீ அறியாததல்ல, உள்ளபடிச்சொல்லணும்" என்றாள் அலரிக்கிழவி. "
"அம்மையறியாததில்லை விதை முளைத்து விருட்சமாகும், கனிகளும் அதனுள் வீரியமுள்ள விதைகளும் உண்டாகும். காலம் இயங்குமுறை அதுவே. விருட்சமாவதற்கே விதைகள் பிறந்தன. இவ்விதைகள் இனிவரும் காலத்திற்கான ஆதார விருட்சங்களாக இங்கேயே நிலைகொள்ளும்" என்றார் முதுவன்
"ஒரு முழு குருவட்டமா" என்றாள்
"ஆம்" என்றார்
பலி மிச்சிலை இல்லங்களுக்கு பிரித்து கொடுத்து, பூவும் நீரும் பெற்று திரும்புகாலில் அனைவரும் இறங்கியபின், அரவரசியின் கைக்கோளை முறையாக வாங்கி தன் தோளில் சார்த்திக்கொண்டு, அரசாளையும், வலைஞனையும் நோக்கி கை உயர்த்தி "இனி பன்னிருவருட தவம் நமக்கு" என்று வாழ்த்தினாள் அலரி. பின் "உனக்கும் அது தானே" என்றாள் முதுவனை நோக்கி.
"ஆம், அவனும் புறப்பட்டு விட்டான், இனி அவர்கள் காலம்"
"எனக்கும் இடமுண்டு" - என்று கணக்க சிரித்தாள் கிழவி
"ஆம், ஆம்" என்றும் தானும் சிரித்தார் முதுவன்.
"சரி" என்று திரும்பி பாராமல் இறங்கினாள் கிழவி
நடப்பது என்னவென்று முழுவதும் அறியாதவர்களாகவும், முகத்தில் மலர்ந்த புன்னகையோடும் கைகூப்பி அலரிக்கிழவியை வணங்கி வழி அனுப்பிவைத்தனர் அரவரசியும் வளைஞனும். அக்காளும் தங்கையுமாக அமர்ந்திருந்த அம்மைகள், காற்றாக அலைந்து பதிட்டையை மூடியிருந்த பிச்சிமலர்களை உதிர்த்து வாழ்த்தினர். குழவி நாகங்களிரண்டு பின்னியபடி குற்றால மரத்தில் இருந்து தரையில் விழுந்தன. பேடையும் ஆணுமாக கருங்குருவிகளிரண்டு, வாயில் கவ்விய காய்ந்த பூல்லோடு கூடு கட்ட இடம் தேடின. தூரத்தே ஆனைச்சாத்தன் இரண்டு எதிர் எதிரே பேசிய குரல் கேட்டது. கிழக்கே மெல்ல செவ்வொளி வீசி கதிரும் எழுந்தது.
தோளில் சார்த்திய கருங்காலி கோளோடு கடைசியாக இறங்கி தாழ்வாராம் அடைந்த அலரியைக் கண்டபோது மலையாள வனக்குடியில் அறிந்தோர் அறிந்து கொண்டனர், "இதற்கு ஒரு பொருள் மட்டுமே உண்டு, இனி அரவரசியாளும், வளைஞனும் வட்டவனம் விட்டு வரப்போவதில்லை" என்று. வேனில் கொடை விழவு முடிந்து, நிறை கலசம் கலைத்த, பூவும் நீரும் பெற்று வட்டவனம் விட்டிறங்கினால் மீண்டும் புதுவெள்ளம் வரும் வரை மலை ஏறுவதில்லை, அது மட்டுமல்ல, அம்மலை முகடு நோக்கி ஒரு இரவு கழியும் வரை திரும்புவதும் இல்லை என்பதே வழக்கம். இம்முறை அவ்வழக்கத்தையும் விட்டு பலர் அரவரசியாளையும், வளைஞனையும் எண்ணியவாறு வட்டவன மலையை நோக்கி, ஒரு முறை விழுந்து வணங்கிவிட்டு வீடு திரும்பினர்.
***
நீண்ட கால இடைவெளிக்கு பின், மீண்டும் தொடங்கியது மகிழ்ச்சி
பதிலளிநீக்குகதைகள் வர தொடங்கி விட்டன.. வேகம் எடுக்க காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குபடிக்கும் போது கதை நடக்கும் இடத்துக்கு எழுத்து நம்மை கொண்டு செல்கிறது.