ஐயன் பந்தி - 19

நெருப்பு 

திருவாடல் - 6 

"வலியது என்றாள் என்ன ?" முதுவன் கேட்டார்

"இந்த மலை வலியது" என்றான் வளைஞன்.

"அதைத்துளைத்து கீறிய விதை அதனினும் வலியது அல்லவா?" என்றார் முதுவன்

"இல்லை, அது விளைய தன்னை நெகிழ்த்திக்கொண்ட மலையே வலியது" என்றாள் அரசியாள்.

"மான் மீது பாயும் வேங்கை வலியது தான், ஆனால் தன் குட்டியை காப்பாதற்காக, அதன் குறுக்கே பாய்ந்து தன்னுயிரை கொடுக்கும்  தாய் மான் அதனினும் வலியது” என்றான் வளைஞன். 

"நாள் எல்லாம் அலைந்து, பசித்து, கலைத்து, கொளுத்த பன்றி ஒன்றினுக்கு குறிவைத்த  வேட்டைக்காரன், அதன் மடியை முட்டி பாலருந்தும் குட்டிகளை  கண்ட போது அதை விட்டுட்டு உணவருந்தாமல் இரவு உறங்குவான் என்றால், அவன் தாய் மானினும்  வலியவனாவன்  அல்லவா?" என்றார் முதுவன்.

'ஆம்' என்றாள் அரசியாள் 

"கருணையும், அன்பும்,  நல்லுணர்வுகள் அத்தனையும், வலியதே. அதை விடவும் வலியது என எதுவும் உண்டா" ?

அரசியாளும், வளைஞனும் பதில் எதுவும் சொல்லாமல் அவரையே நோக்கி அவர் மேலும் சொல்லக்காத்திருந்தார்கள். 

“மானை படைத்து அதை உண்ணும் வேங்கையையும் படைத்தது எதுவோ, அதுவே  அனைத்தினும் வலியது" என்ற முதுவன் மேலும் சொன்னார். "எவ்வுயிர் மானாகும்? எது அம்மானை வேட்டையாடி  உண்ணும் வேங்கையாகும் என தீர்மானிப்பது எது? அதனை வினை என்றனர்”

"வினை என்பது என்ன?" எனக்கேட்டு அவரே தொடர்ந்தார் 

நிகழ்வது அத்தனைக்கும் அவ்வவற்றுக்கான விளைவுகள் உண்டு. விளைவு இல்லாத செயலலென இங்கு எதுவும் இல்லை. செயலும், அதன் விளைவும் இணைந்ததே வினை. வினைகள் இன்னும் வினைகளை விளைவித்தபடியே இருக்கும். ஒன்றில் ஒன்று என தொடுத்துக்கொண்டிருக்கும்  வினைகளினால் ஆன கரைகளின்  நடுவில் ஒழுகும் நதியையே  வாழ்வு என அறிகிறது மானுடம். வாழ்வு எனபது ஒரு பிறப்புக்கும் ஒரு இறப்புக்கும் மட்டும் இடைபட்டதல்ல. எண்ணிறந்த பிறப்பு இறப்புகளின்  வழி நீளும்  ஒரு தொடர்சங்கிலி. நதி வளரும் தோறும் நீண்டுகொண்டே இருக்கின்றன கரைகளும், அல்லது கரைகள் உள்ளதாலேயே நதியும் இருக்கின்றது. 

வினை நல்லதும் தீயதுமாய் ஆவது எங்கனம்?. உணவுக்காக மானைக்கொல்வது வினை, ஒருவகையில் இன்னொரு உயிர் துயர்கொண்டதால் தீவினை என்றும் சொல்லலாம். கொன்ற மானை பசியில் தவித்த மற்றோரு உயிருக்கு கொடுத்து பசியாற்றும் போது அதுவே நல்வினை என உருக்கொள்வது எதனால்? 

அதனை அறம் என்றனர். அனைத்திற்கும் ஆதாரம் ஆவது அறமே. இவ்வுலகு ஒரு பெருநிகழ்வு. அதனின்னுள்  உள்ளது அத்தனையும் நிகழ்வுகளின்றி வேறில்லை. ஒன்றையொன்று ஊடாடியும் விலகியும், தனித்தும் நிகழும் பல்வேறு நிகழ்வுகளின் ஒரு தொகை.  உயிர் உள்ளதும் அல்லாததும் இங்கு நிகழ்ந்தபடியே இருக்கின்றான. இமை மூடி திறக்கும் தோறும் காண்பது வேறொரு உலகையே. இவையனைத்தும்  நிகழ்வதும் அவ்வவற்றின் அறத்தைக்கொண்டே.  நீர் கீழ்நோக்கி பாய்வது அதனுடைய அறத்தாலேயே. தீ கீழ் நோக்கி எரியாது என்பது அதன் தளை அல்ல. அதன் அறம் அவ்வாறு அதை நிகழ்த்துகிறது. இவ்வுலகு எனும்  பேராடல் அறம் எனும் நெறியாலேயே ஒர் ஒழுங்கிற்குள் நிகழ்கிறது. ஆடலின் விதியே அறம். அறமே வலியது! அதனினும் வலியது என எதுவும் இங்கில்லை. நிகழ்வன எல்லாம் வினைகளே அறத்தில் நின்று வழுவிய வினைகள்  தீவினைகள் ஆகின்றன. அறம் கருணையினால் நமக்கு அருளியவை, வழுவே ஆன போதும் நல்வினைகள் ஆகின்றன. ஒரு துளியும் வழுவாத அறத்தின் பால் நிற்கும் போது அதில் செயலும், விளைவும் இல்லை, அங்கு வினையும் இல்லை என்று அறிக. அறம் தன்னை ஒரு துளி தளர்த்திக்கொண்ட போது உருவானதே உலகு. அது மீண்டும் நிகர் நிலைக்கு வரும்போது, உலகும் அதனோடே ஒடுங்கும். மீண்டும் உதிக்கும். ஓயாத சுழலும் ஒரு பெருவட்டம். அதையே அறத்தின் பெருவட்டம் என்றனர்.

தன்னறத்தால் இவ்வுலகினை தாங்கும் என்னரவுகளில் முதல்வன். கரும்பச்சை நிறம்கொண்டு மின்னும் கரிய நாகமென மிளிர்பவன். தன்  மனையாள் அரவினியாளுடன்  ஆழங்கள் ஆறும் கடந்து ஏழாவதில் அரியணை வீற்றிருந்து அரசாள்பவன்.  நல்வினையும் தீவினையும் மண்ணில் உள்ளபடி நிகழ ஏது செய்பவன். அதில் சிறு விலகலையும் பொறுக்காதவன்.  அவ்வாறு ஆகுமாயின், வழி மீறிச் செல்வனவற்றை பட்டென வெட்டி முறித்து ஒழுங்கிற்கு கொண்டு வருபவன். வினை வழி நடக்கும் வாழ்வென்னும் பேராடலின் வடிவு கலையாது காப்பவன் என்பதால் அவனைத் தச்சன் என்று அழைத்தனர். 

உள்ளத்தின் உள்ளே எதுவொன்று உங்களை நீங்களென்றாக்குகிறதோ அது அவனென்றே அறிக, ஆணைச்சக்கரமான புருவ மத்தி கடந்த "புள்ளி"யில் அப்பாம்பினையரையே எண்ணி தொழுதிருங்கள் என்று மலையிறங்கினார் முதுவன். 

தச்சனையும் அரவினியாளையும் ஆழத்தில் மீட்டியபடி வாழ்ந்திருந்தனர் அரசியாளும் வளைஞனும். அவ்வாறு  வாழ்ந்திருந்த  ஒரு மாலைப்பொழுதில், கரும்பாறையில் அமர்ந்து அரவரசியாளை மடியோடு சாய்த்துக்கொண்டு, வளைஞன் சொன்னான். 

“அரசியே, நான் முன்னொரு நாள் ஒரு கனவு கண்டேன். அக்கனவில் கண்டது எதையும் நான் நேரில் கண்டதில்லை, அவை அனைத்தும் நம்ப முடியாதவாய் இருந்தன. நான் கண்டிறாதவை என்பதால் அவற்றை சரியாக என்னால் சொல்லி விடவும் முடியாது. பலவற்றிருக்கும் உரிய சொற்கள் கூட என்னிடமில்லை, பல சொற்களையும் உண்டாக்கி சொல்கிறேன் கேள்"  என்று தான் கண்ட கனாவைச் சொல்லத்துவங்கினான் வளைஞன். அரவரசியாள் அவன் மடியில் சாய்ந்து கண்மூடியபடிக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவன் சொல்லச்சொல்ல மூடிய இமைகளுக்குள் அவள்  விழிகள் இரண்டும் உருண்டபடியே இருந்தன. கதிரவனும் பொன்னொளி  சொரிந்து அவர்களை தழுவி அக்கணத்தை வாழ்த்தி விடைபெறத்துவங்கினான். 

வண்ண வண்ணமாய் மலர்கள் பூத்து சூழ்ந்திருந்த வனம் அது. செடிகளிலும், கொடிகளிலும்,  புதர்களிலும், மரங்களிலும் எல்லாம் மலர்கள் பூத்து நிறைந்திருந்தன. எட்டு விதமான நாகவினங்கள், அம்மலர்களின் மணத்தால் கிறங்கி  அவ்வனம் எங்கும் ஊர்ந்தபடி இருந்தன. நாகங்கள் அல்லாத வேறு ஒரு உயிரும் இல்லை அவ்வனத்தில். அம்மலர் மணத்தால் கிறங்கி அதன் உள்ளே வரும் மற்ற உயிர்களை, கொத்தி செயல் இழக்கச்செய்து, அதை உண்டு பசியாறின நாகங்கள். அவை ஒவ்வொன்றும் விரும்பினால் மானாகவோ, மயிலாகவோ, மனிதராகவோ உருமாறும் வரம்பெற்றவை. அவ்வனம் முழுதும் மண்ணாலும் மரத்தாலும் ஆன பெரும் பெரும் கூடாரங்கள் இருந்தன. அவற்றின் சுவர்கள் கூறைகளிலும் கூட மலர்க்கொடிகள் படரந்தேறி மலர்ந்து மறைத்திருந்தன. அங்கே தச்சன் எனும் அரச நாகத்தின் மகளாக பிறந்திருந்தாய் நீ, நானோ எளிய காவலானாக இருந்தேன். 

ஓரு முறை உன் தோழியரோடு நீ நீராட வந்தபோது உன்னைக்கண்டன். உன்னைக்கண்ட நொடி முதலே தீராக்காதல் கொண்டேன், உன் மீதும், வாழ்வின் மீதும். சரியாகச் சொன்னால், அன்று தான் அதுவே  காதல் என்பதை அறிந்துகொண்டேன். நீ வரும்வழியில் தாழம்பூ மடல்களை விரித்து வைப்பேன் நீ அறியா வண்ணம். கனிந்த பழங்களை, காணுயிர்களின் இளங்கரியை பக்குவப்படுத்திக் கொண்டுவந்து வைப்பேன். நான் சேகரித்த மணி முத்துகளை ஒரு முழுநிலவிரவில் ஒளிசிந்த சிதறவிட்டிருந்தேன். ஒரு நாளும் உன் முகம் நோக்கி  எதிர்வரவோ, உன்னிடத்தில் ஒரு சொல் சொல்லிவிடவோ முயன்றதில்லை. இரவு வானில் நிலவைக்கண்டு அதை பிடிக்க பறக்கும் மின்மினி பூச்சியென பறந்து கொண்டிருந்தேன். ஆனாலும் பரவசமாய் இருந்தேன். அந்நாட்கள் போல பின்னெப்போதும் இருந்ததில்லை. 

பனையோலையால் கிளுகிளுப்பை ஒன்றை செய்து, அதில் பரு மணல்களை இட்டு வைத்திருந்தேன். அதோடு எட்டு உள்ளங்கையளவே உள்ள குருத்தோலை பெட்டிகள் செய்து உன் வழிநடையில் வைத்தேன் ஒரு நாள். அன்று தான் முதன் முதலில் நீ அவற்றை கவனித்தாய். மெல்ல அதன் முன் ஒரு கொடி போல அமர்ந்து, கிளுகிளுப்பையை எடுத்து குலுக்கி பார்த்தாய். பெட்டிகளை ஒவ்வொன்றாய் எடுத்து உள்ளகையில் வைத்து அழகு பார்த்தாய். அதிலொரு பெட்டியில் விளிம்பில் நீட்டி உருத்திய மென்நாரை, திருகி கிள்ளி சமன் செய்தாய். இனிமையாய் ஒரு  புன்னகையை மட்டும் சிந்திவிட்டு, கிளுகிளுப்பையையும் பெட்டிகளையும் அங்கேயே   விட்டு விட்டு எப்போதும் செல்லும் வழியிலேயே சென்று விட்டாய். அன்று நான் என் வாழ்வின் பயனையே அடைந்து விட்டேன் என்று நினைத்து ஆனந்தத்தில் கூத்தாடினேன். உள்ளம் உள்ளே குதித்த படியே இருந்தததால். எதையும் உண்ணவோ உறங்கவோ கூட முடியவில்லை. கட்டாயமாக அள்ளி வாயில் வைத்த உணவு தொண்டைக்குழி தாண்டி இறங்கவில்லை,  குமட்டியது. அன்றுமுதல், நீ தொட்ட அந்த கிளுகிளுப்பையையும், நீ திருத்திய அந்த சிறு பெட்டியையும் மடியோடு கட்டிக்கொண்டு திரியத்துவங்கினேன்.

பின்னொரு நாள் ஒரு முறைசாற்றி "அரசர் தச்சன், மகள் நாககன்னிக்கு 'மகள் வேட்டல்' பந்தல் அமைக்கின்றார். எட்டு நாகவினங்களின் அரசர்களும், இளவரசர்களும் உரிய பரிசில்களோடு வந்து மகள் வேட்டலாம். அரச மகள் தான் விரும்புபவரை, பரிசில்களை ஏற்றுக்கொண்டு மண  முடிப்பார். அந்நாளில் அரவக்குடிமக்கள் அனைவரும் 'மகள் வேட்டல்' பந்தலிற்கு  வந்து, அம்மங்கல நிலவில் கலந்து கொண்டு  அரச தம்பதியரை வாழ்த்த வேண்டுமென அரசரின் ஆணை" என முரசறைந்து அறிவித்தான். வானத்தில் பறக்கும் பறவையின் சிறகுகள் வானத்திலேயே வெட்டப்பட, உடல் மட்டும் என தரையில் விழுந்தேன். பின் அதுவே சரி என சின்னாட்களில் என்னை நானே சமாதானம் செய்து கொண்டு என் அன்றாடங்களில் தொலைந்து போனேன். 

நீண்ட நீண்ட மூங்கில்களால் கால் ஊன்றி,  சட்டமிட்டு, அதில் பல வித ஓலைகளால் கூரை முடைந்திருந்தனர். ஒளி ஊடுருவும் மெல்லிய காற்றில் ஆடும் தானைகள் அதை அலங்கரித்தன. அதில் மரத்தால் குடைந்து செய்த இருக்கைகள் இடப்பட்டிருந்தன. அரசன் தச்சன், உன் தாய் பக்கலில் இருக்க, காலைச்சூரியன் என மின்னும் ஒர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அது எதனால் ஆனது என்றும் எனக்கு தெரியாது. அவர்களின் வலப்புறத்தில்  நீயும் இன்னொரு இருக்கையில் அமர்ந்திருந்தாய். இரு புறத்து இருக்கைகளிளிலும் முறையாக எட்டு அரவினங்களின்  அரசர்களும் இளவரசர்களும், அவர்கள் சுற்றத்தாரும் அமர்ந்திருந்தனர். எங்கு மகிழ்ச்சியும், ஆரவாரமும் பொங்கியபடியே  இருந்தது. 'முறை சாற்றி' தோலால் கட்டிய  பெரிய குடம் போன்ற வாத்தியத்தில் கோலால் தட்டி உரக்கச்சொன்னான். 

"அரசர்க்கரசராம் கண்டத்தில் நஞ்சடக்கி நம்மை முக்காலமும் எக்காலமும் காக்கும் சிவனோடு, அவன் இடப்பாகம் அமர்ந்த உமையாளையும், அவர்கள் மடியமர்ந்த பிள்ளைகள் இருவரையும், மார்பில் அலைமகளை சூடிய கரியமாலையும், நாவில் அமர்ந்த கலைமகளோடு திசைமுகனையும், எட்டு அரவினங்களின் ஆதிகர்த்தர்களான என்னும் எட்டு நாகங்களையும்  அவரவர் மனையாட்டிமாரோடு   தொழுது, அரசர் தச்சர் ஆணைப்படி அறிவிப்பது என்னவென்றால். இந்த நன்னாளிலே, நல்லவேளையிலே  அரச மகள் நாக கன்னியாளின் "மகள் வேட்டல்" சடங்கு இனிதே துவங்குகிறது. மகள் வேட்கும் அரவின அரசர்களும் இளவரசர்களும், ஒவ்வொருவரும் முறைமைப்படி வந்து,  அவரவர் குலம் முதல், கீர்த்தி தொடங்கி, அவர்களை பற்றி அனைத்தும் அறிவித்து, அவர்கள் கொண்டு வந்த பெரும் பரிசில்களை அரவரசியாள் முன் அளிக்கலாம். முழுதும் கேட்டுமுடித்து  இளவரசியார் தனக்கு விருப்பமான பரிசிலைத் தொட்டு தனக்குரிய அரசனை தேர்த்தெடுப்பார்" 

அவ்வாறு முறைசாற்றி அறிவித்து, விலகியதும், எட்டு அரசவினத்தையும் சேர்ந்தா பல அரசர்களும், இளவரசர்களும் வந்து மன்றின் முன் தங்கள் பரிசிலை வரிசை வைத்து, தங்களை அறிவித்துவிட்டி சென்றனர். அனைவரும் அறிவித்து முடிந்தபின்னு, அரசர் உன்னை பார்க்க, நீ அங்கிருந்த பரிசில் வரிசைகளில் எதையோ தேடினாய், அதன் பின் ஒரு ஏக்கத்தோடு   வாயிலை நோக்கி யார் வரவுக்காகவோ காத்திருந்தாய். நான் இவை அனைத்தையும் ஒரு திரை மறைவில் நின்ற படி கண்டுகொண்டிருந்தேன். 

"என்ன மகளே" என்று கவலைக்குறி தோன்ற வினவினார் உன் தந்தை.

"தந்தையே நான் என் உள்ளத்தில் வேறொரு அரசரை குறித்திருந்தேன், அவர் இன்னும்  வரவில்லை" 

"எட்டு அரவினத்தாரும் இங்குண்டு. இனி வருவதற்கு ஒரு அரசரும் இல்லையே" என்றார் தச்சன்

"அவர் அரவினங்களின் அரசராக இல்லாதவராக இருக்கலாம், ஆனால் என்னால் அவரைக்கண்ட பின்னரே  முடிவு சொல்ல முடியும்" 

"அவர் யார் மகளே " என்றார் தச்சன் 

"அவரைக்கண்டதில்லை இதுவரையும் நான்" 

"காணாதவரை எங்கனம் கண்டடைவாய்" மேலும் குழம்பியவராக கேட்டார் தச்சன். 

"அவர் வாசம் அறிவேன்" என்றாள் அரவரசி 

"வாசாமா? அதை வைத்து எப்படி" எனத் திகைத்தார் தச்சன். மன்றும் மெல்ல முணுமுணுக்க துவங்கிய கலவை ஒலி எழுந்தது. 

ஒருவர் கேட்டு ஒருவர் என்று, முன்னால் நடந்த பேச்சுகள் பின்னால் வந்து சேர சற்று நேரம் ஆனது. எனனருகில் இருந்த இருவர் பேசிக்கொண்ட போது, என் காதிலும் விழுந்தது. நான் என்னை அறியாமல் திடுக்கிட்டேன். ஒருவேளை என்னைத்தான் சொல்கிறாயோ என நினைத்து. பின் இருக்காது என என்னையே சமாதானம் செய்துகொண்டேன். 

நீ அரசரின் காதோடு ஏதோ சொல்ல, அரசர் முறை சாற்றியினை அருகழைத்து, மென் குரலில் ஆணையிட்டார். 

அதன் பின் முறைசாற்றி முன்னால் வந்து,  முழவை அறைந்து, அறிவித்தான். 

"இளவரசி நாககன்னியார் இன்னும் ஒரு பரிசில்  வரக் காத்திருக்கிறார்.  அப்பரிசிலை அளிக்கும் அரசர் முன் வந்து வரிசை வைத்த பின்னரே தன் மணாளனைத் தேர்ந்தெடுப்பார். அப்பரிசில் உடையவர் எவராயினும் அவர் அப்பரிசிலோடு முன்வரலாம்,  அப்பரிசிலானது ஒரு ஓலையால் ஆன வினோதமான கிளுகிளுப்பையும், எட்டு சிறு பெட்டிகளும் ஆகும்" 

அதைக் கேட்டு வியந்த எழுந்த முனகல் ஒலி  மெல்ல சிலம்பி பின் ஓவென்ற இரைச்சலாக மாறியது. யாரும் முன் வராதது கண்டு, முறை சாற்றி மீண்டும் முழவில் கோல்கொண்டு தட்டி இரைச்சலை நிறுத்தி  "எவராயினும் பரிசலோடு முன் வரலாம், அரசர்க்கரசரின் ஆணை"  என்று உரக்க கூவினான்.

கூட்டத்தை கலைத்துக்கொண்டு, இடையில் ஒரு தானையும், அதை சுற்றி இறுக்கிய மேல் தானையுமாக நான் முன்னேறினேன். நீ தொட்ட நாளில் இருந்து எப்போதும் மடியோடு கட்டிக்கொண்டு திரிந்த கிளுகிளுப்பையையும், நீ திருத்திய சிறு பெட்டியையும், பெரிய மரப்பீடங்களில் வைக்கப்பட்டிருந்த, அரசர்களின் பெருவரிசைகளுக்கு பின்னால் வைத்து விட்டு நின்றேன். உடு துணி அல்லாத வேறொன்றும் இல்லை என்னிடம், அதனால் வெறும் தரையில் வைத்தேன் அப்பரிசில்களை. மன்றில் எழுந்த வியப்பொலிகள் நீரின்  ஆழத்தில் மூழ்கி இருப்பவனின் செவியில் விழுவது போல விழுந்தன. கண்கள் இடுக்கி மூதன்னைகள், முகவாயில் கைவைத்து என்னையே நோக்கிக்கொண்டிருந்தனர். இளையவர்கள் என்னை அசடன் எனக் கருதி சிரிப்பது போல் தோன்றியது. மலர்ந்து வியப்போடு விரிந்த இளம்பெண்களின் கண்கள் என்மீது கூர்த்திருந்தன. முதிய ஆண்கள் எங்கோ நோக்கியபடி அமர்ந்திருந்தனர்.  திறந்த மார்பின் மேல் மொத்த மன்றின் பார்வையும் கொடு வேல் எனப்பாய்ந்து கொண்டிருந்தது. இடையின் சிற்றாடைக்கு கீழ் என் கால்களில் வியர்த்த இடங்களில் காற்று பட சில்லென்று குளிர்ந்தது. என்னை பற்றி அறிவித்துக்கொள்ள ஒன்றுமில்லாத நான் "வளைஞன், அனந்தர் குலத்தில் பிறந்த இளங்காவலன்" என்று மட்டும் குரலை கடின படுத்தி உயர்த்தி சொன்னேன். நான் சொன்ன விதம் எனக்கே கூச்சமாக இருந்தது.  எங்கள் குலத்தின் அரசரான அப்போதைய அனந்தரும் அங்கையே அமர்ந்திருந்தார். 

நீ மெல்ல சிறுகால்கள் ஊன்றி நடக்கும் பறவையென, என்னை கூர்ந்து நோக்கியவாறு அரியணை விட்டு இறங்கிவந்தாய். ஒன்று நூறாயிரம் அம்புகள் என அத்தனை கண்களும் தாக்கும் போதும் தாங்க முடிந்த என்னால், உன் பார்வையின் கூர்மையை ஒரு நொடி கூட தாங்க இயலவில்லை. என்னையறியாமல் வழமைக்கு அதிகமாக கண்களை சிமிட்டிக்கொண்டு, மிரட்சி கொண்டு விழித்தேன். என் உடல் தகித்து தவிக்க துவங்கியது. இதயக்குழை வெடித்து அங்கேயே குருதி கக்கி சாவேன் என்று தோன்றியது. விழுந்து விடாமல் இருக்க, கால்களை கெண்டைச்சதைகள் இறுக  ஊன்றிக்கொண்டேன். உடல் வியர்த்து வழிந்த படியே  இருந்தது. என்னை வலமாக சுற்றிக்கொண்டு வந்து, மென் குரலில் "அதே மணம்" என்று உனக்குள்ளாகவே  சொல்லிக்கொண்டே என் முன்னால் வந்து, நான் வைத்த சிறுபெட்டியை எடுத்தாய். நீ எடுத்ததும் 'ஓவென்று' ஒரே குரலாக மன்று அலறியது.  எளிய குடிமக்களின் நிறையில் மகிழ்ச்சி குரல் ஆரவாரமாக எழத்துவங்கியது. மகள் வேட்டு வந்த அரசர்களும், அவர் சுற்றங்களும் அமைதியாக இந்நாடகத்தை கண்டுகொண்டிருந்தனர். தச்சனான உன் தந்தையும், உன் தாயும் மட்டும் முகத்தில் மலர்ந்த புன்னகையோடே என்னை பார்த்துக்கொண்டிருந்தனர். 

சிறு பெட்டியின் விளிம்பில், நீ திருத்தி சமன் செய்த அதே இடத்தில் நெருடி பார்த்துவிட்டு, உன்  வலக்கரத்தை உயரே தூக்கி, மன்றை ஒற்றை நொடியில் அமைதிப்படுத்தினாய், பின் என்னிடம் "வீரரே என்னை மணம் புரிய சம்மதமா?" என மிகத்திடமாக என் கண்களை நோக்கியபடி கேட்டாய்.

கலங்கிய கண்களின் துளியை இமைதாண்டாமல் நிறுத்தி வைக்க பெரும்பாடு பட்டேன். நாவு வறண்டு மேல் அன்னத்தோடு ஒட்டிக்கொண்டிருந்தது. உதடின் விளிம்புகள் காய்ந்து எரிந்தன. ஒரு சொல் உதிர்க்க முயன்றாலும் என் கட்டுபாடு விலகி அரற்றிவிடுவேன். அதனால், மெல்ல குனிந்து, எனக்கும் உனக்கும் இடையில்  தரையில் நான் வைத்த கிளுகிளுப்பையை எடுத்து உன் கையில் கொடுத்தேன். அதையே 'சம்மதம்' என அறிந்து வாங்கிக்கொண்டு உன் தாய் தந்தையரை நோக்கி சென்றாய். உன் தலைக்கூந்தலில் முடிந்திருந்த தாழ மடல்களை மட்டும் நோக்கியவாறு நின்றேன். மன்றின் பேரிரைச்சலும் என் செவிக்கெட்டவில்லை. அந்நொடியில், அங்கு நானும் நீயும், அல்லாது உன்னிலிருந்து வந்த தாழை மடலில் மணம் தவிற வேறொன்றுமே இல்லை. 

நம் திருமணம் கழிந்து சில நாட்கள் கழித்து தனித்திருக்கையில் ஒரு நாள் உன்னிடம் கேட்டேன். ஏன் என்னை திருமணம் செய்துகொண்டாய் என்று 

அதற்கு "அதுவே அறம்" என்றாய். 

"எப்படி" என்று திகைத்தேன். 

"நீங்கள் தாழை மடலை என் நடைவழியில் வைத்த நாளில் இருந்தே உங்களைக் காணாத போதும் உங்கள் உள்ளக்கிடக்கையை நான் அறிந்து கொண்டுவிட்டேன். ஆனால், அன்று பெட்டிகளையும் கிளுகிளுப்பையையும் கண்ட போது என்னை மீறி அதை எடுத்து நோக்கிவிட்டேன். அதன் நறுவிசும், அழகும், நீங்கள் எத்தனை இனியவர் என்று சொல்லாமல் சொல்லின. நான் பெட்டியை எடுத்ததையும் பார்த்ததையும் நீங்கள்  எங்கிருந்தோ கண்டுகொண்டிருக்கிறீர்கள் என நான் அறிவேன். ஏனெனில் என்றும் போல் அன்றும் உங்கள் மணம் என்னை சூழ்ந்திருந்தது அங்கு. அப்படி நீங்கள் கண்டுகொண்டிருந்தால் , உங்களுக்குள் ஒரு சிறு நம்பிக்கையை விதைத்தவளாகி விடுவேன். அவ்வாறாயின், சரியான முறையில் உங்களுக்குரிய, பதிலைச் சொல்லாமல் இன்னொருவரை திருமணம் செய்வது பிழை. அதனாலேயே உங்களையும்  கண்ட பின்னரே பரிசிலை  எடுப்பேன் என்று மன்றில் அறிவித்தேன்"

"ஒருவேளை அன்று பந்தலில் என்னை கண்ட போது என்னை பிடிக்காது போயிருந்தால்?" 

"அது மகள் வேட்பு பந்தல், பலர் வந்து வரிசை வைத்தாலும், ஒருவரையே தேர்ந்தெடுப்பாள் பெண்மகள் அங்கு. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது, வேட்டு வந்த மற்றவர்களுக்கு மதிப்போடு மறுப்புரைத்தவள் ஆகிவிடுகிறாள். அது பிழையாகாது. ஒருவேளை எனக்கு உங்களை பிடிக்காது போயிருந்தால், மறுத்து வேறொருவரை தேர்ந்தெடுத்திருக்கலாம்" என்று விட்டு நகைத்தாய்.

"நீயோ நானோ சந்தித்ததே இல்லை, நீ  எனக்கு எவ்விதமான வாக்கும் கொடுக்கவில்லை. பெட்டியை எடுத்தது ஒன்று தவிர நமக்குள் எந்த தொடர்பும் இல்லை. அதை நீ பெரிதாக பொருட்படுத்தாமல் விட்டிருந்தால் என்ன பிழையாகி விடப்போகிறது"

"நெருப்பில் துளியும் பெரிதே அல்லவா?"

"அத்தனை மெல்லிய இடத்திலுமா அறம் நிகழும்"

"மிக மெல்லிய பூவின் உள்ளிலும் சிற்றரவு குடியிருக்கும். ஏழு நிலைப்பந்தல் கட்டி அதன் மேல் ஊசி முனை கோபுரம் கட்டி, அவ்வுயரத்தில் ஆளுயரப்பெட்டி செய்து,  அதற்கு உள்ளே ஒளிந்திருந்தாலும், அறம் அங்கும் வந்து  கொல்லும்"

துவண்டு என் வெற்று மார்பில் சாய்ந்திருந்த உன்னை அணைத்தபடி, "அப்படியென்றால், நீ என்னை திருமணம் செய்துகொண்டது வெறும் அறத்துக்காகத்தானா?" இல்லை என்று நானறிவேன், என்றபோதும்,  சீண்டினேன் உன்னை. 

"மணம் புரிந்தது அறத்தின் பொருட்டே, ஆனால் காதல் கொண்டது, தாழை மடலும், உங்கள் மணமும் என்னைச் சூழ்ந்த அவ்வழிநடையில், அன்றே!" என்று என் மார்பில் முத்தமிட்டாய். என்று வளைஞன் கதையை முடித்த போது அரவரசியாள் உறங்கி போயிருந்தாள். அவளைக்கைகளில் ஏந்திக்கொண்டு வந்து குற்றால மரத்தடியில் படுக்கவைத்து, தானும் அருகில் படுத்துக்கொண்டான்.  

வானெங்கும் நக்ஷத்திரங்கள் மின்ன அரசியாளும் வளைஞனும் ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிய படி  குற்றால மரத்தடியில் உறங்கியிருந்த போது, கரு நிறத்தொரு கருநாகக்குழுவி ஒன்று வட்டவனம் விட்டு வந்து, அவர்கள் இடையில் புகுந்து, அவர்கள் உடல் வெப்பத்தில் சுருண்டு உறங்கியது. அவ்விரவில் அறத்தின் தெய்வமாய் எழுந்துவந்தாள் அவள். அறமெனத்திகழ்ந்து இவ்வாடலை ஆட்டுவிப்பவள்.  முடிவில் அத்தனையும் அவளிடமே ஒடுங்கும். எண்ணாயிரம் குழந்தைகள் சூழ அவள் எழுந்தருளினாள். அவள் அடிவயிற்றில் முன்னர் சுமந்திருந்த அண்டங்கள் அத்தனையும் குழந்தைகளாகி பிறந்து அவள் திருவடிகளைச் சுற்றியபடி இருந்தன. அத்தனையையும் பெற்றபின் அவள் பெண்ணுருப்பு வறண்டு  குருதி காய்ந்த  செஞ்சாந்தால்  மூடியிருந்தது. அவள் வயிறு ஆலிலை என படிந்து ஒன்றிப்போய் பசித்துக் காத்திருந்தது. முலைகள் தழைந்து காலிப்பைகள் என தென்னிய மார்பெலும்புகளின் மேல் தொங்கின. இவ்வுலகு அழியும் ஊழிபேரிரவில் உதிக்கும் ஒரே தெய்வம் இவளே. நிணத்தால் சிவந்து திறந்த வாய்வழியே தீயெனச் சுழன்ற நா நீட்டி அவளீன்ற அண்டங்களை அவளே அள்ளி உண்டப்படி இருந்தாள். உண்டு உண்டு கரைகொண்டு நீண்டிருந்தன கொடும்பற்கள். அழுந்திய குகைகளுக்குள் இருந்து துருத்திய கண்கள் தெறித்து விழுவது போல் தகித்தபடி இருந்தன. ஆனால்  நெற்றியல் திறந்திருந்த மூன்றாம் விழி மட்டும் பொன்னென ஒளி வீசீக்கொண்டிருந்தது. எலும்புகள் துருத்திய கைகால்களில் நகங்கள் சூருண்டு கருத்து கரிய புகையென எழுந்து அத்தனையையும் சூழ்ந்து வளர்ந்தபடியே இருந்தன. அவளுடலில் ஒரு துளியும் சதை இல்லை. எலும்பைப் தொக்கிய   துணியென தோல் சுருங்கிக் கிடந்தது. 

அரசியாள் இரண்டாம் குழிவியையும் நெளிந்தாடும் முட்டையாகவே  பெற்றிட்டாள். பேறாச்சி அலரி அக்குழந்தையை வாங்கி சுளவில் இட்டதும், தானே ஓடு உடைத்துக்கொண்டு வீல் என்று பசிகொண்டு அலறி அழுதது. தீராத பசியால் அழுதபடியே இருந்த குழந்தைக்கு, மானின்,  மிளாவின் பால்கறந்து ஊட்டினால் அலறி. என்ன ஊட்டியும் அழுகை மட்டும் ஓய்ந்தபாடில்லை. பதினோரம் நாளில் வந்த முதுவன், அலறியோடு, செதில்கள் பசுமை கொண்ட மின்ன, நின்ற அரசியாளையும் வளைஞ்னையும் பார்த்துவிட்டு  பொதுவாக சொன்னார். 

"ஒரு நாளும் பசியடங்காதவள். அறப்பிழை செய்தவர்களை உண்டு பசியாறுவாள். இவளை “அரக்கி” என்றே அழைப்போம்" என்று மூன்று முறை "அரக்காயி அரக்காயி அரக்காயி" என்று குழந்தையின் செவியில் உரைத்தார். பேரைக்கேட்டதும் மூவருமே திகைக்க, அதுவரை அழுதடங்காத “ராக்காச்சி” என செல்வ பெயர் கொள்ள போகிறவள் உண்டு நிறைந்தவளாக உறங்கினாள். 

அறம் கைப்பிடியில்லாத இருபுறமும் கூர் கொண்டு வாள். அதில் நிலைத்திருத்தல் உலகில் உள்ளவர்களுக்கு எளிதல்ல.  இவள் அவ்வறம் எனவே பிறந்தவள். ஒரு சிறு பிழையும் அவள் விழிகளில் இருந்து தப்பாது. அதனை அவள் பொறுப்பதுமில்லை. அறத்தின் தளர்வால் உருவானது இவ்வுலகு. அதை மீண்டும் நேர் செய்ய வந்தவள் இவள். பெருங்காட்டில் பற்றிய நெருப்புக்கு குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை.  அறம் சால்வாற்கும் அம்மூர்க்கம் உண்டு. பிழையாலேயே ஆன இவ்வுலகில் அவளை நேர்விழியால் காண்பதற்கு எவருமில்லை. அவர்கள் அவளைக் கண்டு அரக்கியென்றே அஞ்சுவர். ‘அஞ்சுக’ அவளைக்கண்டு.  அதுவொன்றே வழி எளியவர்களுக்கு.  அவளை அஞ்சுபவர்கள் தங்கள் தேவைக்கு மேல் பேராசை கொள்வதில்லை. அதனால் அவர்கள் பெரும்பிழைகளையும் புரிவதில்லை. அது ஒன்றே அவள் நமக்கருளும் கருணை. 

இவளும் இவள் தமக்கையும் ஒன்றின் இருபுறங்கள். மண்ணில் விளைந்த காடு பேச்சியென்றால், அக்காடு அழிந்து மீண்டும் மண்ணாவது இவளால். இவள் உண்டு அழித்தவற்றை அவள் உண்டு வள்ர்கின்றாள். அவள் உண்டு அழித்தவற்றை இவள் உண்டு வளர்கிறாள். மலையும் மண்ணும் அதனடியில் ஊரும் நிரூம் ராக்காச்சி. அதை உண்டு விளைந்த காடும், வானும், அது பொழியும் மழையும் பேச்சி.

***

                                                               

கருத்துகள்

  1. இந்த வசந்த நவராத்திரியில், வாக் தேவி சொல்லில் எழுந்து ஆடியிருக்கிறாள்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16