ஐயன் பந்தி - 21
நெருப்பு
திருவாடல் - 8
மகிஷனின் கொடும் படையெடுப்பையோ, அதன் மூலமாக நிகழ்ந்த அட்டூழியங்களை பற்றியோ எதுவும் அறியாது, ஏழாம்கருங்கடலின் ஆழத்தில், ஒளி ஊடுருவி அலைபாயும், பளிங்கு மாளிகையில் வாசுகி, ஆதிசேஷன், கார்கோடகன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன் என்னும் எட்டு நாகங்களையும் அவர்களின் பத்தினிமார்களோடு நிலைநிறுத்தி, மழலை வேண்டி தவம் இருந்தனர் நாககன்னி என்னும் நாக அரசியும், அவள் கணவனான நாகராஜனும். அவர்கள் ஒருவருக்கொருவர் அல்லாது வேறொருவரையும் காணாத, வேறொருவருடனும் உரையாடாத நோன்பு நோற்றிருந்தனர்.
தக்ஷக பெருங்குலத்தில் பிறந்து, அனந்தர் குலத்தில் உதித்த நாகராஜனை மணமுடித்த நாளில் இருந்து, நாககன்னி ஒரு குறையும் கொண்டதில்லை. ஆனாலும் மணமுடித்து பன்னிரு வருடங்கள் ஆகியும் மழலைச்செல்வம் மட்டும் தங்கவில்லை. நாகராஜன் அரச குலத்தில் பிறந்தவன் அல்ல, அனந்தர் குலத்தில் பிறந்த எளிய காவலன், நாககன்னியோ தக்ஷக மன்னரின் பட்டத்து இளவரசி. அவள் தந்தையாகிய அரசன் தக்ஷகன் நடத்திய மகள் வேட்டல் பந்தலில் அஷ்ட நாகவினங்களின் பல அரச குலத்தவர்கள் வந்து பல விதமான வரிசைகள் வைத்து காத்திருந்தும், நாககன்னி நாகராஜனையே தேர்ந்தாள். அன்று அப்பந்தலில் பொதுவில் ஏற்றுக்கொள்ள பட்டாலும், பல அரச குடும்பத்தாரின் உள்ளங்களிலும், அவர்கள் மட்டும் அறிந்த கசப்பு ஒன்று கனன்று கொண்டு தான் இருந்தது.
முறையாக மணவிழா முடிந்த பின், நாக கன்னிக்கும், நாகராஜனுக்கும் தனி அரண்மனை ஒன்றை உண்டாக்கி அதில் அவர்கள் இருவரையும் குடியமர்த்தினார் அரசன் தக்ஷகன். வெறும் நாகன் என இருந்த பெயர் நாகராஜன் என மாறியபின்னும், அவனை, என்ன விதமாக நடத்துவது என்பதில் நாக கன்னி தவிற மற்றனைவருக்கும் குழப்பமொன்று இருக்கவே செய்தது. பதவியோ, அதிகாரத்தையோ விரும்பாத நாகனுக்கோ, எவ்விதமான சங்கடமும் இல்லை. அவன் எப்போதும் போல் எளியவனாகவே வலம் வந்தான். அரசவைக்கோ அரச நிகழ்வுகளிலோ அவசியத்துக்கு மேலாக கலந்து கொள்வதை தவிர்த்தான். அரசமகளை கைப்பிடித்த பின்னும், எந்தவிதமான படாடோபங்களும் இல்லாமல், எளிதில் அணுகக் கூடியவனாக இருந்ததால், மக்களுக்கு அவன் மேலும் பிரியமானவன் ஆனான். அப்பிரியமே, ஒரு துருத்தியாகி அரச குலத்தாரின் உள்ளங்களில் நீறு பூத்த கனலாக இருந்த கசப்பை மேலும் கொழுந்துவிட்டு எரியத் தூண்டியது. பின் அந்நெருப்பு அரசாங்க ஊழியர்களிடமும் மெல்ல பற்றி பரவியது. வெளிப்படையாக யாரும் அதுகுறித்து உரையாடவில்லை, என்ற போதும் எளிய குடிகள் தவிற மற்றனைவரும், உள்ளே அக்கசப்பை கரந்தே இருந்தனர்.
தக்ஷகன் பெரிதும் துயர் கொள்ள துவங்கினார். தனக்கு பின் அரியணை ஏற வேண்டிய நாககன்னி இன்னும் மடி நிறையக் காத்திருக்கிறாள். நானாதேசங்களில் இருந்தும் வந்து கண்ட பல வைத்தியர்களாலும் என்ன காரணம் என்று அறுதியிட்டுகூற முடியவில்லை. பின்னொரு நாள் வேறு எதுவும் பிரச்சனை இருக்குமோ என்ற உள்ளுணர்வு உந்த, யாரும் அறியாமல் நாக கன்னியை ஒற்றறிய ஒரு இளம் பெண்ணைச் சேடியாக, அவர்களின் மாளிகைக்கு அனுப்பிவைத்தார் தக்ஷகன்.
பல மாதங்கள் நாக கன்னியின் கூடவே இருந்தும், அவள் உண்ணும் உணவு, உடுக்கும் ஆடை, புழங்கும் பொருட்கள் என எல்லாவற்றையும் கவனமாக ஆராய்ந்த பிறகும், ஒற்றர் பெண்ணால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. நாககன்னியின் அரண்மனையில், அரச தம்பதியர் தவிர நாககன்னியை சிறுவயது முதல் பாலூட்டி வளர்த்த செவிலி பெண்டான காரியும் உடன் வசித்தாள். அவளே அவ்வரண்மனையை பொறுப்பெடுத்து முழுதும் நடத்திக்கொண்டிருந்தாள். கார்கோடக குலத்தில் பிறந்து தக்ஷக குலத்து காவலன் வீர்யவானுக்கு வாழ்க்கைப்பட்டவள். நாக கன்னியை ராணி அரவினியாள் ஈன்ற அதே சமயத்தில், பேறுகண்டவள். அவள் பெற்ற பெண்குழந்தை சில நாட்களிலேயே இறந்துபோக, அழுது அழுது உள்ளே உருக்குலைந்து சிதைந்து போயிருந்த காரியை, வீர்யவான் தான் அரண்மனையில், அரசமகளுக்கு முலையூட்ட ஒரு செவிலியினை தேடுகிறார்கள் என்பதை அறிந்து, அழைத்து சென்றான்.
காரியை பெண் மருத்துவச்சிகளை கொண்டு முழுவதும் சோதனை செய்த பின், நாக கன்னிக்கு செவிலி பெண்டாக நியமித்தனர். முதன் முதலில் பளிங்குருண்டை கண்களும், கருத்து சுருண்ட முடியுமாக, கருமுத்தென மின்னிய நாககன்னியை மடியிலேந்தி, மாரோடு சேர்த்து, மூலையூட்டிய போது அறிந்தாள், இதன் பொருட்டும், இவள் பொருட்டும் மட்டுமே தன் வாழ்வென்று. அன்று முதல், காரி நாக கன்னியை தன் சொந்த மகள் என்றே கருதத் துவங்கினாள். நாககன்னியும் முழுவதும் காரியோடு இயைந்துகொண்டதால், அவளது பொறுப்பிலேயே மகள் வளரட்டும் என்று தக்ஷகனும் முடிவு செய்தார். அதன் பிறகு காரிக்கு வேறு மக்கள் செல்வங்கள் உண்டாகவில்லை என்ற போதும், அது குறித்த எத்தகைய கவலையும் அவளை அண்டவில்லை. இப்போதும், எத்தனை பணியாளர்கள் இருந்தாலும், நாக கன்னி உண்ணும் உணவு பக்குவமானது தானா என கவனித்து, பிறகே நாககன்னிக்கு பரிமாறுவாள். நாககன்னி, உண்டு முடிக்கும் வரை உடனேயே இருப்பாள். நாக கன்னியின் அன்றாட காலைக்கடன்கள் முதல், ஒரு நாளில் எத்தனை முறை செலவாதிக்கு சென்று வந்தாள், மாதாந்திர உதிர போக்கின் கணக்கு என்ன, அப்போதிருந்த உடல் நிலை என அத்தனையும் அவள் கவனத்தில் இருந்தது. நாககன்னி ஆடை திருத்தி உடுத்துவதும், குழல் திருத்திக்கொள்வதும் எல்லாம் அவள் வழிகாட்டுதலின்படியே நிகழ்ந்தது. நாக கன்னியின் நறுவிசும், நாகரீகமும் கூட காரியால் வந்ததே. நாக கன்னி தன் அன்னையினும் ஒரு படி மேலாகவே காரியை கருதினாள். அவள் முன்னிலையில் யாரும் காரியை பேர் சொல்லி அழைப்பதையும் கூட அவள் தீவிரமாக கண்டித்தாள். அரண்மனையில் ஒரு அரச அன்னை எனும் ஸ்தானத்திலேயே காரி வலம் வந்தாள். கார்கோடகர்களின் நஞ்சை, நாககன்னியும் கொண்டுவிட்டால் என மற்ற சேடிகள் தங்களுக்குள் மெல்ல பேசி சிரித்து கொள்வார்கள்.
ஒற்றறிய வந்த பெண் காரியெனும் பெருங்கோட்டையை தாண்டி அரச மகளை சிறு காற்றும் தீண்ட முடியாது என அறிந்து, அரசரிடம் அதையே அறிவித்து, வேறு வேலைகளுக்கு மீளலாம் என சிந்தித்த படி அரண்மனை பூ வனத்தில் அமர்ந்திருந்தாள். அப்போது விடிந்து சற்றே பொழுது ஆகியிருந்தது. சரத் காலம் என்பதால், காற்றில் நல்ல குளிரும் இருந்தது. அரச மகள் வழமை போல் நீராடி, குங்கிலியம், அகில், சந்தனம் முதலான வாசனை பொருட்கள் சேர்த்த, தூபத்தால் தலை உலர்த்திய, சாம்பல் மிச்சிலை மெல்லிய கனலோடு கொண்டுவந்து, பூவனத்தின் ஓரத்தில் கொட்டிச்சென்றாள் சேடி ஒருத்தி. பூவனத்தில் மலர்ந்து நின்ற செங்காந்தள் செடியின் நிழலில் பெண் பூனை ஒன்று தூரில் தலைசாய்த்து உறங்கி கொண்டிருந்தது. சேடி அனலை கொண்டுவந்து கொட்டிய உடன், அதன் புகை கிளைத்து எழுந்து, காற்றின் திசையால் பூனையையும் நோக்கி சென்றது. எதுவும் அறியாது உறங்கிக்கொண்டிருந்த பூனை, புகை மணத்தை அறிந்ததும், பதறி எழுந்து அங்கிருந்து நகர்ந்தது. நகர்ந்து நாலெட்டு வைக்கும் முன், அதன் யோனி வாய் திறந்துகொண்டு குருதி கொட்டத் துவங்கியது. அதைக் கண்ணுற்ற ஒற்று பெண்ணுக்கு, உள்ளே திகைப்பொன்று சொடுக்கியது. அப்புகையை நோக்கியபடியே எழுந்து சென்றாள். ஒரு துணியால் தன் நாசியையும் வாயையும் சேர்த்து கட்டிக்கொண்டு, அப்புகையின் கனலை, அருகில் கிடந்த மண்ணாலான வட்டிலில் அள்ளி, பல நாளாக தூபத்தை கொட்டியதால் கிடந்த சாம்பலை எடுத்து கனலின் மேல் போட்டு மூடிகொண்டு வெளியேறினாள். அறைகளுக்கு தூபம் இடுபவள் போல, அங்கிருந்து விறுவிறுவென நடந்து அரண்மனை கடந்து அரசரின் தலைமை வைத்தியரின் மாளிகைக்கு சென்றாள்.
ஒற்று பெண்ணை கண்ணால் அறியும் முன்னமே, அப்புகை மனம் அருகனைய, அதை அறிந்தவராக, மாளிகையின் முன்னறையில் ஏதோ பணியில் இருந்த அரச வைத்தியர் வெளியே வந்தார். ஒற்றுபெண்ணை அகத்தே அழைக்கும் முன் அவ்வறையில் இருந்த பெண்களை அங்கிருந்து நீங்கச் சொல்லிவிட்டு, உள்ளே அழைத்தார்.
ஒற்று பெண் எதுவும் சொல்லும் முன் “திருமணமாகிவிட்டதா?” எனக்கேட்டார்.
“இல்லை” என்றால் ஒற்றுப்பெண்
“நல்லது, அதனை அங்கு வையுங்கள்” என ஒரு மர மேடையை காட்டிவிட்டு எதோ ஒரு சிறு குளிகை உருண்டையை கொடுத்து, “அடி நாவில் அதக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.
அவ்வாறு அவர் சொன்னபடி, கையிலிருந்த மண் வட்டிலை மேடையில் வைத்து விட்டு, மருந்தை நாவின் அடியில் அதக்கிக்கொண்டாள் ஒற்று பெண்.
“இனி நாசியும் வாயும் மூட வேண்டியதில்லை” என்றார்
“சரி” என்று மட்டும் சொல்லிவிட்டு அவரையே நோக்கி அவர் மேலும் சொல்வதற்கு காத்திருந்தாள்.
“கருமுறிச்சி” என்றவர் ஒரு முறை அவரை மேலும் கீழும் நோக்கிவிட்டு “அரண்மனையில் இருந்து வருகிறீர்களா” என்றார்
“ஆம்”
“நாக கன்னியின்..”
“ஆம் அங்கிருந்து தான் வருகிறேன்”
“யார் என கண்டுபிடித்து விட்டீர்களா?”
“சந்தேகம் உண்டு”
“பெருஞ்சதி”
“அரசரிடம் அறிவிக்க வேண்டும்”
“இப்போதே” என்று விட்டு “வருக” என அழைத்துக்கொண்டு அரண்மனை நோக்கி நடக்கத் துவங்கினார்
அரண்மனைக்கு சென்று ஏதோ குறிச்சொற்களை சொல்லி, காவலர்களிடம் அரசரிடம் அறிவிக்க சொன்னார் வைத்தியர். அரை நாழிகை போதில் அரசரின் ஆலோசனை அவைக்கு வரச்சொல்லி உத்தரவு வந்தது. அவையில், ஒரு சில விளக்குகள் மட்டும் எரிய, எளிய தலையணியோடு அரசர் மட்டும் அரியணையில் அமர்ந்திருந்தார். பொதுவில் காண நிதானத்தோடு இருப்பதாக தோன்றிய போதும், கண்கள் மட்டும் கவலைக்குறியையும், பதட்டத்தையும் காட்டின. ஒரு காலை முன்னால் இருந்த குறுமரப்பீடத்தில் ஊன்றி, மற்றொரு காலை தரையில் பதித்து, ஒற்றுபெண்ணும் வைத்தியரும், இணைந்து வருவதை கூர்ந்து நோக்கியவராக அமர்ந்ததிருந்தார் அரசர்.
வழக்கமான முகமண் எதுவும் இல்லாமல், மெல்ல தலை வணங்கி விட்டு, நேரடியாக “கருமுறிச்சி” என்றார் வைத்தியர்
“ஆ.. “ என்றவாறு தன் வலக்கையை அனிச்சையாக தூக்கி, அரியணையின் கைப்பிடியில் ஒலியெழ வீசி, மேலும் நிமிர்ந்து அமர்ந்தார் அரசர்.
“கருபிடிக்கவிடாமல் தடுப்பதற்குரியது. ஒருவேளை கருதங்கியிருந்தாலும், அதை கலக்கி விடும்.” என்றார் வைத்தியர்
"ம்.."
"மாற்று உண்டு"
"எப்படி இவ்வளவு நாள் எந்த மாற்றமும் இல்லாமல்.."
"பெண்ணின் இயல்பான குருதி நாட்களுக்கு எந்த மாற்றமும் உண்டாகாது. கருப்பிடிக்க காத்திருக்கும் முட்டையை செயல் இழக்க செய்யும். அது வழமையான குருதி போக்கு நாளில் வெளியேறும். நித்தமும் இப்புகையை உட்கொண்டு வந்ததால், கருப்பிடிப்பதற்குண்டான வாய்ப்பே இல்லாமல் இருந்திருக்கும். ஒரு வேளை கருப்பிடித்த பின், இப்புகையை சுவாசித்திருந்தால், உடனே முறிந்து குருதி வெளியேறி காட்டிக்கொடுத்திருக்கும். கார்கோடகர்கள் மட்டுமே இவ்விஷக் கலவையை சரியாக செய்ய அறிந்தவர்கள். கொஞ்சம் பிசகினாலும் சுவாசித்த எவரின் உயிரையும் பறித்துவிடக்கூடியது. அவ்வாறாகாமல், கருவை மட்டும் முறிக்கும் அளவுக்கு மிக கச்சிதமாக செய்திருக்கிறார்கள்"
எதுவும் சொல்லாமல், ஒரு பெருமூச்சை மட்டும் இழுத்துவிட்டு, ஒற்று பெண்ணை நோக்கி கண்கள் கூர் கொள்ள, யார் என்பது போல புருவங்களை உயர்த்தினார் அரசர்.
“சந்தேகம் மட்டுமே உண்டு. உறுதியாகத் தெரியாது”
“ம்..” என கூர்ந்து தரையை நோக்கி ஏதோ சிந்தனையில் இருந்துவிட்டு, மெல்ல நிமிர்ந்து ஆமோதிப்பது போல தலையை மட்டும் அசைத்து விட்டு, ஒற்றுபெண்ணின் கண்களை நோக்கி “அறிவேன், கூறுக” என்றார்
“காரி ” என்றாள். “ஆ..” என்று ஒற்றை வியப்பொலியால் வைத்தியர் தன் கட்டுபாட்டை இழந்தார்.
“சரி” என்று விட்டு மேலும் “மாற்று மருத்துவத்துக்கு வேண்டுவன செய்க” என்று வைத்தியரை நோக்கி கூறி, இருவருக்கும் விடை கொடுத்தார்.
காரியை அழைத்து விசாரித்த போது, பெரிய சிரமப்படல் ஒன்றுமில்லை. “என் மகள் ஒரு எளிய காவலனின் கருவைச் சுமப்பதா, பின் அம்மகவு வளர்ந்து இந்நாடு ஆள்வதா?" என்று ஒரே வாக்கியத்தில் ஒப்புக்கொண்டாள். அது பிழையென்றோ, அதில் தனக்கு எவ்வித உரிமை கோரலும் இல்லை என்றோ அவளுக்கு தோன்றவே இல்லை. சிரச்சேதம் செய்ய அரச உத்தரவு இடும்போது மட்டும் நாக கன்னி அதனை தடுத்து, நாட்டை விட்டு வெளியேறச் சொன்னாள். வீர்யவான் தன் மனையாள் செய்த வஞ்சனை அறிந்ததும் தன் தலையை தானே அருத்துக்கொண்டு மாண்டான். காரி பல காத தூரம் கடந்து, ரம்பன் எனும் அசுரனுக்கு மகனாக பிறந்தவனும், எருமைத்தலை மகுடம் சூடியவனுமான, மகிஷனால், ஆளப்படும் மகிஷபுரி நாட்டிற்கு சென்று சேர்ந்தாள்.
சிரச்சேதம் செய்ய தக்ஷகன் உத்தரவு இட்டபோது வேண்டாம் என நாககன்னி வாதிட்டாள். தக்ஷகன் "மகளே ஒரு குடம் பாலில் ஒரு துளி தயிர் சேர்ந்தாலும், பால் முறிந்து தயிர் ஆகுமே தவிர, பாலால் அதற்குள் கலந்த ஒரு துளித் தயிரை தன்னை போல மாற்ற இயலாது. காரியை மன்னிப்பதில் பொருள் இல்லை" என்றார்
"தந்தையே உண்மைதான். ஆனால் இது அவளுக்காக அல்ல, எனக்கான நினைவூட்டல், அத்தனை அன்பு கொண்டிருந்தவளுக்கு, இப்பிழையும் தன் பிரியத்தாலேயே நிகழ்ந்ததென அறியக்கூடவில்லை."
"அது அன்பே அல்ல" என்றார்
"அன்பு என்பதும், பந்தம் என்பதும், எல்லாம் நம்மீது விழும் தளைகளே. நாயின் கழுத்தில் கட்டிய சங்கிலி. அது நீண்டிருக்கும் எல்லைக்குள் நடமாடும் வரை தளையிடப்பட்டிருக்கிறோம் என்பதை நாய் தான் அறிவதேயில்லை. ஒரு துளியும் கட்டுப்படுத்தாத அன்பு என எதுவும் உண்டா? அவ்வாறான ஒன்றை, எதன் பொருட்டும் யாரையும் தளைக்காத, தூயதான அன்பை நான் கொண்டிருக்க முடியுமா ? இவ்வுலகில் எவரோ ஒருவர் மீது? அதனை நான் அறியும் வரை நானும் அவளும் ஒன்றே அல்லவா? அவள் கரையை கடந்து விட்டாள், என் விதி என்னை கரைகளுக்குள் நிறுத்தியிருக்கிறது. அந்நஞ்சு என்னிலும் எங்கோ உண்டு அல்லவா?. 'என்னுடையது' என்று ஏதேனும் ஒன்றை, அல்லது எவரேனும் ஒருவரை நினைக்கும் வரை, நம்மனைவரிலும் அந்நஞ்சு உண்டு. தாய்ப்பாலின் உள்ளும் உறையும் ஒரு துளி நஞ்சு. அந்நஞ்சால் முறிவு கொள்ளாதிருக்கும் வரை, நாம் நல்லவர்கள். சற்றே முறிவு கொண்டால், உடனே தீயவர்கள் ஆகிவிடுவோம். நம் வாழ்வு என்பதே உறைக்குத்திய பால், தயிராக திரியக் காத்திருப்பது தான் ஒருவகையில். சில கலங்களில் உள்ள பால் உடனே திரிகின்றது, சிலவை காத்திருக்கின்றன. நாம் காத்திருப்பதால் நல்லவர் என பெயர் சூட்டிக் கொள்கிறோம். ஒருவேளை, பால் திரியும் முன்னமே கலமுடைந்து போனால் நாம் நல்லவர்களாகவே விடை பெறலாம். ஒருவர் திரிவதும், திரியாமல் போவதும், பல்வேறு புறக்காரணிகளால் ஆனது. அதன் சுமதலையை மட்டும் ஒருவர் மேல் இடுவதில் என்ன பயன்"
"ம்"
"என் எண்ணம் இன்னும் முழுமை கொள்ளவில்லை தந்தையே. அன்னையெனக் கருதியதால், எடுக்கும் முடிவு என கருத வேண்டாம். அதுவல்லவென்று மட்டும் அறிவேன். இப்போது ஒன்றைச் செய்து அதன் பொருட்டு பின்னர் துயர் கொள்வதும் பொருளற்றது. ஆகவே, அன்னையை, அல்ல அல்ல, காரியை நாடு கடத்துங்கள்" என்றாள்.
"மகளே, எதன் பொருட்டும் பந்தம் கொள்ளாமல், இன்னார் பொருட்டென்றும் இல்லாமல், எவர் பொருட்டும் ஒன்றே போல் செய்யும் அன்பை பெருங்கருணை என்றார்கள். அதை நீயும் அறிய எண்ணாகங்களும் அருளட்டும். துளி பந்தமும் இல்லாத அன்பு கொள்வது என்பது தவங்களிலும், பெருந்தவம். தான் என்பதையும், தன்னுடையது என்பதையும் நீக்கி விட்ட பின் மலர்வது. அந்நிலை அடைந்தவனுக்கு தெய்வமும் தேவையில்லை என்கிறார்கள். " என்று நீர்த்த கண்கள் மின்ன, அருகில் அமர்ந்திருந்த மகளின் தலையில் மெல்ல தடவினார்.
ஒரு காரியோடு முடியும் விஷயமல்ல இது, தன் குடும்பம் உள்பட எட்டு அரவினங்கிளின் அரச குடும்பங்களில் இருந்து யாரும் இவ்வஞ்சக செயலை, செய்யக் கூடும் என அறிந்த மன்னர் மந்திரிகளோடும் குல மூத்தோரோடும் கலந்து ஆலோசித்து, நாக கன்னியினையும், நாகனையும், ஏழாங்கருங்கடலில், ஆழத்தில் சென்று வாழ்ந்து, வேறொருவரையும் காணா நோம்பு நோற்று, எட்டு அரவின முதல் நாகங்களையும் தொழுதிருக்கும்படி ஆணையிட்டார். 'நாகவினோதம்' என்னும் நாக குலத்தில் பிறந்து எண்ணாகங்களைக் குறித்தும் நோன்பு நோற்று எட்டு பெண்ணரசிகளை பெற்று குலம்விளங்கச் செய்த அரவரசியால், வளைஞன் என்னும் இணையர்களின் பெருங்கதையை தொடர்ந்து பாராயணம் செய்து பன்னிரு வருடங்கள் கழித்து வருமாறு அனுப்பி வைத்தார். நாகலோகத்தில் இருப்பதை விட அவர்கள் வெளியில் இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பு என்று கருதினார். மக்கட் பேறுக்கும் வழிவகுக்கும் என நம்பினார்.
ஏழாம்கருங்கடலின் ஆழத்தில், பளிங்கு மாளிகையில் இருவரும் நோன்பு இருந்தனர் நாக கன்னியும் நாக ராஜனும்.
"கன்னியே உனக்கு எத்தனை பிள்ளைகள் வேண்டும்" என்றான் நாகன்
"ஒரு எட்டு குழந்தைகளாவது வேண்டும்"
"நம்முடைய குல மூத்தவர்கள் எண்மரைப் போல"
"ம்.." இருவரும் எதிர் எதிரே அமர்ந்திருக்க்க, பளிங்கு மாளிகையின் சுவர் வழி வந்த மஞ்சள் ஒளி, அவள் முகத்தில் பட்டு அலையடித்தது.
"நாம் இன்று எந்த பகுதியை பாராயணம் செய்யவேண்டும்".
"அரவரசியும் வளைஞனும் தச்சனின் அருளால், இரண்டாம் மகவான அரக்காயியை பெற்றவரை பாராயணம் செய்திருந்தோம், இன்று அடுத்து பகுதியை படிக்கலாம்" என்றாள்
இருவருமாக கார்கோடகனின் அருளால் அங்காளி பிறந்த கதையை படிக்கத் துவங்கினார்கள். விளக்கின் சுடர் ஒளி அலைபாய்ந்து மின்னிக்கொண்டிருந்தது. அவ்வொளியின் மைக் கருமை மையமென அங்காளி தானும் அமர்ந்து அக்கதையை கேட்டுக் கொண்டிருந்தாள்.
***
அடுத்த பதிவுக்கான நேரம் வந்து கொண்டே இருக்கு .. :)
பதிலளிநீக்கு