ஐயன் பந்தி - 20
நெருப்பு
திருவாடல் - 7
"சரி மலையரசன்பட்டிணம் வந்தாளோன்னோ அம்மா, என்னாச்சு அப்புறம்" என்று என்னைத்தூண்டினார் ஐயர்.
நான் மீண்டும் சொல்லத்துவங்கினேன், வில்லுக்காரன் சொன்னபடியே.
"பல காலங்களாக மலையரசன் பட்டணத்திலே மக்களோடு மக்களாக புற்றிடங்கொண்டு வீற்றிருந்த அம்மை மண்ணில் மீண்டும் பிறந்து விளையாட எண்ணம் கொண்டாள். அவள் எண்ணிய மாத்திரத்திலே அவ்வாடலும் துவங்கியது."
மண்ணால் கோட்டை கட்டினால், மழையால் கரையும் என்று, ஆனிபொன்னால் கோட்டை கட்டி, பவளத்தால் முற்றம் விரித்து, எருமைத்தலை மகிடம் சூடி, ஆண்டு வந்தான் மகிஷன் என்னும் பேரரசன். அவன் ஆண்ட அந்நாட்டிற்கு மகிஷ நாடு என்றும், அதன் தலைநகரிக்கு மகிஷபுரி பட்டிணம் என்றும் பெயர். நெல் விதைத்தால் நெல் விளையும், பொன் விதைதால் பொன் விளையும் மகிஷ நாட்டில், ஊர்களும், நகரங்களும், எந்நாளும் திருவிழாக்கோலம் பூண்டிருந்தன. மன்னன் மகிஷனோ, பொன்னுக்கும் மாற்றுக்குறையும், மகிஷன் சொன்ன சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு நாளும் மாற்றுக்குறையாது, என்று அறம் பிறழாது ஆண்டு வந்தான். அறம் பிறழாத அவன் ஆட்சியில், வளம் குறையாது பெறுகியது.
நதியில் நீர் மிஞ்சினால் கரை மீறும், மகிஷபுரி பட்டிணத்தில் வளம் மிஞ்சியதால், தானங்கள் தர்மத்தை மிஞ்சின. நெய்யை போல நீரை அளந்த மக்கள், நீரை போல நெய்யை இரைக்க துவங்கினர். கணக்கு வழக்கின்றி எதையும் வாரியிரைத்தனர். குதிரைக்காரன் ஒருவன், மடியிலிருந்து தவறி நடைவழியில் விழுந்த தங்க நாணயங்களை, அறிந்தும் எடுக்காமலேயே கடந்து சென்றான். அதைக் கண்ட மற்றவர்களும் அதனை பொருபடுத்தவில்லை. பொன்னும் பொருளும் மதிப்பிழக்க துவங்கின. விலையேறியதென எதுவுமில்லாமலாகியது. நடையில் சிதறும் பொன்னை பொறுக்கினாலே, கோட்டை கட்டி ஆளலாம் என அறிந்த மக்கள், தொலை தூரங்களில் இருந்தும் மகிஷனுடைய நாட்டை அண்டி பிழைக்க வந்து குவிந்த படியே இருந்தனர். அதனால் அவன் பட்டிணமும், நாளும், பொழுதும் நால் புறமும் முழம் முழமாய் வளர்ந்து கொண்டே போனது.
எங்கும் நிறை! நிறை! எல்லாம் மிகுதி. மிகுதியே குறையென்றானது மகிஷனுடைய நாட்டில். குறைவில்லாமையால் நிறைவின்மை கொள்ள துவங்கினான் மகிஷன். எல்லாம் பழக்கமானவையாகிப் போனதால் இனிமை என எதுவும் இல்லாமலானது. ஆர்ப்பரித்து கொண்டாடியவாரிருந்த மக்களும் மெல்ல எதிலும் இன்பம் கொள்ளாமலானார்கள். அனைவரினுள்ளும் முடிவறியா பிளம் ஒன்று திறந்து கொள்ள, அதனுள் விழுந்து மறைந்தபடியே இருந்தது அத்தனையும். கள்ளுக்கடைகள் தவிற மற்றவை கொள்வார் அற்று திறந்து கிடந்தன. கள்ளும் கூட மக்களை இன்பம் கொள்ளச் செய்யாமலாக, மேலும் வெறுமயையே கூட்டியது. ஆணுக்கு பெண்ணின் அருகாமையோ, பெண்ணுக்கு ஆணின் பிரியமோ கூட இன்பமாக தோன்றவில்லை. அன்றாடம், வளத்தாலேயே சலிப்பாக தோன்றத் துவங்கியது. மனத்தில் தோன்றிய சலிப்பு செயலில் வந்தது. செயலூக்கம் ஆறும்தோறும், உடலின் சோம்பல் கூடியது. இருந்து இருந்து உண்ணத்துவங்கினர். எத்தனை அள்ளிப்போட்டாலும் வயிறும் நிறையாமல், மனமும் நிறையாமலாகினர். உடல் மட்டும் பருத்தார்கள். உடல் பருக்க பருக்க மேலும் சோம்பல் கொண்டார்கள். அரசன் உள்பட மகிஷ நாட்டுமக்கள் அனைவரும், காட்டெருமைகளைப்போல, தொந்தி சரிய காலகட்டி நடந்தார்கள். மகிஷன் சலிப்புற்று யோசிக்க துவங்கினான் “இனியென்ன?”
மனத்தில் தோன்றிய மந்தம் உடலில் தோன்றியது. உடலில் தோன்றிய மந்தம், மனத்தை மேலும் மந்தம் கொள்ள செய்தது. பின் அது புத்தியையும் மழுங்க செய்தது. மந்தத்தோடு மதுவும் சேர்ந்து கொள்ள மன்னன் முதல் மக்கள் வரை அனைவரும், எப்போதும் மனம், உடல், புத்தியென மூன்றாலும் அலைவுற்றபடியே இருந்தனர். மகிஷன் நினைத்தான் "நம் மண்ணும், மக்களும், நம்முலகமுமே மற்றுள்ள உலகங்களுக்கு எல்லாம் வளத்திலும், வளர்ச்சியிலும் முன்னுதாரணங்கள். அதனாலேயே, நித்தமும் மகிஷபுரி பட்டிணத்தை அண்டி பிழைக்க பல காத தூரம் தாண்டியும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இங்குள்ள வளமும், வனப்பும் ஈரேழு பதிநான்கு லோகங்களிலும் இல்லை. அவ்விடங்களில் எல்லாம் அறம் சான்று ஆள்பவர்கள் இல்லாததே குறை என்று மந்திரிமார்கள் சொல்கிறார்கள். நம் அறத்தாலேயே இம்மகிஷபுரியில் வளம் கொழிக்கிறது என்கிறார்கள்". இவ்வாறு நினைத்த மாத்திரத்திலேயே, கதிரவனை மறைத்து மேகத்தின் நிழல்மண்ணில் விழுவது போல, அறத்தின் ஒளியை அகந்தை மறைக்க அதன் நிழல் மகிஷன் உள்ளத்தில் படர்ந்தது, பின் அது அவ்வாறே நிலைத்தது.
நம்முடைய நாடும் மக்களும், இவ்வாறு கொண்டாட்டமும், மகிழ்ச்சியுமாக இருக்க, மற்ற உலகத்தார் எல்லாம் துன்பத்தில் உழல்கிறார்களே என மிகுந்த கழிவிரக்கம் கொண்டான் மகிஷன். மிதமிஞ்சிய உணர்வெழுச்சியால், கண்ணீர் சிந்தினான். மெல்ல 'கருணை' என ஒருமுறை சொல்லிக்கொண்டான். மதுவெறியால் சிவந்திருந்த இருகண்களையம் அழுந்த துடைத்து மேலும் சிவக்க வைத்தான். இரவில் உண்ட அதிகப்படியான மது எதுக்களிக்க, புளித்த ஏப்பம் ஒன்றை விட்டு விட்டு, "ஏதாவது செய்ய வேண்டும்" என்று உரக்கசொன்னான்.
"நம்முடைய நல்லறத்தை ஈரேழு பதிநான்கு லோகங்களுக்கும் கொண்டுசென்றால் என்ன? அங்கும் இவ்வளமும் வளர்ச்சியும் உண்டாகும்படி செய்தால் என்ன? அது நம்முடைய பொறுப்பல்லவா? ஒரே உலகு, ஒரே நாடு, ஒரே அரசன், அதுவல்லவோ நல்லது". இவ்வாறு தான் செல்லும் வழி ஒன்றே சரியென்றும், எல்லாவற்றையும் தான் ஒருவனே சரி செய்யமுடியுமென்றும், தான் ஒருவன் மட்டிலுமே அனைத்துக்கும் பொறுப்பு என்றும் மகிஷன் திடமாக எண்ணத்துவங்கினான். ஆனால், அறமோ, இவ்வெல்லையற்ற பேராடலில் ஒரு துளியே நாம் என்று எண்ணுகிற வரை மட்டுமே, நம்மீது கருணையோடிருக்கும். மகிஷன் அவவெளிமையை மறந்த கணத்திலேயே, அறத்திலிருந்து பிறழத்துவங்கினான்.
"ஒரே உலகு, ஒரே நாடு, ஒரே அரசன்" என மீண்டும் உரக்க சொல்லிக்கொண்டான்.அவ்வெண்ணம் அவன் உள்ளத்தில் உதித்ததும், புதிய வெளிச்சம் ஒன்றை கண்டவனைப் போல பரவசம் அடைந்தான். இடக்கரத்தை தலைக்கு பின் வைத்து, மஞ்சத்தின் மேல், திண்டில் சாய்ந்து கிடந்தவன் குதித்து எழுந்து, கலைந்திருந்த உத்தரியத்தை தாறுமாறாக சுற்றிக்கொண்டு இங்கும் அங்குமாக நிலையழிந்து நடக்கத்துவங்கினான். பொழுது அடங்கி, இரண்டாம் ஜாமமே கடந்திருந்தது. “என்ன செய்வது? எப்படி செய்வது? அறத்தை காத்து, அனைத்து ஜீவராசிகளையும் வளம் கொள்ள செய்ய வேண்டுமே?" என வாய்விட்டு அங்கலாய்த்தான். இரவு அருந்திவிட்டு மஞ்சத்தின் அருகிலேயே குறு மேடை மீது வைத்திருந்த புளித்த கள்ளின் மீதியை எடுத்து குடித்துவிட்டு, அந்த குவளையை கதவின் மீது எரிந்து, “யாரங்கே?” என்று அலறினான். வழக்கத்துக்கு மாறாக எழுந்த அவலறலைக் கேட்டு, கதவை திறந்து கொண்டு ஓடிவந்தார்கள் வாயில் காவலர்கள் திண்டனும் முன்டனும்.
அசமந்தமாக, எதையும் மெதுவாக செய்ப்பவனாக மட்டுமே மகிஷனைக் கண்டிருந்த காவலர்கள், அவன் மாற்றத்தைக் கண்டு திகைத்தார்கள். “மூடர்களே, மூடர்களே, மூடர்களே” என்று கத்தியபடியே அறைக்குள் சுத்திவந்த மகிஷன். “மந்திரிகளும், சேனாதிபதிகளும் எங்கே?” என்று அலறினான்.
“நடு நிசி கடந்து விட்டதால், உறங்கிக்கொண்டிருப்பார்கள்” என்றான் திண்டன்.
“எங்கே?” என்றான் மகிஷன்
திண்டனும் முன்டனும், என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தபடி மாறி மாறி நோக்கிக்கொண்டனர் .
“மூடர்களே, எங்கே?” என்று மீண்டும் கேட்டான் மகிஷன்
“அவரவர் இல்லங்களில்” என்றான் முன்டன் .
“ஆங்.. இல்லங்களில்” என்ற மகிஷன் மேல் வஸ்த்திரத்தை எடுத்த தோளில் ஏறுக்கு மாறாக போட்டுக்கொண்டு, “ரதத்தை தயார் செய்ய சொல்லுங்களடா” என்றுவிட்டு அவர்கள் இருவரையும் கடந்து அறையை விட்டு வெளியேறி விறுவிறுவென நடக்கத்துவங்கினான். காவலர்களால், அரசனை தாண்டிக்கொண்டு செல்ல முடியாது என்பதால், என்ன செய்வது எனத் தெரியாமல், மகிஷனின் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக தொடர்ந்தார்கள் திண்டமுன்டர்கள்.
இடை நாழி, கூடங்கள் எல்லாம் கடந்து, அரண்மனைக்கு அருகில் அரசத்தேர் நிற்கும் முற்றத்துக்கு வந்து நின்ற மகிஷன் “அடேய் தேரை ஒருக்கச்சொன்னேன், என்ன செய்கிறீர்கள்” என்று கூச்சலிட்டான். .
“இதோ செய்கிறோம் அரசே” என்றான் முன்டன் . பின்னாலிருந்து குரல் வருவதை அறிந்து, அவர்களை நோக்கி திரும்பி, “முன்னால் போய் சொல்லுங்களடா என்றால் என் பின்னால் ஏனடா வருகிறீர்கள்” என்றான்.
திண்டன் பிடித்திருந்த கோளைப்பிடிங்கி, திரும்பி தேர் தட்டில் உறங்கிக்கொண்டிருந்த தேரோட்டியை, அதன் பின் புறத்தால் குத்தி எழுப்பினான்.
“ஏய் எருமையே மிதிக்காதே” என்று கையை வீசி உறங்கத்திலேயே தேரோட்டி உளறினான்.
“யாரடா எருமை?” என்றான் மகிஷன்.
“நீ தான் குதிரையே” என்றான் தேரோட்டி
“நீ இப்போது எழுந்திருக்கவில்லை என்றால், உன்னை சிரச்சேதம் செய்ய ஆணையிடுவேன்” என்றான் மகிஷன்.
“அது உன்னால் முடியாது. எருமைத்தலை சூடிய எங்கள் அரசராலேயே முடியும். நீ என் தூக்கதை கெடுக்கிறாய் என்று தெரிந்தால், எங்களரசர் உன்னைத் தான் குதிரையே சிரச்சேதம் செய்வார்”
“யாரடா குதிரை” என்று மகிஷன் எட்டி உதைத்தான். உதைத்த வேகத்திலே தேர் தட்டில் கிடந்து உறங்கிக்கொண்டிருந்த தேரோட்டி உருண்டு கீழே விழுந்து. “ஏய் எருமைக் குதிரையே உன்னை என்ன செய்கிறேன் பார்” என்றபடி எழுந்தான்.
எழுந்த போது தான், எதிரில் நிற்பது மகிஷன் என்பதை அறிந்து, “அரசே நான் எருமை, அல்ல அல்ல குதிரை என நினைத்துவிட்டேன்”.
"தேரைப்பூட்டு", என்று விருட்டென்று, தாங்கு கால் போட்டு அதன் மேல் நுகத்தை வைத்து, நிறுத்து பட்டிருந்த தேர் தட்டில் ஏறி நின்று கொண்டான் மகிஷன்.
"அரசே, நீங்கள் ஏறி நின்று கொண்டால், தேரை எங்கனம் பூட்டுவது" என்றான் தேரோட்டி.
"ஆங்.. ஆமாம் அமாம்" என்ற படி சரிந்த மேல் வஸ்த்திரம், அவன் காலிலேயே மிதி படி தடுமாறி கீழே இறங்கினான் மகிஷன்.
தேரோட்டி குதிரைகளை இடமும் வலமும் பூட்டினான். பின் அவிழ்த்து, வலத்தை இடமும்,இடத்தை வலமுமாக மாற்றி பூட்டினான். மகிஷன் மீண்டும் ஏறிக்கொள்ள, தேர் இரண்டு அடி ஓடத்துவங்கியதும், இடது புறத்தில் கடக் கடக் என்று சக்கரம் அச்சுக்குடத்தில் முட்டும் சத்தம் கேட்கத்துவங்கியது. வெடுக்கென வார்களை பிடித்து இழுத்து குதிரைகளை நிறுத்தி விட்டு, தேரில் இருந்து குதித்து இறங்கி இங்கும் அங்குமாக தரையில் எதையோ தேடினான் தேரோட்டி.
“என்னத்தை தேடுகிறாய், ஈரேழு பதினாங்கு லோகங்களையும் காக்க வேண்டும், விரைந்து வா” என்றான் மகிஷன்.
“இதோ ஒரு நொடி” என்று குனிந்து இன்னமும் தேடிக்கொண்டிருந்தான் தேரோட்டி. பின்னர் “கிடைத்துவிட்டது” என தன் கையிலொரு அச்சாணியை எடுத்துக்கொண்டு ஓடி வந்தான். அதை இடப்புறச்சக்கரத்தின் அருகில் அச்சில் கோர்த்துவிட்டு. “தாயம் விளையாட, மண்ணில் கட்டம் எழுத எடுத்தது” என்றபடி தேரில் ஏறிக்கொண்டான்.
“தாயமா?” என ஆசையாகி “ என்ன பணயம் வைத்தாய்” என்றான் மகிஷன்.
“குதிரை லாயக்காரனோடு தான் விளையாடினேன்” என்றான் தேரோட்டி
“என்ன பணயம் வைத்து ஆடினாய்” எனக்கேட்டேன்
“இந்த தேரைதான்” என்றான் தேரோட்டி
“வென்று விட்டாயா ?” என்றான் மகிஷன்
“இல்லை, இல்லை, தோற்று விட்டேன்” என்றான் தேரோட்டி
“வென்றவன் கேட்கவில்லையா தேரை?”
“இதை வைத்து என்ன செய், என விட்டு விட்டு போய்விட்டான்”
“யாரவன், என்னுடைய தேரை வேண்டாம் என சொன்னவன், அவனை பிடித்து சிறையிலிடுகிறேன். இப்போது வேறு முக்கியமான வேலை இருக்கிறது."
"கண்டன்"
"உன் பெயரா"
"இல்லை குதிரை லாயாக்காரன் பெயர், என் பெயர் சிண்டன், பிறக்கும் போதே நீண்ட குழலோடு பிறந்ததால், என் அம்மா ஆசையாக வைத்த பெயர்" என்றுவிட்டு தன தலையை தடவி கொண்டான். அவன் தலையை தடவுவதை கண்ட மகிஷன், தன்னையறியாமல், தன் தலையை தானும் தடவிக் கொண்டான்.
"ஐயோ" என்றான் மகிஷன்
"என்னவாயிற்று அரசே" என்றான் சிண்டன்
"மகிஷ மகுடத்தை மறந்துவிட்டேன்" என்றான் மகிஷன்
"பரவாயில்லை விடுங்கள், இருட்டில் தெரியவா போகிறது" என்றான் சிண்டன்
"ம்"
இப்படியே பலதும் பேசியபடியே கோட்டையை கடந்து சில காதம் தூரம் வந்த பிறகு, ராஜ பாட்டை இரு பாதைகளாக பிரியும் இடத்தில் தேரோட்டி தேரை நிறுத்தி விட்டு, கேட்டான் "இடதா வலதா அரசே, ஈரேழு பதினான்கு என ஏதோ சொன்னீர்களே அந்த பட்டணத்திற்கு செல்ல"
"என்னது" என திகைத்த மகிஷன், "நான் முக்கிய மந்திரியின் வீட்டுக்கு அல்லவா போகச்சொன்னேன்"
"அவர் வீடு" என யோசித்து விட்டு "அவர் எப்போது அந்த பட்டணத்திற்கு சென்றார்" என்றான் தேரோட்டி
"மூடனே அவர் வீடு மந்திரி மார் அரண்மனை நிரையில் அல்லவா இருக்கிறது"
"அது எங்கு இருக்கிறது" என்றான் தேரோட்டி
"கோட்டையில்" என்று சலிப்பாக சொன்னான் மகிஷன். "அவசரம் புரியாத மூடன்" என்றான்
"கோட்டை மூன்று காதம் தூரம் தள்ளி அல்லவா இருக்கிறது, அவசரம் என்றால் இங்கேயே சென்று வரலாம்" என்றான் தேரோட்டி.
"ஐயோ, அவ்வளவு தூரமா வந்துவிட்டோம், தேரை திருப்பு தேரை திருப்பு" என்று கத்தினான் மகிஷன். தேரோட்டி தேரை திருப்பி கோட்டையை நோக்கி செலுத்த துவங்கினான். மகிஷன் வாய் ஓயாமல் தேரோட்டியை திட்டிய படியே வந்தான்.
அவ்வாறு மகிஷன், தன்னை திட்டுவதை இடையில் நிறுத்தியதும், தேரோட்டி, “மறக்காமல் அந்த குதிரை லாயக்காரனை சிறையில் இடுங்கள் அரசே" என்றான்
"எதற்கு" என்றான் மகிஷன்
"அவன் தானே உங்கள் தேரை வேண்டாம் என்று சொன்னவன்" என்றான் தேரோட்டி
"ஆமாம் ஆமாம், சிண்டனை" என்றான் மகிஷன்.
"ஐயோ, அரசே அது என் பெயர், சிறையில் இடவேண்டியது கண்டனை"
"ஆம் கண்டன்"
அங்கிருந்து பேச்சுமாறி, மீண்டும் விதவிதமாக சூதாடியவற்றைபேசிக்கொண்டே வந்தான் தேரோட்டி. திரும்புவம் அரண்மனை தேர் முற்றத்திற்கு வந்து சேர்ந்த போது பொழுது விடியத்துவங்கியது. மகிஷன், தேரின் காலை கைகளால் பிடித்துக்கொண்டு, தன் நாடி, மார்பில் உரச நின்றபடியே உறங்கிக்கொண்டிருந்தான். மகிஷன் சென்ற போது முற்றத்தில் நின்ற காவலர்கள், இன்னும் அங்கேயே ஆளுக்கொரு புறம் சுவரில் சாய்ந்தபடி உறங்கி கொண்டிருந்தார்கள். தேர்வந்து முற்றத்தில் நின்ற ஒலி கேட்டு கண்விழித்த காவலர்களில் ஒருவனான திண்டன், "அரசே" என்று அழைத்ததும் திடுக்கிட்டு விழித்த மகிஷன் "யாரங்கே இந்த சிண்டனை சிறையிலிடுங்கள்" என்றான்
சிண்டன் பதறியபடி "சிண்டன் அல்ல கண்டன்" என்றான்
"சரி கண்டன்" என்று அப்போதுதான் உறக்கம் சற்று கலைந்து முழுபோதம் வந்தவனாக "இது என்ன இங்கு வந்துவிட்டோம்" என்றான் மகிஷன்
"மற்ற வேலைகளை காலையில் சென்று பார்க்கலாம் அரசே, உறக்கம் வருகிறது" என்றான் தேரோட்டி.
"ஆம், உறக்கம் வருகிறது" என்று விறுவிறுவென நடந்து தன் அறைக்கு போய், போன வேகத்தில் படுக்கையில் கிடந்து உறங்கத் துவங்கினான் மகிஷன். திண்டனும் முன்டனும் மகிஷனின் அறை வாயிலின் இருபுறத்திலும் அமர்ந்து சுவரில் சாய்ந்து உறங்க துவங்கினார்கள்.
மறுநாள் பொழுது உச்சிகடந்த போது எழுந்த மகிஷன், மெல்ல சிரம பரிகாரங்கள் எல்லாம் முடிந்து, பொழுது சாயும் போது அரசவைக்கு வந்தான். முதல் நாள் இரவு நடந்ததை எல்லாம் காவலர்களிடம் இருந்து கேட்டறிந்த அமைச்சர். "அரசே, ஒரு விண்ணப்பம், உடனே நாம் திக் விஜயம் செய்து ஈரேழு பதினான்கு லோகங்களையும் கைப்பற்ற வேண்டும், கைப்பற்றி அனைவரையும் மகிழ்ச்சியுடன் வாழும்படி செய்ய வேண்டும்" என்று அளவுக்கு அதிகமான விநயத்தை கட்டிக்கொண்டு சொன்னார் .
"ஆம் ஆம், உடனே ஆவண செய்யுங்கள்" என்று ஆணை இட்டுவிட்டு சபை நீங்கி அறைக்கு மீண்டு, பல நாள் கழித்து மகிழ்ச்சி கொண்டவனாக மதுவருந்த துவங்கினான் மகிஷன்.
முன்னர் அறத்தின் பால் நின்றவன் ஆகினும், நல்லவனாய் இருந்தவன் ஆகினும், இப்போது செயலின்மையால், சிந்தனையும் போய், மூடனாகிப் போயிருந்தான் மகிஷன். அதனாலே உண்டான மூர்க்கத்தனம் கொண்டவனாகவும் இருந்தான். அவன் வீரர்கள் அனைவரும் வயிறு முட்ட குடித்து, ஊன்றி ஓரிடத்தில் நிற்க முடியாதவர்களாக ஆடினர். குதிரைகள், யானைகள், உதவிக்கு வரும் தளவாட வண்டிகளை இழுக்கும் எருதுகள், பொதி சுமக்கும் கழுதைகளுக்கும் அளவுக்கு மிஞ்சிய கள்ளை கொடுத்தனர்.
நிலை மீறிய காட்டெருமை கூட்டம் என நால்வகைப் படைகளோடு பதிநான்கு லோகங்களின் மேலும் போய் விழுந்தது மகிஷனின் படை. முறையான போர்களுக்கு மட்டும் பழக்கப்பட்டிருந்த அத்தனை உலகத்தாரும், மகிஷனின் படையை எதிர்த்து போரிடும் வழியறியாமல், சிதறினார்கள். பாய்ந்து வரும் காட்டெருமை கூட்டத்தின் காலடிகளில் இருந்து தப்பித்து நாலாபுறமும் சிதறி ஓடும் முயல்களை போல ஓடினார்கள். மகிஷனின் படைவரும் முன்னரே, முன்னுலகத்தார் பட்ட அவஸ்த்தைகளை அறிந்து அதற்கு அடுத்துள்ள உலகத்தார், நாடும் நகரமும் விட்டு ஒளிந்து கொண்டார்கள்.
மகிஷனின் கொடும்படை ஈரேழு பதினான்கு உலகங்களில் பதின்மூன்றை கைப்பற்றி அங்கிருந்த கின்னரர், கிம்புருடர், அரக்கர், ராக்ஷசர், மனிதர் முதல் தேவர் வரை அனைத்து உலகத்தாரையும் சிறைபிடித்த பின்னர், அனைத்து உலகங்களுக்கும் கிழே நாகங்கள் வாழ்ந்திருந்த பாதாள லோகத்தை அடைந்தது. தீயிட்டு கொளுத்தியும், அடித்தும், துன்புறுத்தியும், கொன்றும் பாதாள லோகம் முழுவதையும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தது. தங்களை ஏற்றவர்கர்களை அடிமைகளாக பிடித்துக்கொண்டு, அடிபணியாதவர்களை, தலைகளை வெட்டி கொடூராமாக கொன்றனர் மகிஷ படை வீரர்கள். கர்ப்பிணியாக இருந்த பெண்களின் வயிறு கிழித்து, கருவை எடுத்து வானில் வீசி எரிந்து வாளால் வெட்டினார். இளம்பிள்ளைகளின் குறிகளை அறுத்து அவர்கள் ரத்தம் போக மால்வதைக் கண்டு எக்காளமிட்டனர். பல்லாயிரம் படைவீரர்களின், எவனோ ஒரு குரூரன் கள் வெறியில் முறைமீற, அதனை உடன் இருந்தவர்கள் கொண்டாட எனத்துவங்கிய ஒன்று, புல்லில் பற்றிய காட்டு தீ காடெல்லாம் பரவி பெரிய பெரிய விருச்சங்களையும் உண்டு செரித்து மேலேறுவது போல, முதலில் முகம் சுழித்து, இது என்ன? என அருவருத்தவர்களையும், முறையன்று எனக் கண்டித்தவர்களையும், கூட விடாமல், பற்றி ஏறி படர்ந்ததது. எங்கும் நிலையழிவும், முறைமீறலும், குரூரங்களும், அரங்கேறின. கேவி அழுது, அலறிச் சிதறிய, நாகர்களின் மத்தியிலிருந்து, மகிஷனின் படைவீரர்களின் கொக்கரிப்பு கேட்டபடியே இருந்தது. ஒட்டு மொத்த உயிர் குலத்தையும், நாகர் குலம் உட்பட அனைத்தையும் கைப்பற்றிவிட்டதாக எண்ணிக்கொண்டு, மகிஷனின் படை எக்காளமும் முரசும் கொட்டி ஆர்ப்பரித்து மகிஷிபுரி பட்டிணத்திற்க்கு திரும்பியது.
இனி அனைத்தும் தன் கட்டுப்பாட்டில், தன் ஆணையும் ஆற்றலும் செல்லாத இடம் என எதுவும் இல்லையென எண்ணி இறுமாந்து, மகிஷன் உலகங்கள் அனைத்திற்கும் தானே பேரசனென முடிசூட்டிக்கொண்டான். ஆனால், காலம் கரந்து வைத்திருப்பது என்னவென்று எவர் அறியக்கூடும். மகிஷ படையின் வரவோ, போக்கோ ஏதுமறியாமல், ஆறு கடல்களும் ஏழு மலைகளும் தாண்டி ஏழாவதாக அமைந்த கருங்கடலின் ஆழத்தில், ஒளி ஊடுருவி அலைவீசும், பளிங்கினாலான ஒரு மாளிகையில் வாசுகி, ஆதிசேஷன், கார்கோடகன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன் என்னும், எட்டு திசை நாகங்களையும், முறையே அவரவர்களின் பத்தினிமார்களோட நிலைநிறுத்தி, மழலை வேண்டி தவமிருந்தனர் நாகர் குலத்தில் பிறந்த நாககன்னி என்னும் அரசியும், நாகராஜன் என்னும் அரசனும். எல்லாவித வளமும் நலமும் கொண்டவர்களாக இருந்தும் மழலைச் செல்வம் மட்டும் இல்லாக்குறையால் அவ்விணையர் தாங்கள் ஒருவர்க்கொருவர் அல்லாது, வேறொருவரையும் காணாத, உரையாடாத நோன்பு ஏற்று அங்கு வந்து மறைந்து வாழ்ந்தனர்.
பின் ஒரு நாள், மகிஷன் சபையில் கேட்டான். “நம் குடிமக்கள் மகிழ்வோடு இருக்கிறார்களா? "
"ஆம், அனைவரும் மகிழ்ச்சி ஆரவராத்திலேயே இருக்கிறார்கள்" என்றார் அமைச்சர்.
"இந்த கின்னரர், கிம்புருடர், கந்தர்வர்கள்?" என்றான் மகிஷன்
"அவர்கள், வெறும் மூடர்கள், அவர்களுக்கு மகிழ்வாகவே இருக்கத்தெரியவில்லை. ஒரே புலம்பல், அதனால் அவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து விட்டேன் அரசே" என்றார் அமைச்சர்
"அந்த நான்கு முகம் கொண்ட பிரம்மா ஒருவர் இருந்தாரே அவரை என்ன செய்தாய்"
"அரசே, அவராலும் அவர் நாவில் இருக்கும் அவர் மனைவியாலும் ஒரே தொந்தரவு, ஏதோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள், கேட்டால் வேதம் என்கிறார்கள், அவர்களை விரட்டி விட்டேன்" என்றார் மந்திரி.
"நல்லது நல்லது, தேவலோகத்தில் இருப்பவர்கள் என்றார்"
"அவர்களா, அவர்கள் இன்னும் மோசம் என்ன என்னவோ சட்ட திட்டங்கள் எல்லாம் பேசுகிறார்கள் அவர்களையும் சிறையில் அடைத்து விட்டேன் அரசே" என்றார் அமைச்சர்
"பதிநான்கு லோகங்களிலும் உள்ள மற்ற மக்கள் எல்லாம் மகிழ்வாக இருக்கிறார்கள் அல்லவா?" என மீண்டும் கேட்டான்.
"ஆம், அரசே பதினான்கு லோகங்களிலும் உள்ள பதினாயிரம் எருமை குல மக்களும் மகிழ்வாக இருக்கிறார்கள். மகிழ்வாக இருக்கத் தெரியாதவர்களை பிடித்து சிறையில் அடைத்து விட்டேன். அப்படியாவது மகிழ்வாக இருக்க பழகுவார்கள் என நம்பினேன். ஒரு பிரயோஜனமும் இல்லை. கசையால் அடித்தும், சூட்டுகோளால் சுட்டும் பார்த்துவிட்டேன். வலிக்கிறது, எரிகிறது என அழுகிறார்களே ஒழிய, யாரும் சிரிக்கவே மாட்டேன் என்கிறார்கள், என்ன செய்ய" என்றார் மந்திரி.
"மகிழ்வாக இருக்கத்தெரியாதவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது, அவர்களை சிரச்சேதம் செய்துவிடுவோமா?" என்றான் மகிஷன்.
"இல்லை அரசே, இந்த தேவர்கள் அவர்கள் அமுதம் அருந்தியவர்களாம், அதனால், தலையை வெட்டினால், உடனே தலை மீண்டும் முளைத்து விடுகிறது. செத்தும் தொலைய மாட்டேன் என்கிறார்கள், தற்போது இருக்கும் பிரம்மாவிற்கு மேலும் ஒரு வயது கூடும் வரை இவர்களும் சாக மாட்டார்களாம்."
"பிரம்மாவை கொன்றுவிட்டால்?"
"அவரும் நூறு வயது ஆகாமல் சாகமாட்டாராம். அதுவும் அவருடைய நூறு வயது என்பது, கணக்கிட்டால் பல கல்பங்களை கடந்து வருகிறது"
"சரி, அமுதத்தை நாமும் அருந்தினால் என்ன?"
"வேண்டாம் அரசே, அமுதம் அருந்தினாலும் குறிப்பிட்ட காலம் கடந்து செத்துத்தான் ஆக வேண்டும். அதற்கும் மேலாக சாகா வரத்தை வாங்கி விடுங்கள்"
"அது எப்படி வாங்குவது? "
"தவமியற்றினால் கிட்டும்"
"தவம் தானே, இயற்றி விட்டால் போகிறது"
“அதானே! உங்களால் முடியாதது என எதுவும் உண்டா?”
"எப்படி தவம் செய்ய வேண்டும்" என்றான் மகிஷன்
"நாலாயிரம் அடி சதுரக்குழி வெட்டி, அதில் நால்வகை மரங்களால் நெருப்பிட்டு, அதன் மையத்தில் ஒரு இரும்புத்தூண் நாட்டி, அதன் மேலே ஒரு தேங்காய் வைத்து, அதன் முடியில் ஒரு எலுமிச்சம் கனி வைத்து, அதன் மேல் ஒரு ஊசி வைத்து, அவ்வூசியின் மேல், ஒரு கால் ஊன்றி தவமியற்ற வேண்டும்" என்றார் மந்திரி.
"அவ்வாறே தவமிருக்கிறேன்" எனக்கூறி ஒரு கையில் கமண்டலமும், ஒரு கையில் ஒரு யோகதண்டமும் எடுத்துக்கொண்டு, மரவுரியும் உடுத்திப் புறப்பட்டான் மகிஷன்.
புறப்பட்ட பிறகு ஏதோ நினைவு வந்தவனாக. "யாரைக் குறித்து தவம் இயற்றுவது" என்றான் மந்திரியை நோக்கி.
"பிரம்மாவை நோக்கி" என்றான் மந்திரி
"அந்த நான்குமுகம் கொண்டவனையா, அவன் நம்முடைய சிறையில் அல்லவா இருக்கிறான்" என்றான் மகிஷன்
"அப்படி என்றால், விஷ்ணுவை நோக்கி" என்றான் மந்திரி
"அவன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பானாம். எனக்கு சோம்பேறிகளைப் பிடிப்பது இல்லை" என்றான் மகிஷன்
"சிவனை நோக்கி தவம் இருங்கள்" என்றார் மந்திரி
"அது நல்ல யோசனை, அவர் எதிரில் வந்ததும் சாகா வரம் எனக்கேட்டால் போதுமா?"
"இல்லை அரசே, சாகாவரம் என நேரடியாக கேட்டால் தரமாட்டார், கொஞ்சம் மாற்றி அவருக்கு புரியாத படி கேட்க வேண்டும்"
"நீர் மிகவும் புத்திசாலி ஐயா, அதை எப்படி கேட்பது" என்றான் மகிஷன்
மூர்க்கனான அரசனுக்கு, முட்டாளான மந்திரி. மிகத்தீவிரமாக யோசித்துவிட்டு, "ஈரேழு பதினான்கு லோகங்களிலும், உள்ள எவ்வித தாவரங்களாலும், முட்டையிலிருந்து பிறந்த பறவைகள், ஊர்வன, நீர்வாழ் உயிரினங்களாலும். தாயின் உடல் பிளந்து உதிக்கும்பூச்சி முதலான உயிர்களாலும், பெண்ணின் யோனிவழி பிறந்த எவ்வுயிராலும் எனக்கு மரணம் வரக்கூடாது எனக் கேளுங்கள்" என்று சொல்லிக்கொடுத்தார் மந்திரி. “அரசே இதில் ஒரு சொல்லையும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது, அப்படியே கேட்க வேண்டும்” என்று எச்சரித்தார்.
அவ்வாறாக மகிஷன் இமய மலை நோக்கி தவமியற்ற புறப்பட்டான், என்று நான் கதையை இடை நிறுத்திய போது "என்னடா கோவிந்தா, அப்பேற்பட்ட மகிஷன கோமாளியாட்டம் ஆக்கிட்டான் இந்த வில்லுக்காரன்" என்று நகைத்தபடி சொன்னார் ஐயர்
கோவிந்தன் தாத்தாவும் உரக்க நகைத்து விட்டு "ஆமாடா" என்றார், பின்னர் "வில்லுப்பாட்டுக்கு, கூத்துக்கு எல்லாம் அந்த வசதி உண்டுடா, அவன் தோனறாப்பல மாத்தியோ, விரிச்சோ சொல்லலாம், ஒன்ன சிரிப்பா சொல்லுவான், ஒன்ன கவனமா சொல்லுவான்". திண்ணையில் அனைவரும் முகம் மலர்ந்த சிரிப்போடு பேசிக்கொண்டிருந்தனர்.
மீனாக்ஷி பாட்டி சொன்னால் "தத்துப்பூச்சிக்கு விட்டிப்பூச்சி பறக்கது சிரிப்பா இருக்குமாம், அது மாதிரி தான், இதெல்லாம்"
"ம்.. அதுவும் சரிதான்" என்றார் தாத்தா
***
ப்ரமாதமான பகுதி..
பதிலளிநீக்கு