ஐயன் பந்தி - 18

 நெருப்பு 

திருவாடல் - 5

விடிந்து சற்று பொழுது கடந்தபோது குற்றால மரத்தின் அடியில் தென் திசை நோக்கி கிடந்த கல் திட்டையின் மேல் இடக்காலை மேலேயே ஊன்றி மறு காலைக் கீழே தரையில் வைத்து அமர்ந்திருந்த முதுவனை விழுந்து வணங்கினர் அரசியாளும் வளைஞனும். பின், மண்ணில்  பதித்திருந்த வலக்காலடியின் அருகமர்ந்தனர். மெல்லிய புன்னகையோடு அவர்களை நோக்கிய முதுவன் சொல்லத்துவங்கினான். 

"ஆதியில் சொல் மட்டுமேயிருந்தது, அதற்குமுன் அதுவே ஏதுமற்றதாயும் இருந்தது. அதுவே உன்னில் உள்ளது, என்னிலும் உள்ளது. அதுவே நீ" என்று சொல்லி வலக்கையை வளைஞனின் தலையிலும், இடக்கையை அரவரசியாளின் தலையிலும் வைத்தார் முதுவன். பின் அவர்கள் அறிந்தனர் அதுவானதும் பின் இதுவரையானதும். 

பரமென்ற அதுவாய் இருந்தனர். அது அசைவற்று இருந்தது. தன்னையே தான் விழுங்கி காத்திருந்தது. தான் என்பதை அறிந்ததால் அசைவுற்றது. அசைந்து  அலைவுற்றது. அருவும் உருவமானது. பின் நீண்டு வளைந்து இரண்டு என்றானது, ஒன்று கொடுத்திட ஒன்று பெற்றது. கொடுத்ததும் பெற்றிட, பெற்றதும் கொடுத்தது. அவை நாகம் என்ற சொல்லால் தம்மை அறிந்தன. அவ்வாறே அவர்களை நிலைத்திருக்கவிட்டு மலை இறங்கினார் முதுவன். மூன்று பகல்கள் மூன்று இரவுகள் கழிந்து அவர் மீண்டும் வந்த போதும் அவர்கள் அவ்வாறே இருந்தனர். தன் தண்ட நுனியால் மூன்று முறை தரையில் தட்டினார் முதுவன். அவ்வொலி கேட்டு அவர்கள் மெல்ல கண்கள் விழித்து ஒருவர் ஒருவரை நோக்கினர். ‘ஒன்றே’ என  புன்னகைத்தனர். 

"குளிர நீராடி, பசியாறி வருக" என அவர்களை அனுப்பினார் முதுவன்    .  அவர்கள் நீராடி, கனிகள் பறித்துண்டு மீண்டும் அவர் அருகில் வந்து அமர்ந்தனர். சென்று திரும்பும் வரை இருவரும் ஒரு சொல்லும் உரையாடி இருக்கவில்லை. 

"என்ன" என்றார் முதுவன்

“தீராமல் பறந்துகொண்டே இருந்தோம்” என்றாள் நங்கை 

“பறக்கும்போதும் விழுந்து கொண்டிருந்தோம்”  என்றான் நம்பி 

“ஒன்றனுள் ஒன்றாக அடுக்கிய ஏழு தாமரைகள்”

“மேலிருந்தபடி நோக்கினால், நீர்மையாலான ஒரு வளையம், அதனுள்  
எண்ணிறந்த சிகரங்கள் உயர்ந்த நிலத்திட்டு, அவ்வாறு ஏழு கடல் வளையங்களும், ஏழு மலை வளையங்களும் தாண்டி நடுவில் ஒரு சிகரம், அதனை வலமாய் சுற்றியபடி பறந்தான் கதிரவன்"

"அதுவும் சுழன்றது, அதில் நாங்களும் இறங்கினோம்"

“செவ்வொளியால் ஆன ஒரு கடல், அதன் கரையில் அத்தனையும் அமைதி, திண்னென்று மண் விரிந்த பெரும்படல். அங்கு மண்ணாகி விரிந்திருந்தோம்”

“அது மாறி இளமஞ்சளாலான கடல் ஒன்று, அதில் நீர் என மெல்ல அலைவுற்றோம் விதை பிளந்து வெளிவரும் சிறு முளையென  பிறந்தோம் அங்கே”

“பொன்  என அலைகள் ஒளிரும் கடலின்  கரையில்,  கனன்று நெருப்பென திளைத்தோம், ஆண் என்றும் பெண் என்றும் அறிந்து கொண்டோம் ”

"நீரால் ஆன ஒரு காடு அடுத்த கடல், அத்தனையும் பசுமையே அங்கு". 

"அவள் என்னுடையவள் என்று  தகித்தேன்" 

"அவனயும் எனக்குள்ளே பொதிந்து நானாகவே ஆக்கிக்கொள்ள விழைந்தேன்" 

“தோற்றும் வென்றும் ஆடிக்கொண்டே இருந்தோம், முடிவில்லாமல்”

"சுழலும் காற்றாகி இருவரும் தழுவிக்கொண்டோம்.  தழுவும்தோறும், போதாமை  கொண்டு விம்மினோம். அதனாலேயே இன்னும் இறுகினோம்."

அத்தீரா ஆடல் அவர்களை ஒரு கருநீலக்கடலின் கரையில் கொண்டு சேர்த்த போது அறிந்துகொண்டனர் அத்தனையும் ஒலியே என்று. ஒலியையே விழி ஒளியென்றும், நாவு ருசியென்றும்,  நாசி மணமென்றும், உடல் தொடுகையென்றும் அறிந்தது.  ஒலியே  உலகமும், அதற்கு அப்பாலும். ஒலியே வடிவென்றாகி, வெளிஎங்கும் பறந்தனர். இனிமை இனிமை என்றே அத்தனையும் அதிர்ந்தது அங்கே. 

“முன்னிருந்தனவும், இனி வருவனும் அறிந்தோம். அவை தொடங்கியதும் பின் முடிவதும் அங்கேயே. அதுவே காலம் என அறிந்த போது, அலையொளி வீசி ஆர்ப்பரித்து கருநீலக்கடல் தானே திறந்து கொண்டு வழிவிட்டது"

அவ்வழி கடந்து அவர்கள் ஏகியபோது, வெண்ணொளி கொண்டு  ஓயாது அலைவீசிய பாலாழி என அலைந்திருந்தாள் அவள். அலையும் பாலாழியில்  நீண்ட வெண்ணுடல் கொண்டு சுருண்டு, ஆயிரம் சிரங்கள் உயர்த்தி தனித்துக்கிடந்தான்  அவன்.  அவன் உயர்த்திய சிரம் ஒவ்வொன்றிலும் ஆயிரம் அண்டங்கள் மணியென ஒளிவிட்டன. அவ்வெண்ணிற உடற்ச் சுருளின் மையத்தில், மேலும் கீழும்மென அசையும் மூச்சின் மென்தாளத்தில் அசைந்தபடியே இருந்தது கரிய நிறத்தொரு ஒளி. 
   
அவ்வாயிரம் அண்டங்களில்  ஒன்றிலே  அவனும் அவளும்,  இப்போதும் எப்போதும் இருந்தனர். 

“தீராமல் பறந்தோம்” என்றான் மீண்டும்

“மேலே ஏழு அடுக்குகள், கீழே ஏழு அடுக்குகள்”

“பறக்கும்தோறும் விழுந்தோம், அனைத்தும்  கடந்த ஆழம் ஒன்றில்"

"அத்தனையும் நாகங்கள்,  ஆணும் பெண்ணும் என நாகங்கள்" என்றாள் அரவரசியாள்.

"அவை நீங்களே அல்லவா" என்றபடி மெல்ல நகைத்தார் முதுவன்.

"பெரும் திடுக்கிடல், அண்டங்கள் வெடிக்கும் திடுக்கிடல், கவ்விய வாய்விட்டு விலகியது அது" என்றாள் அரவரசியாள் வியப்பால்  விரியம் சிறு குழந்தையின் விழிகளோடு. 
  
"அரசி ஆடியபடி வெளிவந்தாள், நான் சுருண்டு அவளையே தாங்கினேன், அதற்காகவே இருந்தேன்" என்றான் வளைஞன்  

"பின்னிக்கிடந்தோம்" என்று நாணினாள் அரவரசி 

"வென்று விட சீறினேன்" என்று நிமிர்ந்தான் வளைஞன் 

"வளைஞனை முழுதும் உண்டு, அதில் இருந்து விளைந்தேன், அனைத்துமானேன்,  மேலும் கீழும் பதினாலு  கோடி அண்டங்களும் நானே. மண், மலை, புல், பூண்டும், நல்லுயிரும், தீயதும் நானே" என்று  பெருமிதமாக பூத்தாள் நங்கை 

"அத்தனைக்குள்ளும் சாரமென அங்கேயே கிடக்கின்றேன் நான்" என்று அறிபுன்னகை உதிர்த்தான் நம்பி 

"பல பல பேர்கள் கொண்டோம். ஆணென்றும் பெண்ணென்றும், அதுவல்லவென்றும் ஆனதும் அழிவதும் நாங்களே" 

"அசைவது அத்தனையின் உள்ளும் அசையாது இருப்பவன் நான்"

"அசைவென்று உதித்து அனைத்தையும் ஆட்டுவிப்பவள் நான்" 

"நாங்கள் ஒன்றின் இருகூறுகள்".  

"இரண்டும் ஒன்றானதும் அதுவே".

"இனி என்ன" என்றார் முதுவன். 

"விடுதலை" என்றாள் அவள். 

"ஒன்றிடுதல்" என்றான் அவன். 

"ஒன்றியது எப்படி விடுபடும்" என்றார்.

"ஒன்றுவது ஒன்றே வழி" என்றான்.

"அனைத்தும் ஆதல்" என்றாள். 

"விளையாடுவோமா? " என்றார். 

உரக்க சிரித்துவிட்டு நங்கை சொன்னாள் "அத்தனையும் என் விளையாட்டு தானே", அவள் மலர்ந்த முகத்தையே நோக்கியபடியே இருந்தான் வளைஞன்.

"விளையாட்டுக்குள்ளொரு ஒரு சிறு விளையாட்டு" 

"சரி" என்றான் நம்பி 

"மகிழ்ச்சி தான்" என்றாள் நங்கை 

"அருகமர்க!" என்று பணித்தார் 

"அது எல்லாவற்றுக்கும் முன்னும் இருந்தது, முடிவற்றது. அதனால் அவனை  முடிவற்றவன் என்றனர். அத்தனையம் முடிந்த பின்னும் எஞ்சியதால் "எஞ்சியவன்" என்றும் அழைத்தனர். அவன் எஞ்சும்போது அவனுள் ஒடுங்கியும், அவனுள்ளிருந்து விரிந்து அனைத்துமாக மலர்வதால், அவளை அவன் சக்தி என்றும் கொண்டாடினர். வெண்கடல் எனவும் அதில் சுருண்டு கிடக்கும் நாகமெனவும் நீங்கள் கண்டது அவர்களையே. அவர்கள் ஒலிவித்துக்களாக இந்த அண்டம் முழுதும் என்றும் நிறைந்திருப்பவர்கள். " என்று தொடர்ந்தார் முதுவன்.

"அதன் மையத்தில் ஒரு காரொளி" என்றாள் அவள் 

"அதுவென்ன" என கண்கள் மின்னியொளிர நோக்கினான் அவன். 

"அறியலாம், அதுவே தன்னை அறிவித்துக்கொண்டால்" என்று வாய்விட்டு நகைத்து,  "ஆனாலும் ஒரு வழி  சொல்கிறேன் கேளுங்கள்" என்று தொடர்ந்தார் முதுவன். 

"ஒராயிரம் தலைகளோடு, அண்டங்கள் அனைத்தையும் தாங்கி சுருண்டு இருக்கும் வெண்ணிற நாகம் அவன். அதையே நினைவு கொள்" என்று ஏவினார் வளைஞனை. எப்போதும் இவை உன் மடியில்  இருக்கட்டுமென எட்டு அரசவிதைகளை கொடுத்தார். பின் வளைஞனின் வலக் காதில் "ஹ்ரீம்"  என்ற விதைச்சொல்லை மூன்றுமுறை உச்சரித்தார். அவன் கிழக்கே உதித்து மேலேறிய சூரியனை நோக்கி அமர்ந்து உருவேற்ற துவங்கினான்.  

"அலை அலையென ஆயிரமாயிரம் வளைவுகள் கொண்டு பொன்னென மின்னி ஒளியெனச்சுருண்டு அலையடிக்கும் கடல் என வடிவு கொண்டவள்.  பல்லாயிரம் திரைக்கைகளால் எஞ்சி நிற்கும் அவன் ஒருவனையே சூழ்ந்திருப்பவள். ஆயிரம் வடிவுடையாள். அவனில் இருந்தே ஆயிரம் ஆயிரமாக பெருகியவள். அவளையே நினைத்திரு" என்றார் அரசியாளை நோக்கி. முதுவன் கொடுத்த தனக்கான வேம்பின் விதைகளை தானைத் தலைப்பில் முடிந்துகொண்டு, அரசியும் வளைஞனின் வலப்புறத்தில் அமர்ந்தாள். அவள் இடக்காதில் மூன்று முறை "ஸ்ரீம்" என்ற விதைச்சொல்லை அருளினார் முதுவன். 

வளைஞன் 'ஹ்ரீம்' என்ற ஒலியாகி ஒடுங்க 'ஸ்ரீம்' என பல்கி விரிந்தாள் அரவரசி. ஒடுங்கும்தோறும் மதர்த்தான் வளைஞன். விரியும் தோறும் அழகானாள் அரவரசி. உடல் உதிர்ந்து, மனம் புத்தி, சித்தம், எல்லாம் கடந்த பின் ஒலிகள் மட்டுமே எஞ்சின. அவன் ஹ்ரீம் என்ற ஆதாரமானான், அவள் ஸ்ரீம் என்று ஓலமிட்டாள். மண்ணென்று களித்து விரிந்தாள் அவள், அதில் திண்மை என்று உள்ளுறைந்தான் அவன். வீசிப்பேரலையாக சுழன்றது ஒன்று, அதன் மையத்தில் ஆழமென அமைந்து கிடந்தது மற்றொன்று. படர்ந்த கொடுநெருப்பென எரிந்தது ஒன்று, அந்நெருப்பு  பற்றியெரிந்த மைக்கருமை என்று எஞ்சியது மற்றொன்று. பெருஞ்சுழல் காற்றாகி அத்தனையும் சுருட்டியது ஒன்று, அது  பற்றிச்சுழலும்  அசையாத மையம் என்றானது மற்றொன்று.  ஆயிரம் கைகள் வீசி எதுவும் அற்ற வெளியாகி எல்லாம் கடந்த  போது, அங்கே ஒன்றே இருந்தது.  ஹ்ரீம் என்பதும் ஸ்ரீம் என்பதும் ஓய்ந்து ஓம் என்ற ஒற்றைக் கார்வை மட்டுமே எஞ்சியது.

அந்தக்கூடலில் உலகை சிறு விதையாக்கி, அதை தன் உதரத்தில் ஏந்தி வந்தது. ஆண் என்றும் பெண்ணென்றும் இல்லாத அதுவென்றேயானா ஒன்று.  பின் இடமும் வலமும் எனப்பிரிந்தது. உலக வித்துறங்கியிருந்த இடப்புறம் அண்டம்  என உருக்கொண்டு அவளின்  அடிவயிற்றில் ஒடுங்கியது, அதன் வலப்புறம் வெண்ணிற ஒளியென்றாகி அவன் அரையில் சென்று மறைந்தது. 

அவர்கள் என விழிமூடி அவைகள் என கண்விழித்தன. நாகங்கள் என சீறின. சொல்லின் வேகம் என உடல்கள் பின்னின. கூடின. முயங்கின, பின்னி முயங்கியபடி எழுந்தன, பாய்ந்து விழுந்தன, பின் கூத்தாடி சரிந்தன. இரவு வானம் சட்டெனக்கூடி பெருமழை பெய்தது. வட்டவன முகட்டில் துவங்கிய மழை, சரிவிறங்கி தாழ்வாரம் எல்லாம் பெய்து பெருகியது.  மலையாளவனம் நள்ளென்று ஒடுங்கி உறங்கிக்கொண்டிருந்தது. வானம் ‘ஓவென்று’ கிறி சிந்திய வெண்ணொளியில், அலரி  ஒருத்தி மட்டும் தென் மலையின் வட சரிவில் தன் மனை வாசலில், தோளில் சார்த்திய தண்டத்தோடு அமர்ந்து கண்டிருந்தாள் அவ்வாதி அந்தமில்லா பேராடலை. 

ஒளி ஒன்று உதித்தது, பல்கி பெறுகி ஏழு நிறம் கொண்டது, பின் அவை ஏழும் ஒன்றாகின, ஒன்றானது இரண்டானது, இரண்டும்  விலகின, இருப்புறமாக நீண்டன, ஓர் விளிம்பில்  செம்மையும் மறுமுனையில் நீலமும் என்று நிலைத்தன, பின் அவை மீண்டும் மோதி இறுகி ஒன்றான போது, புறவிழிகள் மூட அகத்தினில் கண்டாள்  அலரி அக்கரிய பேரொளியை. அவ்வொளி அல்லாதது எல்லாம் வெண்மை கொண்டது. நீண்ட வெண் துகில் ஒன்று வீசிப்பறந்தது. அதன் மையத்தில் பதிந்த சிறிய கரிய புள்ளியும் அலைந்து ஒளிவீசியது. அக்காரொளி பல்லாயிரம் கைகள் கொண்டு எழுந்தது. அதுவரையும் சொல்லால் பெயர்கொள்ளா ஆயுதங்களை ஏந்தி அவ்வாயிரம்  கைகளும் வட்டமாக சூழ்ந்தன. அவள் விரித்த கருஞ்சடை  எண்ணாயிரம் பிரிகள்  கொண்டது. அவை நீண்டு காலங்களுக்கு அப்பாலும் பறந்தன.  கனத்த அடிவயிறோ எண்ணிறந்த அண்டாண்ட கோடிகளை கருமுட்டைகளாக சுமந்து முன்னால் சற்றே சரிந்து அவளது மதர்த்த தொடைகளின் மேல் பதிந்திருந்தது. விரிந்த அல்குல் விட்டு செந்நிற ஒளியென வழிந்து  ஒழுகிய குருதியில் நனைந்து சிவந்தன  திருவடிகள். கருமுத்துகள் மின்ன நிகர்த்து நின்றன இணை முலைகள். இட முலையில் இருந்து  கசிந்த அமுதொழுகி ஏழு நிறப்பிரிகளானது. அவை ஏழு பிள்ளைகளை ஊட்டின. வல முலையோ வருவன அத்தனையையும் உண்டு செரித்தபடி, ஒரு  நீலக்கல் என மின்னியது. கண்டத்தில் நாகமொன்று மங்கள நாண் எனத் தழுவியருக்க, அதன் மையத்தில் பச்சை நிறகற்கள் என அதன் இருகண்களும் மணித் தாலிகளாகி மின்னின. கூர்த்த நாசியின் இருபுறத்தும் மின்னல் ஒளியே நத்துக்களாகி ஒளிர்ந்தன. அவளது வளர்ந்த வலக்காதின் சோனையில் உயிரற்ற உடல் ஒன்று ஆடியபடி தொங்கியது, அங்கேயே அத்தனையும் முடிவுற்றன. இடக்காது மடல் விரிய பொன்னாய் மின்னும் பனை ஓலை மடலொன்றை சுருட்டி சொருகியிருந்தாள், அங்கிருந்தே அத்தனையும் பிறந்தன. வலப்புறக்கரம் ஒன்றால் பற்றியிருந்த குழந்தையின் தலையை அழுந்தக் கடித்து சிவந்திருந்தன அவள் அதரங்கள். இருபுறமும் தேற்றைப்பற்கள் பன்றிக்கோடுகள் என நீண்டு வளைந்திருந்தன. செவ்வரியோடிய விரிந்த கண்களில் ஒன்று கதிரென மின்ன, ஒன்று நிலவெனக் குளிர்ந்து கருணையைப் பொலிந்தது. அவ்விடக் கண்  ஒன்றே மண்ணுயிர்களுக்கு  என்றும், அதுவொன்றே போதும் என்றும் அறிந்தாள் அலரி. விண்ணோரும் மண்ணோரும் எந்நாளும் கண்டறிய ஒண்ணா மூன்றாம் விழி ஒன்று அவள் நெற்றியில் மூடியிருந்தது. அதனுள் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு மூடிய இமையையும் ஊடுருவி இளஞ்செந்நிறமாய் ஒளிர்ந்தது. 

அலரி கண்விழித்த போது மழை பெய்தோய்ந்து மனைமுற்றத்தில் செந்நிறமாக புது வெள்ளம் கணுக்கால் அளவு பெருகியிருந்தது. அதிலேயே கருங்காலி பிரம்பையும் சாற்றி, தானும் நெற்றி நிலம்பட விழுந்து வணங்கினாள். 

"பேய்களும் அஞ்சும் பேருருவம்" என்றாள் அவளறியாமல் உரக்க.

"அதுவே அவள் பெயர்" என்று யாரோ யாரிடமோ  எங்கோ எதற்கோ கூறுமொலி மன்றில் கேட்டது. மன்றோ இன்னும் உறக்கத்திலேயே இருந்தது..

நாள் என்னவென வானம் நோக்கி நினைவில் குறித்துக்கொண்டாள் அலரி. நிலவு முழுதும் கருமை கொள்ள இன்னும் ஐந்து நாட்கள் இருந்தன. ஆண்டு  துவங்கி எட்டு முழுநிலவுகள் கடந்திருந்தன. குதிரை முக வெள்ளியோடு முழு நிலவு தோன்றிய மாதம் அது. அன்று நிலவருகில் கட்டில் வெள்ளி  முளைத்திருந்தது. 

தென்மலையின் தென் சரிவில் அகன்ற கல் திண்டொன்றில் அமர்ந்திருந்தார் முதுவன். யானைத் தோல் வாரால் திண்டிலேயே குத்திட்டார்போல் வைத்திருந்த இடக்காலை இடையோடு கட்டி, வலக்காலைத் தழைய கீழே தொங்கவிட்டு தரையில் ஊன்றியிருந்தார். 'மூத்தவள் எழுந்துவிட்டாள்' என்ற எண்ணமாகி தனித்து சொல்லுமற்று அமர்ந்திருந்த முதுவன் மெல்லக் கண்விழித்தார். அவர் கண்விழித்தது அறிந்து, குதூகலமிட்டு பறவைகள் இடம்மாறி அமர்ந்தன கிளைகளில். எங்கோ யானை ஒன்று சின்னம் விழித்தது. 'ஒடுங்கும் போது எதுவெஞ்சுமோ அதுவே இனிதொடங்குவதற்கும்  ஆதாரம். ஆதி, அன்னை என்று எழுந்தாள். அழித்து அருளி ஆக்குபவளாக' என்று எண்ணியவாறு, அலரி தென்மலையின் வட  சரிவில் விழுந்து வணங்கிய அதே போதில், தென்  சரிவில் முதுவனும் வணங்கினார். 

"பேய்ச்சி" - நல்ல பெயர்தான். 

மயங்கி சரிந்திருந்த அரசியும் வளைஞனும் கண்விழித்த போது கதிரவன் கீழ் திசையில் உதிக்க துவங்கினான். தான் கடித்த இனிய கனி ஒன்றை அணில் ஒன்று அவள் முன் வைத்துவிட்டு ஓடி மரத்தில் நின்ற தன்  இணையோடு அமர்ந்து கொண்டு அவர்கள் இருவரையும் நோக்கியது. ஆண் மயில் ஒன்று அகவல் இட்டபடி மலைமுகட்டில் பறந்தேறி தோகை ஒன்றை உதிர்த்து பின் சரிவில் இறங்கியது. வட்டவனம் கடந்து வந்த காற்று பிச்சி மனத்தோடு மரத்தளைப்புகளில் தங்கியிருந்த மழை நீரையும் அள்ளி தெளித்துவிட்டு கடந்து சென்றது. குட்டி குரங்கொன்று ஓடி வந்து  அவள் மடியேறி அமர்ந்து  விட்டு, இறங்கி திரும்பி திரும்பி பார்த்தபடியே ஓடியது. ஓடித் தாவி ஏறி, குற்றால மரத்தில் அமர்ந்து அவர்களையே  நோக்கியிருந்த தாயைத் தழுவிக்கட்டிக்கொண்டது, அன்னையும் இழுத்து சூடு பரவ அனைத்தது. அரசி மெல்ல தன் அடிவயிற்றினை தடவிக்கொண்டாள். வளைஞன்  அவளைப்பார்த்து புன்னகைத்தப்படி, அவள் தலைமுடியை கோதிவிட்டான். 

சரியாக ஒன்பது மாதம் கழிந்து அலரி காற்று தென்மேற்கிலிருந்து வடக்காக ஓடும் காலத்தில்,  நிலவு கருமை கொண்ட பின்  நாலாம் இரவு, கட்டில் வெள்ளி முளைத்த போது மலையேறி வந்தாள்.  மன்றில் எவர் பேறுகொண்டாலும்  அவளே, உரிய காலத்தில்  உடனிருந்த, ஓருயிராக  இருக்கும்  தாயையும், பிள்ளையையும் இரு உயிர்களாக பிரித்து கொடுக்கும் பேறாச்சி. முதுகிழவி  என்பதால் பெரியாச்சி என்றே அழைத்தது மன்று. மூங்கிலால் பின்னிய சுளவு ஒரு கையில் ஏந்தி, மறுகையால் கருங்காலி பிறம்பும் பிடித்து, வெளேர் என பரந்த கேசமும், இடுப்பில் சுற்றிய காட்டெருமையின் கருந்தானையும், அதில் சொருகிய குறுங்கத்தியும்  என்று அவள் மலையேறி வந்தாள். காட்டுக்கொடிகளால் சும்மாடு கூட்டிய தலையில் சுமந்து வந்த மூங்கில் கூடையில் மருந்துக்கு பச்சிலைகளும், உண்ண கனிகளும், தீயில் வாட்டிய பன்றியிறச்சியும், குடுவைகளில் தேனும் கொண்டுவந்தாள். அப்போது தன் தண்டத்தை தரையில் ஒலியெழ ஊன்றியபடி,  முதுவனும் தென் சரிவில் ஏறி வந்தார். வளைஞனும் நங்கையும் உடல் செதில்கள் தோன்ற, பொன்னென மின்னினர். மனித வாசம், போய் அரவத்தின் வாசம் கொண்டிருந்தனர். 

“ம் செதில்கள்” என்று மெல்லச்சொன்னாள் அலரி.

“இங்குள்ள மண், நீர், தாவரங்களால்” என்றார் முதுவன்

“அதனால் தானே ஓரிரவுக்கு மேல் வட்டவனத்தில் தங்குவதில்லை என்ற கட்டுபாடு”

“ம்..”

“அத்தனை துயரங்களையும் தாங்கியபடி இருவரும் இங்கு வாழ்கிறார்கள்” என்றாள் 

“அது ஒன்றே வழி, அல்லவா” என்றார் முதுவன்

அவர்கள் இருவரும் வந்த ஒரு பொழுதில், அரவரசியாள் பேற்று வலிகண்டாள். முதுவன் கிழவியை நோக்கி, “அரவக்குழவி”  என்று குறிப்பாக சொல்லிவிட்டு, மறுபுறம் விலகி நின்று கொண்டார். மெல்லிய தோலாலான நீர் நிறைந்த பையில் மிதந்தபடி பிறந்தது குழந்தை. நெளிந்தாடும் முட்டை.  அதை இருகைகளாலும் வாங்கி சுளவில் இட்டுவிட்டு, கொடியோடு நஞ்சும் வெளியேறியதும், குறுங்கத்தியால் கொடி அருத்து, நகத்தால் பையைக் கீறினாள். ஓங்கி உதைத்து அழத்துவங்கியது குழந்தை. “அண்டத்தில் பிறந்தவள்” என்று தனக்கே போல் சொல்லிக்கொண்டாள்

அரவரசியாள் ஈன்ற மகவை, நீராட்டி, அம்மைகளின் பதிட்டையில் இட்ட பதினோராம் நாள் வரை அங்கையே இருந்தாள் அலரி. பதினோராம்  நாள் மீண்டும் மலையேறி வந்த  முதுவன் பேச்சியின் முன் விழுந்து வணங்கி "கருணையோடு இரு" என வேண்டினார். கருமுத்து என மினுங்கிய குழந்தையை வாரி மடியோடு வைத்து, 'பெற்று பெருகுக' என்று சொல்லி, மூன்று முறை 'பேச்சி' என்ற பெயரையும் செவியுறைத்தார். 

அலரியை பார்த்து, "அப்படியென்றால், இவள் தான் உனக்கு" என்றார். 

"இல்லை, அவள் இட்ட பணி செய்ய நான்" என்று பல்லில்லா வாய் திறந்து சிரித்தாள் கிழவி. இருவரும் அவரவர் வழியில் மலை இறங்கினர். 

இனி பன்னிரண்டு  ஆண்டுகள் கொடைவிழவு நடைபெறாதென முன்பே அறிந்திருந்தனர் மலையாள வன மக்கள்.  அரவரசியாள் ஈன்றாள் என்பது மட்டும் கேட்டு, அவரவர்  இல்லங்களிலேயே  ஈற்று நடந்து விட்டதாக  மகிழ்ந்து ஈற்று காணிக்கை முடிந்து வைத்தனர். கோழிகள் முட்டையிட துவங்கின. வளர்ப்பினங்கள் சினை கொண்டன. வாழ்வு துலங்கியது என அறிந்து கொண்டது மலையாள வனம்.
                                         
காணி கதையை இடை நிறுத்தி. முன்னால் இருந்த செம்பு நீரை பருகி தன்னை சமனப்படுத்திக்கொண்டார். 

ஐயர் மெல்ல கணைத்தப்படி,  "காணி சொல்றது ஆதிசேஷன தானடா, கோவிந்தா" என்றார். "ஆம்" என்பது போல மெல்ல தலை அசைத்தார் தாத்தா. 

"'அதுவே நீ' ங்கறான் முதுவன்" என எடுத்துக்கொடுப்பது போல சொன்னார் ஐயர் 

"தத்வமஸி" என்றார் தாத்தா.

"மஹாவாக்கியம்" என்று கண்மூடி  கைகூப்பிக்கொண்டார் ஐயர் 

நான் முந்திக்கொண்டு "அரவரசியும், வளைஞனும், நாம கேட்ட கதையில வர நாகராஜனும், நாகன்னியும்"  உடல் துள்ளாமல் குதித்தேன்.

"ஆமாடா எல்லாம் ஒன்னோட ஒன்னா பின்னிக்கிடக்கு, வட்டவனத்தில நாகங்கள மாதிரி"  என்றார் தாத்தா.

"அண்ணேன் கதைய சொல்லுங்கண்ணேன்" என்றேன் மலைக்காணியை  நோக்கி.

"இருடா திருவாத்தான், செத்த  நேரம். தண்ணியாவது குடிச்சிக்கட்டும் அவன்" என்றாள் ஆச்சி.

காணி மட மடவென்று நீர் அருந்தும் ஒலி தவிர வேறு சத்தமே இல்லை அப்போது. அவரவர் உலகில் அனைவரும் தனித்திருந்தனர்.
 
***

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19