ஐயன் பந்தி - 15
நெருப்பு
திருவாடல் - 2
"அந்த கல்பத்தில"
"எந்த கர்பத்தில"
"கர்ப்பம் இல்ல அண்ணாச்சி, கல்பத்தில"
"சரி எந்த கல்பத்தில?"
"க்ருத யுகத்துல பிரம்மாவுக்கு ஒரு தலை போச்சே, அந்த கல்பத்துக்கு"
"அந்த கல்பத்துக்கு என்ன?"
"அந்த கல்பத்துக்கு நான் தான் பிரம்மா"
"அடேய், சொல்றதுக்கும் வர முறை வேண்டாமா?"
"இல்ல அண்ணாச்சி நான் சொல்றத முழுசா கேளுங்க"
"சரி சொல்லு அந்த கல்பத்திலையாது, அஞ்சு தலை இருந்துச்சு ஒண்ண வெட்டினார் சிவன், இப்ப ஒரு தலை தான் இருக்கு, நான் என்னத்த வெட்ட"
"அதில்ல அண்ணாச்சி, அந்த கல்பத்தில பிரம்மாவா இருந்தனா?"
"இருந்த, திரும்ப இங்க வந்து ஏன்டா பிறந்த? என் உசுர எடுக்கவா"
"படைக்கைல ஒரு பெரிய பாவத்தை பண்ணிபோட்டேன், அதான் இப்படி மனுஷ பிறவியா பிறந்து லோல்படுறேன்"
"அப்படி என்ன பாவத்தை செஞ்சீரு பிரம்ம தேவரே"
"அது வேண்டாம் அண்ணாச்சி அத சொன்னா வருத்தப்படுவீக"
"என்னனு சொல்லி தொல டா, கதைய படிக்கணும்"
"அது வந்து அண்ணாச்சி, உங்கள படைச்சிட்டேன், அதுல வந்த சாபம் தான் இங்க வந்து கிடக்கேன்"
"அட மகா பாவி".
கூட்டம் ஒரு முறை சிரித்து அடங்கியதும் குடத்துக்காரர் சொன்னார் "கதைய சொல்லுங்க அண்ணாச்சி, அப்பதான் சம்பாவனை கிடைக்கும், கண்டதையும் பேசிக்கிட்டு"
"யாரு, நானு? சரி போன கதை போகட்டும் இனி வந்த கதையை பார்ப்போம்" என்று விட்டு வில்லுக்காரர் குரலை உயர்த்தி கதையை சொல்ல துவங்கினார். "மும்மூர்த்திகளில் இருவருக்கு சாபத்தை இட்ட துர்வாச மாமுனி மீண்டும் தவமிருக்க சப்த ரிஷி மண்டலத்திற்கே திரும்பினார்"
"திரும்பினாரே மாமுனியும்"
"இன்று போல நாளையென பொழுதுகள் கழிந்தன. அப்படியாக்கப்பட்ட ஒரு வேளையிலே சிவபெருமான் வழக்கம்போல படி அளக்க புறப்பட்டார்"
"உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் உள்ளது உள்ளபடி படியளந்து விட்டு அவர் கைலாசம் திரும்புகையில் அந்தி மயங்கத்துவங்கும்"
"ஆமாம், அவர் எப்படி படிஅளந்தார்?"
"அந்தந்த ஜீவராசிக்கு தக்கபடி படி அளந்தார் ஜடாதரன்"
"யானைக்கு அதன் பங்கு என்றால்.."
"எறும்புக்கும் அதன் பங்கு"
"என் சாண் உடம்புக்கு ஒரு சாண் வயிறுங்கிறது மனுஷப்பய கணக்கு"
"அவனவன் கையால"
"ஆமாம். ஆக உடம்புல எட்டுல ஒரு பங்கு வயிரு"
"இப்படி சிவ பெருமான் படியளந்து விட்டு திரும்புகின்ற வேளையிலே, அம்மை என்ன செய்வாள்?"
"என்ன செய்வாள்?" என்று குடத்தில் தட்டினார் பத்தியால்.
"பாரிஜாதம், புன்னாகம், சௌகந்திகம், அசோகம், மாம் பூ என ஐந்து வகை மலர்களும் பறித்து, பொதிகை மலையில் பிறந்த சந்தனமும், கங்கை முதல் காவிரி வரை உள்ள பதினாறு நதிகளில் தீர்த்தமும் எடுத்து வைத்து காத்திருப்பாள்."
"எதற்காக காத்திருப்பாள் அம்பிகை? "
"பரமன் வந்ததும், தீர்த்தம் கொண்டு அவர் பாதம் விளக்கி, பூவும், சந்தனமும் சாற்றி பாத பூஜை செய்து வணங்கி வரவேற்பதற்காக"
"அது தான் நித்தியப்படி வழக்கம், இல்லையா"
"அவ்வாறாக ஒரு நாள் அந்தி மயங்க அம்பிகை, வாசல் படியில் அமர்ந்து இறைவன் எம்பெருமான் வரவுக்காக காத்திருந்தாள். அவள் குனிந்து நிலத்தையே நோக்கியபடி அமர்ந்திருந்த வேளையில், நிழல் ஒன்று மண்ணில் ஊர்ந்து நெருங்கி வருவதைக்கண்டாள். அந்நிழலிலே, ஐந்து சிரங்களையும், ஜடாபாரத்தையும் கண்டு, பாதம் விளக்க நீரும், மலரும் சந்தனமும் எடுத்துக்கொண்டு நடை இறங்கினாள்"
"இறங்கினாளே.."
"அருகணைந்து நீர் வார்க்க கெண்டியை சாய்க்கும் போதுதான் அறிகிறாள் அது எம்பெருமானின் பாதங்கள் அல்ல, வேறு எவரோ வந்திருக்கிறார்கள் என்று. யார் என நிமிர்ந்து நோக்கினால், அங்கு ஐந்து சிரங்களுடன் பிரம்ம தேவனாகப் பட்டவர் நின்று கொண்டிருக்கிறார். பதறியபடி விலகி நின்றாள் அம்பிகை. கடுங்கோவம் கொண்டவளாக பிரம்மனிடம் கேட்கிறாள் 'பிரம்ம தேவரே இது என்ன முறைமை? பெண் மட்டும் தனித்திருக்கும் மனையில் அறிவிக்காது நடை ஏறியது எதனால்?' என்று"
"அம்மையே! சிவனைக் காணவே வந்தேன், தாங்கள் மாத்திரம் தனித்திருப்பது அறியேன்' என்று பிரம்ம தேவன் நயந்தும் பயந்தும் பலவிதமாக பேசியும் அம்பிகைக்கு கோபம் தணியவில்லை"
"பிரம்ம தேவர் என்ன செய்தார்"
"அது கண்டு பிரம்ம தேவர், 'கணவனின் நிழல் எதுவென்றும் அறியாத நீயும் ஒரு பெண்ணா ச்சீ? என்று கைலாய வாசல் விட்டு விலகி அவர் வந்த வழியே திரும்பிச் சென்றார்"
"நேரமும் காலமும் சரி இல்லை என்றால், சாதாரணமா பேசிகிட்டு இருக்கைலயே, வார்த்தை தடிச்சு சொல் மிஞ்சிடும். இருவருக்குமே நேரஞ்சரியில்ல அன்னைக்கு" என்றான் குடத்துக்காரன்.
"மனம் வெறுப்புற்ற அம்பிகை அள்ளி வைத்த மலர்களையும், சந்தனத்தையும் வாசலிலேயே விசிறி விட்டு , மலையேறி உள்ளே சென்று வருத்தத்தோடு அமர்ந்து விட்டாள். இவ்வாறு இருக்க சிவபெருமான் உள்ளபடி படி அளந்துவிட்டு கைலாயம் திரும்பினார்"
"திரும்பினால்.. நீர் கெண்டி ஒரு பக்கம் உருண்டு கிடக்கு.."
"ஆமாம், சந்தனமும் மலர்களும் சிதறிக்கிடக்கின்றன, வழக்கமாக வாசல் வந்து வரவேற்கும் உமையாளையும் நடையில் காணோம்"
"'பார்வதா..'"
"'அம்பிகே..'"
"'உமா..'"
"'அங்கயற் கண்ணி..'"
"'மீனாக்ஷி..'"
"அடிக்கொரு பெயராக அழைத்தபடி, அம்பிகையை கைலாயம் ஏறி வந்து தேடினார் தென்னாடுடைய சிவன்"
"எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடிக்கும் ஒரு பேரு..?"
"ஆமாம் அம்பிகைக்கு தான் ஆயிரம் ஆயிரம் நாமங்கள் உண்டே, அதை எல்லாம் சொல்லி அழைக்கிறார் பரமன்"
"அம்மை வந்தாளா?"
"அவ வரலையே, அவளே மாயையின் உருவம் அல்லவா? தன்னையே மறைத்துக்கொண்டாள், எவராலும் காண முடியாதபடி."
"அப்போது சிவன் என்ன செய்தார்"
"சிவன் மனதுக்குள் முருகப்பெருமானை நினைத்தார், அம்மை ஊட்டிய பால் மனம் மாறாத சின்னச்சிறு பாலகனாக, வேலும், மயிலும் கொண்டு விளையாடும் குழந்தை வடிவில்"
"நினைத்த மாத்திரத்திலே முருகப் பெருமான் அவ்வாறே அங்கு தோன்றினார்"
"ஆமாம். நினைத்த மாத்திரத்திலே கிண்கிணிச் சதங்கைகள் ஒலிக்க, அழகு நடை போட்டு பண்டி குலுங்க ஆடி வந்தார் முருகன்"
"தக் திமி திமி! தா தை, தை தாம்! தித் தை, தை தாம்" என்ற அதற்கு தக்கபடி தாளமிட்டார் குடத்துக்காரர்.
"அப்படி ஆடி வந்த முருகன், அப்பன் அழைக்க அவர் மடியேறி இடத்தொடையில் அமர்ந்து சிவனிடம் 'ன்ன' என்று மழலை மொழியில் கேட்டார்"
"அவரை உச்சி முகர்ந்து, அவர் தளிர் உடலையும், கைகால்களையும் தடவி கொஞ்சி விளையாடிய சிவன்"
"முருகனிடம் 'அப்பனே உன் அன்னையை அழை' என்றார்.
"அம்மை என்ற சொல்லைக் கேட்டதும், அவள் உடற் சூடும் வாசமும் நினைவுக்கு வர குழந்தைக்கு, வயிறு நொந்து பசிக்கத் துவங்கியது.."
"அம்மை ஊட்டிய அமுதின் ருசி நாவில் எழுந்தது"
"அக்கணமே அச்சிறுமுருகன் அம்பிகையை "ம்மா" என்று அழைத்தான்"
"அம்மா, ஸ்ரீ மாதா.."
"அழைத்த சொல் குழந்தையின் உதடு தாண்டு முன் இரு முலையும் பெருகி ஒழுக அம்மை தோன்றினாள். குழந்தையை வாரி எடுத்து மாரோடு சேர்த்து கொண்டாள். அவள் அவ்வாறு வாரி அணைத்த மாத்திரத்திலே.."
"அணைத்த மாத்திரத்திலே...ஏஏ"
"அகிலாண்ட கோடி பிரம்மாண்டத்திலே, மனிதர், தேவர், கந்தர்வாதி, கிம்புரடர்கள், பசு, பக்ஷி, தாவரங்கள் என பேதாபேதமே இல்லாமல், கருவுக்குள் இருக்கிற சிசுவும், கல்லுக்குள் சிக்கின தேரையும், நல்லூயிரும், தீயதும் அத்தனை ஜீவ வர்க்கங்களும் அமுதுண்டு, நா சுழற்றி சொட்டையிட்டு, ஒரு நொடி கண் அயர்ந்தன"
"அமுதுண்ட மயக்கம்"
"சிவபெருமான் அத்தனையையும் சிரித்த படி கண்டுகொண்டிருந்தார்"
"பின்னர் உமையை அழைத்து.."
"'என்ன' என்று சிவன் வினவ.."
"'ஏது' என்று அம்மை விளக்கினாள்"
"விவரம் அறிந்து சிவன், 'உரிய காலத்தில் வேண்டது செய்வோம்' என்று வாக்களித்தார். உமையும் அதை ஏற்றுக்கொண்டு சமாதானம் ஆனாள்.
"பின்ன என்னாச்சு" என்றார் குடத்துக்காரர்.
"இது இவ்வாறு இருக்கையிலே, சத்ய லோகம் திரும்பிய, மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவுக்கும் கோபம் தலைக்கு ஏறியது.
"ஐந்து தலைக்கும் ஏறியது"
பிரம்மா, 'சிவனை போல எனக்கும் ஐந்து சிரங்கள். மூன்று தொழில்களிலும் முதற் தொழிலான படைக்கும் தொழில் என்னுடையது. நான் படையாமல், விஷ்ணு காப்பதும், சிவன் அழிப்பதும் உலகில் நடவாது. ஆக மும்மூர்த்திகளிலும் முதல்வன் நானே, என்னையே அவமான படுத்தினாள் அந்த பார்வதி' என்று எண்ணினார்.
"அர்த்தமில்லாத கோபம் நீள நீள, மனித மனசு அத அகங்காரத்தால மேலும் நீட்டிக்கும். என்னைய இன்னது சொல்லிட்டான்னு கோபப்பட்ட மனம், என்னையவே சொல்லிட்டானேனு மாறும்"
"ஆமாம், பிரம்மனின் ஈரைந்து கண்களையும் அகங்காரமும் கோபமும் மறைத்தன. அகங்காரமும், கோபமும் சேர்த்தால் அடுத்தது அஞ்ஞானம் தான். அதில் இருந்து தான் அத்தனையும் பிறக்குது"
"அஞ்ஞானம் கொண்ட பிரம்மன் என்ன செய்தார்"
"முப்பத்தி முக்கோடி தேவர்களையும், ரிஷிமார்களையும் கூட்டி தன்னையே முதல் தெய்வம் என்று அறிவித்தார். அறிவித்ததோடு அல்லாமல் படையை திரட்டிக்கொண்டு விஷ்ணு பரமாத்மா வாழ்கின்ற வைகுண்டத்திற்கு சென்றார். சென்றவர்"
"சென்றவர்"
"தந்தை என்று எண்ணியும் தொழாமல், மும்மூர்த்திகளில் ஒருவர் என்று எண்ணியும் வணங்காமல், 'மாயனே, நானே மும்மூர்த்திகளில் முதல் தெய்வமான பிரம்மன். உனக்கு அருள வந்துள்ளேன் தொழுக என்னை' என்றார்"
"அகங்காரம் கூடிப்போச்சுன்னா தகப்பனைக்கூட கண்ணுக்கு தெரியாது"
"மாயவன், 'மகனே' என அழைத்து, 'வருக' என்று சொல்லி தன்னுடைய ஆதி சேஷ பர்யங்கத்திலே அமரச் சொன்னார்"
"'இந்த மாயவித்தைகள் எல்லாம் என்னிடம் வேண்டாம், ஒன்று அடிபணிந்து என்னையே முதல் தெய்வம் எனக்கொள்ளும், அல்லது என்னோடு சண்டையிட்டு மடியும்' என்று சண்டைக்கு அழைத்தார் பிரம்மா" என்றார் குடத்துக்காரர்
"சரி இவன் வழியில் சென்று மட்டுமே இவனை வழிக்கு கொண்டு வர முடியும் என்று அறிந்த மஹா விஷ்ணு, சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்னும் ஐந்து ஆயுதங்களையும் சூடிக்கொண்டு, கருட வாகனம் மீதேறி போருக்கு சென்றார்"
"தகப்பனுக்கும் மகனுக்கும் சண்டை"
"ஆமாம், அன்ன வாகனத்தில் ஏறி பிரம்மன் வர, இருவருக்கும் பெருஞ் சண்டை மூண்டது, யுகங்கள் பல கடந்தன. ஈரேழு பதிநான்கு லோகங்களிலும் பிறப்பும், காப்பும் நடவாமல், அழிவு மட்டும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனால், நிலை தடுமாறி அத்தனை லோகங்களும் சூன்யம் கொண்டன. தேவரும் ரிஷிமார்களும் பரமசிவனிடம் அடைக்கலம் தேடி ஓடினார்கள்."
"கைலாசத்துக்கு.."
"அதே சமயத்திலே மகா அஸ்த்திரமான மாஹேஸ்வர அஸ்த்திரத்தை மாயவன் எய்ய, அவர் மகன் அயன் பாசுபதத்தை எய்தார். இரண்டு மகா அஸ்த்திரங்களும் அந்தரத்தில் மோதி ஆயிரங்கோடி சூரியர்கள் போல பிரகாசித்து எரிந்தது. ஈரேழு பதினாங்கு உலகங்களும் ஒவ்வொன்றாக மடிந்து சுருங்கி அதற்குள் விழுந்து கொண்டேருந்தன"
"'அபயம் அபயம்' என்று கதறியபடி தேவர்களும் ரிஷிமார்களும் வெள்ளியங்கிரியை அடைந்தார்கள்.
"அவர்கள் வரவறிந்து சிவன் "நடந்தவை அறிவோம், அதுவும் நம்மாடலே, அமைக" என்று திரிசூலமும் கையில் பற்றி கைலாயத்திலே மறைந்தார்"
"மறைஞ்சிட்டாரா ? அப்ப அவராலையும் காப்பாத்த முடியாதா"
"அடேய். மற்ற தெய்வங்களுக்கு எல்லாம் இல்லாத சிறப்பு சிவனுக்குண்டு அவர் உருவமில்லாமலும் இருப்பாரு. உருவத்தை மறைச்சிக்கிட்டு, அங்க போர்க்களத்தில பாசுபதமும் மாஹேஸ்வரமும் மோதி பெருகின ஜோதி பிழம்புக்குள்ள ஒளிஞ்சாரு"
"ஓ அப்படி, ஒளிஞ்சவரு என்ன செஞ்சாரு?"
"ஒரு பெரும் நெருப்பு தூணா மாறி கீழையும் மேலையுமா அறிய முடியாத தூரத்துக்கு வளர ஆரம்பிச்சாரு"
"ஒரு கல்பத்தில துவங்கி, பல கல்பங்கள் ஆகியும் அது வளரது மட்டும் நிக்கல"
"ஆமாம், வளர்ந்து நீள்றத பார்ததும், 'இதன் அடியையோ முடியையோ முதலில் காண்பவர்கள் யாரோ அவரே முதல் தெய்வம் என முடிவு செய்வோம்' என்றார் பிரம்மா.
"விஷ்ணு ஒத்துக்கொண்டாரா?"
"விவரம் எல்லாம் அறிந்தவர் மஹாவிஷ்ணு, அவர் ஜெயிக்கவோ தோற்கவோ சண்டையிடல. அஞ்ஞானத்திரையால மூடப்பட்டிருந்த பிரம்மனை நல்வழிப்படுத்த நடக்கும் ஆடல் என்பது அவருக்கு தெரியும். எடுத்த ஆடலை முழுதாய் முடிக்க விரும்பிய விஷ்ணு பகவான், வராஹ ரூபம் கொண்டு மண்ணை துளைத்துக்கொண்டு அடியைத் தேடியபடி இறங்கி போனார்."
"அந்தரத்துல ஏது சாமி மண்ணு"
"ஆடுறது ஈசன் அவன் இஷ்டத்துக்கு அவன் ஆடுற மேடையையும் படைச்சிக்குவான், அவன் மண்ணுனா மண் வரும், நீர்னா நீராடும். நம் ஐம்புலனுக்கும் அப்பால நடந்த ஒன்னு, ஆனா அதையும் நம்ம ஐம்புலனால சேர்த்ததை வச்சு தான் புரிஞ்சுக்க முடியும், அதனால் நமக்காக இப்படி சொன்னாங்கனு வச்சுக்கோ"
"சரி சரி"
"அன்னபக்ஷி ஏறி முடியைக்காண பிரம்மன் தானும் சென்றார்"
"பிரம்மன் தானும் சென்றாரே.."
"இவ்வாறாக சில கல்பங்கள் உயரே பறந்து பறந்து சென்ற பிறகு, மேலிருந்து கீழாக மலர் ஒன்று இறங்கி வருவதை கண்டார் பிரம்மா. அம்மலரை நிறுத்தி 'யார் நீ? எங்கிருந்து வந்தாய்? எப்போது புறப்பட்டாய்?' என்று வினவினார்."
"அதற்கு என்ன சொன்னது அம்மலர்"
"ஐயனே, சிவபெருமான் சிரசை அலங்கரித்த தாழை மலர் நான். பல கல்பங்களுக்கு முன் ஒரு நாள் அவர் சிரசின் வெப்பம் தாழாமல் அதில் இருந்து இறங்கி கீழ் நோக்கி வர துவங்கினேன்."
"'பல கல்பங்களாக இறங்கி வந்தும் தாழை மலரே நீ வாடாது இருந்தது எங்கனம்'"
"'அயனே நான் அத்தனை எளிதில் வாடுவது இல்லை, வாடினாலும், என் வாசம் மறைவதே இல்லை'"
"'இன்னும் எத்தனை கல்பங்கள் கடந்தால் நான் அச்சிவனின் சிரஸைக் காண இயலும்'"
"'படைப்புக்கு இறையே, அதை நான் அறியேன், நான் ஓரடி வைத்தால், அந்நேரத்தில், அப்போது இருந்தததை விட பல்லாயிரம் மடங்கு வளர்க்கிறார் ஈசன். அவர் வளரும் வேகம் நாமறியாதது , அதனால் அதை மட்டும் என்னால் சொல்ல இயலாது'"
"என்றால், தாழம்பூவே, எனக்கு ஒரு உதவி செய்"
"'ஆணையிட்ட படி செய்கிறேன்' என்றது தாழம்பூ"
"'அடி தேடிச் சென்ற விஷ்ணுவிடம், சிரசை கண்டதாக நான் சொல்கிறேன், அதை கண்ணுற்றதாக நீ அதற்கு சாட்சி உரைக்க வேண்டும்' என்றார் பிரம்ம தேவன். தாழை மலரும் அதற்கு 'சரி' என்று சொல்லவே"
"பொய் சாட்சி"
"சிரசை தான் கண்டதை மனதில் பிரம்மன் அறிவிக்க, அதனை பாதாள பாதாளங்களையும் தாண்டி சென்று கொண்டிருந்த விஷ்ணு அவர் மனதால் அறிந்து திரும்பினார். பிரம்மனும் தாழம்பூவையும் உடன் அழைத்துக்கொண்டு அவர்கள் யுத்தம் துவங்கிய அதே கல்பத்தில், அதே யுகத்திற்கு, அதே இடத்துக்கு திரும்பி வந்தார். தாழம்பூ சாட்சி உரைக்க, விஷ்ணு பகவானும் நம்பி பிரம்ம தேவனை கை தொழப் போனார்.."
"தொழப் போனார் .."
"அப்போது என்ன நடந்தது தெரியுமா?"
"என்ன நடந்தது?"
"அகண்ட நெருப்பு தூணை பிளந்த படி, பொன் மேனியும், புலித்தோலாடையும், சிவந்த நெற்றிக் கண்ணுமாக சிவபெருமான் தோன்றினார். தன் நெரித்த புருவ மத்தியில் இருந்து தானே ஒரு புதிய உருவம் கொண்டு எழுந்து பிரம்மனின் ஐந்தாம் சிரமொன்றை இருவிரல் நகங்களால் கிள்ளி துண்டித்தார்"
"துண்டித்த தலை என்னாச்சு"
"கிள்ளிய தலை அவர் கரத்தோடே ஓடென ஒட்டிக்கொள்ள, நான்கு சிரங்களோடு பிரம்ம தேவர் மூர்ச்சையானார்"
"மூர்ச்சை தெளிந்த போது பிரம்மாவுக்கு, அஞ்ஞானம் நீங்கி சிவனே முதல் தெய்வம் என்ற ஞானம் மீண்டும் பிறந்தது. கையில் கபாலத்தோடு, சிவ பெருமான் உன்மத்தம் கொண்டவராக இரந்துண்டு திரிகிறார் என அறிந்து வருத்தமுற்றவராக சத்ய லோகம் திரும்பினார் பிரம்மா. சிவனின் அந்த கோலத்துக்கு பைரவம் என்றும், பிக்ஷை எடுத்து உண்டதால் பிக்ஷாடணம் என்றும் பெயர்கள் சூட்டினார்கள் ரிஷிமார்கள்.
"ஐந்து முகங்களோடு சென்றவர், நான்கு முகங்களோடு திசை முகனாக பிரம்ம லோகம் திரும்பினார்"
"அங்கு சரஸ்வதி தேவியானவள், அஞ்ஞான சேற்றில் உழன்ற தம் கணவர் ஞானம் பெற்று திரும்ப வேண்டுமே எனக் காத்திருந்தாள்"
"ஆனால், பிரம்மன் ஒரு சிரம் குறைந்தவராக வருவது கண்டு கொதித்த சரஸ்வதி தேவி சபித்தாள்"
"யாரைச் சபித்தாள்"
"கணவன் நல்ல வழியில் இல்லை என்றால், அவன் நல் வழிப்படணுமே என்று வருந்துவாள் மனைவி. ஆனால் அதே கணவனுக்கு ஒரு சிறு குறை வந்துவிட்டாலும் அவளால் தாங்க இயலாது"
"ஆமாண்ணேன், காளியம்மா மதினி உங்கள ஒண்ணு இரண்டு கூடக்குறைய பேசினாலும், அடுத்தவக ஏதும் சொன்னா ஆஞ்சுபுடும் ஆஞ்சு"
"ஏன்டா கூட்டத்துக்குள்ள கட்டு சோற்றை அவுக்கிற. யாரை சபிச்சானு கேளு"
"சரி, யாரை சபிச்சா"
"அம்பிகையை"
"அம்பிகையவா"
"'பெண்ணே, பொறுமை இழந்த உன்நிலையாலே இன்று என் பர்த்தாவான பிரம்மா தேவன் சிரம் ஒன்றை இழந்தான், உன் கணவனோ பிச்சைக்காரனாக, பித்தனாக தெரு தெருவாய் திரிகிறான். நீயும் அது போலெ கந்தலும் கிழிசலும் கட்டி, மயிலிறகும், கொக்கிறகும் தலையில் சூடி, கல் மணிகளையே பொன் அணியென பூட்டி, சாக்கடையில் நீர் அருந்தி, கழிசடையில் உணவு உண்டு, விரிசடையும், கோரை பல்லுமாக மயானங்களில் திரிவாயாக'"
"இவ்வாறாக அம்பிகையை வாக்குக்கு இறைவியான சரஸ்வதி தேவி சபித்தாள்"
"ஆமாம், கொடிய சாபம் கொண்டாள் அம்பிகை, அப்படியாக கோர ரூபம் கொண்ட சிவ பத்தினியாள் மலையரசன் பட்டினத்திற்கு வந்து சேர்த்தாள். எப்படி வந்து சேர்த்தாள் தெரியுமா? "
"எங்கெங்கெல்லாம் சுற்றி வந்தாள்?"
"அவள் வடமலை நாடு விட்டு, மலையரசன் பட்டினத்திற்கு வந்த கதை சொல்லும்படி கேளுங்கம்மா"
"சொல்லும்படி கேளுங்கய்யா" என்று குடத்துகாரன் இழுத்து பின்பாட்டு பாடி நிறுத்தினான். கூட்டம் கலைந்து பேச துவங்கியது. சுவர் ஓரங்களில் பந்தங்கள் ஆடிக்காற்றில் பதறிக் கொண்டிருந்தேன். வானெங்கும் நக்ஷத்திரங்கள் இரைந்து கிடந்தன. மேகத்திரை ஒன்றில் முழு நிலவும் சற்று நேரம் ஒய்வு கொண்டது. வில்லடிக்காரர்களுக்கு சுக்கு வெந்நீரும், தண்ணீரும் கொடுத்தார்கள்.
ஊரும் கதைகளும் மறுபடியும் கதைகளாக எப்போது வரும்..
பதிலளிநீக்கு