ஐயன் பந்தி - 14
நெருப்பு - 2
திருவாடல் - 1
கழல் சூடி ஊன்றிய வலப்பாதத்தின் பெருவிரல் அச்சிற் சுழன்றது ஒரு செந்நிறத் தழல். உள் பாதத்தின் குழிவில் ஒரு துளி கரும்புள்ளி. அது சுழன்று பின் சிதறி ஒன்று நூறு என ஒளிப்புள்ளிகளைச் சிந்தி சிதறி ஆயிரம் வண்ணங்கள் காட்டி பறந்தது. அதில் பிறந்தனர் ஆயிரம் ஆயிரம் ஆதித்தியர்கள், ஆயிரம் ஆயிரம் சந்திரர்கள், ஆயிரம் ஆயிரம் கோளங்கள், அவைடங்கிய ஆயிரம் அண்டங்கள். அண்டங்களை கருச்சுமந்த பேரண்டங்கள். சுழலும் அப்பாதம் பதிந்த போது மறைந்து, மீண்டும் எழுந்த போது பிறந்தது காலம். காலமற்ற பாழில் நிகழும் அச்செந்நிற தழலாட்டத்தை அது மட்டுமே அறிந்திருந்தது. அல்லது அதுவும் அறிந்திருக்கவில்லை. அங்கு அறிதலும் இல்லை. தூக்கிய இடப்பாதம் வலப்புறமாய் அந்தரத்தில் நிலைக்க, இடைவளைத்த புலி தோல் ஆடை தொடை மறைத்து தொங்கி சுழன்றது. கரியானை தோல் உறிவொன்று இடத்தோல் மூடி வலப்புறமாய் வளைந்து விரிந்து பறந்தது. கண்டத்தில் நீல மணி மின்னென ஒளிவிட, நிமிர்ந்த முகத்தில், இருவிழிகளும் மலர, நடு நுதலில் கண் ஒன்று தீவிழித்தது. சிவந்த சடைக்கற்றைகள் பின்னிச் சுழலும் தலை முடியில் பன்றிப்பல் என பற்றியபடி நின்று சந்திரனும் நடுங்கினான். கங்கை எனும் பெருமங்கையோ சுழன்றபடி பேரருவி என விழுந்து சிதறினாள்.
நானும் தாத்தாவும் சென்று அமர்ந்தபோது, இழுத்துக்கட்டிய வில்லில் வீசுகோலை சுழற்றி தட்டியபடி கதை சொல்லத் துவங்கியிருந்தார் வில்லுக்காரர், பாட்டி முன்பே வெள்ளையம்மாள் பாட்டியோடும் மற்றவர்களோடும் வந்து பெண்கள் பக்கமாக அமர்ந்திருந்தாள்.
"அவ்வாறாக மாதொரு பாகன் தன்னை தானென்றும் அறியாமல், பிரிதென்றும் அறியாமல் சுழன்று ஆடியபோது, அவர் காலடியிலே காலம் பிறந்தது. காலம் பிறந்ததும் ஸ்ருஷ்டியும் தொடங்கியது, ஐவகை பூதங்களும் உண்டாகி..." என்று வில்லடியை இடை நிறுத்தி வசனத்தில் கதையை சொல்ல துவங்கினார் வில்லடிக்காரர்.
"ஆத்தி பூதமா" என்றார் குடத்துக்காரர்
"ஆமாம் பூதம்"
"சரிதான், அப்ப பேயும் பூதமும் தான் உண்டாச்சா முதல"
"அடேய், மண், காத்து, நீர், நெருப்பு, ஆகாசம் இதைத்தான் ஐந்து வகை பூதம்னு சொல்லுவாங்க, அதால ஆனது தான் இந்த உலகம். உன்னை கூட்டிக்கிட்டு கதை படிக்க வந்தன் பாரு, என்ன மாரியம்மா தான் காப்பாத்தணும்"
"வீட்ல மதினி பேரு காளியம்மா தான அண்ணாச்சி, மாத்தி சொல்றீக"
"மடிப்பூனையும், வழி சகுனமுமா ஆச்சு என்பாடு இன்னைக்கு, ஆத்தா சீல்த்தூர் பெரிய மாரி தான் காப்பாத்தணும்னு சொன்னேன் டா"
"ஓ அத சொல்லவாரீகளா, நான் கூட நினைச்சேன், புதுப்பட்டியில.."
"நீ ஒன்னும் நினைக்க வேண்டாம் கதைய கேளு, புதுப்பட்டியிலே..". கூட்டம் சிரித்த கலவை ஒலி எழுந்தது. பெருசுகள் நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருக்க. பெண்கள் வரிசை வாய் விட்டு நகைத்தது. இளவட்டங்கள் கை கொட்டி, துண்டை வீசிக் கெக்கலித்தனர்.
"புதுப்பட்டியில..?" என்று குடத்தின் வாயில் தாளமிட்டான்.
"யோவ், உன்னோட சேர்ந்து என் பொழப்பும்ல கெடுது, புதுப்பட்டியும் இல்ல பழைய பட்டியும் இல்ல" என்றுவிட்டு வில் வடத்தில் வீசுகோலால் தட்டத் தொடங்க, குடக்காரனும் குடத்தின் வாயில் பத்தியால் தட்டி தாளத்தோடு இணைந்து கொண்டான். பின்னால் உடுக்கையும், தாளக்கட்டையும் இணைந்து பெருமுழக்கமாக எழுந்தது
"நால் வகை யுகத்திலே நல்ல யுகமாம் கிருத யுகத்திலே.."
"க்ருத யுகத்திலே.. க்ருத யுகத்திலே"
"க்ருத யுகம்னா என்னனு தெரியுமா"
"அதான் எனக்கு தெரியுமே"
"என்ன தெரியும்?"
"க்ருத யுகம்" என்றான் குடக்காரன்
"அது ஒரு காலக்கணக்கு. சொல்றேன் நல்லா காதை திறந்து கேட்டுக்க"
"சொல்லுங்க சாமி" என்று வில்லு குடவாயில் ஒரு தட்டு தட்டினான்.
"ஒரு முறை கண் இமைய நொடிக்கிறதுக்கு ஆகுற நேரத்துக்கு நொடினு பேரு"
"ஆமாம் நொடி"
"அப்படி பதினைஞ்சு முறை கண்ண இமைச்சா அதுக்கு ஒரு காஷ்டம்னு பேரு"
".."
"ஆமாம்னு கேளுடா"
"ஆமாம் கஷ்டம்"
"கஷ்டம் எனக்கு, உனக்கு இல்ல. அது காஷ்டம்"
"சரி காஷ்டம்"
"முப்பது காஷ்டம் சேர்ந்தா கலை"
"ஒரு கலை"
"முப்பது கலை சேர்ந்தா ஒரு கடிகை. இரண்டு கடிகை ஒரு முஹுர்த்தம். முப்பது முஹூர்த்தம் கூடினா, பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளு, அப்ப பகலுக்கு எத்தனை முஹூர்த்தம்?"
"முப்பது"
"அடேய், ஒரு நாளுக்கு முப்பதுனா, பகலுக்கு மட்டும் எப்பிடி முப்பது வரும். உனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்தவன் வீட்டு கூரைக்கு மேல கல்ல விட்டுத்தான் எறியணும். எவன்டா உன் அண்ணாவி?"
"நீங்கதான் அண்ணாச்சி"
"நானா.. சரி அது கிடக்கட்டும் விடு, வளர பிள்ளை படிச்சிக்கிடுவ." பேச்சு மொழி மாறி, உரத்த குரலில் சொல்லத் துவங்கினார் வில்லடிக்காரர். "அப்படி முப்பது நாள் சேர்ந்தால் ஒரு மாதம். ஆறு மாதங்கள் சேர்ந்தால் ஒரு அயனம். ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரைக்கும் உள்ள ஆறும் தக்ஷிணாயணம், தையில் இருந்து ஆனி வரை உள்ளது உத்திராயணம். இரண்டும் சேர்ந்தா ஒரு வருஷம்"
"ஒரு வருஷம்"
"இந்த ஒரு வருடம் என்பது மனிதர்களுக்கு, பூமியில் வாழ்பவர்களுக்கானது மட்டும் தான். அதுக்கு புருஷமானம்னு பேர், தேவர்களுக்கு வேற கணக்கு"
"அதென்ன தேவமானமா"
"ஆமாடா, சரியா சொல்லிட்டியே, உனக்கு ஆசிரியன்னு சொல்லிக்கவும் பெருமை தான்.. "
"அது நீங்க சொல்லி தந்ததில்ல அண்ணாச்சி, நம்ம வீட்டு பக்கத்துல பெரியசாமி தாத்தா தான்... "
"ஏய் ஏலே. உன்னோட ஒரே பாடாவுல போச்சு. அத விடு. அப்படி பூமியிலே ஒருவருடம் கழிந்தால், தேவர்களுக்கு ஒரு நாள். நாள் என்றால் பகலும் இரவும் இருக்கணும் இல்லையா? நம்மோட தட்சிணாயணம் தான் தேவர்களுக்கு இரவு. உத்திராயணம் தான் பகல்"
"சரி, அப்படி தேவமான நாள் 360 சேர்ந்தா ஒரு தேவ மான வருடம்" என்றான் குடக்காரன்.
"ஆமாம், அந்த தேவ மான வருஷத்தில, 4000 வருஷம் சேர்ந்தா அது க்ருத யுகம். அது போல 3000 வருஷம் சேர்ந்தது த்ரேதா யுகம், 2000 வருஷம் சேர்ந்தது துவாபர யுகம், கலியுகத்துக்கு 1000 வருஷம்"
"1000 தானா? "
"ஏன் நீ அவ்வளவு நாள் இருந்தா பார்க்க போற, சொல்றத கேளுடா. இப்படி நாலு யுகங்கள் சேர்ந்தது ஒரு மஹா யுகம், ஆயிரம் மஹா யுகங்கள் கழிந்தால் அதாவது ஒரு கல்பம் கழிந்தால் பிரம்மாவுக்கு ஒரு பகல் கழியும்"
"ஒரு நாள் இல்ல ஒரு பகல்"
"ஆமாம், அது மாதிரி ஒரு பகலும் இரவும் சேர்ந்தா அது ஒரு நாள். பிரம்மாவுக்கு 100 வயசு ஆகுற வர கல்பங்கள் பகலும் இரவுமா தோன்றி மறையும். அதுக்கு மகாகல்பம்னு பேரு. ஒரு மகா கல்பம் முடிஞ்சா, பிரம்மாவும் மறைஞ்சு புதுசா ஒரு பிரம்மா வருவாரு. இப்படி சுழன்றுக்கிட்டே இருக்கிறதாலதான் காலத்தை சக்கரம்ங்கிறாக ரிஷி மார்கள்"
"ஒரு கல்பத்தில 14 மனுக்கள் பிறந்து இறப்பாக. மனுவோட காலத்தை மன்வந்த்ரம்னு சொல்றாக."
"ஒரு கல்பம் முடிஞ்சு மறு கல்பம் பிறந்தா, திரும்ப பதினாலு மன்வந்தரங்க தோன்றி மறையும் ஒன்னொன்னா"
"அப்படியாகப்பட்ட காலத்தில் ஒரு பிரம்மாவின் பகல் பொழுதிலே, ஒரு க்ருத யுக காலத்திலே சப்த ரிஷி மண்டலத்திலே துர்வாச முனிவர் தவம் இருந்தார்."
"சரி, அதாவது சப்த ரிஷிகளோட காலம் மன்வந்த்ரத்துக்கு உட்பட்டது"
"ஆமாம், ஒரு மன்வந்த்ரம் அழியும் போது சப்த ரிஷிகளும் மறைஞ்ச, அடுத்த மன்வந்திரத்தில திரும்ப பிறப்பாக"
"சப்த ரிஷிகளில் ஒருவரான துர்வாச மாமுனிவர் எப்படியாகப்பட்டவர் என்றால்... "
"என்றால்.. "
"ருத்திரனின் கோபமே உருவமாக பிறந்தவர். முன் கோபி. சாப மிட தயங்காதவர். யாராலும் அவரோடு இணங்கி வாழ முடியாது என்பதாலேயே துர்வாசர் என்று பெயர் பெற்றவர். அவருக்கு இருபத்திரண்டு கண்கள். அவை அத்தனையும் அறிவால் முளைத்த கண்கள்"
"22 ஆ"
"முகத்தில இரண்டு, கைகள் கால்களோட நகங்களில் 20னு இருபத்திரண்டு கண்கள்"
"நகக்கண் எல்லாம் பார்வை கொண்ட கண்கள்"
"ஆமாம், அதாவது ஒரு விஷயத்த நம்மால ஒரு கண்ணால காண முடியும், ஆனால் அவரால 22 விதமா கண்டு தெளிய முடியும். அத்தனை அறிவும் பலமும் உள்ளவருனு புரிஞ்சுக்கணும்"
"ஓ அப்படி"
"ஒரு கண் கொண்ட நமக்கே அகங்காரம் மலையளவு இருக்கும் போது, துர்வாசருக்கு சொல்லணுமா?"
"ஆமா 22 மடங்கு"
"உனக்கும் கணக்கு வருது"
"ஆமா வருது"
"அப்படி, சப்த ரிஷி மண்டலத்தில் பல சதுர் யுகங்களாக தவம் புரிந்து கொண்டிருந்த துர்வாச முனிக்குள் ஒரு கேள்வி உதித்தது. ரிஷி கர்ப்பமே ராத்தாண்டாது என்பார்கள். ரிஷியோட எண்ணம் செயலாக க்ஷணம் போதாதா? அவருக்கு அப்படி என்ன கேள்வி தோன்றியது என்றால்? தன் தவத் திறனின் பலத்தை அறிந்து இவ்வுலகம் வணங்குகிறதா என்ற கேள்வி"
"கேள்வி.. "
ஆமாம், கேள்வி தோன்றியதும், விடை தேடி அவர் எங்கே போனார்"
"எங்கெங்கே போனார்"
"முதலிலே பிரம்மனின் சத்யலோகத்துக்கு சென்றார். சென்று, துர்வாச மாமுனி வாயிலில் காவலர்களிடம் தன் வரவை அறிவித்தார். பிரம்மாவுக்கு ஐந்து சிரங்கள் அந்த காலத்தில்"
"க்ருத யுகத்துல"
"திசைக்கு ஒன்றாக நான்கும், அதற்கும் மேல் ஒன்றுமாக ஐந்து தலைகள். பிரம்மாவும் சரஸ்வதியும் சதி பதியாக வாசல் வந்து தன்னை வரவேற்று செல்வார்கள் என்று இறுமாந்து நின்றார் ரிஷி"
"நின்றார் ரிஷி தானுமே.."
"ஆனால், பிரம்மா விவரம் அறியாமல், துர்வாசரை உள்ளே வந்து வணங்க சொல்லி அனுமதி கொடுத்து அனுப்பினார்"
"அச்சச்சோ"
"துர்வாச முனிவருக்கு இத்தனை போதாதா?"
"ஆமாம் அவரே இணுக்குனாலும் முணுக்குனு கோபபடறவரு",
"கடுங்கோபம் பூண்டார் மா முனி, 'அயனே, தவத்தில் சிறந்த என்னை மெச்சி வரவேற்கவும் திராணியில்லாது, நீ படைப்புக்கு இறைவனாக இருந்து என்ன பயன்? ஐந்து தலைகள் கொண்டவன் என்ற அகங்காரமா? உன் அகங்காரத்திற்கு காரணமான ஐந்தாம் சிரம் அறுந்து விழட்டும்' என்று சபித்தார். "
"தனக்கு அகங்காரம் இருக்கிறவனுக்கு அது தெரியாது, அடுத்தவன எல்லாம் அகங்காரியா தெரியுவான்"
"யாரை சொல்ற"
"உங்களை சொல்லல அண்ணாச்சி. உலக நடப்பை சொன்னேன்"
"சபித்து விட்டு, அந்தக்காலிலேயே கைலாசத்தை நோக்கி சென்றார் வேகமும் நடையுமாக"
"கோபமாக..ஆஆஆ" என்று பின்பாட்டாக இழுத்தார்
"கைலாசம் சென்று வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த பூத கணங்களிடம் வரவை அறிவித்தார் துர்வாசர். ஆனால் அங்கேயும் சிவனோ சக்தியோ வாசல் வந்து அழைக்கவில்லை. கோபம் கொண்ட மாமுனி சிவனையம் சபித்தார்"
"என்ன சபித்தார்"
"'வரவறிந்து வணங்கி அழைக்காத நீ ஒரு பித்தன் என்றே காட்டினாய். அதே போல பித்துப் பிடித்து, கையில் கபாலத்தோடு, இரந்துண்டு, மனைவி மக்களையும் தன்னையும் மறந்து, மயானத்தில் சுற்றித் திரிவாயாக' என சபித்தார்.
"சிவனுக்கே இந்த நிலையா.. "
"ஆமாம், அதோடு முனி அங்கிருந்து புறப்பட்டு வைகுண்டம் ஏகினார். நடந்தது மொத்தமும் மாயத்தால் அறிந்த மாயவன், ஸ்ரீ தேவி பூ தேவியையும் உடன் அழைத்துக்கொண்டு வாசலில் வந்து காத்திருந்தார். 'வருக மாமுனியே! வருக மாமுனியே!' என்று பணிந்து வரவேற்றார். மாமுனி வந்ததும், திருவுடைய மங்கை நீர் கெண்டி தர, பூ மங்கை முனிவர் பாதங்களை தாங்க பொற்தாலம் ஒன்றை அவர் முன் வைத்தாள். ஸ்ரீயப்பதியான எம்பெருமான், பாதங்களை கழுவி உள்ளே அழைக்க எத்தனித்த காலத்தில் துர்வாச முனிவர், இதில் ஏதோ சூது இருக்கிறது எனக்கருதி பரந்தாமனை காலால் எட்டி மார்பில் உதைத்தார்"
"பரந்தாமன் என்ன செய்தார், சக்ராயுதத்தை எடுத்து வீசி விட்டாரா"
"இல்லைடா, என்ன தான் முன் கோபி என்றாலும், தவசி அல்லவா, அதனால் நாராயணன் துர்வாசரை கேட்டார், 'உம்மை போன்ற ஒரு தவசியின் திருவடியால் தீண்டப்பட நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டுமோ? இறைவா, எட்டி உதைத்ததால் உம் பாதம் நோகுமே, அழுத்திப் பிடித்து விடவா? ' என்று"
"முன் கோபிக்கு முக ஸ்துதி"
"ஆமாம், துர்வாச முனியும் அகமகிழ்ந்து, நாராயணனும் லக்ஷ்மியும் பூமி தேவியும் 32 வகை பதார்த்தங்களோடு உணவிட்டு செய்த உபச்சாரங்களை ஏற்றுக்கொண்டார். அப்போது ஸ்ரீமன் நாராயணன் கேட்டார் 'இறைவா சற்று நேரம் உறங்கி சிரம பரிகாரம் செய்து கொள்ளவேணும்' என்று வினயமாக"
"அதானே பார்த்தேன்.. "
"என்ன பார்த்த"
"இல்ல காரணம் இல்லாம இவர் இப்படி உபசரிக்க மாட்டாரேனு.."
"சரி, என்ன காரணம்"
"அது..நீங்க சொல்ல போறது தான்"
"துர்வாச மாமுனியும் அவர் சொல்வதை ஏற்று அவர் விரித்து வைத்த பஞ்சணையில் உறங்கமேவினார். ஸ்ரீ தேவியும் பூ தேவியும் அவருக்கு சாமரம் வீசி சேவை செய்தார்கள், பரந்தாமன் அவருக்கு கை கால் பிடித்து விட்டார். அது தான் சந்தர்ப்பம் என்று மாயவன் அவருக்கு கை கால்பிடித்து விடும் சாக்கில், துர்வாச முனிவரின் கைகளிலும், கால்களிலுமாக இருந்த 20 கண்களையும் அழுத்தி குருடாக்கினார். இருபது கண்களும் குருடாகி இரு கண்கள் மட்டும் எஞ்சிய போது, கண்டு அறிய இரு கண்கள் போதும், மற்றவை அதையே பல மாயவடிவங்களாக்கி காட்டுகின்றன என்ற அறிவு பிறந்து அகங்காரம் நீங்கியது துர்வாசருக்கு. ஆணவம் படியிறங்கிய மனையில் பண்பு குடியேரும். மாலவனிடமும், அலர்மேல் மங்கையிடமும், மண் மகளிடமும் மன்னிப்புகோரினார் மாமுனி."
"அப்ப அனாவசியமான அறிவும் ஆபத்து தான் சொல்றீக"
"ஆமாம். நடந்தவைக்கு வருந்தி 'என்ன இது விபரீதம்' என்று வினவினார் துர்வாச முனி"
"அதற்கு நல்ல மாயவர் என்ன சொன்னார்... "
"'ரிஷியே, மாமுனியே, முன்னொரு கல்பத்திலே பாரத வருஷத்திலே வட வேங்கட மாமலைக்கு தென் பாகத்திலே நிறைமாத சூலியாக பெரும் பட்டினமாம் மலையரசன் பட்டினத்திலே பூங்காவனம் ஒன்றில் புற்றின் வடிவில் அமைந்தாள் அம்பிகை. அவள் கணவரான ஈசனோ அவள் அமைந்த பூங்காவனத்தின் மேற்கில் கருங்கல் மலையாக அண்ணாமலை என நிமிர்ந்து நின்றார். அம்பிகை அப்பொழிலில் மீண்டும் விளையாட விளைகிறாள். இதுவும் அவள் லீலை என்றே கொள்க. அதன் பொருட்டு நீரும் பகடைக்காய் ஆனீர்' என்று மாலவன் பதில் இறுத்தார். அது கேட்டு விடை பெற்று சப்த ரிஷி மண்டலத்தில் தன் இடத்திற்கே திரும்பினார் துர்வாசர்"
"இது என்ன கூத்து? அவர் போக்ல வந்தாரு, மும்மூர்த்திகள்ல இரண்டு பேருக்கு சாபத்தை போட்டாரு, துண்டை உதறி தோள்ல போட்டுட்டு திரும்ப தவம் பண்ண போய்ட்டாரு"
"அதான்டா ஸ்ருஷ்டியோட விசித்திரம். அலகிலா விளையாட்டுனு சொல்றாங்க. அந்த ஆடல் நமக்கு புரியாது. புத்த கட்ற எறும்புக்கு புத்த முழுசா தெரியுமா என்ன ? அதுவும் ஒரு விளையாட்டு, அப்படியும் நடந்துச்சுனு சொல்றதக்கு மேல ஒன்னும் சொல்ல முடியாது"
"ஆனா, மஹேஸ்வரனுமா இந்த விளையாட்டுக்குள்ள சிக்கிக்கிடுவான்"
"அவன் இந்த ஆடலுக்கு எல்லாம் வெளிய இதெல்லாத்தையும் தாண்டி எட்டாத தூரத்தில தான் இருக்கான். ஆனா அவனும் விரும்பி ஆட்டத்துக்குள்ள வந்து ஆடுவான். விருப்பத்தால அவனே வந்து ஆடுறது. ஆட்டத்துக்குள்ள வந்தா ஆட்டத்தோட விதி அவனுக்கும் உண்டு. ராமனும் சீதையும் வன வாசம் போலயா ?"
"மாமுனிவரையே அகங்காரம் இந்த பாடு படுத்தும்னா, மத்தவங்களை பத்தி என்ன சொல்ல.. முனிவர் இட்ட சாபம் எல்லாம் பலிச்சதா?"
"கோபக்காரர்னாலும் முனிவர்ல? முற்றடங்கிய தவசியின் வாக்கு பொய்த்தால், எல்லாமே பொய்யா போயிடுமே. அவர் வாக்கும் பலிச்சது, அவர் வாக்கால ஐயன் பித்தனாகி தன்னையே அறியாது மயானம் மயானமா அலைஞ்சாரு. அது மட்டுமில்ல, அம்பிகையும் அலைய வேண்டி வந்துச்சு அவளும் அலைஞ்சா. அவர் எண்ணத்தில கேள்வியாகி அவர செயல் பட வச்சதும் அவ விளையாட்டு தான."
"அம்மையுமா ?"
"ஆமாம் விவரமா சொல்றேன் கேளு.. "
💕 அருமை.. சொல்லுங்க சொல்லுங்க கேட்கறோம்.. 👌🏾
பதிலளிநீக்குஅதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகுமே??
பதிலளிநீக்குஅடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்
பதிலளிநீக்கு