ஐயன் பந்தி - 13

நெருப்பு - 1

மீனாக்ஷி பாட்டி அடுப்படியில் இருந்தாள்.  சன்னமாக அவள் பாடும் குரல் கேட்டு கொண்டிருந்தது. 

ஒரு கண்ணி பிச்சிப்பூ 
ஒரு  முழத்தில் ஒரு சரமாம் - அம்மா நீ 
ஒசிஞ்சு வைக்கும் கால்களுக்கு
ஒலிக்கும் மணி கொலுசுகளாம்  

மூனு கண்ணி பூவுனக்கு  
மூம்முழத்தில் ஒரு சரமாம் - அம்மா நீ 
முன்னே வைக்கும் கால்களுக்கு 
முத்து மணி தண்டைகளாம்

ஐந்து கண்ணி பூவுனக்கு 
ஐம்முழத்தில் ஒரு சரமாம் - அம்மா உனக்கு 
அஞ்சு விரலும் மோதிரமாம் 
அஞ்சு வித வளையல்களாம்

ஏழு கண்ணி பூவுனக்கு
ஏழு முழத்தில்  ஓரு சரமாம் - அம்மா உன் 
எல்லையில்லா பேரழகாம் 
எடுத்து வச்ச சீரடியாம் 

நூறு கண்ணி பிச்சிப்பூ   
நூறு முழத்தில் ஒரு சரமாம் - அம்மா உனக்கு 
அள்ளி முடிஞ்சுவிட்டு 
ஆசையாக சூடி வைப்பேன் 

ஓரடிக்கு ஒரு வளைவாம் 
ஈரடிக்கு  இரு வளைவாம் 
அடியடியா வைச்சல்லோ 
அம்மா நீ வருகையிலே

சர்ப்பத்தின் நடையல்லோ  
நாகமணி பொட்டல்லோ  
தாழம்பூ குடையல்லோ 
மஞ்சள் வண்ண பட்டல்லோ 

மஞ்சளிலே காப்பல்லோ  
மாணிக்கபூண் பிரம்பல்லோ 
வாடி மகராசி 
என் வாசல் எல்லாம் பூவிரிச்சேன் 
அள்ளி உண்ண உன் கைப்பிடிக்கு 
அஞ்சுவகை பணியாரம்
ஆக்கி அடுக்கி வச்சேன்.

நான் உள்ளே நுழைகையில், பெரிய அடுப்பில் பற பற என நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. பாட்டி பருப்பு கூட்டுக்கு கூட்டி வைத்தாள்.  உப்பள்ளி கண்ணால் பார்த்து, அதில் ஏழுட்டு பரல்களை மட்டும் சரியாக சரித்து உப்பு பானையில் விட்டு மற்றதை பருப்போடு சேர்த்தாள்.  கொடி அடுப்பில்  கொண்டையை நறுக்கி, நான்காக கீறி, துளி நல்லெண்ணெயோடு காந்தலில் விட்டு வைத்திருந்த கத்திரி பிஞ்சுகளின் மீது பொடித்த உப்பை தூவினாள்.  

"வாடா வெள்ள" என்றாள் பாட்டி. 

"என்ன ஆச்சி இன்னைக்கு அரிசி சோறா?"

"ஆமாடா இன்னைக்கு உங்க தாத்தா கார்த்திய விரதம்" அவளும் காலையில் இருந்து எதுவும் உண்டிருக்க மாட்டாள். ஆனால் அதை எப்போதும் சொன்னதில்லை. 

"தாத்தாவ எங்க?"

"மடவைக்கு போனாரு, இப்ப வந்துருவாரு" 

அருகில் ஓலைப்பெட்டியில் கை விட்டு கருப்பட்டியை கொஞ்சம் பிய்த்து என் கைகளில் கொடுத்து, "புதுக் கருப்பட்டி டா, திண்ணு"  என்றாள். புது கருப்பட்டியை தான் கையால் பிட்டு  எடுக்க முடியும். இளகி குழைந்து இருக்கும். காய்ந்து விட்டால் இறுகி கல்லாகி விடும், ஊற வைத்தோ தட்டியோ தான் எடுக்க முடியும்.  பொதுவாக ஈரக்கருப்பட்டியை பலரும் வாங்க மாட்டார்கள். சுக்காக காய்ந்து இறுகிய பிறகு தான் வாங்குவார்கள். ஆனால் பாட்டி மட்டும் சொல்லிவிட்டு புதிதாக வார்த்து சற்றே காய்ந்த கருப்பட்டியைக் கொண்டு வர சொல்லுவாள். அவளே பக்குவம் பண்ணி வைத்து அதைக் கொண்ட தான் பலகாரம் செய்வாள். 

"பழைய கருப்பட்டி உரியில கட்டி வச்சா அது பாட்டுக்கு கிடக்கும் தான், ஆனால் புதுக்கருப்பட்டி தான் ருசி."  என்றாள்.  

"ஆச்சி,  நீ பாடினது என்ன பாட்டு, நம்ம வேப்பிலைக்காரி பாட்டா" 

"ஆமாடா, அவ பாட்டு தான்"

"அவ எப்படி நம்ம வீட்டுக்கு வந்து சேர்ந்தா?'

"நாம கோலாரத்துல* இருந்த காலத்துல வந்து சேர்ந்தவ, நம்ம நாலு வீட்டுக்கும் தெய்வமா நிக்கா" நாங்கள் நான்கு வீட்டுக்காரர்கள் என்று பொதுவில் சொல்லிக்கொண்டாலும், பல குடும்பங்களாக விரிந்து விட்டோம். சில தலைமுறைகளுக்கு முன் ஒரு தாயின் நான்கு மகன்களின் வழி வந்த குடும்பம். 

"மதினி, மதினி" என்றபடி வெள்ளையம்மாள் பாட்டி அப்போது தான் உள்ளே வந்தாள். வெள்ளையாம்மாள் பாட்டி என் தாத்தாவின் தங்கை. கோவிந்தன் தாத்தாவிற்கு சின்னையா மகள். கீழத்தெருவில் நாராயணன் பெரியவருக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். வெள்ளையாம்மாள் பாட்டி எதுவொன்றுக்கும் அவள் ஐயா வீட்டுக்கு வருவதை விட நேரே கோவிந்தன் தாத்தாவிடம் தான் வருவாள். 

"வாத்தா" என்றாள் பாட்டி 

"என்னத்த கேட்கிறான் எங்க அண்ணேன் பேரன்" என்றாள் வெள்ளையம்மா பாட்டி 

"வேப்பிலைக்காரி வந்த கதைய" என்றாள்

"கார்த்திய விரதத்துக்கு, நீ பொங்கி பொறிச்சு வச்சிருப்ப ஒருவாய் சாப்பிட்டு போலாம்னு வந்தேன்" என்றாள் வெள்ளையம்மாள் பாட்டி.

"இருடி, இப்ப முடிஞ்சிரும். உங்க அண்ணன் வந்ததும் இலைய போடுவோம்" என்றாள் மீனாக்ஷி பாட்டி. கொடியடுப்பில் காந்தலில் கிடந்த கத்திரி பிஞ்சுகளை இறக்கி விட்டு, அதில் பெரிய இரும்பு அகப்பையில்  தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்து பருப்புக்குழம்பில் கொட்டி இறக்கினாள். வேறொரு சட்டி வைத்து, குழம்புக்கு அரைத்து வைத்திருந்ததைச் சேர்த்து, புளியை கரைத்து கொதிக்க விட்டாள். ஒரு தட்டில், கானப்பயரையம் தேங்காயையும் வறுத்து, அளவுக்கு உப்பும், ஒரு சிறு புளி உருண்டையும் துவையலுக்கு எடுத்து வைத்திருந்தாள் . 

"குடு மதினி, கானத்துவையலா? நான் அரைக்கேன்" என்று தான் எடுத்து அரைக்க துவங்கினாள் வெள்ளையம்மா பாட்டி. புளிக்கரைசலில், அரைக்கொதி வந்ததும், ஏற்கனவே  காந்தலில் பாதி வெந்திருந்த கத்திரிக்காய்களையும் எடுத்து அதோடு சேர்த்தாள் மீனாக்ஷி பாட்டி. 

வெள்ளையம்மா பாட்டி அம்மியில் தேங்காயை தட்டி சிதைத்து, கானத்தையும் சேர்த்து, இழுத்து அரைத்தப்படி கதையைச் சொல்லத் துவங்கினாள், "அப்ப நாம கோலாரத்தில இருந்தோம், எங்க தாத்தா எல்லாம் சின்ன பிள்ளையா இருந்த காலத்துல, ஒரு வாட்டி கிழக்க வைப்பாத்தாங்கரையில இருந்து ஒரு நாலஞ்சு குடும்பம், வத்ராப்புக்கு எதோ சோலியா வந்தாகளாம். வார வழியில, விளக்கு வைக்கிற நேரமாச்சுனு நம்ம ஊர் சாவடியில இடங்கேட்டு தங்கியிருக்காக. கிழக்க மேகம் கூடி, வானம் அப்பத்தான் மூட ஆரம்பிச்சிருக்கு.  அவுக கூட வந்ததுல ஒருத்தி, நம்ம வீட்டு வாசல்ல கிடந்த குத்து உரல்ல உட்கார்ந்திருக்கா. யாரு எவருனு தெரியாமா,  எங்க தாத்தாவோட ஐயாவ பெத்த ஆச்சி 'ஏலே, யாருத்தா நீ? நிறை உரல உட்காந்திருக்க'னு  கடுக்குனு சொல்லிட்டா.  'மண்டை இடிக்குது தாயீ, தொலவட்டுல இருந்து தலச்சுமையா சுமந்து வாரேன். அசதில உட்கார்ந்துட்டேன்'னு சொல்லயிருக்கா வந்த மகராசி. அவ தலையிலயோ, பக்கத்துலயோ பாரம் எதுவும் இல்லைனு பாத்துட்டு, ஆச்சி, "தலச் சுமையா வந்தேங்கிற, பாரத்தை ஒன்னும் காங்கலையே"னு திரும்ப கேட்டிருக்கா. ஆச்சி வெடுக்கு வெடுக்குனு விவரம் புரியாம பேசவும், உரல் மேல உட்காந்திருந்தவ 'இப்பத்தான் இறக்கி வச்சேன் தாயீ' னுட்டு எந்திச்சு மேக்காம இரண்டு எட்டு வச்சாளோ இல்லியோ, கிழக்க, ஒரு வெட்டு வெட்டி வானம் இரண்டு துண்டா உடைஞ்சு சிதறினாப்பில ஒரு பெரிய அவயம். கையில பிரம்போட, தலையில அக்னீ சட்டி தக தகனு எறிய, மின்னி மின்னி அவ போறத மூனுதரவ பார்த்துட்டா ஆச்சி.  பிச்சி பூ முடிச்ச தலைமுடி கால் வரைக்கும் நீண்டு கிடந்துச்சாம். மஞ்ச கோடி உடுத்திகிட்டு, வேப்பந்தழையையும் இடுப்புல சொருகிகிட்டு பொண்ணு கெணக்கா போறா மகராசி. மழைனா மழை பேய் மழை கொட்டுது. ஆனால் அவ மேலயோ அவ தீச்சட்டியிலையோ ஒரு துளியும் படல. மழை பிடிச்சதும் வந்த சனங்க எல்லாம் பதறி தெருவில ஒவ்வொரு திண்ணையா பார்த்து அடையுதுக கோழி அடைஞ்சாப்பில"

புளி கொதித்த வாசம் வந்ததும், மீனாக்ஷி பாட்டி கையில் கொஞ்சம் உப்பை அள்ளி சரியாக நாலு பரல்களைத் தள்ளிவிட்டு, அதில் சேர்த்தாள். கதை சொல்வதையும், துவையல் அரைப்பதையும் நிறுத்திவிட்டு வெள்ளையம்மாள் பாட்டியும் மீனாக்ஷி பாட்டி உப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். உப்பிட்டதும் வெறும் புளி மனமாக இருந்தது, குழம்பு மனமாக மாறியது.  மறுபுறம், கொடி அடுப்பில் மிளகு சீரகம் அரைத்தததையும், உப்பையும் இட்டு  கரைத்த புளியையம் சேர்த்து ரசத்துக்கு கூட்டி வைத்தாள்.  

"பிடிச்ச மழ வெறிக்க இரண்டு நாளாச்சாம். வந்தவுக எல்லாம் மேல வீடு கீழ வீடுன்னு, நம்ம வீடுகள்ல திண்ணைல தங்கியிருந்திருக்காக. வேப்பிலைக்காரியப் பாத்த நேரத்துல, ஆச்சிக்கு வாய்பூட்டு போட்டுக்கிச்சு. உடனே காய்ச்ச கண்டு, முகம் உடம்பெல்லாம் முத்து முத்தா பூத்திருச்சு. கழுத்தோட அலங்காரமா ஒரு பெரிய முத்து வந்து வீங்கி, வாயதிறக்கறதுக்கே மூனு வாரம் ஆச்சாம். அங்கையும் இங்கையும் இருந்து வைத்தியர கூப்பிட்டு வந்த பார்வை பார்த்து அம்மைனு தெரிஞ்சுக்கிட்டு, எங்க ஐயாவோட தாத்தாதான், வேப்பிலை வீசி, அம்மன் தாலாட்டு பாடியிருக்காரு. மூனு வாரம் கழிச்சு, ஆச்சி வாய் திறந்தா. அதுக்கு பிறகு அவ சொல்லித்தான் முழுக்கதையும் தெரிஞ்சுக்கிட்டாகளாம் மத்தவுக. மழை விட்டதும், வந்த சனங்க எல்லாம், தெக்க புதுப்பட்டி பக்கம் போயிருச்சுக. அந்த உரல்ல உட்கார்ந்த பொம்பளைய மட்டும் அவுக கூட்டத்துல திரும்ப பார்க்கவே இல்லையாம் ஆச்சி" தொடர்ந்தாள் வெள்ளையம்மா பாட்டி.

"கோலாரத்தில*, கருப்பையா தாத்தாவீட்ல கும்பிடுவோமே அந்த உரல் தான, எப்ப போனாலும் மஞ்சள்லாம் பூசி விளக்கேத்தி வச்சிருப்பாக" என்றேன். ரசம் கொதித்து முதல் வாசம் வரும்போது சரியாக ஒரு உப்புக்கல்லை போட்டு இறக்கி தாளித்து கொட்டி பட்டென மூடினாள் மீனாக்ஷி பாட்டி. 

"ஆமாடா,  பாட்டிக்கு அம்மை கண்டு மாறினதும், வீடே, அம்மை வந்து, எல்லாரும் படுத்துட்டாகளாம். கன்னையும் மாடையும் கூட விட்டு வைக்கல. அம்மை வந்தவுக அத்தனை பேரும், மாறாம, ஒரு பூச்சி* உரலு மேல ஏறி அடையிறதையும், வீட்டை வீட்டை சுத்தி வாரதையும் கனவா நனவானு தெரியாம பார்த்திருக்காக. ஆளுக்கொரு திக்கமா, அம்மை கண்டவுகள, வேப்பிலய விரிச்சு படுக்க வச்சுட்டு, ஆச்சி தாலாட்ட பாடிக்கிட்டிருந்தப்ப தான், ஒரு நா, அது வரைய தலையே தூக்காம படுத்திருந்த எங்க சின்ன தாத்தா பூச்சிகெணக்கா முறுக்கிகிட்டு படம் எடுத்தாப்பல படக்குனு எந்திரிச்சிருக்காரு. ஒரே உளுந்துவாசமும் மஞ்சள் வாசமும்  மாறி மாறிவந்து ஆளக் கிறக்கியிருக்கு. எங்க சின்ன தாத்தாவுக்கு அப்ப பதினாறு பதினேழு வயசு இருக்கும். இளந்தாரி. உடம்பெல்லாம் முத்தும், மாணிக்கமும், மரகதமுமா அள்ளிக் கொட்டியிருக்கு. அலங்காரமான அலங்காரம். சிரசுல ஒன்னு,  கழுத்துல ஒன்னு, மாரு, வயிறு, நாக்குல ஒவ்வொன்னு, முதுகுல ஒன்னு,  மர்மத்துல ஒன்னுனு ஏழு பெரிய ஆனி முத்துக. கல்யாணம் பேசி வச்சிருந்தாகலாம். எல்லாம் கண்டவதானே ஆச்சி,  உடனே சுதாரிச்சு, இரண்டாம் பேர் அறியாம, துணியால திரை பிடிச்சி இளநீயும், மஞ்சப்பாலும் கொடுத்திருக்கா. அத வாங்கி குடிச்சிட்டு, 'பழங்கச்சி குடு' ன்னனு கேட்டிருக்காரு. பருக்கையும் தண்ணியுமா பழையத பிழிஞ்சு வச்சிருக்கா ஆச்சி. அதையும் வயிறு முட்ட குடிச்சிட்டு  'முத்த வாரி இறைச்சிட்டேன் நினைக்காத தாயீ, நான் போட்ட முத்தெல்லாம் ஆசையில போட்டது. ஆங்காரத்துல போட்டது இல்ல. நீ அள்ளி வச்ச பருக்கை மாதிரி, உன் கொடியையும், கிளையையும் திரும்பக் கொடுப்பேன். உன் வீட்டு உரல்ல நான் குடியிருக்க இடம் குடு, என்ன கையெடு உனக்கு ஒரு குறையும் வராது'னு சொல்லியிருக்காரு. அதைக் கேட்டதும் தான் வந்திருக்கது அன்னைக்கு வந்த வேப்பிலைக்காரினு தெரிஞ்சுக்கிட்ட ஆச்சி. 'எங்க இருந்து வார?'ன்னு கேட்டதுக்கு மட்டும் ஒரு பதிலும் வரல. அதுக்கு பெறவும், நிறைய பேர் அடிக்கடி வேப்பிலைக்காரி வந்து அந்த உரல்ல உட்கார்தும், போறதும், வாரதும் நடமாடறதும் பார்த்திருக்காக.  சில நேரம் பூச்சியா வந்து உரல் குழிக்குள்ள சுருண்டு கிடப்பாளாம். சீவிடு சத்தமா அவ சலங்கை சத்தம் வீட்டைச்சுத்தி கேட்டுகிட்டே இருக்கும். அப்ப இருந்து வேப்பிலைக்காரிக்கு படைப்பும் பூசயும் கொடுக்கோம்"

"வேம்பிலைக்காரிங்கிறது மாரியம்மா தான" என்றேன்.

"ஆமா வெள்ள, மாரி தான். கோடையில கோட நோய்க வராமா இருக்கதுக்காக பங்குனி சித்திரை மாசத்துல ஒரு தடவயும், மழக்காலத்துல மழையால வர வியாதிக அண்டாம இருக்கதுக்காக புரட்டாசி மாசத்துல ஒரு தடவயும்னு, வருசத்துக்கு இரண்டு தடவ, ஒரு செவ்வாகிழமை பாத்து உச்சிப்பொழுதுல, புதுப்  பந்த போட்டு, அம்மன் குலையால தோரணம் கட்டி,  புது மண் கலயம் வாங்கி,  வேப்பங்கரகம் சோடிச்சு, அத உரல் மேல வச்சு, பிச்சி, மல்லி, அரளினு  பூ தொடுத்து சாத்தி, இளநீயும், பானக்கரமும்* படைச்சு, கம்பு, கேப்பை, சோளம் மூனும் சேர்த்து கூழுகாச்சி, துள்ளு மாவிடிச்சு, ஊரெல்லாம் கூப்பிட்டு, கொள்ளை கொடுத்து கும்பிடறோம். பத்து முப்பது வருசத்துக்கு முன்னால ஒரு கழிச்சல் நோய் வந்து மக்க மனுசக கொத்து, கொத்தா செத்துச்சுக.  அப்பயும் இதைத்தான் செஞ்சு கும்பிட்டோம். வேப்பிலைக்காரி தான் நம்ம குடும்பத்தை எல்லாம் காப்பாத்தினா"  

கோவிந்தன் தாத்தா அப்போது தான் வந்தார் மடவையில் இருந்து.  கார்த்திகை படையல் இட்டு பூஜை முடிந்து, நான், தாத்தா, வெள்ளையாம்மா பாட்டி மூவரும் உணவு, உண்ண அமர்ந்தோம். பாட்டி இலையில் உப்பு வைத்து, சிறு துண்டு வெல்லத்தையும் வைத்தபின். வெஞ்சனமாக வெண்டைக்காய் புளிக்கறியையும், வாழைக்காய் பொரியலையும் இலையில் வைத்து, அரிசி சோற்றை போட்டு  பருப்பு கூட்டை ஊற்றினாள். தாத்தா நீர் விலாவியபின், சாப்பிடுங்கள் என்று கைகாட்டினார். மறு சாதத்திற்கு கத்திரிக்காய் புளிகுழம்பு. அடுத்ததாக ரசம். ரசத்துக்கு தொடுகறியாக கானமும் தேங்காயும் வறுத்தரைத்த துவையல். அதுவும் கழிந்து, கருப்பட்டிபாகு சேர்த்த உளுந்தம் பருப்பு பாயாசம். ஜாதிக்காயை அம்மியில் துளி உரசி வலித்து பாயசத்தோடு சேர்த்திருந்தாள் பாட்டி.  உண்ணத்துவங்கும் போது இருந்த வேகம் உண்ண உண்ண குறைந்து ஒரு நிதானம் வந்தது.  பாயசத்தை அள்ளி வாயிலிடும் பொழுது அவளே அறியாமல் வெள்ளையம்மாள் பாட்டி  புன்னகைத்து கொண்டிருந்தாள். பாயச இனிப்பு பரவியிருந்த இலையில் தாளித்து கொட்டி ஆற்றிய மோர் விட்ட சாதத்தை கிடாரங்காய் ஊறுகாயை தொட்டுக்கொண்டு நாலு கவளம் உண்ட போது கண் சொக்கத் துவங்கியது. தாத்தா உண்டு விட்டு மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்காக காத்திருந்தார். எல்லோரும் உண்டு முடிந்ததும் எழுந்தார்.  

"மதினி, நீ  உப்பு போடற கணக்கு மட்டும் தெரிஞ்சுருச்சு நானும் ஏழு வீடு மணக்க சமச்சிருவேன்" என்றாள் வெள்ளையம்மா பாட்டி. 

"இதுல என்னடி  இருக்கு, எல்லாம் கையளவு கண்ணளவு" என்றாள் மீனாக்ஷி பாட்டி. 

"வெள்ளையம்மா, அதென்ன விவரம்னு உங்க மதினி  சொல்ல மாட்டா, நான் சொல்றேன் கேளு.  பருப்பு, குழம்பு, ரசம்னு மூனு நாலு விதமா வைக்கும் போது எல்லாத்தையும் ஒன்னு போல சாப்பிட மாட்டோம்ல. முதல ஊத்திக்கிற குழம்போ கூட்டோ நல்லா இருந்துச்சுன்னா அதையே மறுக்க வாங்கி சாப்பிட்டுட்டு மத்தத சாப்பிடாம போயிருவோம். அடுத்து உள்ளதோடு ருசியே தெரியாம போய்டும். எல்லாத்தையும் ஒன்னுபோல அளவா ருசிச்சு சாப்பிடுறப்ப தான் நிறைஞ்சிருக்கும். அதுக்காக, உங்க மதினி முதல விட்டுக்கிற பருப்புல உப்பை கொஞ்சம் குறைச்சு போடுவா. முழுசா ருசியும் குறைஞ்சிறாம, இலையில வச்ச உப்பையும் எடுத்து சேர்க்கணும்னு தோனாத அளவுக்கு. அடுத்து குழம்புக்கு பருப்பு அளவுக்கு குறையாது, ஆனாலும் ஒரு கல்லு குறையும். ரசத்தில பெரியாசாரி நூல் பெசகாம மட்டம் வக்கிறாப்புல, ஓர் கல்லு  கூடாமா, குறையாமா உப்பு இருக்கும். நாமளும் ஒன்ன விட ஒன்னு நல்லா இருக்குனு அடுத்து அடுத்து சாப்பிடுவோம். ரசத்தையும் சாப்பிட்டு அதுக்கு மேல பாயசத்தை அள்ளி சாப்பிடறப்போ மனசு நிறைஞ்சாப்புல இருக்கும்"

"இம்புட்டு இருக்கா, மதினி" என்றாள் வெள்ளையம்மா பாட்டி. 

"அப்படி எல்லாம் இல்லடி வெள்ளையம்மா, ஒவ்வொருத்தொரு கைக்கும் ஒவ்வொரு ருசி.  எதுவும்  ஒன்னுக்கு ஒன்னு குறைஞ்சதில்லை. நம்ம முத்தலாம்மா பொங்கலுக்கு ஊரெல்லாம் சாட்டி எல்லாரு வீட்ல இருந்தும் சமைச்சு கொண்டுவர சொல்லி, ஒன்னா கொட்டி படைக்கிறாகள்ல சாமப்பூசைல. அந்த பிடி சோத்துல யார் கைப்பக்குவத்தை அவ பாப்பா.  ஒவ்வொரு  அன்னமும் ருசிக்கும்டி" என்றாள் பாட்டி 

"அம்பாரமா குமிச்சிருக்கிறா சோறு, குழம்பும், விதமா விதமா கறி வகைனு, அத நினைச்சாலே மனசு நிறைஞ்சு போயிரும் மதினி" என்றாள் வெள்ளையாம்மா பாட்டி.

"தாத்தா, அதேன் முத்தாலம்மவ நம்ம வேப்பிலைக்காரிக்கு அக்கானு சொல்றாக" என்றேன். 

"அம்மைக்கு ஆயிரம் வடிவமும் உண்டு ஆயிரம் பேரும் உண்டு. எல்லாம் ஒன்னு தான். அந்த ஆயிரத்தையும் நம்ம வசதிக்கு வரிசை படுத்திக்கிறோம்.  இந்த உலகம் எல்லாம் அவளால உண்டானது, அவளே இப்படி ஆனானு சொல்றாக. அவள தான் எல்லாத்துக்கும் மூத்தவனு சொல்லணும். படி படியா அவகிட்ட இருந்து உருவான உலகத்துல,  ஒவ்வொரு படியிலையும் அவளுக்கு ஒரு பேரும்  கொடுத்து, வரிசையும் படுத்துறாகனு சொல்லலாம். மலைக்காணி சொன்ன கதையில அப்படி ஒரு வரிசை தான வந்துச்சு? செல்லியில தொடங்கி செல்லியிலயே அத்தனையும் முடியுது. அந்த ஏழு பேரும் மனுஷ உடம்பா படி படியா உருவாகி, அதிலிருந்து திரும்பவும் புதுசா முளைக்கிறாக. அது மாதிரி அம்மைமார வரிசை படுத்தி பார்க்கிறாக பலரும் காலங்காலமா. காலம் போக போக என்ன காரணம்ங்கிறது மாறி வரிசையும் குழம்பிருது. ஆனா, எதோ ஒரு வரிசை மட்டும் இருக்கு. அதனால இந்த வரிசையே ஊருக்கு ஊருக்கு மாறுது. ஒரு ஊர்ல முத்தாரம்மாவ அக்கானு சொன்னா ஒரு ஊர்ல தங்கச்சின்னு சொல்லுறாக. மொத்தமா எட்டு அம்மைகள சேர்த்து அஷ்ட காளினு கதை"

"அட்ட காளி கதை நாம அன்னைக்கு  வில்லுப்பாட்டுல கேட்டமே அதான?"

"அதான்" என்றார் தாத்தா

"நாளைக்கு மாரியம்மன் கோவில வில்லடி வைக்கிறாகளாம்" என்றாள்  மீனாட்சி பாட்டி

"நாளைக்கு என்ன விசேஷம்" என்றார் 

"யாரோ அசலூர்க்காரக, குழந்த வேணும்னு நேத்தி கடன் போட்டிருந்தாகளாம், குழந்தை பிறந்து, மொட்டை போட்டு காது குத்திறாக, அவுக தான் வைக்கிறாக" என்றாள் வெள்ளையம்மா பாட்டி 

"நாம போலாமாடா கதை கேட்க" என்றார் தாத்தா 

"போலாம் தாத்தா" என்றேன் உடனே. எத்தனை அடக்கியும் சிரிப்பை மறைக்க முடியவில்லை முகத்தில்.

"கத கேட்கவா வர மாட்டேங்கப் போறான் உன் பேரன்" என்றாள் வெள்ளையம்மா பாட்டி. தாத்தா சிரித்துக்கொண்டார். 


***

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19