ஐயன் பந்தி - 12

புவியேழையும் பூத்தவளே - 8

Image credit : Google

செண்பகமும்,  மனோரஞ்சிதமும், செந்நிறத்தில் பூத்த அலரியும், காந்தளும், இளம் பொன்னிறத்தில் மகிழமும், கண்ணாயிக்குரிய செந்தாழை மடல்களும், செருவிளமும், கருவிளமும், வெண்ணிறத்தில் பலவகை மலர்களோடு கூட பவள மல்லிகை மலரும் கூட்டி தொடுத்த கதம்பத் தொடையை சாற்றி, பல வண்ணங்கள் கொண்ட தானையோடு செல்லியாயிக்கு பூசை.   எழுவரிலும் இளையவள். அதனாலயே அனைவருக்கும் இனியவள். எண்ணி முடியாத முகங்கள் அவளுக்கு. புன்னகைக்கும் எவர் முகத்திலும்  அவள் முகமே அக்கணத்தில் தோன்றி மறையும் என்பார்கள்.  சிறுபிள்ளைகள் சிரித்து விளையாடுவது கண்டால் காற்றாக மாறி அவர்கள் தலைகள் கோதி தானும் அவர்களோடு விளையாடுவாள். அவர்கள் இடும் கூச்சலாகி மலைகளில் மோதி எதிரொலிப்பாள். சிறுக்கி என்று இருந்தவள் உடலை பூக்கவைத்து பெண் என்று மலர்விப்பாள்.  சிறுவர்கள் கனவுக்குள் சென்று அமுதத்தின் மடை திறந்து,  ஆண் என்று அறியவைப்பாள்.  இவள் தீண்டும் வரை மழலை என்று இருந்தவர்கள், இள வியர்வை மணமும், முகத்தில் பூங்குருக்களும் கொண்டு இனிமை கொள்வார்கள். ஆணை பெண்ணுக்கும் பெண்ணை ஆணுக்கும் அறிவிப்பவள் அவளே. பேதை என்று ஒரு நாளும் பெரியவள் என்று மறு நாளும் மயங்கவைத்து ஆட்டி வைப்பாள்.  ஒவ்வொரு உயிர்க்குள்ளும் 'பெருகுக' என்னும் சொல்லாக உறைபவள். பெருகி விரியும் தோறும் மகிழ்ந்து கொண்டாடி கூத்தாடுபவள்.  

ஆணென்றும் பெண்ணென்றும் பிறந்த உயிரை எல்லாம் ஒன்றை ஒன்று ஈர்க்கவும், ஆசை கொண்டு தவிக்கவும் வைப்பவள். தவளைகளின் சிறு சத்தமும், சீவிடுகளின் ரீங்காரமும் அவள் வரவையே அறிவிக்கும்.  தென்னையும் கமுகும்  அவள் சிரிக்க பூவிடும். வாழைகள் குலை தள்ளும், குருத்து போடும்.  அன்னை என்று தொழ வைப்பாள். மகளென்று மடியேறி அமர்ந்தாடுவாள்.  அவளின் ஒரு துளி, பிள்ளையும், பிள்ளைக்கு பிள்ளையும், அவருடைய பேறுகளும் கண்டபின்னும், தோல் எல்லாம் சுருங்கி, உடல் எல்லாம் தளர்வுற்று, நகங்கள் பாழ் கொண்டு கருகி, கண்ணின் இமைகளும் வெளுத்து நரைத்த பின்னும், இனிய கனவென உள்ளத்துள் எஞ்சி நிற்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும். கடக்கும் தோறும் கசப்பென்றும், கடந்த பின் நினைவுக்குள் இனிப்பென்றும் மாறும் விந்தையும் அவளுக்கு உண்டு. அதனாலேயே மலை நெல்லிக்கனிகளை பறித்து அவளுக்கு படைத்தார்கள்.  ஒரு இளந்தாரியின் முகம் ஆசையால் விம்மி சிவந்தாலும், ஒரு இளம்பெண்ணின் முகம் நாணத்தால் மலர்ந்து தளர்வது கண்டாலும்,  அவர்கள் என்று நாமும் உள்ளத்தால் ஆடி பார்ப்பது அவளாலேயே. எங்கோ இனிய கனவொன்றில் இருப்பவர் போல மூப்பன் இளையானிடம் சொல்லிக்கொண்டே போனார். உண்மையில் அவர் வேறு எவரோடும் உரையாடவில்லை. தன்னோடு தான் பேசிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது இளையானுக்கு. 

Image  Credit : Google

"அது என்ன மூப்பா மத்த ஆறு பேரும் வந்தா, உடனே, செல்லி நிறைஞ்சாளானு தான் கேக்கிறாக" என்றான் இளையான்.

"சொன்னனேடா இளையா" என்று இளையானின் தலையில் மெல்ல தடவிய படி சொன்னார். "ஏழு பேர்லையும் இளையவ. எல்லாருக்கும் செல்லப்பிள்ளை, அதனால தான செல்லினே கூப்பிடறாக. அவ முதல மனசு நிறைஞ்சா தான் மத்த ஆறு பேரும் நிறைவாக. மடியில பிள்ளைய வச்சு ஊட்டிறாப்பில செல்லிய மடியில வச்சு ஊட்றாக அக்காமாரு ஆறுபேரும்"

இந்தக் கதையை அன்றிரவில் மலைக்காணி சொன்ன போது அனைவரும் அறியா புன்னகையில் இதழ்கள் மெல்ல அழுந்தி இருக்க அமர்ந்திருந்தார்கள். காரணமே இல்லாமல் உரக்க நகைத்தார்கள்., பாட்டியின் மஞ்சள் பூத்த முகத்தை எவரும் அறியாமல் ஒரே ஒருமுறை திரும்பி பார்த்துக்கொண்டார் தாத்தா. அந்த கண்களையும் நோக்கையும் அன்று தவிர எப்போதும் கண்டதில்லை அவரிடம்.  பாட்டியின் காது மடல்கள் சிவந்திருந்தன. பிரியம் காற்றை போல திண்ணையெல்லாம் பரவி இருந்தது. சீவிடுகள் சலங்கை ஒலியென முழங்கிக்கொண்டிருந்தன. காற்று மெல்ல வீசி தழுவியது அப்போது. வெற்றிலை அரைபடும் ஒலி கூட அடங்கியிருந்தது. 

"ம்" என்றான் இளையான் 

"மத்த ஆறு பேரும் முழுத்து அவளா பொலிஞ்சிருக்காக. வித மண்ண கீழ துளைச்சு வேரூணி  மேல துளைச்சு தளுத்துவர நுனிமாதிரி, இளங்கொழுந்து. அது தான் மெல்ல வளந்து தண்டாகி, பருத்து, தூராகும். கிளைவிட்டு பரந்து இலையா மலரா விரியும்.  விரிஞ்சு மலரும் காயுமாகி, கனிஞ்சு பழமாகி, திரும்பவும் ஒரு விதையை சுமந்து நிக்கும். அதுமாதிரி தான் செல்லியாயி. ஆறு பேரும்  முழுத்து அதுல விளைஞ்ச விதை மாதிரி. அந்த விதையில இருந்து தான்  மத்த ஆறு பேரும் ஒன்னுல இருந்து ஒன்னா முளைச்சு வந்தாக முன்னாடி. ஒரு வட்டம் மாதிரி" என்றார் மூப்பன். 

"முன்னால யார் வந்தானே சொல்ல முடியாது, இளையவளா மூத்தவுகளா?" என்று சொல்லி கைகளைக் கொட்டி சிரித்தான் இளையான்.

"ஆமா ஆமா, ஆறு பேரும் பொலிஞ்சதும் இவளுக்காக தான்,  ஆறு பேரும் முளைச்சதும் இவள்ட இருந்துதான். ஆணுடல்ல வீரியமாவும் பெண்ணுடல்ல முட்டையாவும் இருக்கிறவ" என தொடர்ந்தார்.  மேல மலைக்கு நேர் எதிரே செல்லிமலை. ஏழுகுடிக்காரர்களும் பெரும் படைப்புக்கு செல்லி மலைக்குடியின் சிகரத்தின் மேலேறி அங்கு, தெளிந்து அடிவரை பளிச்சென காட்டும் பளிங்குச்சுனை அருகில், சிவனி திட்டையில், அகண்ட கல் அகலில் விளக்கிட்டு ஏழு அம்மைகளுக்கும் கொண்டு வந்த படையல் பொருள்களை கூடையோடும் தாலத்தோடும் வைத்து கும்பிட்டு, புது மரத்தில் குடைந்த கலயத்தில் கமுகு கூம்பில் ஊறிய தேனை நிரப்பி, கமுகுப்பாளையால் மூடி, ஏழு வித மலர்களை தொடுத்து கட்டிய கதம்பமும் சாற்றி, கரகம் என எடுத்து ஆடியபடி அங்கிருந்து கிளம்பி மேல மலை முகட்டில் ஏழம்மை திட்டைக்கு செல்வார்கள். மதுக்குடம் சென்று பல வண்ண வரிகள் ஓடிய கல் என அமர்ந்திருக்கும் செல்லியின் பீடத்தை சேர்ந்ததும் தான் படையல் துவங்கும்.  

"நாம செல்லி மலையில இருந்து மதுக்குடம் எடுத்து வரமுல, ஆதியில அப்படி ஒரு வழக்கம் இல்லை, அது அம்மை கேட்டுகிட்டதுனால தான் ஆரம்பிச்சது. ஒருக்கா செல்லிமலையில ஒரு இளந்தாரி இருந்தான் அவன் பேரு சிவனன். சிவனனுக்கு  வேட்டைனா கொள்ளை பிரியும்.  பெரிய வேட்டைக்கு போவையில ஐந்து பேரு, ஏழு பேருனு  கூடிப்போவாக. நாலஞ்சு பேர் சுத்தி வளைச்சி மிளாவையோ,  காட்டு பன்னியவோ வேட்டையாடி கொண்டுவருவாக. அதுல பிடிக்கிற விலங்க வளைச்சு வசதியான இடத்துக்கு கொண்டு வந்து சுத்து போட ஏது பண்றவனுக்கு மூணு  பங்குனா, முத குத்து போட்டவனுக்கு இரண்டு பங்கு, மத்தவகளுக்கு ஓரோர் பங்குனு கணக்கு. எப்பவும் சிவனனுக்கு மூணு  பங்கு தான். எப்படிபட்ட  விலங்கையும் வளைச்சு கொண்டாந்திருவான். அவனுக்கு நிகரா வேட்டைக்கு முன்னோடியா போக யாருமில்லைனு சொல்லிருந்துச்சு ஏழு குடியிலையும். 

Image  Credit : Google

ஒரு முறை வெறிகொண்ட புலி ஒன்று சீற்றத்தோடு, தாழ்வாரத்தில் நுழைந்து விட்டது. ஆள்களையும் குழந்தைகளையும் அடிக்கவும், இழுத்துக் கொண்டு போய் கிழித்து உண்ணவும் துவங்கியது. காடே அரண்டு குடிகள் அத்தனை பேரும் சிதறி அடிவாரங்களில் பற்றி ஏறி பச்சிகளை போல அடைந்தனர். காரியோடையை கலக்கியபடி புலி இங்கும் அங்குமாக பாயவும் ஓடவும் பெரும் அட்டூழியம். ஏழுகுடியும் மலை இறங்காமல் மலையின் விலாவிலேயே பதுங்கி கிடந்தது. சிவனன் ஒருவன் மட்டும் மழுவும், மூவிலையாக விரிந்த சூலமும் கொண்டு காடிறங்கினான். ஒற்றைக்கு ஒருவனாக அடிவாரத்தில் பிலா மரத்தூரில் மறைந்திருந்தான். அவன் வளர்ப்பு மானொன்றை புலியை இழுப்பதற்கு தோதாக மரத்தடியில் மேயும்படி கட்டி வைத்தான்.  புலி மானைக் காணலாம். ஆனால் சிவனனை அறிய இயலாது. அவன் எதிர்பார்த்தது போல புலி மானை பிடிக்க பாய எத்தனிக்கும் போது மரத்தில் செய்த சிற்றுடைக்கையை ஒரே ஒருமுறை அடித்து புலியை கலைத்து தான் இருக்கும் திசையை நோக்கி திருப்பினான். ஒரு கணத்தில் சுதாரித்த புலி, மானை விட்டு சிவனனை நோக்கி நேர் எதிராக பாய, கூரிய மழுவை  மிகச்சரியாக இருகண்களுக்கு இடையில் துளைத்து நிற்குமாறு வீசினான். மழு குத்தி இறங்கியதும்,  இரு கண்களுக்குள்ளும் ரத்தம் கசிந்து பரவ புலியின் பாய்ச்சல் பிழைத்து அவன் முன்னால் நிலத்தில் அப்படியே விழுந்தது. ஈட்டியால் நிலத்தோடு குத்தி நிறுத்தினான். மாண்ட புலியின் தோலை அங்கேயே உரித்து இடைத்தானையென அணிந்து கொண்டான். இடதுகையில் சூலம், உடுக்கையோடு புலித்தலையையும் சேர்த்து பிடித்தவன் மறுகையில் ஒரு சிறு புற்கட்டை நீட்டியபடி மலையேறினான். புல்லை கடித்தபடி மானும் அவன் பின்னால் மலை ஏறியது. வேட்டைக்கு ஒரு வீரன் என்று குடியே கொண்டாடியது. அதனால அவனுக்கு பெண்கொடுக்க பலரும் போட்டி போட்டார்கள். ஆனால் சிவனன் பச்சைமலை குடியில் பிறந்த மயிலியை எண்ணியிருந்தான்." 

மயிலியையும் சும்மா சொல்ல முடியாது. பேர் கொண்ட அழகி. சிரித்தால் பளிச்சென்று பளிங்கு சுனை நீரைப்போல இருப்பாள். சுருண்ட தலைமுடியை விரித்துவிட்டால், கெண்டைக் காலை உரசும். மலைக்குடியின் பெண்களுக்கு அவள் கூந்தல் மேல் பிரியம் என்றால், ஆண்கள் அவள் பெயரை கேட்பதே போதும் என்று கிறங்குவார்கள். இடையில் கையூன்றி காட்டிலும் தாழ்வாரத்திலும் அவள் திரிந்தால் மானும் மயிலும் கூட தோற்று போகும். அதனாலேயே அவளை மயிலி என்று அழைத்தார்கள். அவளுக்கு இட்டபெயர் என்னவென்றே யாருக்கும் தெரியாது.

Image  Credit : Google

மயிலி  வரும் தடம் பார்த்து, மான் வேட்டையிலும் மிளா வேட்டையிலும் அவன் பங்காக வந்த தானைகளை, அவளுக்கு  கொடுத்து உரையாடலாம் என்று சிவனன் காத்திருந்தான். தலையில் ஒரே ஒரு செண்பக  மலரைச் சூடிக்கொண்டு  அவ்வழி கடந்தவள், முன்பே அவனைக் கண்டிருந்தாள். ஆனால்  கண்ட சுவடே அவனறியக் காட்டாமல் கடந்து போனாள். ஒரு நாள் மனோ ரஞ்சிதம் சூடி போகையில் அவள் போகும் தடத்தில் மலைத் தேன் குடுவைகளை வைத்துக் காத்திருந்தான் சிவனன். அதை என்னவோ என்று தானையை மெல்ல பற்றியபடி வளைந்து தாண்டி போனாள். காந்தள் மலர் சூடி வந்த நாளில் அவளறிய கிழங்கு பறித்து வைத்து காத்திருந்தான். மகிழ மலர் சூடி வந்த நாளில் அகிலும், குங்கிலியமும் கொண்டு வந்து பரப்பி வைத்தான்.  தாழை மலரை அவள் சூடி வந்தாள் ஒரு நாள். இவன் கூடை நிறைய கனிகள் கொண்டுவந்து வைத்திருந்தான். அவள் புண்ணை மலர் சூடி வந்த நாளில் இவன் மதுக்குடங்களை நிறைத்து வைத்தான். அவள் வழமைபோல் அறியாதவளென கடந்து போனாள். பின்னொரு நாள் இரவில், அவன்  கூடை நிறைய சேடல் மலர்களை பறித்து வைத்து அவள் வரும் வழியில் காத்திருந்தான்.  வந்தவள் இவன் இருந்த திசை நோக்கி திரும்பவே இல்லை. கூடையில் இருந்து இருமலர்களை மட்டும் எடுத்து இடப்புறமாக சரித்திட்டிருந்த கொண்டையில் சூட்டி கொண்டாள். அதில் ஒன்றை விழுவதற்கு என்றே தோதாக வைத்தாள்.  மூன்றாம் எட்டில் அந்த மலர் அவள் எடுத்த வலது பாதச்சுவட்டில் விழுந்தது. அது  தனக்கு என்று அறிந்திருந்தான் அவன். சில அடிகள் அவளைக் கடக்க விட்டு சுவட்டில் இருந்து மலரை எடுத்தான்.  அவன் எப்போது எடுப்பான் என்று  அறிந்தவள் போல திரும்பி புன்னகைத்துவிட்டு போனாள். 

முழு நிலவு உதித்த இரவு ஒன்றில் மயிலியும் சிவனனும் மலையேறி பளிங்குச் சுனைக்கு போனார்கள்.  பாலென நிலவு ஒளி படர்ந்திருந்த பொழுதில் காம்பு சிவந்த சேடல் மலர்களை தொடுத்து மாலையென ஒருவருக்கு ஒருவர் சூடி, மதுவும், தேனும், கனி வர்க்கங்களும் உண்டு கூடினார்கள்.  அவர்கள் கூடலின் சுகந்தம் மலைகடந்து காடெல்லாம் பரந்தது.  எப்போதும் தன் கரத்தில் பிடித்திருக்கும்  மூவிலையாய் கவடு விரிந்த கைத் தண்டத்தை வலக்கை  புறத்தில் ஊன்றிவைத்துவிட்டு, கரிய நிறத்து ஒரு பாறையில், யானை முடி கட்டிய இடக்காலை மடித்திட்டு, வலக்காலை நிலத்தில் ஊன்றி அமர்ந்தான் சிவனன்.  வேங்கையின் தானை படிந்திருந்த அவன் இடத்தொடையில், பச்சை நிறக் குடி கல்லை மார்பில் சூடியிருந்த மங்கை அமர்ந்தாள்.  

ஒற்றை சேடல் மலரை விரல்களில் பற்றி தலை கீழாக திருப்பி "இதில் சிவந்து இருக்கும் காம்பு நீ" என்றாள். 

"அதில் விரிந்த வெண் இதழ்கள் நீ அல்லவா" என்றான் சிவனன். 

"நாம் எப்போதும் இப்படித்தான் இருந்தோமா?" என்றாள் அவள். 

"நீ இல்லாமல் எனக்கு செயல் இல்லையே?" என்றான். 

"என்றால் நான்?" என்றாள்.  

"நீ முழுமை. நான் உன்னை பகுதி கொண்டதால் மட்டும் முழுமையானவன்" என்று அவளை இறுக அணைத்தான். இருவரும் சிரித்தார்கள்.  வானத்தில் இரு துளி நக்ஷத்திரங்கள் கூடின. மரக்கிளைகளில் கிளிகள் கூடின.  தவளைகள் பெடையை குரலெடுத்து அழைத்து கூடின. குளவிகள் தேனீக்கள் தேன் உண்ட மயக்கில் கூடின. ஆண் விலங்குகள் பெண் குறி வாசத்தின் ஆணையால்  கூடின. பிடியும் களிறும் கூடின. வெருகுகள் பெண் பூனைகளோட கூடின. காளைகள் பசுக்களோடு கூடின. தோகை சிலுப்பி ஆண் மயில்கள் பெண் மயில்களை ஈர்த்தன, கூடி களித்தன. செல்லாயி சிரித்தபடி ஒவ்வொரு உயிரையும் காற்றென கைகளை வீசி தழோடினாள்.  நிலவு பொலிந்த பால் ஒளி அந்தரத்தில் இருந்து முகட்டில் இறங்கி, நீரென ஒழுகி முகடு நனைய,  மலையும், மலையில் நின்ற மரமும், செடியும், கொடியும் மலர்களும் நனைய,  கானுயிர்கள் அத்தனையும் உள்ளும் புறமும் நனைய உலகெலாம் நனைந்தது. இனிமையை அறிவது நாவு அல்ல. உடலே என்றானது. உடல் மட்டும் அல்ல,  உயிரும் உயிரில்லா அத்தனையும்  அறிந்ததது அவ்விரவில்.  அவர்கள் அமர்ந்திருந்த திட்டையை சுழியெனக் கொண்டு ஆயிரம் இதழ்கொண்ட மலர் ஒன்று வெண்ணொளியில் மலர்ந்து விரிந்தது.

"இனி என்ன?" என்றான். 

"விடை பெறுவோம்" என்றாள் 

"என்னை விட்டு போவாயோ?" என்ற சிணுங்கலாய்க் கேட்டான் நிலவின் ஒளியால் மின்னியபடி 

"இல்லை என்று அறிவாய்" என்றாள் நாணத்தால் மலர்ந்தவள். 

"பிறகு" என்றான் 

"இனி இங்கு என்ன பணி?"

"எப்போதும் இனித்திருப்பது" என்றான் 

"உடல் இனி வேண்டுமா?" என்றாள் 

"இல்லை. உடல் வழியாயினும், நான் உன்னை உடலால் அறியவில்லையே" என்றான்.

"என்றால்,  வா உயிரென ஆன அனைத்தினுள்ளும் நிறைந்து இனிமை கொள்வோம்"  என்றாள்.

"உன்னை சிவனி என்று அழைக்கட்டுமா" என்றான்

"உன் பெயர் எல்லாம் என்னுடையுதும் தான். அழை" என்றாள் 

"உன்னை எத்தனை பெயர் சொல்லி அழைத்தாலும் எனக்கு போதாது" என்றான் அவன்.

"எத்தனை பெயரிட்டாலும் எனக்கும் போதாது" என்றாள்

"ஹா ஹா" என்று உரக்க சிரித்தான் 

"என்ன" என்றாள் கண்களும் உதடும் சுழித்து பொய் கோபம் காட்டி.

"உனக்கு ஆயி அப்பன் இட்ட பெயரே தெரியாது"

"அதனால் என்ன? நீ அழைக்கும் எண்ணற்ற பெயர்களில் ஒன்றாக அதுவும் இருக்கும் அல்லவா.?" என்றாள்.

Image  Credit : Google

எஞ்சிய மதுவை குடமென கட்டி கல் திட்டையில் வைத்து, முகடு நீங்கியவர்களை காடு அறியவில்லை அதன் பின். வெண்ணிறத்து காளை ஒன்றின் மேல் சிவனனும் சிவனியும்  காடெல்லாம் திரிவதை குழந்தைகள் கனவு கண்டு சொன்னார்கள். யானை ஒன்றின் மேல் சிவனி முன்னிருக்க சிவனன் ஊர்ந்ததை கண்டதாக சிலர் சொன்னார்கள். பருந்து  இணைகளாகவும், மயில் இணைகளாகவும் கண்டவர்கள் உண்டு. அவர்கள் கூடி அமர்ந்திருந்த கல் திட்டை சிவனன் சிவனி திட்டை என்றே பெயர் பெற்றது.  செல்லிமலையை சிவனி மலை என்றும் அழைத்தார்கள். சிவனனை எண்ணி தொழுது, வேட்டைக் காணிக்கை வைத்தே வேட்டைக்கு சென்றார்கள். வேட்டைக்கு தலைமையாக, முன்னோடி வீரனாக செல்வது இப்போதும் செல்லி மலைக்குடிகாரர்கள் தான். ஏழு குடியில் திருமணங்கள் பேசுவதும், நடப்பதும் சேடல் மலர் மாலை சூடி சிவனித் திட்டையிலேயே. சிவனனும்  சிவனியும் அம்மை அப்பன் என்றே நாளும் அருளினார்கள் ஏழு மலைக்குடிக்கும். சிவனித்திட்டையில் அவர்கள் விட்டு சென்ற மதுகுடத்தை கொண்டு போய் தன் மடியில் சேர்க்க சொன்னால் செல்லி ஒரு பெண் மகளின் மேலிறங்கி. அதன் பிறகு எப்போதும் பெரும்படைப்பில் அதுவே வழக்கம் என்று ஆனது. 

"மதுக்குடம் போய் செல்லிகிட்ட சேர்ந்தா, வளம் பெருகும்னு நம்பிக்க" என்று கதையை சொல்லிமுடித்தார் மூப்பன். 

அன்றிரவில் மலைக்காணி சொல்லிக் கேட்டதிலிருந்தே, என்னவென்று அறியாத இனிய பரபரப்பென்றே இக்கதை நினைவில் எழும். அதை எண்ணியபடியே கோவிந்தன் தாத்தாவீட்டை அடைந்த போது திண்ணையில் பாட்டியும் தாத்தாவும் மட்டும் தனித்து அமர்ந்திருந்தார்கள். பாக்கினை ஒன்று இரண்டாக சிற்றுறலில் இடித்து தானும் அதக்கிக்கொண்டு தாத்தாவிற்கும் கொடுத்தாள் பாட்டி. சுன்ணாம்பு தடவிய வெற்றிலையை பதிலுக்கு நீட்டினார் தாத்தா. அசைகின்ற ஆனால், அழியா ஓவியம் போல் எப்போதும் இருந்தனர் இருவரும். அவர்களை அச்சென்று கொண்டே இவ்வுலகம் சூழல்கிறது. ஆனால், அதன் ஒரு துளியும் அவர்கள் ஆடலை தீண்டவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.  

"இன்னைக்கு ஐயர் வரேன்னாரே,  ஆளக்காணும்" என்றாள் பாட்டி 

"என்னனு தெரியல, வருவான்" என்று தாத்தா சொல்லும்போது ஐயர் தெருவில் நுழைந்தார் வல புறத்தில் இருந்து மேற்காக திரும்பி.

"இந்தா வந்துட்டாரு" என்றேன். பாட்டி ஐயருக்கு நீர் எடுக்க உள்ளே சென்றாள்.

என்னை ஒரு முறை பார்த்து விட்டு ஐயர் "ஏன்டா கோவிந்தா? உனக்கும் ஜோஷ்ய பாடம் உண்டுல" என்று தாத்தாவிடம் கேட்டார். 

"உண்டுடா, வழி வழியாவே, வீட்ல யாரவது ஒருத்தருக்கு சொல்லிக்கொடுத்துக்கிட்டு வராக. ஆனா பலன்  சொல்றது இல்லை இப்பெல்லாம்" என்றார் தாத்தா.

"பலன் சொல்லணும்னுட்டு என்ன இருக்குடா கோவிந்த. ஒரு ஞானமா சேர்ந்தா போறாதா? மலக்காணிக ஆதியில பலதையும் பார்த்து, அவாளோட உள்ளுணர்வால கத்திண்டது தான் பின்னால இவ்வளவு பெரிய சாஸ்த்திரமா வளந்துடுத்தோ என்னமோ? அவாளும் அம்பிகையே வந்து கொடுத்தானு தான சொல்றா." என்றார் ஐயர் 

"ஆமா டா"

"சுந்தரத்துக்கு வேளை வந்துடுத்துன்னு நினைக்கிறன், அதான், பூவாயி அப்படி வந்து கை நிறைய பூவ அள்ளிக் கொடுத்துட்டு போனாளோ என்னமோ?" என்றார்.

"நானும் அதத்தான் நினைச்சேன். அவ விருப்பம். நடக்கட்டும்" என்றார் தாத்தா. கருப்பட்டியும் சுக்கும் சேர்த்து, மண்பானையில் இட்ட பானகத்தை இரு மண் கலயங்களிலாக எடுத்து வந்தாள் பாட்டி. ஐயரும் நானும் பானகத்தை அருந்தினோம். பின்னர் ஆனமந்தி வைத்தியர் ஏழாம் தாதுவான சுக்கிலத்தையும், சஹஸ்ரார சக்கரத்தையும் பற்றி எழுதியதை சுவடியில் இருந்தே படித்தும் பொருளும் சொல்ல துவங்கினார் ஐயர்.

Image  Credit : Google

ரக்தாக்ஷி ஆண்டு ஜேஷ்ட மாதம்,ஜேஷ்டா நக்ஷத்திரமும் பூர்ண பொர்ணமியும் கூடிய சுக்கிர வாரத்தில்  ஆனேகுந்தி சுப்பிரமணிய சர்மனாகிய நான் குலதெய்வமாகிய தொண்டிக்கரை ஆகாச கருப்பனின் அருளாலும் சன்னாசிகள் கொடுத்த மந்திரத்தின் பலத்தாலும் சப்த தாதுக்களில் ஏழாவதாய் அமைந்த ஷுக்லத்தின் அபிமான தேவதையாகிய யாகினி தேவியை விழிப்பு, கனவு,  ஸுஸுப்தி என்னும் மூன்று நிலைகளிலும் கண்டேன்.

அவ்விரவில் வழிப்போக்கானாக, தன் வேடத்தியோடு வந்த மலை வேடன் ஒருவன், திண்ணையில் அமர்ந்து உணவும் நீரும் கொண்டு, கைத்தாளம் இட்டு கதை ஒன்று சொன்னான். எண்ணிறந்த மலைகள் சூழ்ந்த கானகத்தில்,  முழு நிலவு பொலிந்த இரவில், மலையொன்றின் அடிவாரத்தில் தலை நிறைய மலர்கள் சூடி பூங்கொடியென மலர்ந்து நின்றாள் வேட்டுவச்சி ஒருத்தி. ஐந்து பேரெட்டுகளால் மலை முகடை அடைந்தவள், ஆறாவது எட்டால் அந்தரத்தில் பாய்ந்து ஏறினாள். அங்கு ஆயிரம் இதழ் விரிந்த தாமரையின்  மத்தியில் ரத்ன சிம்ஹாசனத்தில் அரையாடை உடுத்தி அழகே உருவென்று அமைந்த வேடன் ஒருவன் வலக்காதில் மகரக் குழையும், இடக்காதில் காதோலையும் பூட்டி காத்திருந்தான். அவன் வலக்கையின் அருகில் ஒரு மூவிலை சூலம் ஊன்றியிருக்க கண்டேன். அவனருகில் நின்று இரு கண்கள் மின்ன புள்ளி மான் என அத்தனையும்  கண்டு கொண்டிருந்தேன். அவன் மடியேறி அமர்ந்தாள் மங்கை. வேடனை சிவன் என்றும் வேட்டுவச்சியை சிவை என்றும் அறிந்தேன்.  அவ்விரவே இனிமையெனும் பால் ஒளி கொண்டு ஒளிர்ந்தது. அவளை அவன் சிவனி என்று அழைத்தான்.  அவள் சிரித்தாள். அவன் ஆனந்தத்தால் தாண்டவம் கொண்டாடினான். அவள் நாணம் சூடி லாஸ்யம் கொண்டாடினாள். பளிங்கு நீர் நிறைந்த சுனையின்  மேல் இருவரும் முகங்கள் நோக்கியபடி பறந்தும் சுழன்றும் ஆடினார்கள். சுனையும் அவர்கள் கால்களின் கீழ் சுழன்றது. முகடும் சுழன்றது. பின் மலையும் சுழன்றது. உலகம் சுழன்றது. சூரியனும், கோள்களும், நக்ஷத்திரங்களும் மின்னியபடி சுழன்றன. அவை அத்தனையையும் பொதிந்தொரு அண்டம் ஒளிகொண்டு சுழன்றது. அண்டங்கள் சுழன்றன. அவற்றை சுமந்தோறு ஒரு பேரண்டம் சுழன்றது. இனியும் பேரண்டங்கள். அதனினும் பெரியவைகள். சுழன்றன, சுழன்றாடின. சுழன்று சுழன்று கூத்தாடின. சுழன்றது ஒளிகொண்ட ஒரு பெருங்கோளம். அதன் மேல் ஊன்றிய இணையடிகளைக் கண்டேன்.  ஒன்று கழல் சூடி ஆணென்று மதர்க்க,  ஒன்று தண்டை பூட்டி பெண்ணென்று மலர்ந்திருந்தது.  "வா" என்று அழைத்தான் என்னை அத்தன். இடக்கையில் அம்மையை பற்றி வலக்கையில் சூலமும் ஏந்தி மலை இறங்கினான். ஒன்று என்று இருந்தவர்கள் இரண்டு என்று தோன்றினார்கள் சில நேரம். இரண்டு என்று காட்டியவர்கள் ஒன்று என்றே கூடினார்கள் ஒரு நேரம். அவன் என்ற சொல்லும் போய், அவள் என்ற நினைவும் போய், அதுவென்றே எஞ்சியது. நான் அதனையே  தொடர்ந்தேன். என் உடலின் புள்ளிகள் மின்னி மின்னி மறைந்தன. நான் ஒளிகொண்டிருந்தேன். அதுவே நான்! வேட்டுவனின் சொல்லால் அறிந்ததை, அறியும் தோறும் விழியால் கண்டேன். அப்போது விஸ்வரூபன் எனப்பெயர் எனக்கு.  முன்னிரவு தொடங்கி பின்னிரவு வரை நீண்ட கதையை சொல்லி முடித்து,   வேடனும் வேடத்தியும் திண்ணையில் உறங்க நான் கூடத்தில் உறங்கினேன். 

விடிய ஒரு நாழிகையே இருந்த கருக்கலில் சாட்டை என சுழன்று வீசி தீண்டிய ஒலியால் விழித்தேன். நான் என்று அறிந்த அதனைச் சுற்றி வண்டு ஒன்று முரண்டது. செவி கொண்டு அறிய இயலாத ஒலி. கூடத்தில் இட்ட உடல் வேறொன்றாய் அங்கேயே கிடந்தது. அவ்வொலியாக மட்டுமே இருந்தேன். உலகென்று அனது எல்லாம் அவ்வொலியில் பிறந்து, அவ்வொலியாக நீண்டு, அவ்வொலியாகவே ஒழுகி மறைந்தது. ரீம் என ஒலித்து நீண்டது ஒரு தந்தி.  சிலிர்க்கும் தோறும் அதிலிருந்து நூறு நூறு ஒலிகளென எழுந்தது. ஒற்றை வண்டு என இருந்ததது ஒன்று நூறயிரமாக பெருகி இதழ் இதழாக பின்னி ஆயிரம் இதழ் கொண்ட தாமரை என விரிந்தது. சிரசின் மேல் சஹஸ்ராரம்  என மலர்ந்தது. அத்தாமரையில் ஒளியென காத்திருந்தான் அவன் அவள் வரவுக்காக. அவனை காமேஷ்வரன் என அறிந்து கொண்டேன்.

மூலாதாரத்தில் தனித்து உறங்கியவள் ஸ்வாதிஷ்டானத்தில் எழுந்தாள். மணிபூரகத்தில் அழகி எனத் துலங்கி பாத்யம் முதல் ஆபரண பூஷணம் ஈறான உபசாரங்களை பெற்று நவரத்ன பீடத்தில் தன் பரிவாரங்களுடன் கொலுவமர்ந்தாள். அனாஹதத்தில் தாம்பூல தாரணத்தால் சிவந்த அதரங்களோடு  மகிழ்ந்திருந்து, விஷுக்தியில் ஆரத்தியும், ஆக்ஞையில்  கற்பூர நீராஜனம் கண்டருளினாள். ஆறு சக்கரங்களையும் கடந்து ருத்ர கிரந்தியை பேதித்து பிரம்மரந்திரமாகிய சிரசின் மேலே ரீம் என்னும் ஒலியால் மலர்ந்த சஹஸ்ரார கமலத்தில் அவள் வரவுக்காக காத்திருந்த காமேஸ்வரனுடன் கூடினாள். அமிர்தம் என பெருகி பெருமழையென பொழிந்து, அருவியென கொட்டி ஆர்ப்பரித்து ஓடி  ஒவ்வொரு அணுவையும் அதன் அறிய முடியா முனை வரை இனிமையால் நனைத்து மலர்ந்தாள். எண்ணிறந்த முகங்கள் கொண்டவள். எட்டோடு இரண்டு என எல்லா திசைகளையும் நோக்கி கொண்டிருப்பவள். எல்லா விதமான ஆயுதங்களையும் தாங்கியவள். பாதிரி மலரின் நிறத்தோடு, கருமையும், பசுமையும், செம்மையும், மஞ்சள் வண்ணமும் கூடி எண்ண இயலா வர்ண பேதங்களால் நிறைந்தவள்.  அவள் கொண்ட பேர்களில் யாகினி என்பதும் ஒன்று.  

Image  Credit : Google

எலும்பினுள் மஜ்ஜையாக நிறைந்து,  வாயு ஆகாச பூதங்களால் உண்டான துளைகளின் வழியாக, ஷுக்ராக்கினியில் சமைந்து ஷுக்லமாகி புது மண் பானையில் கண் அறியா துளைகள் வழி நீர் பூத்து கசிவது போல கசிந்து உடலெங்கும் பரவி நிறைபவள். அவளின் இன்னொரு வடிவே ஆணுடலில் விரைக்குள் வீர்யம் என இருந்து உடல்கள் கூடுகையில் வெளியேறி கருமுட்டையோடு புணர்ந்து கருவென மலர்வது. ஆண்மையை சுட்டுவதால் பௌருஷம் என்றும், பாய்ந்து ஒழுகுவதால் ரேதஸ் என்றும், அனைத்துக்கும் மூலம் என்பதால் பீஜம் என்றும், ஆற்றலாக நிறைவதால் வீர்யம் என்றும், திசுக்களுள் சாரமென  உறைவதால் தேஜா என்றும், உணர்வெனும் ஆற்றலாக வெளிப்படுவதால் இந்திரியம் என்றும், அன்னமே ரச முதலான ஆறு தாதுக்களாக படி படியாக உருமாறி ஷுக்லம் என்று மலர்வதால் அன்னவிகாரம் என்றும், மஜ்ஜையின் சாரத்தில்  இருந்து பிறப்பதால் மஜ்ஜாரசம் என்று பெயர் கொள்கிறாள். ஒவ்வொரு உயிரும் பல்கி பெருகுவது இவளால்.  சொர்க்கத்தின் ஒரு துளியை உறவென்றும், மகவென்றும் இவ்வுலகிலும் நிறைப்பவள்.  கனவில் அவளை கண்டறிந்த எனக்கு தைஜஸன் எனப்பெயர்.

அதற்கும் அப்பால், அது என்னும் ஒற்றை சொல் மட்டுமே எஞ்சயிருந்தது. அது தன்னை தானென்றும் அறியாதிருந்தது. அந்நிலையில் பூவுக்குள் நாகம் என உரைந்திருந்து, அதனைக் கண்டு சொன்ன எனக்கு பிராக்ஞன் என்று பெயர். 

***   


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19