ஐயன் பந்தி - 11
புவியேழையும் பூத்தவளே - 7
மஜ்ஜை என்பது எலும்பின் மத்தியில் குழாய் என ஓடும் வெற்றிடத்தில் விதை ஓட்டினுள் பருப்பை போல நிறைவது. அதனாலேயே எலும்பு வலிமை கொண்டதாகிறது. எலும்பில் இருந்து தோன்றுவதால் அஸ்திஜம் என்றும், எலும்புக்குள் படியும் ஒரு வகை கொழுப்பு என்பதால் அஸ்திஸ்நேஹம் என்றும், எலும்பின் சாரமாக நிறைவதால் அஸ்திஸாரம் என்றும், உடலுக்கே சாரமென அமைவதால் தேஹசாரம் என்றும், ஸுக்லம் என்னும் ஏழாம் தாதுவை உண்டாக்குவதால் ஸுக்ராஹாரம் என்றும் பெயருடையது. குழைவும் மிருதுவும் அதன் இரு குணங்கள். வாத தோஷத்தால் எலும்புகளுக்குள் உண்டாகும் வெற்றிடத்தில் நிறையும் மேதஸே மஜ்ஜையென அமைகிறது. நகமும் முடியும் மஜ்ஜையில் இருந்து பிறக்கும் உப தாதுக்கள். கண்ணில், தோலில், மலத்தில் உள்ள ஈரமும் அதனாலேயே. மென்மையான உறுப்புகளையும், ஈரப்பசையோடு மிளிரும் தோலையும், திடமான, வலுவான மூட்டுகளையும் கொண்ட உடல் மஜ்ஜையால் பொலிந்தது. மண்டையோட்டுக்குள் பாதி தெளிந்த வெண்ணெய் போல நிறையும் மஜ்ஜையே மூளை என்றாகி, மஸ்துலுங்கம் என்றும் மஸ்தக மஜ்ஜை என்றும் அமைகிறது. ஸ்னேஹனம் என்னும் உயவூட்டலோடு, உடலை வலுவூட்டுவதும், அஸ்திபூரணம் என்றாகி எலும்பினுள் நிறைந்து அதனை பலப்படுத்துவதும், தன்னிலிருந்து பிறக்கும் சுக்கிலத்தை போஷிப்பதும் அதன் பணிகள். நீண்ட ஆயுள், கற்றல் திறன், எதனையும் புரிந்து கொள்ளும் திறன், நற்சந்ததி ஆகியவை மஜ்ஜாதாதுவினால் அமைவது. இவ்வாறாக ஆனேகுந்தி சுப்பிரமணிய சர்மனாகிய நான் ஹாகினி தேவியின் அருளால் மஜ்ஜையை அறிந்து கொண்டேன்.
"இப்படித்தான் மஜ்ஜையை பத்தி எழுதியிருக்கிறார்டா ஆனமந்தி வைத்தியர்" என்றார் ராமசுப்பையர்.
"ஹாகினி தேவிய எப்படி பார்த்தாரு என்ன ஏதுன்னு ஒன்னும் எழுதலையா?" என்றார் கோவிந்தன் தாத்தா. மீனாக்ஷி பாட்டி படியில் அமர்த்திருந்தாள். நான் அவளை பார்த்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தேன். உச்சி பொழுதாகி இருக்கலாம். தெருவில் நிழல்கள் குறுகி விழுந்திருந்தன. ஆனிமாதம் பிறந்து விட்டதால், காற்று வீச துவங்கியிருந்தது. அவ்வப்போது சாரலும் கட்டியது
"சொல்லியிருக்கார்டா கோவிந்தா" என்று தொடர்ந்தார். "ஆனமந்தி வைத்தியருக்கு தொடர்ந்து விக்கலும், இருமலும் வந்து தொந்தரவா இருந்திருக்கு. நிற்கிறப்போ நடக்கிறப்போ எல்லாம இருட்டாகி அதுக்குள்ள நுழையறாப்பல தோனிண்டு இருந்துருக்கு அப்பப்ப. மஜ்ஜையில கோளாறு எதுவும் இருந்தா அப்படி ஆகுமாம். ஒரு நா நல்ல மத்தியான நேரத்தில, தெருவுல நடந்து வந்து வீட்டுக்குள்ள நுழையறப்ப கண்ண இருட்டி படியும் தெரியல வாசலும் தெரியலனு ஆயிடுத்தாம். இவர் மலங்க மலங்க விழிக்கிறதையும், கால எடுக்கிறதும் திரும்ப வைக்கிறதுமா அங்கனயே தயங்கி நின்னுண்டு இருக்கிறதையும் பார்த்துட்டு ஐயரோட அகமுடையா வசந்தம் வேகமா வந்திருக்கா. அந்த பகுதிய மட்டும் சுவடிலேருந்து அப்படியே வாசிக்கிறேன்டா கேளு"
கரிய குழல் போல இருள் என் முன்னும் பின்னும் நீண்டு இருந்தது. இருபுறமும் முடிவிழி வரை நீண்ட குழல். என் கால்கள் நகரவில்லை. ஆனாலும் அந்த குழலின் வெது வெதுப்பில் ஊர்ந்து கொண்டிருந்தேன். ஊர்ந்து ஊர்ந்து ஒரு பாழும் கிணற்றில் இறங்கினேன், இறங்கினேன் என்று அறியும் தோறும் மறுபுறத்தில் ஏறினேன். கண் முதல் தோல் வரை அத்தனை புலன்களாலும் நான் அறிந்தது இருளையே. காலம் என்று நான் கடப்பது எல்லாம் என் உடல் ஊர்வதால் ஆனது. எங்கோ அந்தரம் என்று ஆழம் என்று மயக்கு காட்டிய தூரத்தில் ஒரு புள்ளி வெண்ணொளியை கண்டேன். மின்னி மின்னி சுடர்ந்தது. அருகணைய அணைய ஒன்றென்று இருந்தது ஆறு துண்டுகளாக சிதறி தெளிந்தது. ஆறு வெண்ணிற விண்மீன்கள். ஆறு மின்னும் வெண்ணிலாக்கள். ஒன்றருகில் ஒன்றென கரங்கள் சேர்த்து தும்பை பூவால் கோர்த்த வட்டமென பறந்தது. என்னிலும் நூறு மடங்கு பெரியதாக இருந்தவை பறந்து பறந்து சிறுத்து ஆறு புள்ளிகளாகின. வந்து என்னை சூழ்ந்து இறக்கை வீசி வட்டமிட்டன. மின்னி மின்னி சிரித்தன. ஆறு சிறு பூச்சிகளும் கூடி ஆறுமுகங்களாகின. ஞான முத்திரை, டமருகம், அக்ஷமாலையோடு கபாலமும் நான்கு கரங்களில் தாங்கி ஹாகினி தேவி எழுந்தாள். ஆழ் மனத்தை ஆழ்பவள் என்றாள். உள்ளுணர்வு என்று நம்முள் குறுகுறுப்பது அவளே. மேரு தண்டம் என்னும் முதுகு தண்டின் உள்ளோடும் ஸுஷும்னா நாடியின் கீழ் முனையில் மூலாதாரத்தில் மூன்றைரை சுற்றுகளாக சுருண்டுகிடந்தவள், விழித்தெழுந்து, சுவாதிஷ்டானத்தில் நின்று பிரம்ம முடிச்சை துளைத்து, மணிபூரகம், அனாஹதம் என்னும் இரு சக்கரங்கள் வழியாக நடந்து விஷ்ணுகிரந்தியை பேதித்து விசுக்தி சக்கரத்தையும் கடந்து, ஈரிதழ் தாமரையின் இதழ்களில் ஹம்ஸவதீ, க்ஷமாவதீ என்னும் தேவதைகள் சூழ, புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் வெண்ணிறத்தில் இட்ட திலகமென மிளிர்ந்தாள். அவளுக்கு பரா என்றும் பெயர். பரன் என்னும் சிவனின் உடலில் பாதியை பெற்று வீற்றிருந்தாள். அவள் ஆணைக்கு அண்டங்கள் அடங்கின. அவள் துளிர்வித்தே அவை முளைக்கவும் செய்தன. அவளே அத்தனையும் என்ற ஞானம் பிறக்கும் இடமும் அதுவே. எங்கும் வெண்மையே நிறைந்தது. சூழ்ந்தது. மண் எனத் தாங்கியதும் விண் என கவிந்ததும் வெண்மையே. கூப்பிய கரங்களோடு தொழுதிருந்த என்னை பற்றி உலுப்பினாள் வசந்தம் 'ஏண்ணா' என்ற அழைத்தபடி. விழித்ததும் அவள் அணிந்திருந்த ஆறுகல் வைர பேசரி நாசியில் மின்மினிகளென ஒளிர்ந்திருந்ததை கண்டேன்.
"ஏலேய் சுந்தரம்" என்று மீனாக்ஷி பாட்டியின் குரல் எங்கோ தூரத்தில் கேட்டது. இருகைகளையும் நீட்டி மீனாக்ஷி பாட்டி அழைத்தாள். "ஆச்சி" என்று சொல்ல நாவெழவில்லை. கண்கள் பெருகி ஓவெனும் ஓலமாக வெளிவந்தது. விழித்த பின்னும் என்னைச் சூழ வெண்ணிறம் மட்டுமே இருந்தது. வெண்ணிறத்தில் ஒரு தடம் என மீனாக்ஷி பாட்டியை மட்டும் கண்டு கொண்டிருந்தேன்.
"ஐயனாரு துன்னூர எடுத்துட்டு வந்து பூசி விடுங்க" என்றாள் பாட்டி. கொதித்துக்கொண்டிருந்த நெற்றி குறுகுறுத்து குளிர்ந்தது. நினைவு எழுந்த போது திண்ணை சுவரில் சாய்ந்திருந்தேன். கண்கள் பெருகி தாடையை தாண்டி கழுத்து வரை வழிந்திருந்தது. உடல் முழுதும் வியர்த்து, காற்று தீண்டும் தோறும் குளிர்ந்தது. தாத்தாவும், ஐயரும் என்னை நோக்கிக்கொண்டிருத்தனர் காட்சிகள் துலங்கிய பிறகும். பாட்டியின் குரலைத் தவிர ஒரு சப்தத்தையும் அறிய கூடவில்லை. கொல்லையில் அக்கா குருவி ஒன்று அழைத்த குரலை செவி அறிந்தது முதலில். பின் காற்றில் மரங்கள் ஆடி கிளைகளும் இலைகளும் உரசும் ஒலிகளை. யாரோ எவரையோ அழைத்தார்கள். மூன்று நான்கு தறிகள் கலந்து ஒலித்தன தறிக்கூடத்தில். ஆச்சி செம்பு நிறைய நீரை நீட்டி "நிற கொடத்து தண்ணிடா வெள்ளை, குடி" என்றாள். நீரைக் கண்டதும் தான் அறிந்தேன், எவ்வளவு தாகமாக இருக்கிறேன் என்று. உணவு குழாய்கள் எரிந்து கொண்டிருந்தன. மார்பும் எரிந்தது. தண்ணீரில் மஞ்சள் பொடியை கலந்து இருந்தாள் பாட்டி. குடிக்கும் தோறும் குளிர்ந்து இறங்கி, உடல் தணிந்து, உள்ளங்கால்களிலும் கைகளிலும் மெல்லிய குளிரொன்று பரவியது.
"எதையோ கண்டுட்டான் பிள்ள" என்றார் தாத்தா.
"எல்லாம் அவ அட்டூழியம் தான். என்னனு இப்ப கேட்க வேண்டாம், அவனா சொல்றப்ப சொல்லட்டும்" என்றாள் பாட்டி
"ஆமாம்" என்றார் ஐயர்
"கொஞ்ச நாளைக்கு காடு கரைன்னு தனியா சுத்தாதடா சுந்தரம்" என்றார் தாத்தா.
"நான் பூவாயிய பார்த்தேன்" என்றேன்.
"மலைக்கானிக கும்பிடற பூவாயியவா?" என்றாள் பாட்டி
"ஆமாம், வெள்ளை பட்டு பாவாடையும், தலை நிறைய மல்லியபூவும் பிச்சிபூவும் முடிஞ்சிகிட்டு வந்தா. ஒரு சின்ன குழந்தையா. இந்தான்னு கைநிறைய பூவ அள்ளி வச்சா" என்றேன். மலைக்கானி சொன்ன பூவாயியின் கதை நினைவில் ஓடத்துவங்கியது.
***
மேல மலை முகட்டில் இளையானோடு சேர்ந்து, வெண் உருளைக் கல்லாக அமர்ந்திருந்த பூவாயிக்கு வெள்ளத்தானை உடுத்தி, பல வித வெண் மலர்களை தொடுத்து சாற்றினார் மூப்பர். அஞ்சனம் என்னும் கருமையையும், மென் மரத்தில் குடைந்து செய்த வளையல்களையும் படைத்தார். ஆறு திரியிட்ட அகல் விளக்கை கொளுத்தி சுற்றி காட்டினார். படைப்பு முடிந்து மலை இறங்கும் சமயத்தில், பூவாயியின் கதையை சொல்லத்துவங்கினார்.
"ஏழம்மைகள்ல ஒருத்தியா வெள்ளையம்மையா வந்தவ, செம்மலைக்குடியில ஆசைப்பட்டு ஒரு சிறு குழந்தையா பிறந்து வளந்தா. அவ ஆயி அவள இடையவிட்டும் மடியவிட்டும் இறக்கலைனா அப்பன் மாரையும் தோளையும் விட்டு இறக்காம வளத்தான். செவ்வரியோடின விரிஞ்ச கண்ணுமா வெள்ளைமலை குடி தாழ்வாரத்தில வளர்ந்த, அவளக் கண்டா தூக்கி கொஞ்சாதவக இருக்க மாட்டாக. முகம் பாத்து சிரிக்க துவங்கின காலத்திலேயே அவளுக்கு வெள்ள நிறத்துல உள்ள எந்த பூவக் கண்டாலும் கொள்ள ஆசை. கண்டு கண்டு சிரிப்பா. அதை பார்த்துட்டு அவளை பூவாயினே கூப்பிட ஆரம்பிச்சிட்டாக. அவ ஆயி அப்பனும் கூட அப்படித்தான் கூப்பிட்டாக. அதுவே பேர்னு ஆயிப்போச்சு. பூவாயி மூவேழு கொல்லம் தான் உடம்போட இருந்தா. அவ வந்த காரியம் ஆனதும் உடம்ப விட்டுட்டு மின்மினி பூச்சியா மாறி திரும்ப வெண்ணாயி கிட்டயே போயிட்டா. அவ பேரால வெண்ணாயியையும் நாம பூவாடைக்காரி பூவாயினு தான் அழைக்கோம். மஞ்சளா பழுத்த பலாச்சுளைய தேனோட சேர்த்து அவளுக்கு படைக்கணும்" என்றார் மூப்பன்.
"என்ன காரியத்துக்காக வந்தா மூப்பா?" என்று இளையான் கேட்க மூப்பர் சொல்ல துவங்கினார்.
ஒரு நாள் குடில் முற்றத்தில் அம்மை மடியில் அமர்ந்து தாழ்வாரத்தை நோக்கிக் கொண்டிருந்தாள் பூவாயி. ஓரிரு கொல்லம் தான் வயதாகியிருக்கும். இரவு போதாகி நிலவு உதிக்காத ஒரு அமாவாசை இரவில் தாழ்வாரம் மொத்தமும் மின் மினிகள் மின்னி மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்ததன. அவ்வொளியையும் மின்னும் பூவென்றே கண்ட பூவாயி 'ஹூவு' 'ஹூவு' என்று அவள் அறிந்த மொழியில் சொல்லி பறிக்க கைகளை நீட்டினாள். மகள் மின்மினிகளையும் பூவென்றே அறிகிறாள் என்றறிந்த ஆயியும் அப்பனும், "ஆமாடா தளிரே" என்று சொல்லி சிரித்து கண்ணேறு கழித்தனர். ஒரு மின் மினியை பிடித்து அதை அவள் கையருகில் கொண்டு வந்து நீட்டினான் அப்பன். அதை தீண்டாது நோக்கி இருந்து விட்டு. அப்பனின் கைகளை தட்டி, விடச் சொன்னாள். விட்டதும் மேலேறி பறக்கும் மின்மினியைக்கண்டு கைகளை கொட்டி சிரித்தாள். மீண்டும் மீண்டும் 'பதக்கு பதக்கு ஹூவு ஹூவு' என்றாள். பூக்களை மட்டும் அறிபவள் என்றானாள். அல்லது அத்தனையையும் பூவென்றே அறிந்தாள். விண்ணில் மின்னும் நக்ஷத்திரங்களும் அவளுக்கு பூவென்றே மின்னின. நிலவும், கதிரும், ஆற்றின் சுழியிம், குமிழியும், அதன் கரையில் நுரையும் கூட பூவென்றே தோன்றின. மின்னலை வெண்ணிறத்தில் நீண்ட பூவென்றாள். மழைத்துளிகள் மண்ணில் விழுவதை மொட்டுகள் மண்ணில் மோதி மலர்கின்றன என்றாள். அவள் கைகளிலோ, கூந்ததலிலோ பூவில்லாமல் அவளை யாரும் கண்டதில்லை. அவளும் காண்பதற்கு பூவென்றே மலர்ந்து வளர்ந்தாள்.
வெள்ளிமலையின் குடி மூப்பனுக்கு இரு தாரங்கள். அதில் மூத்தவள் ஒரு ஆண் மகவை ஈன்று பூச்சி கடித்து இறந்து போக இரண்டாவதாக செம்மலைக் குடியில் பூவாயியின் அத்தையைக் கட்டி அவள் வழியாக ஏழு பிள்ளைகள் மூப்பனுக்கு. அந்த ஏழில் மூத்தவன் செங்காவிக்கு பூவாயியின் மேல் பிரியம். அதை அவள் அறிய பல முறை சொல்லியும், அவன் மேல் எந்த பிரியமும் தோன்றவில்லை பூவாயிக்கு. ஏதோ வேலையாக மேல மடை தாழ்வாரத்துக்கு சென்ற போது ஒரு நாள் வெள்ளிமலை குடி மூப்பனின் மூத்த குடியாள் மகன் சிவத்தனை கண்டாள் பூவாயி. முழுத்த இளந்தாரியாக, முடிந்து விட்ட கொண்டையுடன், கை வீசி நடபதும், ஓடுவதுமாக அவன் தாழ்வாரத்தில் திரிவதை பார்த்த பூவாயிக்கு மனதுக்குள் ஒரு புது குறு குறுப்பு. அது சொல்லாகி திரளவோ, என்னவென்று அறியவோ வாய்க்க வில்லை அவளுக்கு. அவள் காண்பதற்கு முன்பே அவன் கண்டிருந்தான் அவளை. அவளும் தன்னையே காண்கிறாள் என்று அறிந்து மகிழ்ந்தான். அதை கண்ணுற்ற செங்காவி கொதித்தான் .
சிவத்தன் தன் தகப்பனிடம் சொல்லி பூவாயியை பேசிக் கட்டி வைக்க சொல்லலாம் என்று குடி முற்றத்திற்கு வந்து வாசலில் நின்று "மூப்பா" என்று அழைத்த போது. அவன் சிற்றன்னை, தன் கணவனை உள்ளேயே தடுத்து நிறுத்தி, செங்காவிக்கு அவள் அண்ணண் மகள் பூவாயியை பேசி முடிக்க வேண்டும் என்று அழுத்தமாக சொல்லி, வாக்கும் வாங்கிக் கொண்டு வெளியே அனுப்பினாள். விஷயம் புரிந்ததும் சிவத்தன் முற்றத்தை விட்டு இறங்கி தாழ்வாரத்திற்கு போய் விட்டான், தகப்பன் வரவிற்காக காத்திராமல். வெளியே வந்து பார்த்த மூப்பன், வந்த பிள்ளை சென்று விட்டான் என்று அறிந்து, என்னமோ என்று பெரிதாக எடுக்காமல் விட்டுவிட்டார். பெரியவர்கள் பேசிய படி செங்காவிக்கும் பூவாயிக்கும் கல்யாணம் ஆகி, வெள்ளி மலையில் குடி மூப்பன் குடில் அருகிலேயே குடில் கட்டி குடியேறினார்கள். ஈரேழு கொல்லமே ஆகியிருந்த பூவாயி அப்படி தான் நடக்கும் போல என்பதாக கருதிக்கொண்டு அங்கேயே வாழத்துவங்கினாள். அருவியாக பொழிபவளின் சொற்கள் மட்டும் குறைந்து மிகுதியும் அமைதி கொண்டவள் ஆனாள். அதற்கு பின் சிவத்தனைக் கண்டதே இல்லை. சிவத்தன் இவள் வழிப்பக்கம் வந்ததும இல்லை.
பல நாட்கள் கழித்து ஒரு நாள், தன் குடில் முற்றத்தில் அமர்ந்து கூடை நிறைய வெண்ணிற பூக்களை பூவாயி தொடுத்த படியிருந்த போது மூப்பனை காண, இவள் குடில் முற்றத்தின் வழி வந்த சிவத்தன் எங்கோ பார்த்தவனாக கடந்து போனான். இவளும் யாரோ என்பது போல தன் கை வேலையில் கவனமாக இருந்தாள். இதை தூரத்தில் இருந்து கண்டபடி மலையேறிய செங்காவி, வந்த வேகத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் எட்டி உதைத்து, பூக்களை கூடையோடு தூக்கி நிலத்தில் இட்டு மிதித்தான். 'இன்னும் பழைய நினைப்பா?' என்று ஆங்காரத்தில் கத்தினான். பூவாயி ஒரு சொல்லும் சொல்லாமல் நிலத்தில் விழுந்த பூக்களை அள்ளி கூடையில் சேர்த்தாள். என்னமோ ஏதோ என்று சத்தம் கேட்டு மூப்பனும் மூப்பத்தியும் அவர்கள் குடிலில் இருந்து இறங்கி ஓடி வந்தார்கள். ஏழு கலயங்களில் மண்ணும் நீரும் நிரப்பி வாசலில் வைத்தாள் பூவாயி. அவள் உத்தேசம் அறிந்து மூப்பனும் மூப்பத்தியும் "வேண்டாந் தாயி" என்று மன்றாடினார்கள். ஏழு மலர்ச்செடியின் விதைகளை அந்த கலயங்களில் ஒவ்வொவொன்றிலும் புதைத்துவிட்டு "இன்னையோட ஏழு நாளாச்சு தள்ளி போயி. எல்லா நாளும் நிறைஞ்சு ஏழும்மைக புண்ணியத்தால நான் ஈன்டா, அது வெள்ளிமலைக் குடியோட வாரிசு. அதுக்கு சாட்சியா நான் இட்ட இந்த ஏழு விதையும் முளைக்கும்" என்று சொல்லி இறங்கியவள், மற்றவர்கள் குடில்கள் எல்லாம் வெள்ளிமலை சரிவில் இருக்க, அதன் அடிவாரத்தில் தானே ஒரு குடில் கட்டி வாழத்துவங்கினாள். அங்கிருந்து அவள் மீண்டும் வெள்ளி மலைக்குடிக்கோ, செம்மலையில் அப்பன் வீட்டிற்கோ சென்றதே இல்லை. அவள் இட்ட விதைகள் ஏழும் மூன்றாம் நாளில் முளைத்தன. முளைத்ததோடு அல்லாமல், ஏழும் வளர்ந்து பூத்தும் குலுங்கின.
நிறை சூலியாக திரிந்த போதும் ஒருவரிடமும் ஒரு சொல்லும் உதிர்த்ததில்லை பூவாயி. எவர் தயவையும் நாடியதும் இல்லை. எவராவது அவளைப் பேர் சொல்லி அழைத்தாலும் அறிந்த சுவடும் காட்டியதில்லை. அவள் கானகத்தில் மனிதர் என்று இருந்தவர்கள், அவளும், அவள் கருவில் தங்கிய மகவும் மட்டுமே. மறுபுறத்தில் ஒட்டு மொத்த கானகமும் அவளைத் தங்களவள் என அறிந்து கொண்டிருந்தது. குயில்களும் மயில்களும் அவன் முற்றத்தில் ஆடின. அவள் தோளேறி கிளிகள் கொஞ்சின. . அவற்றோடும் அவள் சொல்லால் உரையாடியது இல்லை. மரங்கள் மலர்களோட கனிகளையும் பொதிந்து வைத்திருந்தன அவளுக்காக. அவை கனிந்து அவள் கைகளில் உதிரக் காத்திருந்தின. கிழங்குகளை அவள் உண்பதற்காகவே மறைத்து வைத்திருந்தது மண். மடி நிறைந்த எந்த விலங்கையும் பற்றி பால் அருந்தினாள். பல பல விலங்கு தானைகளையும் சேகரித்து, அவற்றை ஒன்றோடு ஒன்று இனைத்து கட்டியும் தைத்தும் மெத்தையென ஆக்கி, சுருட்டி முதுகில் கட்டிக்கொண்டு எப்போதும் திரிந்தாள். நிறை சூலும், சூலமும், கை தண்டமும் பிடித்து அவள் கானேறி வேட்டைக்கு செல்லும் போது கண்டவர்கள் அவளை அம்மை என்றே கை தொழதார்கள். வேட்டையாடிய இறைச்சியை அந்த இடத்திலேயே பச்சையாக கிழித்துண்டாள். அவள் பக்கலில் வந்து நாய்களும் நரிகளும் சேர்ந்துண்டன. செஞ்சடையும், ஈற்றுவாசமுமாக அவள் திரிந்த வழியெல்லாம், கனியும், மலரும், மலரால் தேனும், கிழங்குகளும் கொலித்தன. மலைக்குடி மொத்தமும் காலமறிந்த காலம் முதல் அத்தனை வளத்தைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. உலகே அவளுக்காக பொலிந்து இருந்தது. மலைக்குடியே அவள் ஒரு சொல்லேணும் தங்களை நோக்கி சொல்ல மாட்டாளா என ஏங்கியது. அவளைக் கண்டவர்கள் 'அம்மை'யென்ற அழகென்ற இரு சொற்களை மட்டுமே அறிந்தனர்.
ஒரு நாள் மேல மலைக் கானோடு திரிந்த வேளையில் பேற்று வலிகாண கவட்டை போல தலை விரிந்திருந்த கைப்பிறம்பை நிலத்தில் ஓங்கி ஓன்றி, அதை பற்றிக்கொண்டு குனிந்து நின்று, முதுகோடு கட்டியிருந்த தானைப் பொதியை கால்களுக்கு இடையில் விரித்து, செந்நிறத்தில் அவள் உடலின் நரம்புகள் எல்லாம் துடிக்க, சிறு அரற்றலும் இல்லாமல் மகவை ஈன்றாள். இடது கையால் நஞ்சை இழுத்து எறிந்தவள், வலக்கையின் நக நுனியால் கிள்ளி கொடி அறுத்தாள். பிள்ளையை தூக்கி உதறி சுரந்து தானாக ஒழுகிய இட முலையால் பாலூட்டிய படி காடிறங்கினாள். வல முலையில் சுரந்த பால் எல்லாம் ஒழுகி அவளது இடை கடந்து தொடை கடந்து கால் வழியாக இறங்கி நிலத்தில் கோடாக அவள் நடந்த தடமெல்லாம் வழிந்தது. ஒரு வெள்ளி ரேகையென மேல மலைக்காட்டில் இருந்து தாழ்வாரம் வரை நீண்டு அழியாமல் நிலைத்து விட்ட அத்தடத்தை முலைப்பால் தடம் என்றே அழைத்தார்கள். மகவுவேண்டியோ, பால் சுரக்க வேண்டியோ மலைக்குடி பெண்கள் இன்றும் தொழுகிறார்கள் அதனை. பால் குடி மாறாத குழவிகளுக்கு அவ்வரியை உரசி அடி நாக்கில் தடவுகிறார்கள் நோய் நொடி அண்டாதிருக்க.
பூவாயி பிள்ளைக்கு ஏழு கொல்லம் ஆகும் வரை அவனை வளர்த்தாள். அந்த ஏழு வருடத்தில் மகனோடு கூட ஒரு வார்த்தையும் உரையாடியதில்லை. தன் அம்மை பேசுவாள் என்பதையே அறியாதவனாக வளர்ந்தான் மகன். பேச்சு வார்த்தை இல்லாததால், பிள்ளைக்கு என்ன பெயர் இட்டாள் என்றும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் பூவாயியின் மகன் என்றே அழைத்தார்கள் அவனை. குடில் முற்றத்தில் மடியில் மகனை அமர்த்திக்கொண்டு தாழ்வாரத்தில் பறந்து திரியும் பட்டாம் பூச்சிகளையும், குளவிகளையும், தேனீக்களையும் விரல்களால் சுட்டுவாள். பறவைகளை காட்டுவாள். குடிலில் அமர்ந்து கொண்டு முற்றத்தில் பெய்து விழும் மழையை தலை நிமிராமல் பொழுதெல்லாம் கண்டு கொண்டிருப்பார்கள் இருவரும். பின் இரவெல்லாம் நக்ஷத்திரங்களை காட்டுவாள். காடெல்லாம் திரிந்து பூக்களைக் காட்டுவாள். அவள் சொல்லாத சொற்களால் எதைக் காட்டினாள் கேட்காத சொற்கள் வழி இவன் எதைக் கண்டு கொண்டான் என்று யாருக்கும் தெரியாது. தாழ்வாரத்தில் மற்ற பிள்ளைகளோடு எப்போதாவது விளையாடியதால் அரை குறையாக மொழியை அறிந்து கொண்டான் பிள்ளை.
ஒரு முழு நிலவில் வலமிருந்து இடமாக மின்னல் கீற்றை போல நகர்ந்த ஒரு நக்ஷத்திரத்தை அம்மையும் மகனும் கண்டார்கள். கண்ட அந்தக்கணத்தில் குடில் நடையில் அமர்ந்திருந்தவள், எழுந்து மகனையும் கை பற்றி அழைத்துக் கொண்டு மேல மலையில் ஏழம்மை திட்டை நோக்கி ஏறினாள். இரவில் மேலமலை முகட்டுக்கு செல்லும் வழக்கம் எப்போதும் இருந்ததில்லை. முகட்டை அடைந்தவள், ஒரு கல்லை நிறுத்தி, அதற்கு தகப்பனுக்கு மகன் செய்யும் இறப்பு கார்யங்களை தன் மகனைக் கொண்டு செய்ய வைத்தாள். ஒரு சொல்லும் ஒலிக்காமல் ஒரு சொல்லும் கேட்காமல், சடங்குகள் அத்தனையும் முறைப்படி நடந்தன. ஏழம்மை திட்டையை ஏழு முறை மகனோடு வலம் வந்து விழுந்து வணங்கி, அவனை வெண்ணாயியின் முன் நிறுத்திவிட்டு, முதன் முதலாக மகனிடம் பேசினாள் பூவாயி, "உனக்கு நான் வச்ச பேரு பூவையன். நீ வெள்ளிமலை குடி மூப்பனோட வாரிசு. உன் தகப்பன் செங்காவியின் காலம் முடிஞ்சாச்சு. வெள்ளிமலை குடி பட்டமும் உனக்குள்ளது. இது இந்த பூவாயியோட ஆணை. காணத்தெரிஞ்சவன் கணிக்கவும் தெரிஞ்சவன். நீ காங்கிற ஒவ்வொண்ணும் நீ கணிக்கிறதுக்கு உதவும். சொல் அவிஞ்சா கண்ணு திறக்கும்" என்றாள். எழம்மைகளுக்கும் பின்னால் கமுக மரத்தின் அருகில், நிழல் என நின்ற அம்மையின் குரல் எங்கோ ஆகாயத்தில் கேட்டது. அவள் முன்னாள் வெண்ணுருளை கல்லாக வீற்றிருந்த வெண்ணாயி அவளைச் சுற்றி சுற்றி சுழன்ற மின்மினி பூச்சிகளின் ஒளியால் மிளிர்ந்து கொண்டிருந்தாள். தான் உடுத்தியிருந்த வெள்ளை நிறத்தானையையும் கலைந்து, கைகளில் அடிக்கியிருந்த மர வளையல்களையும் விட்டு, வெறும் மேனியளாக மேல மலையின் பின் சரிவில் இருளில் தடமாக இறங்கி நடந்தாள். அவள் நடந்த தடத்தினை மின் மினி பூச்சிகள் பறந்து காட்டின. அதை அவள் மகன் பூவையன் ஒருவனே கண்டான். "அம்மா.." என்று ஒரே ஒரு முறை மட்டும் அழைத்தான் அவளை. அதற்கு பின் அவளை யாருமே கண்டதில்லை.
பூவையன் வெள்ளிமலை குடி மூப்பனின் குடில் முற்றம் வந்து பூவாயியின் ஆணையை அறிவித்தான். அவன் அறிவித்த பொழுதே வெள்ளிமலை காடு தாண்டி மலைத்தேன் எடுக்க சென்ற செங்காவி மறைந்த சேதியும் வந்து சேர்ந்தது. முறைப்படி சிவத்தனுக்குரியதே மூப்பன் பட்டம் என்றாலும், அம்மையின் ஆணையால், அதை பூவையனுக்கு என்றே சொல்லி வைத்தார்கள். சிவத்தனும் பெண் கட்டாமல், பூவையனுடனேயே தகப்பனை போல வாழ்ந்து வந்தான். வெள்ளிமலை குடி மூப்பன் மறைந்ததும். பூவையனுக்கும் உருமாலும் தண்டமும் முறைப்படி கொடுத்து பட்டம் கட்டினார்கள். ஏழு கொல்லம் பூச்சிகளையும், பச்சிகளையும், நக்ஷத்திரங்களையும், பூக்களையும், அவை பூக்கும் காலத்தையும் பார்த்திருந்த பூவையன் அதைக்கொண்டு காலத்தை மேலும் நுணுகி கணிக்க துவங்கினான். கணியன் என்று அவனை அழைத்தார்கள். கதிரையும், நிலவையும் கொண்டு மட்டும் அதுவரை காலத்தை அறிந்திருந்தவர்கள், பூவையனின் கணிப்பு அதனினும் கூர்மையானது என புரிந்து கொண்டார்கள். அவன் மழை பெய்யும் காலத்தை கணித்து சொன்ன பருவத்தில் விதை விதைதார்கள். பஞ்சத்தையும் பெருமழையையும், பெரு நோயின் வரவுகளையும் முன்னறிந்து கொண்டார்கள். அவனால் காரியோடையில் வெள்ளம் வரும் காலத்தையும், காட்டில் பெருந் தீ வரப்போகும் காலத்தையும் முன்பே ஊகித்து சொல்ல முடிந்தது.
"அதவச்சு தான் வெள்ளிமலைக்குடிக்காரங்க நம்ம ஏழு குடிக்கும் காலத்தை கணிச்சு சொல்றாகளா மூப்பா" என்றான் இளையான்.
"ஆமாடா. பூவையன் சொல்லி வச்ச முறைப்படி கணிக்கிறாக வழி வழியா. அதை சொல்லிக்கொடுக்க தான் வெண்ணாயி பூவாயியா பிறந்து வந்தானும் சொல்றாக" என்றார் மூப்பன்.
எல்லோர் நினைவையும் கலைப்பது போல, பாட்டி தான் சொன்னாள் "உனக்கும் பூவாயியோட அருள் இருக்கோ என்னமோ?" என்று.
***






கருத்துகள்
கருத்துரையிடுக