ஐயன் பந்தி -10

புவியேழையும் பூத்தவளே - 6

Image credit : Google

"காரிமலை முகட்டுல ஒரு சுனையும், அதோட கரையில் ஒரு தாழம்புதரும் இருக்குல்ல" என்றார் மூப்பன்

"செந்தாழ" என்றான் இளையான்

"ஆமா அத சுற்றி ஒரு கரு நாகம் குடி இருந்துச்சு. ஒவ்வொரு முழு நிலாவுக்கும் காரிமலை காடு இறங்கி, மேல மலை முகட்டுக்கு வந்து ஏழம்மை திட்டைய ஏழுமுறை சுத்தி வலமா வரும். பச்சை பிள்ளைகளும் அதைக்கண்டா பதறாதுக. அதுவும் பதறாது. சில நேரம் மூப்பன் பூசைய கட்டிறவரைக்கும் அங்கயே படம் விரிச்சு நின்னிட்டு இருக்கும். ஈரேழு கொல்லம் அப்படி வாழ்ந்துட்டு,  அதுக்குபிறகு அந்த செந்தாழம் புதருக்கு பக்கத்தில இருந்த வளைக்குள்ள போனது திரும்பி வரவே இல்லை. அந்த கருநாகத்த முன்ன காரி மலைக்குடியில பிறந்து வாழ்ந்த ஒரு இளந்தாரினு சொல்லுவாக" என்றார் மூப்பன். 

"அவர் எப்படி பாம்பா மாறினாரு மூப்பா?" என்றான் இளையான்.

"அது அவரே ஏத்துக்கிட்ட வரம்டா, சாபம்னும் சொல்லலாம். அவருக்கு ஆயி அப்பன் இட்ட பேரு கரியன். அவர் வாழ்ந்த காலத்தில அவருக்கு நிகரா இந்த ஏழுமலைக் குடியிலையும் யாருமில்ல. மின்னுற கருப்பு தோலும், கட்டிவைச்ச கொண்டையும், கொண்டை கலையாம இருக்க அதில  சொருகியிருக்கிற தாழை மடலுமா அவர் நடந்து வந்தா, நின்னு கண்டவுக வச்ச கண்ண எடுக்க மாட்டாகளாம்.  ஏழுகுடியும் கூடி நிக்கிற தாழ்வாரத்தில் கரியன் நின்னா, அத்தனை பேரும் தலைய அண்ணாந்து தான் அவர் முகத்தை பார்க்கணும். ஆல மரத்துல விழுது இறங்கினாப்பில அவர் கையிரண்டும் இறங்கி முட்டிக்கால உரசும். விழுது பின்னின அடிமரம் கெனக்கா நரம்பு பின்னி, ஆனமுடி கட்டின கால ஊனி அவர் நடந்தா ஆனையே  வைக்கிற அடிதான். மண்ணுல உதிச்சவர் இல்ல, காடெல்லாம் திரியற ஏதோ கானகத்து தெய்வந்தான் இறங்கி வந்திருச்சுனு பலரும் பேசுவாக.  தாழ்வாரக்கரையில தாழம்பூ மணந்தாலே பிள்ளைக கூடிருங்க கரியன் வந்தது அறிஞ்சு. சிறுபிள்ளைகள பத்திகிட்டு காடெல்லாம் சுத்துவார் அவர் கதைய சொல்றேன் கேளு"

முன்னொரு காலத்தில் காரிமலை குடி மூப்பனுக்கு குழந்தைகள் இல்லை. அவர் மனைவி செம்பி மேலமலைகுடிக்காரி. எந்த குடியிலும் மகவு இல்லை என்பது ஒரு குறையாக பார்க்கப்பட்டதில்லை அதுவரை. 'மூப்பா' என்ற விளிக்கிருந்த பெருமை 'அப்பா' என்கிற சொல்லுக்கும் இல்லாது இருந்த காலம். தன்னில் மூத்தவர் எவரையும் மூப்பா முப்பத்தி என்றே அழைத்தார்கள். ஆனால், செம்பிக்கு ஏனோ அவளுக்கு என்று ஒரு மகவு வேண்டும் என்றொரு ஆசை பிறந்தது. 

மூப்பரிடம் செம்பி தன் ஆசையைச் சொன்னதும் பதறி "ஆயி செம்பி, அதுவா கனிஞ்சு உதிர காத்திருக்கிற பழத்தைத்தான் பறிச்சு திண்ணா ருசிக்கும். நாமா பறிச்சா, கனியாது,  கனிஞ்சாலும் ருசிக்காது.  நம்ம குடி முத்தம் நிறைய பிள்ளைக ஓடி ஆடி களிக்குதுக, அதுகள கண்டு மனச நிறைச்சுக்கோ" என்றார் மூப்பர்.  ஆனால், செம்பியின் உள்ளம் மட்டும் அடங்காமல் கொதித்தபடியே இருந்துது.

பின் ஒருமுறை "அள்ளி வட்டில் நிறைய அன்னத்தை  வச்சு ஊட்டினாலும், மடியில வச்சு முலையூட்ற சுகம் வருமா. நீங்க காரிகிட்ட  கேளுங்க" என்று மெல்லச் சொன்னாள்.

"ஒழுக்குல போற ஆத்தை மறிச்சு வழி திருப்பக்கூடாது,  அதுக்குபிறகு என்ன நடக்கும்னு தெரியாது. நல்லதும்  நடக்கும் கெட்டதும் நடக்கும், அதனால் அதை விட்டுடு செம்பி" என்றார் மூப்பன்

"ஒழுக்குல போற ஆத்தை திருப்பி தான குளம் கட்டிவச்சான் வரையாட்டு  மூப்பன்?" எனக் கேட்டாள்  செம்பி.

"உள்ளதுதான், ஆனா அது அவன் தனக்குனு செஞ்சுக்கிட்டது இல்லை, ஏழு குடிக்கும் செஞ்சான், அதுவும் பொன்னாயி வந்து அவளே சொன்னதால. அது போல குடிக்குனு வேண்டி ஒன்னு கேட்கலாம் செய்யலாம், மூப்பனும் முப்பத்தியுமா நின்னு. நமக்குனு கேட்க கூடாது. முன்னாலையும் யாரும் இத செஞ்சதில்ல.  குடியில் பிறந்த மக்களை எல்லாம் தன் மக்கனுதான் நினைக்கணும் நாம." என்றார் மூப்பர். 

"சுள்ளி பொறுக்கவும் பழம் பறிக்கவும் போற இடத்துல யார் பிள்ளைக்கும் யாரும் பால் கொடுப்பாக. இன்னார் பிள்ளைனு பார்க்கமாட்டாக. ஐயனே, ஆனா குடம்  நிறைய ஒரு குழவி வேணும். நிறையாத குடத்தால நான் யாருக்கு அமுதூட்டுவேன். பெடைனு பிறப்பெடுத்த எந்த உசுரும் இது ஒன்னுக்கு நோங்காம இருக்குமா?" என்று புலம்பி அழுதாள் செம்பி பல பல முறையும் சொல்லி. 

அவள் தவிப்பும் துயரும் பொறுக்க மாட்டாமல், "கரியாயி பூசைக்கு குறி வைக்கையில கேட்கிறேன்" என்றார் குடி மூப்பன். 

கரியாயியை அழைத்து குறி கேட்க வேண்டும் என்றால், கருக்கலா விடியலா என்று அறியமுடியாத சந்திப் பொழுதாக இருக்க வேண்டும். காட்டில் பெரு நெருப்பென எரிவது அவள் தான்.  காட்டையே விழுங்கி எரிந்து கரும் புகையென வடிவுகொண்டு சுழன்று மேல் ஏறுபவள். விரிசடையும், காட்டெருமை தோலால் ஆன தானையும்,  புளித்த கொடுங்கள்ளின் மணமுமாக  வனத்தில் உலாவும் கொடுந்தெய்வம். அவள் விரும்பிக்கொள்ளும் பலியும் பளிங்கு கல் என விழி உருண்டிருக்கும் எருமைத் தலைகள் தான். வனத்தீயில் வெந்துகரியான கொம்புகளையும்,  எலும்புகளையும் காட்டெருமை நரம்பால் கட்டி கழுத்தில் கட்டி ஆடிவருவாள். ஓங்கிய வலது கையில் ஆணைத் தொடை எலும்பாலான ஏழு கூர் கணுக்கள் நீட்டிய தண்டாயுதத்தை ரத்தம் சொட்ட சொட்ட பற்றியிருப்பாள். அலை அலையாக கனத்து பெருகிய கற்றை மயிர் முழுங்கால் வரை நீண்டு விரிந்து கிடக்கும். உலகம் பிறந்த கனத்திற்கு முன் உறைந்து நின்றவள். இன்னும் பூக்காத குறியும், இன்னும் சுரக்காத முலையும் கொண்டவள். என்றுமே பிறவாத அண்டங்கள் அவள் அடிவயிற்றில் முட்டைகளாக ஒடுங்கி இருந்தன. அவை முறிவதும் இல்லை பூப்பதும் இல்லை. அதனாலேயே என்றுமே கன்னி என்றும், முழுமங்கலை என்றும் அழைத்தார்கள் அவளை.  அவள் அடிவயிற்றின் நிறைந்த அண்டங்கங்களின் ஒன்றின் நிழலே இவ்வுலகம்  என்றானது. அவள் உடலில் குழியென ஒட்டி நிற்கும் வயிறு இவ்வுலகத்தை எல்லாம் உண்டபின்னும் நிறையாதது. அத்தனையும்  உண்டு செரிப்பவள், செரித்து  ஒழிந்த பின்னும் தான் மட்டுமாக எஞ்சுபவள். 

முதன் முதலாக இள மூப்பன் இவள் உருவும் வடிவும் கண்டு சொன்னதில் இருந்து மெலிந்த உடலும் கொடு வாசமும்,  எலும்புத் தண்டமுமாக வனத்தில் அவள் திரிவதை காணாதவர்கள் இதுவரை எவரும் இல்லை.  அவளை எலும்பி என்றும் அழைத்தார்கள். அவள் வழமையாக நடக்கும் பாதைக்கு மேல் மரங்களோ செடிகளோ வளராது. மெலிந்த உடலுக்கு பொருந்தாத ஐந்து தலைகள் கொண்டவள். அவளது நான்கு முகங்கள் திசைகளை நோக்கின, அவள் ஐந்தாம் முகம் திசைமுகங்களின்  மேலேறி அந்தரத்தை மட்டும் நோக்கியது. திசை முகங்களின் இரு நான்கு கண்களை மட்டுமே குடி அறிந்திருந்தது. கள்ளில் மயங்கிச் சிவந்த பெரிய கண்கள். அதனால் அவளை கண்ணாயி என்றும் அழைத்தார்கள். அவள் ஐந்தாம் இரு கண்கள் எப்போதும் கீழ் நோக்கி தழைவதே இல்லை. அவ்வாறு தழைந்தால், அவ்விழி நோக்கை எவரும் கண்டால் உடல் பொசுங்கி உயிர் துறப்பார்கள் என்று குடியே நம்பியது. உடலில் எலும்பென கூடுபவள் அவளே. ஏழுகுடியில் எவர் மாண்டாலும், அவர்கள் தொடை எலும்பை கீறி எடுத்து அதை அவள் இருக்கும் திசை நோக்கி கானகத்தில் வீசிவிட்டே ஈமக்கடன் செய்து கல் நிறுத்தினார்கள்.  

Image credit : Google

அம்மை எழுவரில் இவள் ஒருத்தியை மட்டும் அழைப்பதும், இவளுக்கு படைப்பதும் எளியது அல்ல. சொல் வாக்கு மனம் மூன்றிலும் கவனம் கூடியே இவளைக் கும்பிடவோ, கொண்டாடவோ முடியும்.  கொடுவாசக்காரிக்கு செந்தாழை மலரை மடல் மடலாக பறித்து தரையில் விரித்து வைத்தார்கள்.  அதன் மேல் புளித்த கள்ளுக்குடமும் ஆனை தொடை எலும்பாலான தண்டமும் வைத்து காரியாயியை அழைத்தார்கள். படைப்பு விரித்த இடத்திற்கு மேல் மரமோ தழையோ இல்லாமல் வெட்ட வெளியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.

காரியாயி வந்து படைப்புக்கு உத்தரவு ஆனதும்,  காரிமலைக் குடி மூப்பன் "ஆயி" என்றார். என்ன என்பது போல கண்ணாயி பார்த்தாள். "எனக்கும் மூப்பத்திக்கும் மகவு ஒன்ன அம்மை அருளணும்" என்றார் மூப்பன்   

கண்ணாயி எங்கோ நோக்கிய படி சொன்னாள்  "மூப்பனே அறிஞ்சு தான் கேட்கிறியா?" மூப்பன் ஒன்றும் சொல்லாது நின்றார்.

கண்ணாயி சொன்னாள், "மூப்பனே நான் நீ அறிஞ்ச உலகத்துக்கு புறத்தில நிக்கிறவ.  நீர்த்துளியில ஜொலிக்கிற கதிரா என்னை சுருக்கிகிட்டு உன் முன்னாடி வரேன். அத்தனைக்கும் வெளிய நின்னு காக்கிறது தான் என் பொறுப்பு. இதுக்குள்ள வந்து அருள்றதுக்கு நான் ஆள் இல்ல. என் அருளும் அழிவாதான் வரும். அதனால தான என் படைப்பில மிஞ்சுறதையும் யாரும் உண்ணாம குழி தோண்டி புதைக்கிறீங்க? மலரைக்கூட சூடறது இல்ல. என்கிட்ட கேட்கலாமா ?" என்றாள் 

"ஆயி, மூனு சுத்தத்தில மன சுத்தம் போனதால, எனக்குன்னு கேட்க தோனிடுச்சு. அது வாக்குலையும் வந்துடுச்சு,  சொன்ன  சொல்ல நானும் திரும்ப எடுக்க முடியாது, கேட்ட பின்ன அளிக்காம போறது உனக்கு ஏத்ததும் இல்லை. உள்ளபடி  நடக்கட்டும்" என்றார் மூப்பன்.

"காரி மலை குடி மூப்பா சொல்றேன் கேட்டுக்கோ, முன்னால ஒரு பிறப்புல நீ கரு நாகக் குழவி ஒன்ன அறியாம கொன்னுட்ட, அந்த பலன் தான்  உன் சொல் பிழைக்க காரணம். தவிச்ச தாய் நாகம் ஒரு துளி உணவும் உண்ணாம பசிச்சிருந்து மாண்டுச்சு. இந்த பிறவியில உனக்கு மனைவியா வந்தவ அந்த நாகம் தான். அன்னைக்கு நீ கொன்ன நாகக்குழவியே உனக்கு மகனா பிறக்கும். போ" என்று மலையேறினாள் காரி.

Image credit : Google

காரி அருளியபடி பத்தாம் மாதம், மகவு ஒன்றை ஈன்றாள் செம்பி. அவனுக்கு கரியன் என்று பெயர் சூட்டி வளர்த்தார்கள். கரியன் குடிலில் பிரண்டு குப்பிற விழுந்து, முட்டும் கைகளும் ஊன்றி தவழ்ந்து, நடை வாசல் பிடித்து நின்ற பின் நடந்து காரிமலை எல்லாம் வளர்ந்தான். அவனுக்கு ஈரேழு வயது ஆனதும் மேல மலைக்குடியில் அம்மான் வீட்டில் பிறந்த பவளாயியை மணம் பேசி கட்டி வைத்தார்கள். வயது ஈரேழும் நான்கும் ஆனபோது அவன் மனையாள் பவளாயி ஆண் பிள்ளை ஒன்றை ஈன்றாள்.

வம்சம் பெருகியது. வயது தழைய தழைய கரியனின் அழகும் பெருகியது. கரியனின் திருத்தமான அழகும், அவன் கோல் பிடித்து நடக்கும் நறுவிசும் தாழ்வாரக் குடிமுழுதும் பேச்சானது. அவனைக் கண்ட கண்ணை எவரும் எடுப்பதில்லை. நீர் வழிந்து வழிந்தே மலைத் தடம் மினு மினுப்பு கொள்வதுபோல தலைமுறை தலைமுறையாக திருந்தி திருந்தி வந்து அதுவரையும் குடியறியாத ஆணழகென பொலிந்திருந்தான் கரியன். அத்தனை மூப்பத்திகளும் அவனை தங்கள் மகன் என்றே கருதி அவன் எதிர்வரும் போதெல்லாம் நெட்டி முறித்து கண்ணேறு கழித்தனர். இளம் பெண்கள் கண்டால் உடல் கூசி சிலிர்த்து, நெஞ்சம் விம்மி, கண்ணில் நீர் படர பெரு மூச்சு விட்டனர். உலகறியும் வரை அத்தனை பிள்ளைகளும் அவனையே அப்பன் எனக் கண்டனர். அங்கிருந்த இளந்தாரிகள் மட்டும் அவன் உருக்கண்டு உள்ளூர வெறுத்தனர். தங்கள் பெண்டுகளோடு கூடுகையில் 'அவனை எண்ணுவாளோ' என்று இவர்கள் எண்ணினார்கள்.  துளியென அவர்கள் நெஞ்சில் விழுந்த நச்சு, ஒன்று நூறென பெருகி ஒவ்வொருவர் உள்ளும் நிறையத்துவங்கியது. தான் அடைய வேண்டியது பறிக்க படுகிறதோ என்னும் ஐயத்தில் இருந்து எழுந்தது ஆண்கள் தங்கள் உள்ளத்தில் கருதி வைத்த நஞ்சு. பதனியை அதன் இனிமையே முறித்து புளிக்க வைத்து கள்ளாக்கும். அது போல கரியனை அடைவதற்கான ஏக்கமே திரிந்து இயலாமை என்னும் நஞ்சாக முறிந்தது பெண்கள் உள்ளத்தில்.  ஒவ்வொருவரும் உள்ளூர ஒளித்தனர் வஞ்சம் என்னும் கூராயுதத்தை. ஓரிரவில் தன் கணவனுடன் கூடிய பெண் ஒருத்தி மைதூனத்தின் எல்லையில் பிதற்றினாள் "அள்ளி உண்கிறேன் உன்னை" என்று. அவள் உண்டது அவனையே என்பதை துணுக்கென்று அறிந்தான் அவள் கணவன். "கொல்க அவனை" என்ற சொல் உதித்தது இருவர் நெஞ்சிலும். 

சொல்லாக ஆகாத எண்ணத்தை மட்டுமே உள்ளத்துள் முற்றிலும் கரந்து வைக்க முடியும். எண்ணம் என்று உதிக்கும் தோறும் அது சொல் என்றே மலர்கிறது. அவ்வாறு முளைத்த சொல் ஒரு நாள் இல்லை ஒரு நாள் வெளிபோந்தே தீரும்.  ஒரு நாள் ஏழு குடி இளந்தாரிகளும் கூடி வட்ட பாறையில் கள்ளருந்தி அமர்ந்திருந்த வேளையில், அதுவரை யாரும் சொல்லாது வைத்திருந்த அச்சொல்லை பெயர் அறியா பித்தன் ஒருவன் கள் மயக்கில் சொன்னான் "கொல்க கரியனை, அவன் அழியாவிட்டால், காடழியும்" என்று.  பலரும் பார்த்திருக்க இடைத்தானை விலகி நிர்வாணம் ஆனவர்கள் போல் உள்ளம் பதற மொழியற்று அமர்ந்திருந்தனர் ஒவ்வொருவரும். காட்டில் வெள்ளம் கரும் பாறைகளையும்  வெட்டி உருட்டியபடி ஓடி பெருகி வரும் சில நேரம். அதுவரையான தடைகள் உடைய, அத்தனை உள்ளத்திலும் பொதிந்து வைத்திருந்த வஞ்சம் மொத்தமும் பெருகி ஒழுகியது. பேசிய சொல் எய்யபட்ட அம்பு. எய்த அம்பு ஒன்று சரியாக தைக்கவோ, அல்லது பிழைக்கவோ செய்யலாம், ஒரு போதும் திரும்பி வருவதில்லை. அங்கேயே திட்டம் ஒன்று உருவாகியது. வேட்டைக்கு என்று கரியனை அழைத்து சென்று கள்ளும் கொடுத்து சூழ்ந்து கொல்வது என்று முடிவானது. 

பன்றி வேட்டைக்கென்று காரி மலை காட்டிற்குள் காரிமலைக் குடி தவிற ஆறு குடியில் இருந்தும் ஆறு இளந்தாரிகள் கூடி கரியனை அழைத்துக்கொண்டு ஏழு பேராக சென்றனர். வேட்டைக்கு செல்கையில் கள் மாந்தும் வழக்கம் இல்லை கரியனுக்கு. ஏழு பேரில் பச்சைமலை இளந்தாரி கள்ளில் பச்சிலையும் கலந்து ஏழம்மைகளுக்கு படைத்தது எனச் சொல்லி கரியனிடம் கொடுத்தான். மேல மலை குடி இளந்தாரி அவன் மயங்கத் துவங்கவும் அவன் பிடித்திருந்த கைக்கோலை பறித்து முறித்திட்டான்.  பொலன மலைக்காரன் அவன் இடையில் சொருகியிருந்த குத்துவாளை பறித்தான்.  செம்மலைக்காரன் கரியனின் இடைக்கச்சையை  உருவி அவன் கைகளை பின் புறமாக கட்டிவைத்தான். வெள்ளை மலைக்காரன் அவனை மண்ணோடு சேர்த்து அழுத்தி பிடித்துக்கொள்ள, செல்லி மலைக்காரன் பெருங்கல் ஒன்றை எடுத்து ஓங்கி கரியன் மேல் ஏறிந்தான். எறிந்த பாறை கரியனின் வலது தொடையை பிளந்து தொடை எலும்பை தெண்ணி வெளியே தள்ளியது. அந்த  தொடை எலும்பையே பறித்து கரியனை குத்தி கொன்று அதையே அடையாளமாக கொண்டு அறுவரும் காரிமலை இறங்க நினைத்த வேளையில்,  தைலப்புற்கள் உரசி சிறு நெருப்பொன்று பற்றி மட மடவென பரவி காடே கொழுந்து விட்டு எரிந்து ஆறு பேரும் அங்கேயே மாண்டனர். கரும்புகையாக சுழன்று மேலேறினாள் கரியாயி. அத்தனையும் எரிந்த பின் கரியனின் தொடை எலும்பு மட்டும் துளி வெண்மையும் குறையாது எஞ்சியது. 

Image credit : Google

கரியன் மாண்ட பிறை மீண்டும் வந்த இரவு, அவன் ஈமக்காரியம் முடிந்து மதுவும் தேனும் உண்ண காரிமலைக்குடிகள் மூப்பன் குடில் முன் கூடிய போது, கரியன் இளம்பிள்ளை ஒருவன் மேல் இறங்கி அவன் தந்தை மூப்பனுக்கு வாக்கு சொன்னான். "என்னைக் கொன்ன பலி  தீர என்னையே மகனா பெத்து  இழந்தீர். நானும் வஞ்சத்தால மாண்டேன். என் தொடை எலும்பால என்னைக்  குத்தி சொருகிய போது நான் அம்மையோட அஞ்சாம்  முகத்தை கண்டேன்.  தாயொருத்தியோட முலையூட்டி சொக்கிப் போன முகம். அதுல பேரமைதி மட்டும் தான் இருந்துச்சு. சங்கிலி தொடரப் போல வினையும் விளைவும், வந்தா வந்த படியே தான் இருக்கும்.  இனி எந்த வஞ்சத்தையும் சுமக்க ஏலாது என்னால. காரி மலை முகட்டில செந்தாழம் புதர் பக்கத்தில கருநாக குழவியாக மீண்டும் பிறப்பேன். அங்கயே என்னைக் கொன்ன ஆறு பேருக்கும் சேர்த்து ஏழு கல் நிறுத்துங்க. உலகைத்தையே அம்மை உண்டு செரிக்கிற அந்நாள் வரைக்கும் அங்கயே வாழ்ந்து இன்னும் எனக்குள்ள எங்கயோ எஞ்சியிருக்கிற துளி வஞ்சத்தையும் துறந்து அவகிட்டயே போய் சேர காத்திருக்க போறேன்.  அதுவரைக்கும் இந்த ஏழு குடித் தாழ்வாரத்துக்கும்  நாங்க ஏழு பேரும் தான் காவல். மத்த ஆறு பேருக்கும் கழுவாயும் அதுதான். இந்த குடியும் மக்களும் இன்னும் நூறு நூறாயிரமுமா பெருகி காடும் கரையும் தாண்டி பரவுவீக. அப்பையும் ஏழு அம்மைகளோட நாங்க ஏழுபேரும்  கூட உங்க நினைவுக்குள்ளையும் கனவுக்குள்ளையும் நீங்க அறிஞ்சோ அறியாமலோ நிறைஞ்சு இருப்போம். இந்த குடியில பிறந்த ஒவ்வொரு குழவியும் தூளியில உறங்கையில கிளுகிளுப்பையும் கிண்கிணியும் ஆட்டி விளையாடி சிரிக்க வைப்போம். உங்க குடில் முத்தத்தில உதிர்ந்து விழுற பூவும், மழைத்துளியும் எல்லாம் 'பொலிக பொலிக'னு எங்க சொல்லா உங்கள வாழ்த்தட்டும்" என்று முகமும் அகமும் மலரச் சொன்னான். கரியன் சொன்னபடி காரிமலையில் கல் நிறுத்தி பலிக்கொடை கொடுத்தார்கள். கருநாக குழவியாக பிறந்து வளர்ந்து அந்த புற்றில் ஈரேழு வருட மிச்ச  வாழ்வையும் வாழ்ந்து நிறைந்தார் காரிமலை கரி மூப்பன்.   அவரோடு கூட மற்ற ஆறுபேரும் அவருக்கு அண்ணன்மாராக நிலைத்தனர். 

"காரிமலை மேல அந்த ஏழுபேரும் நின்ன இடத்தத்தான் நாம ஏழண்ணன்மார் திட்டைனு சொல்றோம்.  கரியன் வழி வந்த காரிமலைக்குடிதான் ஏழு குடிக்கும் காவ பொறுப்பு. நம்ம குடித் தாழ்வாரங்கள்ல, கம்பங்கொல்லைகள்ல கானுசுர்க அண்டாம காவ காப்பதும் அவுக தான்.  வருஷத்திலே ஒருமுறை கரியனோட சேர்த்து ஏழு பேருக்கும் காவக்கூலியும் படையலும் இன்னைக்கும் கொடுத்து வாரோம். படையல் அண்ணன்மாருக்கு, காவக்கூலி காரிமலைக் குடிகளுக்கு." என்றார் மூப்பன். 

"அது எப்படி மூப்பா, கொன்னவனும் செத்தவனும் ஒன்னா காவக்காரனா இருக்க முடியும்?" என்றான் இளையா

"இளையா, கரியன மாதிரி பெரிய உசுருக எப்பவுமே தெய்வங்க தான். அவுகளுக்கு மட்டும் தான் இந்த வஞ்சத்தை எல்லாம் எங்கயோ கடக்க தெரியுது. அவுக கடக்கையில அவுக எதிராளியும் கையொழிஞ்சு போறான். எதிராளியையும் கூட்டிக்கிட்டு கடந்திறாக. இந்த வயசுலயும் எனக்கே  இன்னும் முழுசா விளங்காத ஒண்ணுதான் இதெல்லாம், நான் என்ன சொல்ல? கரியனுக்கு எங்க இருந்து இதெல்லாம் வந்துச்சு? எல்லாம் விட்ட குறை தொட்ட குறையோ என்னமோ?" என்று கைகளை மலர்த்தி  காட்டியபடி சொன்னார் மூப்பன். செந்தாழம் மலரும் எருமைத்தோல் தானையும்  சாற்றி, கரியனின் தொடை எலும்பில் செய்த தண்டத்தையும் பக்கத்தில் நிறுத்தி, கருங்கல்லாக வீற்றிருந்த  கரியாயிக்கு படையல் வைத்து,  குங்கிலிய புகையிட்டு, தண்டனிட்டு வணங்கி, மிச்சத்தை அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டு, ஏழம்மை திட்டை விட்டு இறங்கி வந்தார்கள் மூப்பனும் இளையானும். 

Image credit : Google

***
 
இவ்வாறாக மலைக்காணி சொன்ன கதையை மீண்டும் கோவிந்தன் தாத்தா சொல்ல நாங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தோம் திண்ணையில் அமர்ந்த படி. இப்படி சில கதைகளை மீள மீள சொல்லிக்கொள்வதும் கேட்பதும் வழக்கம் தான். அதோடு கூட அன்று ராமசுப்பையைர் ஆனமந்தி வைத்தியர் எழுதிய அஸ்தி தாது பற்றியும் சொன்னார். 

"இந்த மலைக்காணி கதையில வராப்பில, அஸ்தியோட அபிமான தேவதை புகையோட வடிவத்தில வந்தான்னுட்டு ஆனமந்தி வைத்தியரும் எழுதி வச்சிண்டு இருக்கார்டா கோவிந்தா" என்று சொல்ல துவங்கினார் ராமசுப்பையார். 

"கரியாயியையும் எலும்பினு தான சொன்னான் மலைக்காணி" என்றார் தாத்தா. ஆனமந்தி சுப்பிரமணிய ஐயர் எழுதினதை அவர் எழுதியபடி ராமசுப்பையர் சொல்லத்துவங்கினார்.

வடக்கு அகத்தில் பெரிய தகப்பனார் அனேகுந்தி கைலாச ஐயர் மறைந்து அவர் உடல் தகனம் கழிந்த இரண்டாம் நாள் தலை முதல் பாதம் வரையாக நெருப்பில் எஞ்சிய அஸ்தியை சேகரித்த போது, உடலும் மயிரும் வேகும் துர்வாடையுடன் உடல் உரசி நின்றாள் புகை நிறத்தில் ஒரு பெண். எவரும் அறியாமல் நான் மட்டுமே அறிகிறேன் அவளை என்று அறிந்து கொண்டேன்.  சுடு காட்டில் காரியங்கள் ஒழிந்து குளக்கரையில் தலைமுழுகி உடுத்திய வஸ்திரமும் அலசி ஏழு முறை உதரிக்கட்டிய போதும், காலிற் கணீரென சலங்கை மணிகள் குலுங்க கரும் புகையென என்னை சூழ்ந்தபடியே  உடன் வந்தாள். அவள் தீண்டிய இடங்கள் சிலிர்த்துக்கொண்டே இருந்தன. ஊர் நுழைந்து தெருக்கள் கடந்து மனை முற்றம் அடைந்த போதும் என் அடிக்கு இணையடி வைத்து எவரும் அறியாத உருவில் என்னருகில் அவளும் நின்றாள். மனிதர்கள் அவளை அறியாத போதும். தெருவில் பசுக்கள் அவள் வரவறிந்து  வழி ஒதுங்கி நின்றன.

மனை எற இடக்காலை படியில் வைக்க எத்தனித்த போது வெடுக்கென்று வந்த பார்யாள் வசந்தம் சொன்னாள்  "இப்ப நடை ஏறாதேள்ணா, குளிகை ஆரம்பிச்சிடுத்து. தீக்காலோட வந்திருக்கேள். அதோடு நடை ஏறினேள்னா திரும்ப திரும்ப அதுவே நடக்கும்பா. செத்த பொறுத்து,  ஒரு முஹூர்த்தம் கழிஞ்சு வாங்கோ" என்ற என்னையே நோக்காமல் தரையில் கிடந்த என் குறுநிழலையே நோக்கியபடி சொல்லி விட்டு சென்றாள். 

அருகில் புகை வண்ணக்காரி சிரித்துவிட்டு "ஒரு முகூர்த்த காலம், எனக்கு போது ஒதுக்கியிருக்கா போல, உன் ஆம்படையா" என்றாள். நடு உச்சி கடந்த நேரம் தெருவில் யாருமே இல்லை.  எனக்கும் ஏனோ சிரிக்கவே தோன்றியது. 

"உங்களோட போக்கும் வரவும் நேக்கும் பழகி போயிடுத்து" என்ற மனதுக்குள் சொல்லியபடி வலதுபுறம் திண்ணையில் மரத்தூணில் சாய்ந்த படி அமர்ந்தேன். அவளும் கல கல என சிரித்தபடி அமர்ந்தாள் எதிரில். 

"யார் நீ" என்றேன் 

"நீயே சொல்லேன்" என்றாள் 

"தெரியலையே, அஸ்திக்கு தேவதையா?"

"ஆமாம்,  ஸாகினீனு பேர் கொடுத்திருக்கா எனக்கு. மூலாதாரத்தில் வீற்றிருக்கிறவ நான்"

"நான் என்ன தெரிஞ்சுக்கணும்"

"அது எனக்கு எப்படி தெரியும்"

"அப்புறம் ஏன் வந்த?"

"நீ தான மந்திரத்தால கூப்பிட்ட?"

"நானா?"

"ஆமாம் நீ தான்" 

"நான் யாரக் கூப்பிடறேன்னு நேக்கே தெரியாதே. குருமார் சொன்னத கிளிப்பிள்ளையாட்டம் வெறுமனே சொல்லிண்டு இருக்கேன்"

"உனக்கு தெரியாட்டா  என்ன,  மந்திரத்துக்கு தெரியுமோன்னோ,  அதுவே கூட்டிண்டு வந்துடும்" 

"ம்"

"இந்தா பிடி" என்று நீட்டினாள். அவள் சாம்பல் நிற விரல்களுக்குள் பற்றியிருந்த எலும்பின் துகள் ஒன்று உதிர்ந்து என் உள்ளங்கையில் பஸ்மமாக விழுந்தது. 

"வாயில இட்டுக்கோ" என்றாள். வாயில் இட்டுக்கொண்டேன். வெண்ணிறத்தில் ஒரு ஒளித்துளி என அச்சாம்பல் தொண்டைக்குழி கடந்து உணவுக்குழாய் கடந்து வயிற்றில் விழுந்தது. அந்த ஒளித்துளியே ரசம் என்று ஆனது. அதிலிருந்து ரக்தம் எழுந்தது, ரகத்தில் இருந்து மாம்சம் மிளிர்ந்து உதித்தது. மாம்சத்தில் பிறந்த மேதஸில் ஒரு பகுதி போஷக மேதஸ் என்றாகி பெருங்குடலின் மேல் சவ்வாகிய புரீஷதராகலையை அடைந்து அஸ்தி அக்கினியால் வெந்து அஸ்தி தாதுவாகி ஒளிர்ந்தது. 
 
அதில் இருந்து சிதறி என் உடற் கூடென எழுந்தது. கபாலம், ருசகம், வலயம், தருணம், நலகம்  என்னும் ஐவகை எலும்புகள் ஆகி தலை, கன்னம், மேல் கீழ் தாடைகள், பற்கள், காதின் மடல் எலும்புகள், நாசியின் குருத்தெலும்புகள், கழுத்து, நீண்ட தோள் எலும்புகள், தோளிலிருந்து இறங்கும் புஜ எலும்புகள், முன் கைகள், கைவிரல்கள், நெஞ்சின், விலாவின்,  இடை, தொடைகளின் எலும்புகள், சரடென  கோர்த்திட்ட முதுகு எலும்புகள், பிட்டத்தின் வட்டுகள், மூட்டுகள், முழங்கால் எலும்புகள், கணுக்கால், கரண்டை, குதிகால் பாதத்தோடு விரலின் அத்தனை எலும்புகளும் வெண்ணிறத்தில் ஒளிர்ந்தன. தசைக்குள்ளும் தோலுக்குள்ளும் தகித்தன. உடலின் தாதுக்கள் அத்தனையும் அழியும் போதும் அழியாது எஞ்சுவதால் அஸ்தி என்றும்,  வட்டமாய் வடிவு கொள்வதால் கிகாசம் என்றும், குழாய்களை போல நீண்டிருப்பதால் குல்யம் என்றும்,  மரணத்தின் பின்னும் உடலின் சாரம் என எஞ்சுவதால் சாரம் என்றும், உடலின் ஆதாரச் சட்டம் என அமைவதாலும், உடலையே தாங்குவதாலும் தேஹதாரகம் என்றும் பெயர் கொள்வது அதுவென்று அறிந்தேன். மஜ்ஜை என்னும் ஆறாம் தாது அதிலிருந்தே பிறக்கிறது. உடல் உறுப்புகள் பேணப்படுவதும், உடல் நடமாடுவதும் அதனாலேயே.  ஒலிகளை கடத்தி அவற்றை  உணரச்செய்வதும் அதுவே.
Image credit : Google

புகை வண்ணக்காரி வெளி முதல் பூதங்களாகிய ஐந்தும், ஐந்து முகங்களென அமைய பெருவடிவம் கொண்டு தோன்றி, நான்கு கரங்களில் அங்குசம், தாமரை, புஸ்தகத்தோடு ஞான முத்திரையும் காட்டி, 'வ' என்னும் அக்ஷரத்தால் குறிக்கும் வரதா என்னும் யோகினியும்,  'ஶ' என்னும் அக்ஷரத்தால் குறிக்கும் ஸ்ரீ என்னும் யோகினியும்,  'ஷ' என்பதால் ஷண்டா என்னும் தேவதையும், 'ஸ'கரத்தால் ஸரஸ்வதீ தேவியும் சூழ நாலிதழ் கொண்ட மூலாதார தாமரையில் புகையெனப் புகுந்து மறைந்தாள். முக்தெளதனம் எனப்படும் பயறு கூட்டிய பொங்கல் அன்னத்தில் பிரியம் உள்ளவள். மதுவால் மயங்கிய விழிகள் கொண்டவள். 

"ஏண்ணா" என்று அழைத்ததாள் வசந்தம். வாசலில் நீரும், மாடத்தில் வீபூதி மரவையையும் எடுத்து வைத்திருந்தாள். "குளிகை கழிஞ்சிடுத்து,  கால அலம்பிட்டு விபூதிய இட்டிண்டு உள்ள வாங்கோ" என்றாள். 
***

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19