ஐயன் பந்தி - 9

புவியேழையும் பூத்தவளே - 5

Image Credit : Google

ரக்தாக்ஷி ஆண்டு சைத்ர மாதம், சித்ரா நக்ஷத்திரமும் பூர்ண பொர்ணமியும் கூடிய புதன் கிழமையில்  ஆனேகுந்தி சுப்பிரமணிய சர்மனாகிய நான் குலதெய்வமாகிய தொண்டிக்கரை ஆகாச கருப்பனின் அருளாலும் சன்னாசிகள் கொடுத்த மந்திரத்தின் பலத்தாலும் சப்த தாதுக்களில் நான்காவதாய் அமைந்த மேதஸின் அபிமான தேவதையாகிய காகினி தேவியை கண்டேன்.

மாலை கனிந்து இரவு அணையும் வேளையில், சன்னாசிகள் கொடுத்த மந்திரத்தை உருவேற்றியிருந்த போது கூடத்தில் இட்டிருந்த நான்முக விளக்கில் எரிந்த சுடர்கள் நான்கிலிருந்தும் ஒளியென இறங்கி ஓர் உருவம் கொண்டு என் முன் அமர்ந்தாள் காகினி தேவி.  "துஷ்டி புஷ்டி மதி த்ருதி என்னும் நான்கும் என்னுடைய முகம்"  என்றாள். 

"உடலில் மேதஸ் என்னும் கொழுப்பின் வடிவில் இருப்பவள். அனைத்தையும் உடையவள் என்னும் நிறைவும்,  அனைத்தினுள்ளும் நிறைந்து பலம் என்றும்,  அனைத்தையும் அறிகின்ற அறிவென்றும்,  உடலிற் செயலில் வெளிப்படும் தைரியம் என்றும் விளங்குபவள் நானே. அன்னை என்றே உன் முன் வந்தேன். அன்னை என்பதாலேயே நிறைந்த கர்வம் உடையவளானேன். அதிகர்விதா என்று  என்னை அழைக்கிறார்கள் வாக்தேவிகள். போதும் என்ற நிறைவால், அதில் முகிழ்த்த பலத்தால்,  அதனால் விளைந்த ஞானத்தால் உதிக்கின்ற திடம் என்று வெளிப்படுபவள். அந்நிலை பெற்ற ஜீவனையே திடச்சித்தன் என்கிறார்கள். அவன் அலைவுறுவதில்லை, அச்சம் கொள்வதும் இல்லை. அவனே நிரந்தரமற்ற இக இன்பத்தை துறந்து என்றுமுள்ள பரத்தை நோக்கி திரும்புகிறான். என்றும் இன்புற்று இருக்கிறான். அந்த பேரின்பம் என்னும் மதுவில் திளைத்து சிவந்திருக்கின்றன என்னுடைய நான்கு இரு கண்கள்"

"மகனே கேள்! உடல் அழிவுறுவதே, எனிலும் அருளப்பட்டது. உடலைக்  கொண்டே ஒரு ஜீவன் இயற்ற  வேண்டியது இயற்றி, ஏறிய பின் ஏணியை துறப்பது போல அதனையும்  துறந்து சாயுஜ்ஜயத்தை பெறுவான். அதன் பொருட்டே நிறைகிறேன் அவன் உடலுள்.   உலகின் முதற் துளி முகிழ்ந்து என்ன என்று திகைத்தது. அந்த துளி பிளந்து இரண்டாகி, பின் பலவாகி சிதறி, பெருகி பல்லாயிரம் கோடிகளாகி, அகிலாண்ட கோடிகளாக நிறைந்தது. ஆதியில் தோன்றிய அந்த 'என்ன' என்ற திகைப்பும் அதோடு கூட சிதறி ஒவ்வொரு அணுவிலும் நிறைந்தது. ஒவ்வொரு துளிக்குள்ளும் நிறைந்த அந்த கேள்வியும், அந்த கேள்விக்கு எதிர்வினையாக இவ்வுலகு ஆக்கி வைத்த அத்தனையும், அதன் முழுமுற்றான விடையென அத்துளிகள் ஒவ்வொன்றும் தன் அகத்தில் அனுபவிப்பதும் என்னையே. ஆனால் நான் அதற்கு அப்பாலும் இருப்பவள். முற்றும் என்னை நானே அறிவேனா என்பதையும் அறியேன்.  மாயையால் பிளவு படாதிருக்கும் போது மட்டும் அறியக்கூடுவது அது. ஆனால், அப்போது அறிதல் என்பதும் நிகழ்வதில்லை. அறிவு என்பதும் அறிபவன் என்ற தன்னிலையும் இல்லை"

"உடலும் உடற்கூறும் முற்றறிந்து அகமும் ஆகமும் பேணப்போகும் வைத்திய சிரோமணியே கேள். பிளவு படாதிருக்கையில் எதுவாகி எதை அறியக்கூடும் நான்?  ஒரு சிறு மர செப்பில் அடைத்து அதையே நான் என்று தொழுகிறீர்கள். உங்கள் பொருட்டு அவ்வாறே அருள்கிறேன். ஆனால் அந்த செப்பும் என் கால் தூசியை பிளந்த பல்லாயிரம் கோடி துகள்களில் ஒன்று அவ்வளவே. அதை ஒரு போதும் ஒருவரும் எண்ணி அறியப்போவதில்லை. மகனே! ஆகம்  என்னும் செப்புக்குள் அடைபட்ட என் வடிவு சொல்கிறேன் கேள்.  மாம்ச தத்வாக்னியில் எரிந்த போஷக மாம்ச தாதுவில் இருந்து பொன்னிறத்தில் உதித்து அடிவயிற்றில் கொழுப்பென படிந்தும், அமில வடிவில் உடல் எல்லாம் ஓடியும் நிறைபவள். கொழுத்து வழவழத்தவள், கனத்தவள். உடலின் ஒவ்வொரு உருப்பும் ஒன்றுடன் ஒன்றென முயங்கி இயங்குவதும், உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று உயவு கொள்வதும் என்னால். அவற்றிடையே பற்சக்கரங்களின் இடையில் இட்ட மையென திகழ்கின்றேன். போஷ்ய மேதஸ் என அடிவயிற்றில் படிந்தும், போஷக மேதஸ் என மாறி ரச ரக்த தாதுக்களுடன் உடல் எல்லாம் ஓடுபவளும், அஸ்தியை உண்டாக்குபவளும் நானே.  வியர்வையால் உடலை குளிர்விப்பதும், உடலை ஸ்திரப்படுத்துவதும், அஸ்தியாகிய எலும்பை ஊட்டுவதும் கூட என் பணிகளே. ரக்தத்தோடு  இணைந்து சிறு நீரகங்களையும், மாம்ச, ரக்த தாதுக்களோடு இணைந்து கப தோஷத்தால் விதைகளையும் உண்டாக்குகிறேன்.  மேனியின், கண்களின், உதடுகள், முடிகளின் ஈரம் என பொலிவதும், செயலில் மென்மையும், இனிமையும், மகிழ்ச்சியும், கொண்டாட்டமும்,  அதிகாரமும், அனுபவமாவது என்னால்."

"அகம் என்னும் மேடையில் என்னை நீ அறிய வேண்டிய வடிவம் சொல்கிறேன் கேள். பொன்னை ஒத்த மஞ்சள் நிறத்தில்,  நான்கு முகங்களுடன், அழகும் கர்வமும் பொலிந்தவளாக என்னை தியானி. சூலமும், கபாலமும் பாசாங்குசமும் என்னுடைய ஆயுதங்கள். குஹ்யஸ்தானத்திற்கு அருகில் சுவாதிஷ்டான சக்கரத்தில்  ஆறிதழ் கொண்ட தாமரையில் இதழுக்கொருவராக பந்தினீ, பத்ரகாளீ, மஹாமாயா, யஷஸ்வினீ, ரக்தா, லம்போஷ்டீ எனும் ஆறு தேவதைகள் சூழ வீற்றிருக்கிறேன். தயிர் விட்ட அன்னத்திலும், தேனாகிய மதுவிலும் பிரியம் கொண்டவள். 

இவ்வாறாக ஆனமந்தி வைத்தியர் சமஸ்க்ரிதத்திலும் தெலுகிலும் எழுதிய ஏட்டின் பிரதியை வாசித்து தமிழில் பொருளும்  சொன்னார் ராமசுப்பையர் திண்ணையில் அமர்ந்தபடி. நானும், மீனாட்சி பாட்டியும், கோவிந்தன் தாத்தாவும் கேட்டுக்கொண்டிருந்தோம் அதனை. 

Image Credit : Google

"இவளோட பொன்னிற வடிவம் நம்ம மலைக்காணி சொன்ன கதையில வர பொலனியை நினைவு படுத்துதுல சுந்தரம்?" என்றார் ஐயர். பொலனாயி ஏழுமலைக் குடிக்காணிகளின் மலையம்மைகளில் நாலாமவள். பொன்னிற வடிவம் கொண்டவள், இலஞ்சி மலர் சூடி திசைக்கொன்றாக நான்கு முகங்களுடன் விளங்குபவள். ஏழுமலைகளில் பொன்மலைக்குடியின் அம்மையென அமைபவள். மலைக்காணி  செம்பாயிக்கு புடவை பெற்று செல்ல வந்த இரவில்  சொன்ன நான்காம் கதை இது தான். 

மூப்பன் "பொலனிகிட்ட மட்டும் ரொம்ப கவனமா இருக்கணும்டா இளையா. ஆங்காரி. அவ முன்னாடி ஆடினா பிள்ளை விளையாட்ட பார்க்கிற மாதிரி பாத்துக்கிட்டும் இருப்பா, ஒரு எல்லை தாண்டும் போது பட்டுனு தட்டீரவும் செய்வா" என்று கண்கள் கூர்ந்து, ஒரு எச்சரிக்கை தோன்ற இளையானை நோக்கி சொன்னார்.

மூப்பனின் எச்சரிக்கையையும், கூர்த்த பார்வையையும் கண்டபோது, இளையானுக்கு சிறு பதட்டமும் குறு குறுப்பும்  மனத்தில் எழுந்தது. அருகில் யாரோ இருப்பது போல உடல் சிலிர்த்தது. இதுவரைக்கும் மூப்பன் எந்த அம்மையை பற்றி சொல்லும்போதும், இப்படி எச்சரிக்கை கொண்டதில்லை. இளையான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. மஞ்சள் வெயில் சரியத்துவங்கிய பொழுது மேல மலையில் இருந்து இறங்கினோம் பொலனாயிக்கு படையல் முடித்து. 

மூப்பன் மீண்டும் சொன்னார் "ஆங்காரி, போற வழி வார வழியில யாரும் வந்தாலும் கூட அவளுக்கு பிடிக்காது. பட்டுனு தட்டி முறிச்சு போட்டு போயிடுவா.  மகிழ மலரோட வாசனையா காத்துல ஏறி வரவ. கானுசர்களுக்கு இவ வரவும் போக்கும் தெரியும். இவ வாசம் கண்டா, விலகிப் போயிருங்க. மதம் பிடிச்ச ஆனை கூட,  ஒதுங்கி  நின்னு வழிவிடும்." 

"இவள எப்படி மூப்பா தெரிஞ்சுக்கிறது, அச்சமால இருக்கு"

"அவள தெரிஞ்சுக்க யாராலயும் முடியாதுடா இளையா. கருவோடு  பெண் பிள்ளை வந்தா கருவையும் அழிக்கிற பழிகாரிதான். ஆனா அம்மானு ஒருவாட்டி கும்பிட்டு விழுந்துட்டா,  ஏழு பிறப்புக்கும் அவ மடியில நம்மல பிள்ளையா தூக்கி வச்சுக்குவா, இறக்கி விடமாட்ட. அது போதும் நமக்கு. இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு தாய் நடக்கிற தூரத்தை பிள்ளையும் கடந்துரும், தெரிஞ்சா கடக்குது? அது மாதிரி முழுசா அவ கிட்ட ஒப்படைச்சா போதும்டா அவ பாத்துப்பா"

"வரையாட்டு மூப்பர் மட்டும் தான் இவள எதிர்த்தவர்னு சொல்றாகளே  மூப்பா, அதென்ன ? "

"அந்த கதையை சொல்றேன் கேளு. ஆதியில இளமூப்பனுக்கு பொன்னாயி மழைய நம்பி அதுக்கு உரிய காலம் கண்டு விதைக்கணும்னும், விதைக்கிற நிலத்தில நீர் தேங்கவும், அவசியம் வந்தா தேங்கின தண்ணிய வெளியேத்தவும் வழி வக செஞ்சு நிலத்தை திருத்தி வைக்கணுமுன்னும் ஆணையிட்டுருந்தா. அதன் படிதான் ஏழு குடிக்காரங்களும் கம்பரிசிய விதைச்சு அறுத்து வாழ்ந்தாக பல தலைமுறைகளா"

அப்படி வாழ்ந்து வந்த காலத்துல,  பொன்மலைக்குடியில் ஒரு மூப்பன் இருந்தாரு. அவர் ஒரு முறை கிழங்கெடுக்க மலைக்காட்ல திரிஞ்சப்போ பால் குடி மாறாத வரையாட்டுக் குட்டி  ஒன்னைக் கண்டு எடுத்திருக்காரு. தாயாட ஏதோ வேங்கை அடிச்சி இழுத்துட்டு போனத தடத்தால அறிஞ்சுகிட்டு, குட்டிய தூக்கிட்டு வந்து தன் குடில்ல விட்டு பிள்ளை கெணக்கா வளத்தாரு. ராவும் பகலும் அந்த வரையாட்டுக் குட்டியும் அவரோடையே வாழ்ந்துகிட்டு இருந்துச்சு. மூப்பன் 'ஓய்'னு ஒரு குரல்கொடுத்தா உடனே எங்க இருந்தாலும் ஓடியாந்திரும் குட்டி. காலம் போகப் போக குட்டியும் வளந்து முழு ஆடாச்சு. அந்த மூப்பரோட பேரே வரையாட்டு மூப்பனு ஆச்சு.  

பொன்னாயிக்கு படைப்பிடணும்னா அது அவ சொன்னபடி சொல் பிசகாம நடக்கணும். அவளுக்குள்ள பலிய அடையாளம் சொல்லி அவளே தான் காட்டி தருவா. பொன்னாயிக்கு படைப்பு போட உத்தரவு கேட்டு பொன்மலை தாழ்வாரத்தில அந்த குடி ஆளுக எல்லாம் கூடினாக, ஒரு அமாவாசை கழிஞ்ச அஞ்சாம் பிறை உதிச்ச அன்னைக்கு. மான் தோல் தானைய விரிச்சு ஆசனம் இட்டு ,கலசத் தண்ணியும் மகிழம்பூவும் வச்சு, பந்தம் கொளுத்தி, ஒரு குடம் நிறைய இறக்கின புளிக்காத பதனியும் வச்சு, தமுக்கு கொட்டி அழைச்சாக. பொன்மலைக்குடியில அத்தனை பேரும் நிலத்தில குத்தி வைச்ச பந்தத்தை சுத்தி நின்னு காத்திருந்தாக அம்மை வரவுக்காக. பந்தம் ஒரு அசைவும் இல்லாம எரிஞ்சுக்கிட்டிருந்துச்சு. படனு படனு முறியிற நெருப்புச் சத்தமும்,  எப்பையாவது சின்ன பிள்ளைக எழுப்பிற சத்தமும், காட்டுச் சத்தமும் தான் கேட்டுகிட்டு இருந்துச்சு. ஒரு பெரிய காத்து மேல மலையில இருந்து வீசி விரட்டி வர, வந்த காத்து பந்தத்து சுடர தெற்காம தள்ளி திருப்பி,  அதுக்கு நேர நின்ன ஏழுவயசுக்காரி மேல இறங்கிச்சு பொன்னாயியா. அந்த பச்சை பிள்ளை திங்குனு குதிச்சு கதிக்க நின்னப்ப அவளுக்கு நேர மொத்த கூட்டமும் யாரும் சொல்லாமலே இடமும் வலமுமா பிரிஞ்சு வழிவிட்டாக. அவ நாலு முகமும் பார்த்த திக்கெல்லாம் தலைமுடியில வகுடு எடுத்தாப்பல மக்க விலகி நின்னாக.  நேர அவ முகம் கண்டு எதிர்த்து நிக்க எந்த  உசுருக்கும் பொருதியில்லைல?

'என்னடானு' ஆங்காரமா அரற்றி உதைச்சு ஊனினா வலது கால திடும்னு. எங்கயோ மலைமுகட்டுல இருந்து பாறைக உருண்டு சரிஞ்சு விழற சத்தம் கேட்டுச்சு. வலது கைய உசத்தி நிறுத்தினா. வீசின காத்து பட்டுனு நிக்க, பந்தம் மட்டும் அவள நோக்கியே எரிஞ்சிட்டு இருந்துச்சு.

பொன்மலையின் வரையாட்டு மூப்பன் அவளுக்கு வலப்புறமாக வந்து அவள் முகம் நோக்காமல் காலடிகளையே   நோக்கியபடி "அம்மை படப்புக்கு உத்தரவு தரணும்" என்றார்.  

"நீ நடத்தீருவியா டா" என்றாள் பொலனி 

"நடத்தீருவேன்மா" என்று அறியாமலேயே சொன்னார் வரையாட்டு மூப்பன். அவர் சொன்னதுமே சொல் பிழைத்ததை  குடி மொத்தமும் அறிந்தது. "நீ தான்மா நடத்தி தரணும்" என்று தான் சொல்லியிருக்க வேண்டும். வழக்கமும் முறையும் அறிந்த மூப்பனுக்கே சொல் பிறழ்வது அவள் விளையாட்டு.

"பலிக்கு அடையாளம் சொல்றேன் கேட்டுக்கோ, அது மாறினா நான் ஏத்துக்க மாட்டேன்" என்றாள் 

"நீ என்ன சொல்றியோ அப்படியே நான் செய்றேன் அம்மையே" என்றார் மூப்பன். 

அடங்காத பெரும் சிரிப்பொன்றை சிரித்து விட்டு பொலனி சொன்னாள்  "பொலனமலை முகட்டில இலஞ்சி மரத்தடியில நெத்தியில மஞ்சள் நிறத்துல கதிரப்போல சுழியோட, விடிஞ்சு முத வெளிச்சம் விழுகைல எந்த உசுரு வந்து நிக்குதோ அத எனக்கு பலியா குடு உன்னால ஆனா" என்றவள். அடுத்த சொல் சொல்வதற்குள் சரிந்து நிலத்தில் விழுந்தாள். பந்தம் நேராக எரியத்துவங்கியது. நெற்றியில் கதிரைப்போல சுழி என்று கேட்ட பிறகுதான் உரைத்தது மூப்பனுக்கு சொல் பிழைத்தது. அவர் ஆசை ஆசையாக வளர்க்கும் வரையாட்டுக்கு கதிர்ச்சுழி உண்டு நெற்றியில். 

அம்மை உத்தரவானதும் குடிகள் பிரிந்து அவரவர் குடில்கள் திரும்பின. விடிய இன்னும் சற்று பொழுது இருந்த வேளையில்,  வரையாட்டு மூப்பன் குடிலுக்கு திரும்பி, வரையாட்டை நெற்றி சுழி தடவி, புல்லும் நீரும் கொடுத்து , குடில் முன்றிலில் நின்ற மரத்தில் காட்டுக் கொடியால் கட்டிவைத்து விட்டு, மேலே பொன்மலை ஏறினார். ஆட்டை கட்டி வைக்கின்ற வழக்கமில்லை. அதன் போக்கிலேயே திரியும், அவர் அழைத்தால் வந்துவிடும். அவர் எங்கு சென்றாலும் அவர் பின்னாலோ முன்னாலோ செல்லும். முகடேறி இலஞ்சி பூவின் பித்து கொள்ளச் செய்யும் வாசனையால் உடல் சிலிர்க்க விடியலுக்காக காத்திருக்க துவங்கினார் மூப்பன். அவருக்கு எதிரில் கிழக்கில் குடையென விரிந்து அதன் கீழ் தரையெங்கும் மகிழம்பூவை சொரிந்து மகிழ மரமும் காத்திருந்தது. 

Image Credit : Google

பொன்னொளி கொண்டு முதல் ஒளி கணம் கணமாக பொன்மலை முகட்டில் விழும்போது, ஊன்றி வைக்கும் காலடி தடங்களை கேட்டார் மூப்பன். உடலும் மனமும் பதட்டம் கொள்ள துவங்கியது. அது அவர் நன்கறிந்த காலடித்தடங்கள். தெற்கில் இருந்து வடக்காக ஏறிய கதிர்சுழி கொண்ட வரையாடு மெல்லடி வைத்து முகட்டில் ஏறியது. மேற்கில் மூப்பன் நின்று காத்திருப்பதைக் கண்ட ஆடு அவருக்கு எதிர்புறமாக திரும்பி மகிழ மரத்தடியை நோக்கி சென்றது.  பேரழகுகொண்ட பொன் ஒளிக்கற்றைகளை வீசித் தீண்டியது கதிர் அதனை. ஆடு நெற்றியில் கதிர் சுழி  மின்னி துலங்க காட்டி மூப்பனை நோக்கி திரும்பியது. பெரு ஒளிவட்டமாக கதிரவன் சுழன்றான் அதன் சிரசின் பின்.  அதுவே நீ என்று அறிந்தேன் என்றார் மூப்பன். பின் நானே அதுவும் என்றார். கீழ் திசை நோக்கி, தன் தலையில் உருமாலை கலைந்து நிலத்தில் விட்டு, தண்டத்தையும் விட்டு, சிரசிற்கு மேல் கைகள் கூப்பி, நெற்றியும் நிலம்பட தண்டம் போல விழுந்தார்.  

வணங்கி எழுந்த வரையாட்டு மூப்பன்,  பொன்மலை முகட்டில் இருந்து மேல மலை இருக்கும் திசை நோக்கி திரும்பி, ஏழு அம்மைகளையும் ஏழுமுறை விழுந்து  வணங்கினார். "அன்னையே உன் பேராடலின் முன் நான் ஒரு பொருட்டும் இல்லை. உன் திருவடிக்கே முழுதடிமையானேன். உன் ஆடலே ஆகுக. நீ காட்டிய  வழியே போகிறேன்" என்று விட்ட தண்டத்தையும், உருமாலையும் எடுக்காமல் மூப்பன் வரையாட்டை மட்டும் ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு பொன்மலை விட்டிறங்கி, கிழக்கே ஆனை பள்ளமும் கடந்து நடந்தார். வரையாடும் அவரைத் தொடர்ந்தது.  கடந்த வழியில் கானுயிர்கள் அவரைக்கண்டு அச்சமும் கொள்ளவில்லை, ஆக்கிரமிக்கவும் செய்யவில்லை. பசித்த வேங்கைகளும் வரையாட்டை தீண்டவில்லை. ஒரு பகல் முழுதும் நடந்து பொழுதனையும் வேளையில் மகிழ மரங்கள் அடர்ந்து சூழ மகிழ மலர்கள் மிதக்கும் சுனையையும் சோலையயும் கண்டு மூப்பன் கதிர் சுழி வரையாட்டோடு அங்கேயே  தங்கினார்.  

ஏழுமலைக்குடியில் குடி மூப்பன் என பட்டம் சூட்டி உருமாலும் தண்டமும் கொடுத்தால், உயிர் பிரிந்து கல் நிறுத்தும் வரை அவை இரண்டும் அவர்களை விட்டு பிரியாது. விடிந்து மலையேறி கண்ட பொன்மலை குடிமக்கள், வரையாட்டு மூப்பன் பட்டமும் தண்டமும் துறந்து இறங்கிவிட்டார் என்பதை அறிந்து கொண்டார்கள். வரையாடும் குடிலில் இல்லாததால் ஏன் என்ற விவரத்தையும் புரிந்து கொண்டார்கள். ஏழுமலைக் குடிக்கும் விவரம் சொல்லி விட்டு அழைத்து பொன்மலைக்கு புதிய மூப்பனை பட்டம் கட்டினார்கள். ஆயினும் பொன்னாயி மட்டும் இறங்கி வரவும் இல்லை,  படைப்பு உத்தரவோ, பலிக்குறியோ காட்டவும் இல்லை.  அடுத்தடுத்த முழு நிலவுகள் கழிந்த போதும் பொலனிக்கு படையல் இல்லாததால் அடுத்த மூன்று அன்னைகளுக்கும் படையல் இல்லை என்றாகியது. வருடாந்திர ராத்திரியில் பெரிய கும்பிடும் தவறியது. காரியோடை முதன் முறையாக முற்றும் காய்ந்தது அப்போது தான். கானகமே வெப்பம் கொண்டு தகித்து வறண்டது, காற்று கொதித்தது. இலைகளை உதிர்த்து மரங்கள் பட்டன. புற்கள் காய்ந்து சருகுகள் ஆயின. முன்பே விதைத்திருந்த கம்புகள் காய்ந்து கருகின. யானை பள்ளமும் வற்ற துவங்கியது. காட்டின் பல திக்குகளிலிருந்தும்  புதிய விலங்குகள் பறவைகள் யானை பள்ளத்திற்கு நீர் வாடை கண்டு வந்தன. யானை பள்ளத்தில் எப்போதும் விலங்கு நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்தும் நீர் பெற முடியவில்லை.  

ஏழுமலைக்குடியும் மேல மலைக்குடி  தாழ்வாரத்தில், ஏழு அம்மைகளுக்கும் உரிய மலரும், நீரும் பரப்பி, ஏழு பந்தம்  நாட்டி அம்மைமாரை அழைத்து ஏவம் கேட்க கூடினர். ஏழு பந்தத்தில் ஆறு பந்தங்கள் எரிய நடுவில் நின்ற பொலனாயியின் பந்தம் எத்தனை முறை ஏற்றியும் பற்றவில்லை. கொடுகொட்டி குரவையிட்டு குடி மொத்தமும் தொழுதெழும்பி அழைத்ததும் பொலனாயி தவிர ஆறு பேரும் "மக்கா பசிக்குதுடா, எங்களை பட்டினி போட்டிகளேடா"  என்று அழுதபடி வந்தனர். "நாங்க யாரம்மா உங்கள பட்டினி போட, நீங்க நினைச்சா தான் எங்க வயிறும் உசுரும் நிறையும்"  என்று மலைக்குடிகள் கதறின. 

"என் கண்சிமிட்டல் போதும்டா உலகத்தை அழிக்கவும் ஆக்கவும், ஆனால் இதுவும் என் விளையாட்டு தான்" என்றாள் செல்லியம்மை. அவள் கழுத்தில் சூட்டியிருந்த ஏழு வித மலர்களில் மகிழத்தை மட்டும் எடுத்து ஏழு குடி பெரிய மூப்பனாகிய பூசாரியிடம் கொடுத்து. "நான் எங்க அக்காமார் ஆறு பேருக்கும் செல்லப்பிள்ளை டா. செல்லினு பேர் எனக்கு. இந்த மலரைக்கொண்டு போய் அவனை அழைச்சிட்டு வா, இது எங்க அக்கா பொலனாயி ஆடுற ஆட்டம், அதுக்கு காரணமும் உண்டு. இந்த பூவைக் கண்டா அவன் வருவான்,  அவன் வந்து உரியத கொடுத்தாதான் பொலனி இறங்குவா" என்றாள். 

Image Credit : Google

வரையாடும் மூப்பனும் வாழ்ந்த மகிழம்பூ சுனையில், ஏழு நீர் தடங்கள் வந்து இணைந்தன. சுற்றிலும் இருந்த மலைக்காடுகளில் இருந்து ஒன்று இல்லை என்றால் ஒன்றில் நீர் வந்து இணைந்த படியிருந்தது சுனையில். அதே போல சுனையில் இருந்து நீர் வெளியேற ஏழு நீர்த்தடங்கள் இருந்தன. மகிழம்பூ சுனை நிரம்பும் தோறும் அதிலிருந்து நீர் பாய்ந்து இன்னும் ஏழு சுனைகளில் நிறைந்தன. அதனால் அங்கு எப்போதுமே நீர் குறைவு வருவதில்லை என்பதை அறிந்துகொண்டார் மூப்பன். மகிழ மரக்காவை  சுற்றியிருந்த காடுகளில் வேட்டையாடியும், கிழங்கும், பழமும் உண்டு வாழ்ந்து வந்தார்.  பொன்னாக ஒளி உருகி வழிந்த ஒரு விடியலில் வழமைக்கு மாறாக உறங்கியிருந்தார் மூப்பன். அவர் வலக்கால் மீது தலை வைத்து வரையாடும் உறங்கியது. வரையாடு முன்னடக்க மூப்பன் அதை தொடர்ந்தார், மேல மலையை  இடது புறமாக வளைத்து தென் கிழக்காக ஓடும் காரியோடை தடத்தில். கண்ணாடி பரப்பென நீர் ஓடிக்கொண்டிருந்த, காரியோடை தடத்தில் இருந்து வரையாடு மேல மலை நோக்கி திரும்பி ஒரு அடி வைத்த போது, கரை பிளந்து கிளை ஒன்று முளைத்து மேலமலைத் தாழ்வாரம் நோக்கி ஓடி சுனையென சுழித்து பெருகியது. மீண்டும் திரும்பி காரியோடை செல்லும் வழியிலேயே சென்றது வரையாடு. மலைக்கு ஒன்றாக ஏழு கிளைகள் எழுந்து ஒவ்வொரு அடிவாரத்திலும் சுனைகள் பெருகின. ஏழு சுனையும் கண்டு வரையாடும் மூப்பனும் பொன்மலை முகடு ஏறிட, மலை முகட்டில் மகிழ மரத்தில் ஒற்றை ஒரே பூ மலர்ந்திருந்தது. அதுவரை அறிந்த மகிழம்பூ மணத்திலும் அதுவே வலியது. அதை பறித்து உள்ளங்கையில் வைத்திருந்த போது, பொன்னொளி கொண்டு கதிர் உதிக்க, "பொன்னாயி அம்மையே" என்று அவள் பெயர் சொல்லி நிலத்தில் இட்டார் மலரை வரையாட்டு மூப்பன்.

ஏழு மலைக்குடியில் இருந்தும் ஆள் திரட்டி ஏழு பேரை அனுப்பி வைத்தனர் செல்லியாயி தந்த மகிழம்பூவையும் கொடுத்து, வரையாட்டு மூப்பனை தேடி அழைத்து வர. யானை பள்ளம் கடந்து சுனைக்கரையில் ஒரு மகிழ மரத்தடியில் மூப்பன் அமர்ந்திருக்க, வரையாடு அவர் தோளோடு உரசிக்கொண்டிருந்தது. சுனையில் நீர் அருந்திக் கொண்டிருந்த இளம் வேங்கை அந்நியர் வாசம் கொண்டு உடல் சிலிர்த்தது. மூப்பன் "ஒன்னும் இல்ல அவுக என்னை தேடி வராக, நீ தண்ணிய குடிச்சிட்டு போ" என்று குரல் கொடுத்தார். மூப்பன் குரல் கேட்ட வேங்கை பதறாமல் நீர் அருந்திவிட்டு எதிர்கரையில் ஏறி விலகியதும், ஏழுபேரும் வந்து தண்டனிட்டு வணங்கி செல்லியாயி தந்த மலரை நீட்டினார்கள் மூப்பனிடம். "நான் படைச்ச பூவ ஏத்துக்கிட்டாளா ஆயி" என்று விட்டு மூப்பன் அவர்கள் எதுவம் சொல்வதற்கு முன்பே "அடுத்த முழு நிலவுக்கு, ஏழுமலைக்குடிகளையும் கூட்டி மேல மலை ஏழம்மை திட்டையில் படையலும் ஏற்பாடு செய்யுங்க, நான் உரிய பலியையும் கொண்டு வரேன்" என்றார். எழுவரும் மீண்டும் வணங்கி ஏழு மலைக்குடி தாழ்வாரம் அடைந்து தகவல் சொன்னார்கள். 

ஏழு மலைக்குடியும் மேல மலைத் முகட்டில் ஏழம்மை திட்டில் ஏழம்மைகளுக்கும் உரிய தானையும், மலரும்,  படையலும் கொண்டு காத்திருந்தனர்.  வரையாடு முன்னால் வர அதை தொடர்ந்த வரையாட்டு மூப்பன் முகடேறினான்.  அவனுக்கு பின்னால் முழு நிலவு உதித்து ஒளிர்ந்தது. பொன்னாயிக்கு முன்னாலிருந்த பலிக்கல் மேடையில் நீரால் மெழுகி மகிழம்பூ விரித்து வைத்திருந்தனர்.  வரையாடு நேரே சென்று பலி மேடை முன் நின்றது.  ஏழுமலைக்குடி பூசாரியான பெரிய மூப்பன்  முறைப்படி பொன்னாயி கழுத்தில் இருந்த மகிழம்பூ மாலையை எடுத்து வந்து ஆட்டின் கழுத்தின் இடப்போகையில், வரையாட்டு மூப்பன் கை உயர்த்தி கொட்டும் குரவையும் நிறுத்தி "பலிக்கு முன்ன எனக்கு ஒரு விண்ணப்பம் உண்டு" என்றார். கூடியிருந்த மக்கள் கூட்டம் என்னவென்பது போல கலைந்து நோக்கின. "நான் சொல்ற படிக்கு பலியிட்டா மட்டும் தான் பலிக்கு சம்மதிப்பேன். அதுக்கு ஒத்துக்கிறதா ஏழம்மைக மேலையும் ஆணையிட்டு குடி பூசாரி வாக்கு கொடுக்கணும்" என்றார் வரையாட்டு மூப்பர்.

பூசாரிக்கு அதுவொன்றே வழியென்றும், அதற்கும் மேல் தெய்வங்கள் ஏதோ பெரும் வலை ஒன்றை பின்னுகிறது என்று அறிந்தவராக "சரி ஏழம்மைக மேலயும் ஆணை, வரையாட்டு மூப்பன் சொல்ற படிக்கே  பலி நடக்கட்டும்" என்றார்.  

வரையாட்டு மூப்பன் முன்னேறி வந்து வரையாட்டை தொழுது "நீ இறங்கிக்கோ, இது எனக்கானது" என்றார். ஆடு பலிக் கல்லை விட்டு விலகி அருகில் இருந்து இளம் பிள்ளை ஒருவன் பக்கம் சென்று நின்று கொண்டது. வரையாட்டு மூப்பன் அந்த பிள்ளையை அழைத்து சிரசில் கைவைத்து ஆட்டைக்காட்டி  "இளையா இது இனி உன் பொறுப்பு"  என்றவர் விரைந்து வந்து பூசாரியின் கையில் இருந்த பலி மாலையை வாங்கி  தன் கழுத்தில் சூடிக்கொண்டார். பூசாரி "இது தான் அவ உத்தரவுனா, அப்படியே நடக்கட்டும், மூப்பன் தலையைக்கொண்டுதான் அவ அடங்குவானா அடங்கட்டும்" என்ற படி பொன்னாயிக்கு பூசை செய்து அவள் பீடத்தில் மரப்பிடியிட்டு சாற்றியிருந்த பெரும் மழுவொன்றை ஏந்தி வந்தார். 

இன்னும் ஒரு கணத்தில் ஓங்கிய மழு வரையாட்டு மூப்பனின் சிரசை துண்டித்திருக்கும் எனும் போது, "நிறுத்துடா" என்ற கூவலோடு பெரிய கருங்கல் ஒன்று பந்த ஒளியில் மின்னி ஒரு ஒளித்துண்டு போல பாய்ந்து வந்து பூசாரியின் கையில் இருந்த மழுவை தட்டி சரித்து கீழே விழுத்தாட்டியது. எதிரில் கல்லை உதைத்த வலக்காலை இன்னும் இறக்காமல் நின்றிந்தாள் ஒரு சிறு பெண் பிள்ளை மேல் பொன்னாயி. "பூசாரி, அவன் பலிய நான் ஏத்துக்கிட்டேன். பூசையைக் கட்டு" என்றாள். கொட்டும் குரவையுமாக பொன்னாயிக்கு பெரும்படைப்பும் பூசையும் ஆகும் வரை அவள் எடுத்த அடியை கீழ் இறக்கவில்லை. பூசை ஆனதும் வரையாட்டு மூப்பன் வந்து "இறக்கி வைய்யிடி ஆயி" என்று அவள் முன் பணிய,  அவர் சிரசில் தூக்கிய வலக்காலை ஊன்றி  "கொண்டாட நறவக்குடத்தை" என்றாள். முழுக்குடத்தையும் மாந்தி கண்கள் சிவக்க சொன்னாள் "சந்தோஷம்டா. அடேய் வரையாட்டுக்காரா,  இனி உன் வம்சம் இந்த பேராலையே விளங்கும்டா. உனக்கு காட்டினபடி ஏழு குளத்தையும் உண்டாக்குடா. என் ஏழு குடி மக்களும் இனி ஒருநாளும் தவிச்சிருக்க  மாட்டாக. ஏழு குளத்தையும் உண்டாக்கி அதை பேணி பராமரிக்கிறதும் உனக்கும் உன் குடிக்கும் பொருப்பு. அதுக்கு பலனா மத்த ஆறு குடியும் அவுக அறுவடை செய்கிற கம்பரிசியில் முதல் பங்க ஏழம்மைகளான எங்களுக்கும், இரண்டாம் பங்க உனக்கும் உன் குலத்துக்கும் கொடுக்கட்டும்" என்று ஆணை போல சொல்லிவிட்டு மலையேறினாள்.

Image Credit : Google

பொன்னாயி காட்டிய வழியில் வரையாட்டு மூப்பன் காரியோடையில் இருந்து கிளையோடைகள் வெட்டி ஒவ்வொரு குடி தாழ்வாரத்துக்கும் ஒரு குளத்தையும் உண்டாக்கினார். அதற்கு பிறகு காரியோடை பொய்த்ததில்லை இதுவரை. அப்படி எப்போதாவது வற்றி போனால் அந்த பஞ்சத்தை தாங்க ஏழு குளமும் உண்டு. அந்த குளங்களில் இருந்து தான் அந்த அந்த குடிகள் கம்பு விதைக்கின்ற நிலத்துக்கு நீர் பாய்கிறது. சில மூப்பன் மூப்பத்திமார் இந்த கதையைச் சொல்லும்போது, பொன்னாயி இளமூப்பனுக்கு உரிய காலம் வரும்போது கம்பை விளைவிக்க வேண்டிய பொய்யாத நீராதாரத்தை உண்டாக்கி தருவேன் என்று ஒரு வாக்கு கொடுத்திருந்தாகவும், அவ்வாக்கினை உண்மையாக்க இளமூப்பன் தான் வரையாட்டு மூப்பனாக மீண்டும் பிறந்தார் என்றும் சொல்வார்கள்.

***

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19