ஐயன் பந்தி - 8
புவியேழையும் பூத்தவளே - 4
சிவந்த முலை வரிசைகள் குலுங்க, உடல் எல்லாம் கரிய மயிர் அடர்ந்து, கொடுவாயின் இருப்புறமும் இருகோடுகள் வளைந்து மேல் ஏறியிருக்க, தலை பருத்தும், உடல் சிறுத்தும் மண்ணை முகர்ந்து மூச்சால் கலைத்துக் கொண்டு, கொடுவாள்கள் என நீண்ட நகங்களோடு ஊர்ந்த படி வந்தது ஒரு மலைப்பன்றி. அவள் அங்கிருப்பதை அறிந்தது போல மதர்ப்பும், உருமலுமாக வந்தது ஒரு ஆண் பன்றி. அடர்ந்த காட்டின் இருளுக்குள் இருள் என நின்றன இரண்டும். கைகோர்த்த இலைத்தழைப்புகளின் இடைவெளி வழி ஒளி அவற்றின் உடல்களில் சிந்தியிருந்தது. குறுங்காதுகள் சிலிர்க்க முகம் நிமிர்ந்து அவள் உருமினாள். அவன் இரண்டடி பின் வைத்தான். வால் சுழற்றி பின்னகர்ந்தவள், அறியும் முன்னும் பாய்ந்து முன்னேறினாள். அதே வேகத்தில் அவனும் பாய்ந்தான். பருத்த தலைகள் மோதி ஒலித்தன. மூச்சு சீரியபடி பின்னகர்ந்தனர் இருவரும். மோதியும் விலகியும் சுழன்றனர். எதிர் நின்று பாய்ந்து கோடு உரச தாக்கிக்கொண்டனர். பல பல முறை முட்டி முட்டி விலகினர். பாய்ந்து அவன் மோத வருகையில் தன் விலாவும் குறியும் காட்டி வால் சுழற்றி திரும்பி அவன் மோதும் முன் விலகினாள். தொடுத்த அம்பென அவன் எதிரில் நின்ற அடிமரத்தில் மோதிட, கிளைகள் அதிர்ந்து இலைகளும் மலர்களும் உதிர்ந்தன. பாய்வது போல பாய்ந்து அழகு காட்டினான். பாய்தலும் அடங்கலுமாக பொழுதும் சுழன்றது. மண்ணில் வளைந்த பற்கள் மூழ்க முனகி, எதிர் எதிராக ஒரு கோடு இழுத்த படி வந்து ஒருவரை ஒருவர் சந்தித்து முகர்ந்து கொண்டனர். கூடினர் கூடிக்கலந்தனர் கலந்து விலகினர். விலகிய வேகத்தில் முகத்தால் கீறிய மண் தரையில் சிதறி விழுந்தன துளிகளென வெண்குருதியும் செங்குருதியும் கலந்து. முளைத்தன, முளைத்து கரிய முத்துக்கள் என எழுந்தன. ஒன்று நூறு என பெருகின. ஊர்ந்தன, நகர்ந்தன, கால்கள் ஊன்றி நடந்து, மண்ணை நுகர்ந்து அன்னையின் வாசம் கண்டு அவள் முலையை அண்டின. அப்பன் நால் புறமும் சுற்றி தன் கால்களால் வேலியிட்டான்.
மலைக்காணி சொன்ன கதையையே கனவெனக் கண்டு பங்குனி மாதத்தின் வெப்பம் அடர்ந்து உடல் வியர்க்க விழித்த போது விடியத் துவங்கியிருந்தது. அறியாத புது மணம் ஒன்று எழுந்தது. தொடை இடுக்குகள் ஈரமாகியிருந்தன. நெற்றியிலும், கன்னத்திலும் ஒரு சின்ன குறுகுறுப்பு. கைவைத்து பார்த்த போது வேர்க்குரு போல ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. தெருவில் பாத்தோய்ந்து ஓயும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. கீழ் புறம் கூடத்தில் ஒன்றிரண்டு தறிகளில் ஆள் இறங்கி, நெசவொலி எழுந்தது. மேல வீட்டில் பாவோடியில் ராட்டிணம் சுழல, கண்டுகள் கறக்கும் ஒலி கேட்டு கொண்டிருந்தது.
இன்றைய முழு நிலவில் தான் சிவப்பாயிக்கு படையல். மலைக்காணிகளின் மூன்றாவது அம்மை. பன்றி போல் மதர்த்த உடலும், சிவப்பாடையும், மூன்று முகமுமாக இருப்பவள் என அன்று இரவு மலைக்காணி சொன்னார். உடலில் தசையென திரண்டு அழகென பொலிந்து ஈர்ப்பவள். சிவந்த காந்தள், அலரி மலர்களை பறித்து தொடுத்து இட்ட மாலையோடு, பச்சை ரத்தம் விட்டு பிசைந்த அன்னத்தை படையலாக கொள்பவள். ஓலைப்பாய் விரித்து, வேகவைத்த முழுக்கம்பு அன்னத்தை கொட்டி, இளம் மான் கிடாவொன்றை பலியிட்டு, குருதியை அன்னம் குளிர விட்டு பிரட்டி, மூன்று உருண்டையாக பிடித்து இடது ஒன்றும், வலது ஒன்றும், அந்தரத்தில் ஒன்றுமாக வீசுவார்கள். கோரமும் அழகும் ஒன்றென பொலிபவள். அவளது ஒரு முகம் குளிர்ந்தது, ஒன்று தகிப்பது. மற்றது குளிரும், தகிப்பும் ஒன்றென அமைவது. துணிக்கட்டிலின் பள்ளத்தில் கிடந்து, வெம்மையா, குளிரா என்று அறியமுடியாத இனிமைக்குள் இருந்தபடி மலைக்காணி சொன்ன மூன்றாம் கதையை எண்ணிக்கொண்டிருந்தேன்.
மூப்பனும் இளையானும் காட்டுக்கொடியால் கட்டி இளம் மான் ஒன்றை இழுத்துக்கொண்டு மேல மலை ஏறினார்கள். "மூனு சுடர் உண்டுடா, அந்த மூனால தான் இந்த உலகமே இயங்குது" என்றார் மூப்பன்.
"அது என்ன மூப்பா மூனு சுடரு" என்றான் இளையான்.
"இரண்டு சுடரு நாம கண்ணால காண்கிறது, ஒன்னு சூடு ஒன்னு குளிரு, அதைத்தான் கதிர்னும், நிலவுனும் சொல்றோம்"
"மூனாவது?"
"சொல்றேன் டா, அதுக்குள்ள என்ன தாவுற இளங்குட்டி கணக்கா? "
"மூனாவது நம்ம கண்ணால காங்குறதாவும் இருக்கும், காண முடியாததாவும் இருக்கும், அதை தான் நெருப்புங்கிறோம். மின்னல்ல ஒளியா, விளக்குல, அடுப்புல, காட்டுல தீயா எரியுறப்போ, அது நம்ம கண்ணுல படும். அதே நெருப்பு தான் நம்ம கண்ணுல படாம ஒவ்வொரு உசுருக்குள்ளையும் மறைஞ்சிருக்கிறதும். அந்த நெருப்பாலதான் உடம்புல சூடு நிலைக்கது. அன்னத்தை எரிக்கிறதும், உடம்ப உண்டாக்கிறதும் அதுதான். இந்த நெருப்பு அவிஞ்சா உடம்பு குளுந்து போயி, உடம்ப விட்டு உசுரும் போயிடும். இந்த மூனு சுடரும் தான் அம்மைக்கு மூனு முகங்க. அவ வலது புறத்து முகம் கதிரு, இடது புறத்து முகம் நிலா. குளிரும், சூடுமா அத்தன உசுருக்குள்ளையும் ஒளிஞ்சிருக்கது தான் நடுவில இருக்கிற மூனாவது முகம். எல்லா உசுருக்கும் மனசுக்குள்ள மலைப்பாறைல கீறி வச்ச மாதிரி தான் முளைக்கணும் பரவணுமுங்கிற எண்ணம் இருக்கும். அதுக்கு ஏதுவா அந்த உசுருகளோட உடல நிறைக்கிறவ சிவப்பாயி. கானுசுர்க ஆணும் பெடையுமா உடம்பு முறுக்கேறி திரியிறதும், அனையறதும் இவளால தான். மண்ணுக்குள்ள விதைச்ச விதை, வேரை ஊனி எழுந்து பூமிய துளைச்சு முளைக்கது உள்ள மறைஞ்சிருக்க இதே தீயால தான்" என்றார் மூப்பன்.
"இவதான பன்னியா வந்தவ இள மூப்பன் முன்னால?"
"ஆமாம். அதுக்கு முன்ன நாம விதைச்சு பழக்கம் இல்லை, எப்படி விதைக்கணும்னு தெரியாது. ஆண் பன்னியும் பெண் பன்னியுமா வந்து இளமூப்பனுக்கு, இவதான் மண்ணைக்கீறி விதைக்க சொல்லிக் கொடுத்தவ. காட்டு பன்னியோட முகத்தையும் வளைஞ்ச கோட்டையும், அது மண்ணைக் கீறி கிழங்கு எடுக்குற வித்தையும் கண்டு, மரத்துண்டு ஒன்ன தேச்சும் செதுக்கியும் கலப்பையா கட்டி நிலத்தை கீறினான் இளமூப்பன் முதன் முதலா. சிவப்பாயி காட்டினபடிக்கு கலப்பை கட்டியதால, இப்பவும் உழவுக்கும் மத்த புழக்கத்துக்கும் கருவியெல்லாம் செய்றது செம்மலை குடிக்காரங்க தான்"
கோவிந்தன் தாத்தா வீட்டிற்கு சென்ற போது, காலையிலேயே வந்திருந்த ஐயர், திண்ணையில் அமர்ந்திருந்தார். அவர் குடித்துவிட்டு வைத்த மோர் செம்பு அருகில் இருந்தது. பாக்கை வாயில் அதக்கியபடி, வெற்றிலையை நரம்பு கிள்ளி, சுண்ணாம்பை தீட்டிக்கொண்டிருந்தார்.
என் தலையைக்கண்டதும், பாட்டி முகத்தை பார்த்துவிட்டு "ஏல சுந்தரம் கொல்லையில துன்னுத்து பச்சில இருக்கு, இரண்டு இலை பறிச்சுட்டு வா" என்றாள். பறித்து வந்து கொடுத்ததும், நிலைவாசல் கல் படியை கையால் தூற்றி சுத்தம் செய்து விட்டு, இலைகள் இரண்டையும் அதில் வைத்து, வெற்றிலை உரலின் சிற்றுலக்கையை வெற்றிலை இடித்த முனையில் கைபடாமல், மாற்றி பிடித்து, உலக்கை காம்பால் பச்சிலையை நசுக்கினாள்.
"உட்காருடா" என்றாள் என்னை அவள் அருகில். அமர்ந்ததும் நெற்றியிலும், கன்னத்திலும் குறுகுறுத்த பருக்களின் மீது சாற்றை பூசினாள். "கருக்காம, அப்படியே பட்டிரும், ஊருதுனு பிச்சு போட்டிறாத" என்றாள்.
"பிள்ளாண்டன் வளந்துட்டான்" என்றார் ஐயர். கோவிந்தன் தாத்தா சிரித்துக்கொண்டார்.
"அவர் மந்திரத்து வழியாவுல தெரிஞ்சுக்கிறாரு. அது நம்மால விளங்க முடியாதுனு தான் நினைக்கேன். அதான் அந்த ஓலைய கொடுக்கும்போதே, மந்திரம் இல்லாம படிச்சா விளங்காதுனு உங்க பெரியாளுகிட்ட வைத்தியர் வீட்டாளுக சொன்னாகனு சொன்னியே"
"உள்ளது தான். பலரும் தெய்வம் போல வந்து சொல்லிக்கொடுத்துட்டும் போறா, ஆனாலும் சில விஷயங்கள இரண்டாம் பேர் அறிவிக்காமலே இவர் எப்படி உணர்ந்துண்டார்னு குழப்பமா தான் இருக்கு. இவர் அனுபவங்களையும், இவர் படிச்சிண்டு இருந்த ஆயுர்வேதத்தையும் சேர்த்து எழுத்திணுட்டாரோனு ஒரு எண்ணம்."
பாட்டி சொன்னாள், "சில விஷயங்க அப்படித்தான இருக்கு சாமி? ஒரு பொண்ணு புள்ளை உண்டாகி பேறு காலம் வரைக்கும் அத்தன பேர் உதவி வேண்டிய இருக்கு. ஆனா, காட்டுல சினை பிடிக்கிற மிருகங்களுக்கு யாரு சொல்லிக்கொடுத்தா? அதோட உடம்புல இருந்து மனசு அறிஞ்சுக்குதுல. ஆடடோட சினை வாசம் கண்டா கிடா அண்டாது. அது அதுக்கான வழிய அதுக பிறப்பாலையே அறிஞ்சு வச்சிருக்குக"
"அதுவும் சரிதான் தாயி. சிலது அவர் எங்கயோ படிச்சத குறிப்பா எழுதி வச்சிண்ட மாதிரியும் தோன்றது" என்றார் ஐயர்.
"அடுத்த ஏடு என்னடா? மாம்சத்தை பத்தியா?" என்றார் தாத்தா.
"ம்" என்றுவிட்டு ஐயர், ஆனமந்தி சுப்பிரமணிய வைத்தியர் மாம்சம் குறித்து எழுதியதை அவர் எழுதியபடி சொல்ல துவங்கினார். பித்தா நினைவா கனவா என்று சொல்லமுடியாதபடி சென்றது கதை.
தெய்வங்களின் வருணனை அருமை சகோ 👍
பதிலளிநீக்குமிகக்கச்சிதமாக, ஆயுர்வேத மரபின், சப்த தாது ஞானத்தையும், சாக்த மரபின், ரூபங்களையும்,யோக மரபின் குண்டலினி அனுபவத்தையும், இணைத்து சொல்வதற்கு. பெரும் ஞானமும்,கர்பனாசக்தியும், வாக் வல்லமையும் தேவை. அது இங்கே நிகழ்ந்திருக்கிறது.
பதிலளிநீக்கு