ஐயன் பந்தி - 7

புவியேழையும் பூத்தவளே - 3

"மகத்துக்கா புறப்பாடு?" என்ற ராமசுப்பையர் "சிவ சிவா மகாதேவா" என்றபடி திண்ணையில் அமர்ந்தார். தெருவில் ஆட்கள் பயணம் போகிற களிப்பில் வழக்கத்து அதிகமான கூச்சலும் பரபரப்புமாக  அலைந்து கொண்டிருக்க, மாட்டு வண்டிகள் பாரம் ஏற்றி புறப்பட காத்து நின்றன. 

"இன்னைக்கு ஷஷ்டில, திருச்செந்தூர்ல கொடி ஏறியிருக்கும், ஒவ்வொருத்தரா கிளம்புறாங்க" என்றார் கோவிந்தன் தாத்தா. நான் தாத்தா அருகில் அமர்ந்து,  அடுத்து ஓடப்போகிற வெள்ளை துண்டு பாவிற்கு கண்டு எண்ணி வைத்துக்கொண்டிருந்தேன். கண்டுகளை பாவோடியில் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தால், மாலை பாவாக மீண்டும் போய் எடுத்து வரலாம். 

பாட்டி "இத இழை எடுங்க" என்று குழைந்த கண்டு ஒன்றை தாத்தாவிடம் கொடுத்து விட்டு, மறுபுறம் திண்ணையில் ராட்டில் அமர்ந்து, அரை குறையாக ஒழிந்த கண்டுகளைச் சோமாறித் தனியாக ஒரே குழலில் சுற்றி, ஒழிந்த குழல்களை சேர்த்துக்கொண்டிருந்தாள். 

"பழனிக்கு போறத இல்லையோ நீங்க எல்லாம் அவ்வளவா?" என்றார் ஐயர்.

"அது என்னமோ தெரியலடா எப்பவும் திருச்செந்தூர்க்கு தான் அத்தனை பேரும் அடிச்சு பிரண்டு கிளம்புவாக. தேருக்கும், தீர்த்தத்துக்கும் இருக்காகளோ இல்லையோ, ஏழாந்திருவிழாவுக்கும், எட்டுக்கும் அங்க தான்." 

"அந்த இரண்டு திருவிழாவுக்கு தான சண்முகர் வெளிய வருவாரு?" என்றேன் 

"ஆமா, ஏழாந்திருழா சாயங்காலம் சிகப்பு பட்டு கட்டி, செவ்வரளி, வெட்சினு சிவப்பு பூவால மட்டும் ஜோடிச்சு தங்கச்சப்பரத்தில சிவப்பு சாத்தி நடக்கும். எட்டாந்திருழாவுக்கு வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்தில வருவாரு. அன்னைக்கு மதியானத்துக்கு மேல பச்சை கடைசல் சப்பரத்தில பச்சை சாத்தி " என்றார் தாத்தா.

"அதுலையும் பச்சை சாத்திக்கு வில்வம், துளசி, பச்சை, மருக்கொழுந்துனு பச்சை நிறத்துல தான் மாலையும் தோரணமும் எல்லாம்.  பச்சை பட்டும் சாத்திக்கிட்டு சண்முகர் வார அழகுக்கு அன்னைக்கு ரத வீதி எல்லாம் தலையா தான் இருக்கும்" என்றுவிட்டு பாட்டி "பாவடியும், தறிக்கூடமும் வெறின்னு கிடக்கும் இன்னும் ஒருவாரம் பத்து நாளைக்கு. நீங்களாம் போறதில்லையா?" என ஐயரைக் கேடடாள். 

"போயிருக்கேன் தாயீ,  ஆனால், நாங்க  தைப்பூசத்துக்கு பழனிக்கு தான் கட்டாயமா போறது"    

"சாமி, பழனில  இருக்க முருகன் விஷத்தால ஆனவராமே" என்றேன்

"ஆமாடா  சுந்தரம், ஒன்பது விதமான பாசாணத்தாலா ஆனதுனு சொல்றாங்க"

"பாம்போட விஷத்தை எல்லாம் எடுத்து செஞ்சதா?"

ஐயர் சிரித்து விட்டு "செடி கொடி தாவரத்திலேயும் விஷம் உள்ளது உண்டுடா அம்பி,  பாம்பு, பூச்சிகட்ட இருந்தும் வரும். அது இல்லாம, உலோகம், சில கலவைக, மண்ணு, பாறைல இருந்து எடுக்கிற ராசாயணத்தில இருந்து வரதும் உண்டு. பழனியில உள்ள முருகன் சிலை அந்த மாதிரி ரசாயண விஷத்தால ஆனது. விஷம் பொதுவா உடம்புல ரத்தத்துல கலந்து ஆளக்கொல்லும். அது மாதிரி இந்த ரசாயணங்களையும் உண்டு. ஆனால், எல்லா விசமும் உயிரையே எடுக்கிறதுனுட்டும் இல்லை, சிலது உடம்புக்கு ஆகாதத செய்யும். சரியான அளவுல, முறையா பயன்படுத்தினா இதெல்லாம் மருந்தாவும் ஆகும்." என்றவர் தொடர்ந்து தாத்தாவிடம் "ஆனமந்தி சுப்பிரமணிய ஐயர் ஏட்டுல ரத்தத்தை பத்தியும் அதுல விஷம் கலக்கிறதை பத்தியும் எழுதி இருக்கார்டா கோவிந்தா" என்றார்.

"சொல்லேண்டா கேட்போம்" என்றார் தாத்தா. ராமசுப்பையர் ஆனமந்தி வைத்தியர் எழுதியதில் இருந்து சொல்ல துவங்கினார். 

ஆனமந்தி வைத்தியர் ஏட்டிலிருந்து..

"கடி வாய் வளஞ்சு, எச்சி பட்ட தடம் மட்டும் தான் தெரியுது தாயீ, உசுருக்கு மோசமில்லை,  ஒரு பதட்டத்துல தட்டிட்டு போயிருக்கு அம்புட்டுதேன்" என்று அசனி என் மனைவி வசந்தத்திடம் சொல்லிக் கொண்டிருந்த போதே எனக்கு கண்கள் சொருகிக்கொண்டு தூக்கம் வந்தது. கடுத்த வலியும் சூடுமாக எதோ ஒன்று கரண்டையில் கடிவாயில் தொடங்கி மேலேறத்துவங்கியது. கடிவாயைக் கீறி கொஞ்சம் ரத்தத்தை வெளியே வடியவிட்டு, கருமையா நீலமா என்று அறியமுடியாத நிறத்தில் இருந்த மிருதுவான ஒரு கல்லை அதில்  வைத்து அவள் கட்டவும், கடுகடுப்பும் சூடும் இறங்கியது. இரவே மடை அடைக்க சொல்லியிருந்தேன் வீரையாவிடம். விடியலில், மடை அடைத்திருக்கிறார்களா என்று ஒரு எட்டு பார்ப்போம் என்று சென்ற போதுதான் இவ்வாறு ஆனது.  வழக்கமான பாதை வழக்கமான வரப்பு தான். எங்கிருந்து என்று அறியவில்லை, அதற்கு முன் பட்டு விட்டது. வரப்பில் நிலை தடுமாறி கீழே விழுவதை தூரத்தில் இருந்து பார்த்தவிட்டு ஓடிவந்த வீரையா தான் என்னை தூக்கி, பாம்புக்கடி என்பதைக் கண்டுகொண்டு, தோள் சுமையாக கொண்டு வந்து வீட்டு திண்ணையில் கிடத்தியிருக்கிறான். "பூச்சி கடி மாதிரி தெரியுது அம்மையே" என்று என் பாரியாளிடம் சொல்லி சென்றவன், மலைத்தேனும் பொருளும் விற்று தொண்டியில் உப்பு வாங்க வந்த மலைவேடர் குடியினர் சிலர் ஊர் புறத்தில் தங்கியிருப்பது அறிந்து, அங்கிருந்து அசனியையும் அழைத்து வந்தான். 

"ரத்தம் தான் சாமி எல்லாத்துக்கும் ஆதாரம். ரத்தத்துல திட்டு திட்டா சிவப்பு நிறத்துல தம்பள பூச்சி மாதிரி அதோட உசுரு இருக்கும்னு எங்க தாத்தா சொல்லுவாரு. எங்கம்மா நிற மாசமா இருக்கேல, பக்கத்துல எங்கயோ இடி விழுற சத்தம் கேட்ட அதிர்ச்சியில பேற்று வலி கண்டு, நான் பிறந்தேனாம். அதனால, எங்க தாத்தா தான் எனக்கு அசனினு பேரு வச்சது. அவரு தான் எனக்கு விச முறிக்க, மருந்து பாக்க எல்லாம் சொல்லிக்கொடுத்ததும்" அசனியின் உச்சி வகிட்டில் இருந்து ஒரு விரற்கடை தள்ளி இடது புறத்தில் ஒரு ஆழமான கோடும், அதற்கு அடுத்து உள்ள தலைப்பகுதி சற்று பள்ளமாகி, காண்பதற்கு இரண்டு தலைகள் இருப்பது போல தோன்றின. 

எவருக்கோ சொல்வது போல அசனி தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள். "ரத்தத்துக்கு ரெண்டே குணந்தான் உண்டு சாமி. முதல எதைக்கண்டாலும் அத உறிஞ்சி இழுத்துக்கிட்டு போற திக்கெல்லாம் கொண்டு போவும். இரண்டாவதா, அது உறிஞ்சினது நல்லது இல்லனு தெரிஞ்சிருச்சுனா அழிக்க ஏண்டு பார்க்கும். ஆனா, அதால எதையும் உள்ளவிட்டு என்னனு பாத்தா பிறவு தான், நல்லதா கெட்டதான்னு தெரிஞ்சுக்க முடியும். அத அப்படித்தான் படைச்சு வச்சிருக்குனு எங்க தாத்தா சொல்லுவாரு. அரமனைக்கு கோட்ட கட்டி காவ போட்டாப்புல, அத்தனையும் ஏழடுக்கு தோலால மூடி தான் வச்சிருக்குனாலும், தோலு கிழிஞ்சா, எதுவும் ரத்தத்துக்குள்ள கலந்திரும். சிலது கலந்த உடனே ரத்தத்தையே முறிச்சு போடும், அதுக்கு மருந்தும் இல்ல,  முறியும் இல்ல. சிலது கொஞ்சம் கொஞ்சமா பரவி அப்புறம் தான் கொல்ல ஆரம்பிக்கும், அப்பத்தான் நாம அத முறிக்க ஏது பண்ணணும். இல்லாட்டி போனா கொல்லிமலைக்காரி பேர சொல்லி, உசுர நல்ல வழியில போக விட்டிறணும். எப்ப மருந்து கொடுக்கணும் எப்ப அது போக்குல விட்டிரணும்னு தெரிஞ்சவ தான் நல்ல மருத்துவச்சி. ஏன்னு கேட்டிகனா,  ஒரு உடம்பு பிழைக்கதும் பிழைக்காம போறதும் நம்ம கையில இல்ல சாமி. அது அந்த உடம்பும், அதுல குடியிருக்க உசுரும், பிறந்து வந்த ஏட்டுக்கணக்குப்படி செய்துக்கிறது. நாம புறத்தால நின்னு, அதுக்கு வேண்டது செய்றோம். சண்ட போடற வீரனுக்கு, கையொழியாம ஈட்டியவோ, கத்தியவோ எடுத்து கொடுக்கிற ஏவல்காரனோட வேலை தான் ஒரு வைத்தியனோட வேலைனு எங்க தாத்தா சொல்லுவார்.  உங்கள கடிச்சது விஷமுள்ளதுதான் ஆனாலும் அறியாமத்தான்  அது போற வழியில நீங்க வந்துட்டீகனு தெரிஞ்சுகிட்டு, காலுக்குள்ள வார பச்ச பிள்ளைய விலக்கி விடறதுகெணக்கா, ஒரு தட்டு தட்டி விலக்கி விட்டுட்டு போயிருச்சு. கோவத்துல பட்டிருந்தா, அப்புறம் கொல்லிமலக்காரி விட்டவழி தான்" என்றவள் நெஞ்சருகில் இருகைகளையும் குவித்து வணங்கிக்கொண்டாள் ஒருமுறை. 

"விஷ முறிவு கண்டிருச்சு தாயீ ஆனாலும் உறங்காம ஒரு ராத்திரி வைக்கணும், நான் பேச்சு கொடுத்துக்கிட்டு இருக்கேன், நீங்க படுத்துறங்குங்க" என்று வசந்தத்தை பார்த்து சொன்னாள் அசனி.

வசந்தம் அப்போது தான் பதட்டம் தணிந்து ஒரு நிலைக்கு வந்து "இனி எனக்கென்னடியம்மா உறக்கம், சமயத்துக்கு, நீ வந்தியோ இல்லியோ, நான் பிழைச்சேன், இல்லனா என் நிலைமை என்னவாயிருக்குமோ? நீ மகராசியா இருப்படி" என்றவள் சுவரில் சாய்ந்து, என்னை பார்த்தபடி அமர்ந்தாள். 

"தெய்வம் கொடுத்த வாக்கு இருக்குதே தாயி. சாமிக்கு இன்னமும்  செஞ்சு முடிக்கிற காரியமும் இருக்கு, கடமையும்  இருக்கு. உங்களுக்கு தெரியாததா? என்னைக் கொண்டு இல்லைனாலும், எப்படியும் உங்க குலசாமி பொழைக்க வச்சிருக்கும்".

அசனி மெல்ல தன் கையில் இருந்த சித்துடுக்கையை சுழற்றியபடி கதை சொல்லத் துவங்கினாள். அவர்களின் குலக் கதை. முதலில் சொற்களை அறியவில்லை மனம். ஓடும் குதிரையின் ஒன்றை ஒன்று  பின்னிய காலடி தடமென அதிர்ந்த உடுக்கை ஒலியை மட்டுமே அறிந்தது.  பின்னிய காலடித் தடங்கள் மெல்ல ஒன்று பதிய ஒன்று எழ என  நூல் பிடித்து எழுதிய நேர் கோடாக சீர் கொண்டன.  கொடியில் பூவாக  ஒரு  சொல் கணம் கணமாக பூத்து மனமேறியது. ஒன்று இன்னொன்று என சொற்கள் விரிந்து மலர்ந்தன.  அதைக்  கவி என்று அறிந்து கொண்டேன்.  இறுகி பின்னி சடை விரித்து படர்ந்த பெரு மரங்கள் ஊன்றிய, மலைக் காடொன்றில் நின்றேன். ஈரம் ஊறி, இலை தழைப்புகளின் இடைவெளி வழி ஊடுறுவிய பகல் ஒளி மின்னி மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்த, கரிய சேற்று தரையில் இலைகளும் கிளைகளும் உரச நடந்தன கால்கள். ஓரடிக்கு ஓரடியென மண் உயர உயர தவழ்ந்தேன், பின் ஊர்ந்தேன். என் உடல் ஒளிர்ந்து வளைந்து எழுதியபடி ஈரச் சேற்றில் நகர்ந்தது. பிளந்த நா  வறண்டு துடித்தது. பசித்து வெப்பம் கொண்டு என் உடல் கொதிக்க, தரையில் உரசி உரசி வளைந்தேன். என் உடல் எங்கும் செதில்கள் முளைத்து வழ வழத்தன. என் வால் நுனியில் இருந்து சுண்டி ஏறிய சீற்றம்  ஒன்று பெருகி தலைக்கேறியது. சீறினேன், சீறி தலை சிலுப்பி படம் விரித்தேன்.  இரு முகமும், கோரைப்பற்களும் கரும்பச்சை நிறமுமாக எதிரில் வந்தாள். அவள் நின்ற மையம் பன்னிரு இதழ் கொண்ட தாமரை மலர் என முளைத்தது. இதழுக்கு ஒருவராக காலராத்ரீ, கண்டிதா, காயத்ரீ, கண்டாகர்ஷிணீ, ஙார்ணா, சண்டா, சாயா, ஜயா, ஜங்காரிணீ, ஞானரூபா, டங்கஹஸ்தா, டங்காரிணீ என பன்னிரு வடிவுகொண்டு அவளே அவளைச் சூழ்ந்து கொண்டாள். வால் நுனியில் சுருண்டிருந்த ஒரு நீலத்துளி, ஊர்ந்து மேலேறி அனாஹதத்தில் ஹிருதயத்தில் துடித்தது. அவள் என் அருகில் வந்து, குனிந்து, ஐம்பத்தோரு செந்நிற மணிகள் கோர்த்த அக்ஷமாலை ஒன்றை பற்றியிருந்த வலக்கரத்தை என் படத்தருகில் நீட்டி, "ராகினி என்பதும் எனக்கொரு பெயர், தீண்டுக,  தீண்டி அறிக என்னை" என்றாள்.     

அவள் உடல் கீறி உள்ளே நுழைந்தேன் ஒரு துளியென. செந்நிறம் கொண்டேன். அன்னத்தில் இருந்து எழுந்து ரசம் என்று ஆன என்னை கல்லீரலும்  மண்ணீரலும் செந்நிறம் ஊட்டி  ரக்தம் என்று ஆக்கின. நாளங்கள் வழி உயிர்வளியை சுமந்து ஒவ்வொரு அணுவையும் வாழ்வூட்டினேன். இந்திர கோபத்தை போல சிதறி பறந்தேன், ஊர்ந்தேன். இனிப்பும், உவர்ப்பும் என ருசி கொண்டேன். உடல் செயல் புரிவதும், மனம் தெளிவும் நுட்பமும் கூர்மையும் கொள்வதும் என்னால்.  கொதித்தேன், ஒளிர்ந்தேன், நிலையற்று அலைந்தேன். விழிகளில், செவிகளில்,  அதரங்களில், நாவில், நாசியில், உள்ளங்கை கால்களில்,  குறி உறுப்புகளில், புருவங்களில் அழகு என்று மிளிர்ந்தேன். சிவந்திருப்பதால் சோனிதம் என்றும்,  வாழ்வை நிலை நிறுத்துவதால் ருதிரம் என்றும், தாமிரத்தின் நிறம் கொண்டவன் என்பதால் லோஹிதம் என்றும்,  வெளியேறும் தன்மை உடையவன் என்பதால் அஸ்ரதம் என்றும்,  புண்களில், காயங்களில் இருந்து வழிவதால் க்ஷதஜம் என்றும் பெயர் கொண்டேன். கல்லீரலோடு, மண்ணீரலும் என்னிலிருந்து தோன்றியவையே. என் நுரைத்த குமிழிகள் கூடி  நுரை ஈரல் ஆனது. இருதயமும், விதைகளும், குடல்களும், குதவாயும், சிறு நீரகங்களும் என்னையே ஆதாரமாகக் கொண்டு தோன்றின. மகிழிச்சி என்றும்,  அறிவின் கூர்மையென்றும், பெருந்தன்மை என்றும் வெளிப்படுபவன் நானே. 

"ஒருத்தன் கையக் கூட்டி கும்பிட்டா அதுக்குள்ள எம்புட்டு ரத்தம் நிறையுமோ அந்த மாதிரி எட்டு மடங்கு அளவுக்கு தான் அவன் உடம்புக்குள்ள ரத்தம் ஓடுமாம். ரத்தம் உடம்போட சூடு தாயீ. அது குறைஞ்சா உடம்பு குளுரும்." என்று அசனி சொல்லிக்கொண்டிருந்தாள். விழிப்பு வந்து, உடம்பு குளிர்ந்து சிலிர்த்தது. எனக்கு எதிர் புறத்தில் மனையிட்டு பண்ணிரண்டு இதழ் கொண்ட தாமரை எழுதி, மையத்தில் இரண்டு திரியிட்ட ஒற்றை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் முன் பசு நெய்யை குளிர விட்டு குழைய வெந்த அரிசிகஞ்சியை படைத்து, சிறிய கரண்டியால் எனக்கும் இரண்டு வாய் ஊட்டினாள் வசந்தம்.  பொழுது இரவு ஒரு முஹூர்த்தம் ஆகியிருக்கலாம். மனம் கிறங்கி மீண்டும் மயங்கியது. கட்டிலில் இருந்து இறங்கி முதல் கால் தரையில் ஊன்ற, இரண்டாம் கால் நீர் ஊறிய சேற்று சதுப்பில் இறுகி இறங்கியது.  'இளையா' என்று என்னை யாரோ அழைத்தார்கள், மர உறிகள் தரையில் தொடைகளில் உரச நடந்தேன்.

"இப்படி இன்னும் நிறைய எழுதியிருக்கார்டா" என்ற ராமசுப்பையர் சொல்லி விட்டு, என்னை பார்த்து "சில நேரம் நம்ம உடம்புக்கு ஒத்துக்காம பலதும் விஷமாகும்டா சுந்தரம், அன்னைக்கு வைரம் கதைல கம்பே விஷமா இருந்தத சொன்னான் நினைவு இருக்கோ" என்றார். அன்று இரவில் மலைக்காணி கார்வையும் கணமான குரலுமாக சொன்ன கம்பரிசியில் விஷம் முறித்த கதை நினைவில் வந்தது.

மலைக்காணி சொன்ன கதை..

"செம்பாயி படைப்புக்கு உத்தரவு கொடுத்தா, விதைக்கலாம்னு அர்த்தம்" என்றார் மூப்பன் இளையானிடம். படைப்பு முடிந்த மூன்றாம் நாள், ஏழு மலைக் குடிகளும் அவரவர் தாழ்வாரத்தில், மலைகளின் ஊன்றிய கால்களை ஒட்டி மண்ணை கீறி திருப்பிவிட்டு விதையை தூவி வைப்பார்கள். ஏழு மலைகளின் முழங்கால்களிலும், கொத்தி சொருகி வைத்தார் போல வரிசையாக, அந்தந்த மலைக்குடிகளின் குடில்கள். பனி குறைந்து வெயில் உரைக்க ஆரம்பிக்கும் முன் நிலம் திருத்தி விதைப்பது என்பது வழக்கம். அந்த நேரத்தில் தான் செம்பாயின் படைப்பு வரும். அடுத்த நிலவில்  பச்சையாயிக்கு படைக்கையில் வெயில் புறங்கழுத்தில் உரைக்க ஆரம்பித்து, காட்டுக்குள் வெப்பம் அடரும். ஒன்னோ இரண்டோ சிறு மழை பெய்து ஓயும். மேல மலையின் முதுகில் மோதி, வலது புறமாக சுழித்து திரும்பி ஏழுமலைத் தாழ்வாரம் நெடுகவும் ஓடி தாழ்வாரத்தை குறுக்கே இரண்டாக  பிரிக்கும் காரியோடை, நேர் கீழக்கே செல்லிமலைக்கும், அதற்கு தெற்கே கரிமலைக்கும் இடையே உள்ள இடுகள் வழியாக யானை பள்ளத்தில் இறங்கும்.  மேல மலை முகட்டில் நின்று கண்டால், பெரும்படைப்பில் மூப்பன் அருளாடி வரும் போது அவன் இடது தோளில் முறுக்கி இட்டு வலது இடையில் முடிந்து விட்ட மான்தோல் பிரி போல கிடக்கும். 'ஆன முழுங்கும் பெரும்பள்ளம் ஆனப்பள்ளம்' என்பார்கள். கரியாயிக்கு படைப்பு கொடுக்கிற நிலவு கழிந்து பெரு மழை பெய்து, காரியோடையின் நிறம் செங்காவியாக மாறி காட்டு வெள்ளம் வரும் போது தான் யானைப்பள்ளம் நிறைந்து, மறுப்பக்கம் ஆறு பாயும்.  மற்ற காலங்களில் கருப்பு மணல் பரல்கள் தெளிந்த நீரில் நெளிய  இடை சிறுக்க ஊர்ந்து  யானைப்பள்ளத்தில் நிறைந்து கொண்டே இருக்கும்.

"மூப்பா, நாம ஏன் ஆனபள்ளத்து பக்கம் போறதே இல்ல?" என்றான் இளையான்  

"காரியோட நமக்கு, பெரும்பள்ளம் மத்த கானுசுர்களுக்கு. நாம அங்க போறதும் இல்லை,  அதுக இங்க வாரதும் இல்லை." ஏழுமலைத் தாழ்வாரம் முழுவதும் காரியோடை கொண்டுவந்து நிரப்பியா கருப்பும் வெள்ளையுமான மணலால் ஆனது.
 
குனிந்து காரியோடைக்கரையில் கிடந்த கரிய மணலை பார்த்தபடி நடந்த மூப்பன் "முன்ன பெரு வெள்ளம் ஒன்னு வந்து ஒழிஞ்சப்ப, தாழ்வாரம் முழுக்க மண்ணால நிறைஞ்சிருச்சுனு சொன்னேன்ல." எனக் கேட்டார்.

"ஆமா மூப்பா, அதோட கூட தான் கம்பரிசியும் வந்து சேர்ந்துச்சு இல்லையா" 

"ஆமா, விலையுற மண்ணையும் கொடுத்து, விதையையும் கொடுத்தது அந்த ஏழு சிறுக்கிக தான்,  விளையாட்டுகாரிக. அவுக சித்து நமக்கு விளங்காது" என்று சொன்னபோது தான் இளையானை நிமிர்ந்து பார்த்தார். அவர் கண்கள் நிறைவாய் நீர்த்திருந்தன.  

"கம்பரிசி விஷமா இருந்துச்சுனு சொன்னீங்க மூப்பா, அது எப்படி அன்னமாச்சு"

"அதுவும் நம்ம இளமூப்பன் கண்டு சொன்னது தான்.  அன்னைக்கு பெருகி வந்த வெள்ளத்துல பல விதமான விதைகளும் கலந்து வந்துருக்கு.  சில விஷப்பூண்டு செடிகளுக்கு ஒரு குணமுண்டு, மெல்ல மெல்ல அதுகளோட விஷத்த அண்டையில வளருற மத்த செடி கொடிகளுக்கும், வேர்வழியாவும் காத்துவழியாவும் கடத்திடும்ங்க. அதோட சில தாவரங்களுக்குள்ள எல்லா வகையும் உணவுக்கு ஆறதாவும்  இருக்காது. இப்படி என்ன காரணத்தால நஞ்சாச்சோ, இல்லை அதுல விச வகைகளும் உண்டோ என்னமோ? அப்படி பலதும் கலந்து வந்து சேர்ந்துச்சு கம்பரிசி. அந்த கம்பரிசிய விஷமுறிச்சு உணவாக்கினது பச்சாயி தான்."

"எப்படி விஷத்த முறிச்சா பச்சாயி?"

"ஒரு நா மேல மலை முகட்டில வரக்கமுகு மரத்தடியில சாஞ்சு உட்கார்ந்த இளமூப்பன் எப்பிடியோ கண் அசந்து உறங்கிட்டான். கானக் கோழியா வந்து உறங்குற மூப்பன் கால் பெருவிரல்ல கொத்தி எழுப்பியிருக்கா பச்சாயி. சுருக்குனு வலி தலைக்கேற, அசங்கி அவன் எழுந்திச்சதும், அவன் முன்னாடி அழகு காட்டி, நாலு எட்டு வச்சு நடந்து, இடது கால ஊனி வலது காலத் தூக்கிக்கிட்டு, தலைய மட்டும் வலது புறமா திரும்பி இளமூப்பன ஒரு பார்வை. மூப்பன் புரிஞ்சுக்கிட்டான், அவ அழைக்கிறத. கோழின்னு பேரு தான், மயிலு தோத்துரும் அவ சீருக்கும், சிலுப்பலுக்கும்.  மூப்பன் எந்திருச்சு அவ பின்னாடியே போறான்.  அடி அடியா வச்சு மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு மூப்பன மேல மலைய விட்டு இறக்கிக் கூட்டிக்கிட்டு தாழ்வாரத்துக்கு வாரா பச்சையம்ம. தாழ்வார கரைக்கு வந்தவ, மணல்ல இறைஞ்சு  கிடந்த விதையில, சிலத மட்டும் கொத்தி முழுங்கிறதும், சிலத துப்பறதுமா செஞ்சு விளையாட்டு காட்றா. அதைப் பார்த்துக்கிடடு இருக்கையிலேயே, யாரோ "பச்சாயி"னு அழைச்சாப்பில இருக்க, படக்குனு முழிச்சிட்டான் மூப்பன். பச்சாயினு குரல் கேட்டு முழிச்சப்பதான், வந்தவ அவ தான் மூப்பன் தெரிஞ்சுகிட்டான். முழிச்சு பாத்தா, கமுகு மரத்தடியில தான் இன்னமும் இருக்கான்.  வலது கால் பெருவிரல் மட்டும் சுருக்கு சுருக்குனு குத்துது. உச்சிவெயில் சரிய தொடங்குற நேரம். சுனை வெள்ளத்தை எடுத்து முகத்தக் கழுவிகிட்டு தாழ்வாரத்துக்கு வந்து சேர்ந்தா, தாழ்வாரக்கரை, முழுக்க கூட்டம் கூட்டமா காட்டுக்கோழிக அடைஞ்சு கிடக்குதுக. ஓடுதுக, ஆடுதுக, ஒரே சத்தமான சத்தம், கேவு கேவுனு கிடக்கு"

"கோழிக கிட்ட இருந்து எது நல்ல விதைனு தெரிஞ்சுகிட்டாரா மூப்பரு"

"ஆமாம் அதுவும் என்ன அத்தனை இழப்பமா. கோழிக இத திங்கலாம் இத திங்கக்கூடாதுனு தெரிஞ்சுக்கிட்டு சில விதைய மட்டும் கொத்துதுக. சில விதைகள சீண்டல. மூப்பன் கோழிக் கூட்டத்த கலைக்காம ஒரு பிலாவு மரத்தூருல மறைஞ்சு நின்னு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கான். ஒன்னும் விளங்கல, மூப்பனுக்கு, இதுல நச்சு விதைய விட்டு நல்ல விதைய மட்டும் எப்படி கண்டு எடுக்கதுனு. மனசுக்குள்ள அம்மைமார நினைச்சு  நீங்கதான்  வழிகாட்டணும்னு வேண்டியிருக்கான்"

"நினைச்சதும் அவுக ஏழு பேரும் நேர்ல வந்தாகளா?"

"எல்லா நேரமும் அம்மைக கண்ணுல காண்கிறாப்புல வரமாட்டாகடா இளையா, சில நேரம் கண்ண மறைச்சு வேற வழிகளையும் வருவாக. மூப்பன் பிலாவு மரத்தூர்ல ஒழிஞ்சு கிடக்கான், அவன் அம்மைய கூப்பிட்டதும் ஏழு குஞ்சு கோழிக ஒண்ணுக்கு பின்னால ஒண்ணுனு அவன் முன்னாடி வரிசையா வருதுக. அம்புட்டு  குஞ்சா இருக்க கோழிக அம்மைய விட்டு வராதுக. இது ஏழும் அம்மை இல்லாம தனியா வாரத பார்த்து மூப்பனுக்கு ஆச்சர்யமா இருக்கு. அதுல இரண்டாவதா வந்த குஞ்சு இவன் முன்னாடி வந்து எச்சம் போடுது. குஞ்சு கோழியில, இன்னும் செரிமானம் சீராகல. அது போட்ட எச்சத்துல மணி மணியா விதைக முழுசா கிடக்கு. அதைக்கண்டதும் மூப்பனுக்கு விவரம் கிட்டீருச்சு. தாழ்வாரத்தில ஆறு  நாள் அடைஞ்சு கிடந்த காட்டுக்கோழிக, ஏழாவது நாள் வடக்காம பொன்மலையத் தாண்டி போயிருச்சுக கூட்டமா. ஏழு நாளும் மூப்பன் அந்த மரத்தடியில காத்துக்கிடந்தான். போறப்போ எல்லா கோழியும் பொன்மலை தாண்டி கண்ணுக்கு மறைஞ்சு பிறகும் இந்த ஏழு குஞ்சுக்கோழிக மட்டும் மூப்பன் இருந்த பிலா மரத்த ஒரு தடவை திரும்பி பார்த்துட்டு கடைசியா போச்சாம். ஏழாம் நாள்,  அதுக போனதும் காட்டுக்கோழிக எச்சத்துல கிடந்த கம்பரிசி விதைகளை மட்டும் பெறக்கி பெறக்கி ஒரு கூடையில சேர்த்திருக்கான் மூப்பன். மூனு நாள் பெறக்கி ஒரு கூட சேர்ந்ததும், அந்த விதைகள கூடையிலேயே வச்சு ஏழு முற அலசி, விடிஞ்சு வெயில் உரைக்காத நேரத்துல ஓலைப்பாய விரிச்சு பரப்பி காயவெச்சு பக்குவம் பண்ணி வைச்சானாம். அந்த விதைகள விதைச்சு விளைஞ்சு வந்ததுதான் தான் நம்ம குடியெல்லாம் முத முதல கம்பஞ்சோறா திண்ணது "

"அதுனால தான் நாம காட்டுக்கோழிய கொல்றது இல்லையா"

"பச்சாயி காட்டுக்கோழியா வந்து தான விஷத்த முறிச்சு கொடுத்தா, அதனால நாம காட்டுக்கோழிய மட்டும் அடிக்கது இல்லைனு வச்சிருக்கோம். ஒன்னுரெண்டா கம்பரிசிய குத்தி, பொங்கி அதுதான் படையல் அம்மைக்கு. அன்னத்துல விஷத்தை முறிச்சவ, நம்ம உடம்புல கலக்கிற எப்பேர்பட்ட விஷத்தையும் முறிச்சு போடுவா. நம்ம உடம்புல ஓடுற ரத்தமா இருக்கதும் அவ தான். அவ வழி வந்த பச்சமலை குடிகாரங்க அளவுக்கு நோய் கண்டு சொல்லவும் மருந்து கொடுக்கவும், விஷமுறி வைக்கவும், யாரும் இல்ல இந்த மலங்காட்டுல. கீழக்க செல்லிமல தாண்டி வேத்தாளுகளும் இங்க வந்து வைத்தியம் பார்க்காக. பச்சை மலைக்குடிகாரங்க சொல்லி வைக்கிறதால நமக்கும் கொஞ்சம் கொஞ்சம் கைப்பாக்க தெரியும்னாலும். அவுங்க தான் அதுக்குரியவங்க. "  

இளையானும் மூப்பரும் இன்னும் பழுக்காத பச்சை நிற சம்பக பூக்களும்,  கம்பரிசியும் பந்தமுமாக மேல மலை ஏறினார்கள்.  கரும்பச்சை நிறக்கல்லாக மின்னிய படியிருக்கும், பச்சாயிக்கும், உடன் மூப்பனுக்கும் படையல் இட்டு தாழ்வாரத்திற்கு மீண்டும் இறங்கும் போது வெயில் தனிய துவங்கியிருக்கும்.

ஏதோ நினைவு வந்து பாட்டி தான் அனைவர் மௌனத்தையும் கலைத்தாள் "மலைக்காணி அன்னைக்கு சொன்னாப்புல, வர மாசி மகத்துக்கு தான அவுக இரண்டாவது அம்மைக்கு படையல்?" என்றாள். "ஆமாம்" என்றார் தாத்தா 

"இப்பிடி மலையிலயும் காட்டுலையும் கண்டு எடுத்து அவா காலம் காலமா கொண்டாடிண்டு வர தெய்வங்க தான், இங்கையும் வந்து நின்னுண்டிருக்குதோ என்னமோடா கோவிந்தா" 

***

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19