ஐயன் பந்தி - 6

புவியேழையும் பூத்தவளே - 2

ஆனமந்தி சுப்பிரமணிய ஐயன் சன்னாசிகளிடம் இருந்து மந்திரம் பெற்றதும், வைத்தியம் கைவரப்பெற்றதும் 108 ஓலைகளில் எழுதியது. 

ருத்ரோத்காரி ஆண்டு ஆடி மாதம் அமாவாசை இரவு விடிய ஒரு முகூர்த்தம் இருந்த காலத்தில் மஹாகாளனாகிய, ஆகாச கருப்பனையும், சுப்பிரமணிய சுவாமியையும், மூதாதையர்களையும் தொழுது 11 சன்னாசிகளையும் தண்டனிட்டு வணங்கி அவர்கள் அருளிய மந்திரத்தையும், அதை உருவேற்றும் முறையையும் பெற்றேன். அதோடு கூட மூத்த சன்னாசி ஒற்றை பவளப் பரல்  கொண்ட வெண்கல சலங்கை மணி  ஒன்றையும் கொடுத்தார். பரல் உருண்டும், மணி ஒலிக்காது போகையில், மந்திரம் பலித்தது அறிவாய் என்றார். சொல்லி வைத்த முறைப்படி, ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்தத்தில் தெய்வத்தையும் குருவையும் தொழுது மந்திரத்தை உருவேற்றி வந்தேன். வெறும் சொல் என்று மட்டும் உள்ளேறிய அம்மந்திரம், நினைவென்றும் பின் உணர்வென்றும் ஆகி,  அகத்தில் ஒரு ரகசிய நாடியென சன்னமாய் துடித்து ஓடிக்கொண்டிருந்தது. அதற்கென்று தனியாக ஏதும் செய்ய வேண்டியதில்லை என்றானது. உண்மையில் அதன் பின் அத்துடிப்பை நிறுத்திக்கொள்வதும் கூட என் பிரயத்தனத்தால் ஆவதில்லை என்று விளங்கியது. 

பிதுர் தர்ப்பணாதிகள் கழிந்து, துலாமாத அமாவாசையன்று பித்ருகள் உண்ட மிச்சத்தை உண்ண  நானும் தம்பி கிருஷ்ணனும் அமர்ந்தோம்.  என் அகமுடையாள் வசந்தம் தான் இலையிட்டு பரிமாறினாள் இருவருக்கும். பருப்பும் சோறும், வெஞ்சனங்களும், பலகாரங்களும் உண்டு முடித்து, வெல்லம் இட்ட அரிசி பாயசத்தை ஒரு கை அள்ளி வாயில் வைக்கையில்,  இனிப்பு சுவையை மட்டும் நாவறியவில்லை.

"என்னடி பாயசத்துல இனிப்பே இல்ல" என்று வசந்தத்திடம் கேட்ட போது தம்பி கிருஷ்ணன் தான், "என்னணா எல்லாம் சரியாதான இருக்கறது" என்றான்

எத்தனை முறை உண்ட போதும்,  இனிப்பு ருசியை மட்டும் அறிய முடியவில்லை. குடுவை நிறைய தேனை வாயில் விட்டுக்கொண்டேன். கனத்த நீர் என்று தொண்டையில் ஒரு ருசியும் இல்லாமல் இறங்கியது. அன்னம் ருசிக்கவில்லை. வெல்லக்கட்டிகள் மெல்லிய உப்புச்சுவையை மட்டும் காட்டின.  இனிப்பென்று அறிந்த அத்தனையையும் அள்ளி அள்ளி வாயிலிட்டு பார்க்க, அதுவரையும் நாவறியாத, அதுனுள் ஒளிந்திருந்த வேறு வேறு ருசிகளைக் காட்டின. தேங்காய் உவர்த்தது, தீம்பால் கசந்தது. 

"என்ன ஆயிடுத்துணா உங்களுக்கு, இப்படி இனிப்ப வாரி வாரி திங்கிறேள்" என்றாள் பாரியாள்.

"ஒண்ணுமில்லடி வாய் கசக்கறது, என்னத்த திண்ணாலும் மாற மாட்டேங்கறது"

சில நாள் கழிந்த போது இனிப்பு என்று சுவையை நினைவு படுத்திகொள்ளவும் முடியவில்லை. நினைவிலிருந்தும் போனதும், அதற்காக ஏங்க வேண்டியதும் இல்லை என்றானது. சிரிப்பும், மகிழ்ச்சியும் மறைந்தது. வசந்தம் என் அம்மான் மகள் தான். துலாம் ராசிக்காரி. எதையும் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை. சிற்றசைவே போதும் கண்டு கொள்வாள். நான் இனிப்பை ருசிப்பதில்லை என்று அறிந்ததும் உணவில் இனிப்பை சேர்ப்பதையே நிறுத்திக்கொண்டாள். 

சில நாட்களில் உப்பு ருசியையும்  அறியக்கூடவில்லை. உப்பற்று போனதும், பிற நான்கு ருசிகளும்  ஒன்றுடன் ஒன்று கலந்தன,  மிகுந்து மிஞ்சின. உடல் தளர்வுறத் துவங்கியது. உணவின் மீதும், வாழ்வின் மீதும் ஒரு நாட்டமும் இல்லை என்றானது.  இலையில் உணவை பரப்பி விட்டு, பரிசேஷணத்துக்கு தீர்த்தம் விட வசந்தம் உத்தரணியை நீட்டிக்கொண்டு இருந்தாள். கை நீட்டி நீரை வாங்க தோன்றவில்லை. இரண்டு மூன்று முறை அழைத்த பிறகு தான், நினைவு திரும்பி நீரை வாங்கினேன். ஒரு நாள் சட்டென்று, காரம் தலைக்கேறி, இருமி, தொண்டை எரிய, பாதி உணவில் எழுந்தேன். "தீர்த்தத்த குடிங்கோளேன்" என்று கடிந்து கொண்டாள் வசந்தம்.  பின்னர் அவள் உணவு உண்ணும்போது, "அப்படி காரம் ஒன்னும் இல்லையேண்ணா" என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை.  அடுத்த முறை உண்ட போது அன்னத்தில் காரமும் இல்லை. செயலற்று அமரத்துவங்கினேன். ஒவ்வொரு ருசியாக மறந்தது. 

வெற்றிலையும் பாக்கும் வெறுமனே வாயில் அரைப்பட்டது, பின் அதையும் கைவிட்டேன். துவர்ப்பு ருசியும் போனது. புளிப்பும், கைப்பும் மட்டும் எஞ்சின. புளியையும், மாங்காய்களையும் கண்ட போதெல்லாம் உண்டேன். மாம் பழங்கள் கசந்தன. புளிப்பும் மறைந்த பின், கைப்பொன்றே ருசியானது. உண்ணக்கூடியது அத்தனையும் கசப்பென்று மட்டும் இருப்பதை அறிந்து கொண்டேன்.  தொலையாத ஒரே சுவையாக எஞ்சிய கசப்பும் ஒரு நாள் மறைந்த போது தான், அறிந்தேன், உணவின் மணமும் எனக்கு தெரிவதில்லை என்று. அழுகலுக்கும், நல்லுணவுக்குமான பேதமும் புரியவில்லை. அத்தோடு அருவருப்பு உணர்வும் போனது. பசி தோன்றினால், எதையும் அள்ளி வாயிலிட்டு உண்ண முடியும் என்று ஆனது. 

சுவைகள் மறைந்ததும், நிறங்களும் பிறழ்ந்தன. கருமையின் வெளுப்பின் பேதங்களை மட்டுமே கண்கள் அறிந்தன. அழுகையும். கோபமும் கூட அடியோடு போனது, கருணை என்றோ,வெறுப்பு என்றோ  எதுவும் இல்லை, வலியென்பதும் மறைந்தது. சும்மா இருந்தேன். உடலில் ஆடைகளையும் உணர கூடவில்லை. 

"செத்த இவளை பார்த்துக்கிறேளா. தொழுவில மாடு கத்தறது" என்று மூன்று மாதமே ஆன மகளை நீட்டினாள் மனைவி. நான் கை நீட்டி வாங்கிய கணத்தில் அலறி கத்தத் துவங்கியது குழந்தை. வசந்தம் குழந்தையை மீண்டும் வாங்கி சமாதானம் செய்து கொடுத்த போதும், அதே அலறல் என் கைப்பட்டதும்.

"அண்ணா நீங்க தொழுவுல லக்ஷ்மியை பாருங்கோ,  இவ என்னமோ இன்னைக்கு ஒரே அடம் பண்றா" என்றாள். தொழுவில் பசுவும் என்னை அண்டவில்லை. உடல் சிலிர்த்து விலகி நின்று கொண்டது. நான் எடுத்து போட்ட வைக்கோலைக் கடிக்க வில்லை. நீரையும் குடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் பசியில் கத்திக்கொண்டிருந்தது. வசந்தம் போய் நான் இட்டிருந்த வைக்கோலை எடுத்து விட்டு புதிதாக இட்டதும் உண்ணத்  துவங்கியது.  உடல் வியர்வையில் மணம் இல்லை என்று வந்து பார்த்தவர்கள் சொன்னார்கள். தெருவில்  இறங்கி நடந்தால், மணம் கிட்டதாதால் நாய்கள் மிரண்டு விலகின. சிறு குழந்தைகள் என்னைத் தொடுவதே இல்லை. முகம் கண்டால்,  பயந்து அழுதன. வேதத்தையும் நாமறந்தது. யாரையும் காண்பதில்லை, எவரோடும் உரையாடுவதில்லை என்றானது. 

ஒரு நாள் உச்சி போதில், கூடத்தில் ஜன்னல் ஓரத்தில் என்னை உட்கார வைத்து விட்டு, "நான் வயல் வரைக்கும் போய்ட்டு வந்துடறேண்ணா" என சொல்லி சென்றாள் வசந்தம். நான் செயலற்று அமர்ந்த நாளில் இருந்து அத்தனை பொறுப்பும் அவள்  தலையில் தான். கூடத்தில் அமர்ந்து ஜன்னல் வழி திண்ணையையும், தெருவையும்  நோக்கிக் கொண்டிருந்தேன். நான் இருக்கும் அறையில் சுவற்றில் கெவுளிகளும் இல்லாமல் ஆகின. வெளிச்சம் உரைக்கவில்லை. இருள் கவிவதுமில்லை. மந்திரம் மட்டும் உள்ளின் உள்ளில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. மழை விட்ட பின்னும் ஓட்டு கூரையில் இருந்து சொட்டும் நீர்ததுளியென சொட்டிக்கொண்டிருந்தது. அதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். 

ஐந்து வயதே ஆன பெண்குழந்தை ஒன்று, பட்டு பாவாடையும், பின்னிய தலையில் தாழம்பூவும் தைத்து, வாயில் ஒரு துண்டு வெல்லக் கட்டியை குதப்பியபடி, காலில் மணிக்கொலுசுகள் ஒலிக்க நடையேறி வந்து திண்ணையில் நின்றது. ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த என்னையே  நோக்கிக்கொண்டிருந்தது. கருப்பும் வெள்ளையுமான திரை ஒன்றில் பல வண்ண நிறத்தால் எழுதிய ஓவியம் போல அவளை மட்டும் நிறங்களோடு கண்டேன். வாயிலிட்டு குதப்பிக்கொண்டிருந்த பாதி கரைந்த வெல்லக் கட்டியை  கையில் எடுத்து நீட்டி "இத திண்ணு மாமா நல்லா ருசியா இருக்கும்" என்று சப்புக்கொட்டி காட்டியது.  ஜன்னல் கம்பிகளின் வழி கை நீட்டி வெல்லத்தை வாங்கிக்கொண்டேன். கசப்பின் மணம் ஒன்று எழுந்தது. வாயிலிட்டு கொண்டதும், வெல்லம் கரைந்த திரவம் அடித்தொண்டையில் இறங்கியது. கொடுங்கசப்பொன்றை உணர்ந்தேன். உடலெல்லாம் கசந்தது, சிவனின் மிடறில் தங்கிய ஆலகாலம் உடல் எங்கும் பரவியது. மேல் அன்னமும், நாவின் மேலும் கீழும் எல்லாம் கசந்து துடித்தன. கசப்பு  துளித் துளியாக இறங்கி,  பின் துவர்த்து அடி நாக்கு தடித்தது, தொண்டை வறண்டு இறுகியது. புளித்து பல்லும், உடலும் கூசி, கைகளும் கால்களும் பின்னி முறுகின. காரம் சிதறி எங்கும் பரவியது, வெப்பம் கொண்டு உடல் கொதித்தது, காது மடல்களும், நாசி நுனியும்,  உள்ளங்கை கால்களும் நெருப்பென எரிந்தன. உடல் முழுதும் வியர்த்து கொட்டி குளிர்ந்து, உடல் சமணம் கொண்டது, நாவு உப்பை அறிந்து தெளிந்தது. பின் ஒரு கணத்தில் நுனி  நாக்கில் தும்பை பூவின் துளி தேன் போல, ஒரு புள்ளி பூவென மலர்ந்தது இனிமை,  வாய் முழுதும் நிறைந்தது, உள் நாக்கை மலர்த்தி உணவு குழாய்வழி இறங்கியது. கண்ணில் பல நாட்களுக்கு பிறகு நீர் பெருகி கொட்டியது. இனிமை இனிமை என உடல் எல்லாம் ததும்பியது. ஒரு நேரத்தில் ஒரு சுவையென்று இருந்தது, இரண்டானது, மூன்றும், நான்கும், பின் ஆறு சுவைகளும் நாவிற் சுரந்தன.    ஒன்றே பாகல் என்றும், பாகென்றும் பல ருசிகள் காட்டியது. ருசிகள் மயங்கின, ஒன்றுடன் ஒன்று பின்னியும், முயங்கியும் பல்லாயிரம் ருசிகள் என மலர்ந்தன. ருசி ருசி என மனம் அரற்றியது. வாசனைகள் பெறுகி  தலை கிறுகிறுத்தது. வண்ணங்கள் கலைந்து பிறழ்ந்து எங்கும் பரந்தன.

அன்னத்தை ருசியென்றே அறியும் உயிர்கள். நாவறிந்த ருசிகள் என திரண்ட அன்னம் வயிற்றில் இறங்கி, ஜாடராக்கினியில் வெந்து  வெண்ணிறமாக ஆஹார ரசம் என்று உதித்தது. வெண்ணெய் போல கரைந்து,  ரசாக்னியில் கொதித்து பட்டென முறுகி, வெடித்து ரசம் என்று முதிர்ந்து வ்யானம் உந்தித்தள்ள ஹ்ருதயத்தில் நிலை கொண்டது.  ஹ்ருதயத்தில் இருந்து, இருபுறத்தில் நான்கும், மேல் நோக்கி பத்தும், கீழ் நோக்கி பத்தும் என இருபத்தி நான்கு தமனிகளிலும், அவற்றின் பல்லாயிரம் சின்னஞ்சிறு கிளைகளிலும்,  ஓலி அதிர்வுகள் ஒன்றை ஒன்று உந்தவும், தள்ளி நிறையவும் செய்வது போல ஓடி உடல் எல்லாம் பரவியது. தாமரைத் தண்டின் கண்ணறியா துளைகள் போல,  தமனிகளின் முனைகளில் நிறைந்த துளைகளின் வழியாக சீறி ஒவ்வொரு அணுவிலும் இனிமை என உயிர்ப்பென ஆசையென நிறைந்தது. நிறமற்றிருந்தது.

அன்னத்தில் சாறு என்று எழுவதே ரசம். உடல் என்பது ஏழு மூலக்கூறுகளினால் ஆனது, அவையே தாது என்பன.  அவையேழும் ஒன்றில் இருந்து ஒன்றென முளைத்து எழுவன. ஏழுக்கும் ஆதாரமாய் முதலில் தோன்றியதால் ஆத்ய தாது என்றும், அன்னத்தில் இருந்து பிறந்ததால் ஆஹார பரிணாமம் என்றும், பிரசாதம் என்றும், சாரம் என்றும் பெயர் உடையது அதுவே என அறிந்தேன்.  குளிர்ந்தது. பாய்ந்தது.  உடலை  புரக்கும் தர்ப்பணம், மழலைகளை வளர்க்கும் வர்தணம்,  தாதுக்களை நிலை நிறுத்தும் தாரணம், வயதால் உடல் நலிவுறுகையில் முற்றிலும் அழியாது காக்கும் யாபணம், உடல் உறுப்புகளையும், அணுக்களையும் உயவிட்டு ஒன்றை ஒன்று ஒத்திசைய வைக்கும் ஸ்நேஹணம், உடலையும், அதன் கூறுகளையும் நிலைப்படுத்தும் ஆவஸ்தம்பணம்,  நிறைவும் செறிவுறுதலுமான  துஷ்டி என்னும் எண்செயல்களும் புரிந்தது. குருதியிலும், நினத்திலும், உடற்சுரப்புகளிலும் நீர்மை என அமைந்தது. அன்னையின்  மணிவயிற்றில், தொப்புள் கொடி வழியாக, கருக்குழந்தைக்கு உணவென்று சென்று ஊட்டும் ஆதாரம் அதுவென்று அறிந்து கொண்டேன்.   மனதில்  நிறைவென்று உயர்ந்தும்  குறைவென்று சரிந்தும் ஆடுவதும், பெண்ணுடலில் வளமென உறைவதும், சுருக்கென குத்தி, படக்கென முறிந்து, சில்லுகளாய் சிதறி, தொடை இடுக்கில் குருதியென ஒழுகுவதும், மடி நிறைந்த அன்னையின் ஸ்தனங்களில் அமுதமென பெறுகி, விம்மி ரசமெனப் பொலிவதும் அவளே.  இளஞ்சிவப்பு நிறமும் கையில் மனித கபாலம் கோர்த்த கட்வாங்கம் எனும் தடியும், ஒரு முகமும், மூன்று கண்ணும், அம்ருதா, ஆகர்ஷிணீ, இந்த்ராணீ, ஈசானீ, உமா, ஊர்த்துவக்கேசி, ருத்திகா, ரூகாரா, லுகாரா, லூகாரா, ஏகபதா, ஐஸவர்யாத்மிகா, ஓம்காரா, ஒளஷதீ, அம்பிகா, அக்ஷரா என்னும் பதினாறு தேவதைகள் சூழ அமுதால் நிறைந்த நகில்கள்  குலுங்க, பதினாறு இதழ் கொண்ட விஸுக்தி சக்கரத்தில் டாகினி  தேவி எழுந்தாள். ஐம்பூதங்களில் எங்கும் நிறைந்த வெளியினை குறிப்பவள். தேனும், சர்க்கரையும், வெல்லப்பாகும் என மூன்று வகை இனிப்பும்  குடம் நிறைய பாலும்  விட்ட பாயசத்தோடு ஒரு படையல் அவளுக்கு.  

மீண்டும் முக மலர்வும், சிரிப்புமாக உண்ண துவங்கியதும் வசந்தம் சொன்னாள் ஒரு நாள், "தேள் குட்டி போட்டா உடம்பையே பிளந்துண்டு தான் குட்டிக வரும்பா, அது மாதிரி நீங்களும் ஒரு நூறு தடவ பிறந்து இறந்து தான், இதையெல்லாம் கடக்கணும், எல்லாத்துக்கும் துணையா கருப்பன் இருப்பன்" என்றாள். அப்போது தான் புரிந்தது அவள் அத்தனையும் அறிந்து கொண்டிருந்தாள் என்று, எதையும் பேசாமலும் சொல்லாமலும்.  

 ***

மலைக்காணி இரவெல்லாம் சொன்ன நெடுங்கதை.

மூப்பனுடன் கூட தீப்பந்தமும் பிடித்துக்கொண்டு மேல மலை ஏறினேன். ஏழு மலைக்குடிகளில் மேல மலைக்குடிக்கு மூப்பனும், ஏழு குடிக்கும் பூசாரியும் அவர் தான். என் ஐயாவின் ஐயா. உச்சியில் கன்னியம்மை கோவிலுக்கு சென்று சேரும் போது வெயில் உரைக்கத்துவங்கும். ஒவ்வொரு முழு நிலவுக்கும் உச்சி மலை கன்னிகளுக்கு பூசையும் படையலும் கொடுக்கிறது வழக்கம். மூப்பர் பல முழு நிலவுக்கு மேல்  கண்டவர். இந்த ஏழு மலைக்காட்டிலும், தாழ்விலும் அவர் கால் படாத இடம் என ஒன்றும்  இல்லை. கண்ணைக்கட்டி விட்டாலும் கால் தடத்தாலறிந்து  மலை  ஏறி இறங்கி விடுவார். 

"இளையா சட்டுனு ஏறு, உச்சிக்கு அம்மைக்கு பூவும் நீரும் வைக்கணும், நேரம் போச்சுதுன்னா, அடுத்த நிலவுக்கு தான். பந்தத்தை கீழ போட்றாத. அத வச்சு தான் விளக்கு ஏத்தணும்" என்றார். வழியிலேயே, செம்மஞ்சள் நிறப்பூக்கள் பூத்திருந்த, செண்பக  மரத்தடியில் நின்று கையில் இருந்த,  மூங்கில் கூடையில் பூக்களை  பறித்து நிறைத்துக் கொண்டார்.  கூடையில் மூங்கில் அரிசியும், இரு சட்டிகளும், மரக்குடுவைகளும், தேன்குடுவையும், இளம் முயலின் தோலுரித்த கறியும் இருந்ததன.   

"சரி மூப்பா" என்றும் நானும் அருகில் சென்று பூக்களை பறிக்கத்துவங்கினேன். "இன்னைக்கு எந்த அம்மைக்கு படப்பு"

"இன்னைக்கு செம்பாயிக்கு படப்பு,  ஒவ்வொரு நிலாவுக்கும் ஒரு அம்மைக்கு படைப்புனு கணக்கு. அதுவும்  அந்தந்த படைப்புக்கு குறி உத்தரவு வந்தாதான். வருசத்துல இப்படி ஏழு நிலாவுல ஏழு அம்மைக்கும் படைச்ச பொறவு, அடுத்து புது வருஷம் பிறக்கிற ராத்திரிலதான் கொட்டும் குரவையுமா பெரும்படப்பு. அன்னைக்கு ஒரு நா மட்டும் தான் கதிரனஞ்ச  பிறகும் முகட்டில தங்க அனுமதி. அதுவும் கதிர் திரும்ப எழறதுக்கு முன்ன மலை இறங்கிறணும். அன்னைக்கு ஏழு குடியும் வரும். ஒவ்வொரு குடியும் ஒவ்வொரு அம்மைக்கு படப்பு கொண்டு வருவாங்க. மேல மலை முகட்டில வரக்கமுக மரத்தடியில ஏழு கல் உருவத்துல அம்மைக நிக்கிறாங்க, ஏழு குடிக்கும் காவலா. அவங்கள  நமக்கு கண்டு சொன்ன மூப்பரும் நிற்கிறாரு கூட. மூப்பருனு சொன்னாலும் ஏழு வயசுக்காரர் தான். நமக்கு ஏழு வரதான் எண்ணிக்கை. வட காட்டில இருந்து தான கொண்டவர சில குடிகளுக்கு இன்னுமும் எண்ணிக்கை உண்டாம். எப்படி எண்ணுவாங்கனு தெரியல. நம்ம குடிகளுக்கு தெரிஞ்சது எல்லாம் மர உரித்தானையும், மான் உரித்தானையும்  தான். அவங்க தான் தாமரை தண்டில இருந்து நூல் எடுத்து பின்னி ஒரு தானை கொண்டு வருவாங்க. தொட்டா மயிலிறக தொடுறாப்பில இருக்கும். ஏழு குடுவை நிறைய தேன் கொடுத்தாலும் தரமாட்டாங்க"

"ஏழு வயசுன்னும் சொல்றீங்க மூப்பருனும் சொல்றீங்க"

"அது ஒரு வாட்டி பெரிய காட்டு தீ வந்து ஏழு குடி தாழ்வாரம் முழுக்க பரவிருச்சு. ஏழு நாள் எரிஞ்சும் அணையல. நம்மால ஆகிறது ஒன்னுமில்லனு, தாழ்வாரத்தை விட்டு, ஏழு குடியும் அவங்க அவங்க மலையில ஏறிட்டாங்க. தாழ்வாரம் முழுசும் எரிஞ்சு, தீ ஏறி ஏறி  மலை மேலயும் வருது. சனங்க எல்லாம் உடும்புகெணக்கா மலையில அப்பிக்கிடக்காங்க.  அப்புறம் பெரிய மழ ஒன்னு பேஞ்சு தான் தீயாறுச்சு. மழைனா ஓயாத பெரும் மழை. நெருப்புல இருந்து தப்பிச்ச, பல நிலா கண்ட மூப்பன் முப்பத்திமார்க எல்லாம் அந்த மழைல போய்ச் சேர்ந்துட்டாங்க. மரத்தையும், மாட்டையும், பல விலங்குகளையும் எல்லாம் உருட்டிகிட்டு  ஓஹோன்னு ஓடி வருது வெள்ளம். ஏழு மலையும் இடுப்பு உயர தண்ணில நிற்குது. மூனு மாசத்துக்கும் மேலாகியும் யாரும் மலைய விட்டு இறங்கல. மரத்துலையும்,  முனைஞ்சுலையும் அடைஞ்சு கிடக்காங்க. மழை விட்ட பொறவும் வெள்ளம் வடிய இரண்டு முழு நிலாவாச்சு. வெள்ளம் வடிஞ்சதும் ஆம்பிள்ளைக எல்லாம் கீழ இறங்கி தடம் பார்க்கபோனாங்க. போனவங்க யாரும்  திரும்பி மலையேறவே இல்லை "

"பெண்க மட்டும் தான் இருந்தாங்களா மலை மேல?"

"ஆமாம், பெண்டுகளும், ஏழு வயசு நிரம்பாத பச்சை பிள்ளைகளும் இருந்துச்சு. அதுல ஆறு வயசான  ஒரு பயலும் இருந்தான். அவன் தான் அன்னைக்கு மேல மலைக்குடியில ஆம்பிளைகள்ல மூத்தவன்.  இரண்டு முழு நிலாவரை பார்த்துட்டு, அவனை அழைச்சு மூப்பத்தி, ஒரு முழு நிலா முளைச்ச நாள்ல முறப்படி மூப்பனுக்குள்ள தண்டத்தையும் கொடுத்து, உருமாலையும் கட்டி, வாழ வழி பார்த்து வரச் சொல்லி அனுப்பினா. தண்டமும் தீப்பந்தமும் பிடிச்சு மலையிறங்கி போனான் அந்த பிள்ளை"

"அதனால் தான் மூப்பருக்கு தண்டமும், தீப்பந்தமும் வைக்கிறோமா?"

"ஆமாம், நமக்கு வழிகாட்ட வந்தவர்ல, அதனால பந்தம் பிடிச்சு நிற்கிறாரு.  வந்து தாழ்வாரக்கரைய பார்த்தா,  ஏழு மலையும் மூட்டு வரை மண்ணில முங்கி இருக்குது . இளம்பச்சையா எதோ  நச்சு விதை மணல் எல்லாம் இரைஞ்சு கிடக்குது. முன்னால தடம் பார்க்க வந்தவங்க எல்லாம் செத்து, அவங்க உடம்பெல்லாம் நாயும் நரியும் திண்ண மிச்சம், எலும்பும் சதையுமா எல்லா பக்கமும் சிதறி கிடக்குது. தாழ்வாரம் முழுக்க அஞ்சாறு நாளைக்கு மேல சுத்தி  யாராவது உயிரோட இருக்காங்களான்னு தேடியிருக்கான் இள மூப்பன். ஒருத்தரும் இல்லை. அந்த விதைக கிடந்த தண்ணிய குடிச்சதாலதான் எல்லாரும் மாண்டு போனாங்கனு விவரம் அறிஞ்சுக்கிட்டான். செத்தவங்கள எல்லாம் கூட்டி ஒரே ஆளா மனசுல நினைச்சுக்கிட்டு, ஒரு தலை ஓடும், இரண்டு தோள் எலும்பும், இரண்டு கையெழும்பும்,  இரண்டு கால் மூட்டெலும்பும்னு ஏழு எலும்புகளையும் எடுத்துக்கிட்டு,  மேல மலை ஏறலாம் என நினைத்த போது, வானம் செம்மஞ்சளா பூத்து விடிய ஆரம்பிச்சது. அதை பார்த்தவனுக்கு என்ன தோணுச்சோ கிழக்காம அதை நோக்கி போனான். அப்பதான் எழுவயசு பொண்ணு ஒருத்தி  கிழக்க இருந்து வந்திருக்கா. எலும்பும், ஓடுமா நிக்கிற பிள்ளைய பார்த்து 'யார் நீ' னு அதிகாரமா கேட்டிருக்கா. முதல, அவளை வேற ஏதோ மலைக் காட்டு பிள்ளைனு நினைச்சாலும், அவ முகத்தை பார்க்க பார்க்க ஆச்சர்யமா இருந்துருக்கு இள மூப்பனுக்கு"

"அவ யாரு மூப்பா, நம்ம செம்பாயியா"

"ஆமாடா அவ தான். அவ கேட்டதும் ஏன் என்னனு யோசனையே இல்லாம, இள மூப்பன் கதைய எல்லாம் சொன்னானாம்.  அதை கேட்டுட்டு, அந்த பிள்ளை  ஒரு கைப்பிடி நச்சு விதை கிடந்த மணலை அள்ளி அவன் கையில இருந்த ஓட்டை பிடிக்க சொல்லி, போட்டாளாம். போட்டவ 'இது உனக்கும் உன் குடிக்கும்  அன்னமாகும் இனி உள்ள காலம் எல்லாம். ஏழு விதமா, இந்த நச்சரிசிய பக்குவ படுத்தி இத உணவாக்கிற வழிய நானும் என் தங்கச்சிமார்  ஆறு  பேரும் சேர்ந்து உரிய நேரத்துல வந்து கொடுப்போம்'னு சொல்லி முடிக்கையில சூரியன் செம்மஞ்சள் வட்டமா மேல வந்திடுச்சு. அத பார்க்க ஒரு கணம் கண்ண திரும்பினான் இளமூப்பன், மறு கணம் அவளைக் காணும்". 

"அந்த ஏழு  பேரும் தான் மலை மேல இருக்காங்களா? "

"ஆமா, ஏழு நாள் கழிஞ்சு, ஒரு நடு இரவில, நிலா அரை வட்டமா உச்சியில நிக்கையில, தோளில் எலும்பு மாலையும், ஒரு கையில தண்டமும், தீப்பந்தமும் சேர்த்து பிடிச்சு, ஒரு கையில மண்டை ஓட்டில செம்பாயி இட்ட கம்பு அரிசியையும் ஏந்திக்கிட்டு இள மூப்பன் வந்தான்.  ஊரே அவன் வந்த கோலம் பார்த்து, அவன் கால்ல விழுந்து வணங்கிச்சு. ஏழு முழு நிலாவுல அந்த நச்சு விதைய அன்னமாக்கி, அத விளைய வைக்கிற வழியையும் நம்மக்கெல்லாம் கொடுத்துட்டு, அந்த ஏழு பேரையும் அடையாளம் கண்டு சொல்லிட்டு, இள மூப்பனும் வந்த வேலை முடிஞ்சதுனு காத்துல  கரைஞ்சிட்டான். அவன் சொன்ன படிக்கு இங்க ஏழு அம்மாக்களுக்கும் கல்லெடுத்து வைத்து பூவும் தண்ணியும் படைக்கிறோம். முறப்படி விவரம் சொல்லி விட்டு மற்ற ஆறு குடியையும் அழைச்சு, அவங்களுக்கும் விதையும், விதைக்கிற முறையும் கொடுத்தாங்க. ஏழு குடியும் அம்மைகள கும்பிட ஆரம்பிச்சாங்க.  அந்த ஏழு பேரும் ஏழு சக்திக, அதுல செம்பாயி அன்ன வடிவானவ. அவ வாக்கு தான் கம்பா விளையுது. அவ அருளால தான் நம்ம ஏழு குடியும் பசிச்சிருக்க வேண்டிய நிலமையே வரது இல்லை. அன்னத்துல ருசியாவும், சாரமாவும் இருக்கிறவ அவ தான். நம்ம உடம்புல ஒவ்வொரு அணுவையும் ஊட்றா, அது எல்லாத்திலையும் நிறைஞ்சிருக்கா."

"நம்ம குடிக்கு பூசாரி பட்டம் எப்படி வந்துச்சு?"

"இள மூப்பன் மேல மலைகுடியை சேர்ந்தவங்கிறதால, மேல மலைக்குடிக்கு முதல் உரிமையும், பூசை பட்டமும் வந்துச்சு.  அந்த முறைப்படி தான் நாம பூசை வச்சிக்கிட்டு வரோம்." 

மூப்பனும் நானும் கதை பேசிய படி மலையேறி ஏழம்மை திட்டை அடைந்தோம். ஒற்றை வரக்கமுக மரத்தடியில் ஏழு அம்மைகளும் ஏழு கல்லுருவில் இருந்தார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் வெள்ளை வரிகள் ஓடிய முதற் கல்லாக நிற்கும் செம்பாயிக்கு இன்று படைப்பு.  அவள் முன்னிருந்த கல் விளக்கில் கொழுப்பை விட்டு விளக்கேற்றினார் மூப்பன். "இளையா இந்த பந்தத்தை மூப்பன் கிட்ட வை" என்று பந்தத்தைக் கொடுத்தார்.  அம்மைகளுக்கு எதிர் புரத்தில் இள மூப்பன் கருங்கல்லாக நின்றான். பந்தத்தை அவன் அருகில் குத்தி வைத்தேன். அருகில் ஒரு சிறு கிடங்கு போல ஒரு சுனை உண்டு. அதிலிருந்து மரக்குடுவையில் நீரள்ளி வந்தேன்.

அங்கு கிடந்த கற்களைக் கொண்டு செம்பாயிக்கு முன் அடுப்பாக கூட்டி, அருகில் இருந்த சுள்ளிகளை பொறுக்கி, பற்ற வைத்து,  பானையை ஏற்றி, நீர் விட்டு, மூங்கில் அரிசிகளை பொங்கி,  ஒரு குடுவைத் தேனையும் விட்டு இறக்கினோம். அதே அடுப்பு நெருப்பில், முயல் இறைச்சியை இலையில் பொதிந்து, மண்ணைக் குழைத்து பூசி, சுட்டு எடுத்தார் மூப்பன். செம்பாயி அம்மைக்கு ஒரு இளஞ்சிவப்பு நிற தானத்தை சுற்றினார். பறித்து வந்த செண்பக மலர்களை செம்பாயியோடு கூட மூப்பனுக்கும் போட்டு, இருவருக்கும் தேக்க இலைகளை விரித்து பொங்கிய மூங்கில் அரிசி அன்னத்தையம், முயல் இறைச்சியையும் படையல் போட்டு, இரு மரக்குடுவைகள் நிறைய நீரையும் அள்ளி இருவருக்கும் வைத்துவிட்டு  மூப்பன் நிழல் பார்த்து அமர்ந்து விட்டார்.  

"சரியா சூரியன் உச்சிக்கு வரும்போது படையல் போடணும்னா உத்தரவு" என்றார் மூப்பன்.

"மத்தவங்களுக்கு படையல் இல்லையா ?"

"அந்தந்த நிலாவுல அந்தந்த அம்மைக்கும், கூட மூப்பனுக்கும் மட்டும் தான் படப்பு" என்றார் மூப்பன்.

சரியாக கமுகு மரத்தின் நிழல் நேர் கீழே விழுந்ததும், உலை மூடி ஒன்றில் அள்ளி வைத்திருந்த அடுப்புக் கனலில் குங்கிலியத்தையும் சாம்பிராணியையும் கொட்டி சுற்றிக்காட்டினார், பின்னர் மண் அகல் ஒன்றில் விளக்கேற்றி அதையும் சுற்றி காட்டினார். பூஜை முடிந்ததும் விழுந்து கும்பிட்டு, படையல் மிச்சத்தை சேகரித்துக்கொண்டு உடனே திரும்பி பார்க்காமல் மலை இறங்கிவிட்டோம்.

***

கருத்துகள்

  1. சுவையிழந்து சுவையறியும் அனுபவம் உச்சம்

    கோவிந்தன் தாத்தா -மீனாட்சி பாட்டி
    கிருஷ்ணய்யர் -பார்வதி
    வைரம்-வசந்தம்
    மனமும் குணமும் ஒத்த இணைகள் நிரை

    பதிலளிநீக்கு
  2. சுவையால் இறப்பும் பிறப்பும்.. அதை அவள் தேள்-ளை வைத்து சொன்னது.. 👏🏾👏🏾👏🏾

    இதில் இருந்து நேராக மலை, பூசை, படையல்...

    இரண்டுமே புதிய கதை -- 👍🏾

    பதிலளிநீக்கு
  3. துல்லியமான, விவரணை, சன்னதம் கொண்ட சொற்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19