ஐயன் பந்தி - 1
கோவிந்தன் தாத்தாவிடம் வாய் வளர்க்கலாம் என்று அவர் அருகில் போய் அமர்ந்தேன். சிற்றுரலில் இடித்து அப்போதுதான் வெற்றிலையும் பாக்கையும் வாய்க்குள் அதக்கிக்கொண்டுஇருந்தார் பெருசு. முதல் எச்சிலை துப்பும் வரை பெருசு இனி வாய்திறக்கமாட்டார். திண்ணை ஓரத்தில் குவித்து வைத்திருந்த கூழங்கற் குவியலில் இருந்து ஒன்றை மட்டும் எடுத்து அருகில் மற்றோரு குவியலில் இட்டார். அதில் மொத்தம் 360 கற்கள் உண்டு. பெருசு தினத்திற்கு ஒரு கல்லாக ஒரு குவியலில் இருந்து மற்றோரு குவியலுக்கு மாற்றுவார் நாளை கடத்த. ஒவ்வொரு வருடமும் கொல்லங்கொண்டானில் குலதெய்வம் ஐயனார் கோவிலுக்கு மாசிக் களரிக்கு போய் வந்த மறுநாளில் இருந்து துவங்குவது. தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பஞ்சாங்கம் பார்க்கவும் நாள் குறிக்கவும் நன்றாகவே தெரியும். ஆனாலும் இது ஒரு விளையாட்டு தாத்தாவுக்கு, ஒவ்வொரு நாளாக எண்ணி எண்ணி கடத்திக்கொண்டிருப்பார் மறு களரிக்கு நாள் குறிக்கும் வரைக்கும், பெரிய காத்திருப்பும் தவிப்புமாக. ஒரு நாளில் ஒரு பொழுதாவது கொல்லங்கொண்டான் பாடும், பவுசும் பேசாமல் பொழுது போகாது அவருக்கு. பல நேரம் பேசியதையே புதிது போல மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பார்கள் கிழவியும் பெருசும்.
கோவிந்தன் தாத்தா தாம்பூலத்தின் முதல் எச்சிலை மட்டும் கவனமாக துப்பி விட்டு, மிச்சத்தை அதக்கிய படி கேட்டார். "ஏலே சுந்தரம் கஞ்சி குடிச்சியா? உள்ள ஆச்சி அரிசி சோறு வடிக்கா, போய் சாப்பிடு"
"இல்லை தாத்தா, எங்க வீட்லயும் அரிசிச் சோறு திண்ணுட்டு தான் வந்தேன். தாத்தாஉங்களுக்கு எதுக்குமே பயமே இல்லையாமே, எங்காத்தா சொன்னா"
"எதுக்குடா பயப்படணும் ஐயன் பந்திக்கு கூட்டம்டா நாம, ஐயனோட 21 பத்தியும் 63 சேனையும் இருக்கைல என்னத்துக்கு பயம்"
"21 பந்தி 63 சேனைனா என்ன தாத்தா"
"எல்லாம் நம் கோவிலை உள்ளது தான்டா"
"கரையடி ஐயனார் கோவிலையா"
"ஆமாடா, சிவனுக்கும், பெருமாளுக்கும் பிள்ளையா வந்தவர் ஐயன், எல்லா சாஸ்திரமும் கத்தவர், அதனால அவருக்கு பூணூலும் உண்டு, சாஸ்தானும் பேரு, அதிகாரப்பிரம்பு பிடிச்சு எல்லாத்தையும் அடக்கி ஆளும் அரசனா அமர்ந்ததால ஐயனார்னு சொல்றோம். எல்லாருக்கும் பெரியவர், எல்லாத்துக்கும் அதிகாரி, என்ன கேட்கிறியா? உம் கொட்டு" என்றார் பெரியவர். தாம்பூலம் ஒரு சுகம் என்றால் பெருசுக்கு ஐயன் கதை இன்னும் ஓரு போதை, சொக்கிய படி சொல்லிக்கொண்டிருந்தார். தெருவில் வெயில் நன்றாக இறங்கியிருந்தது, எதிரில் வேப்பமரத்து நிழல் அதன் கீழ் வட்டமாக விழுந்து கிடந்தது, அதில் சோமி கிழவி நூல் களியை தட்டி பிடித்தலையில் இட்டு, ராட்டில் நூல் சுற்ற ஆரம்பித்தாள், இங்கும் அங்குமாக தறியில் நாட உருளும் சத்தமும், மேல வீட்டில் பாவோடும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தன. யாரோ தறியை நிறுத்தி, கீழே பலகை உருளையை திருப்பி, வளர்ந்த பாவை அதில் சுற்றுவதால், பல் சக்கரத்தில் கொண்டி உரசும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. உள்ளே மீனாக்ஷி கிழவி "உன் சிவப்பு பட்டு கொடியினிலே, செல்ல நக பெட்டியிலே" எனச் சன்னமாக பாடிக்கொண்டிருந்தாள், அக்காக் குருவிகள் இரண்டு ஒன்று விட ஒன்று தொடங்க என எதிர் எதிராக பாடிக்கொண்டிருந்தது.
"ம்ம்ம்"
"அவரே பூமியில காவலும், துணையும். குலதெய்வமா, அத்தனை தெய்வத்தையும் அடக்கி ஆண்டு,அதுக்கெல்லாம் மேல அரியாசனத்தில முன்னோடி தெய்வமா, முதல் தெய்வமா அரசனா இருந்து நம்ம காப்பாத்துறாரு. ஒவ்வொரு குடிப்படைக்கும் குல தெய்வமா அவரு வரப்போ 21 தெய்வங்களை தன் ஆணை கேட்டு காரியம் நடத்த படை வீரர்களா நியமிக்கறாரு. அந்த தெய்வங்கள்ல பலதும் உண்டு. முதல சிவன், கோவிந்தன் மாதிரி பெரிய சாமிகள். லாட சன்னாசி, குருநாதன், தவசி நாதன், சித்தர்கள், கம்பளத்தார், அல்லாச்சாமி, பட்டாணி சாமி மாதிரி இரண்டாம் வகை. முன்னோடியும் தலைமையும் ஐயனா இருந்தாலும், கோவிந்தனோ, சிவனோ பந்தியிலே இருந்தா அவங்களுக்கு மரியாதையா தகப்பன் ஸ்தானத்துக்குரிய இடத்தையும் கொடுத்து முதல் பூசையும் கொடுக்கிற வழக்கம் உண்டு. உனக்கே தெரியுமே நம்ம கோவில பள்ளயத்துல முத பூஜை கோவிந்தனுக்கு தான்னு. அந்த கோவிந்தன் பேரு தான் எங்க தாத்தா பேரு, அதையே தான் எனக்கும் விட்டிருக்காக"
"ம்ம்ம்"
அடுத்த வக சிவகணங்கள், ருத்திர மூர்த்திகள், வீரபத்திரன், பைரவன் மாதிரி. நாலாவதா பூதகணங்கள் பதினெட்டாம் படி கருப்ப சாமி, சின்ன கருப்பசாமி, சங்கிலி பூதத்தார், ஆலி பூதம் இந்த மாதிரி . அஞ்சாவதா பேச்சி, ராக்காச்சி மாதிரி பேய்வடிவம் கொண்ட தெய்வங்க. இவுக பிள்ளைகுட்டிகாரிக, நிறமாச சூலியா தெய்வமானவக, அம்மை தான் ஆனால் பேயுருவுமும் உண்டு. மஞ்சணைக்கு சொந்தக்காரிக. ராக்காச்சிக்கு பிரம்மராக்ஷஸி, பிரம்மராட்சினும் பேரு சொல்லுவாக. இவுகளுக்கு படையிலிடும் போது அவுக பிள்ளைகளுக்கும் சேர்த்து படையல் இடறது வழக்கம். அவல், பொறியும், சக்கரையும் அதனாலதான் படைக்கிறோம். சொளவும், கொட்டாம் பெட்டியும், கிண்கிணியும், கிளுகிளுப்பையும் பிள்ளைக விளையாட.
"இந்த பேச்சிதான உங்க பாட்டி மேல வந்து நம்ம கோவிலை அடையாளம் காட்டினது"
"ஆமாடா, அடுத்தது அம்மைகளாக காளி, மாரி மாதிரி அம்மன் சாமிக. கன்னிவடிவம் கொண்ட ஏழு கன்னிமார்கள், இவுக எல்லாம் சிறுபிள்ளைக, 9 வயசுக்கும் சிறுசுகள்.
"நம் கோவில சீலைக்காரி இருக்காளே அவ?"
"இருடா முந்திரிக்கொட்டை சொல்றேன், அது வேற வகை, கடைசியா வாரேன் அதுக்கு. அதுக்கு முன்ன மாடன்கள், இதுல கைலாசத்தில் இருந்து இங்க அவதாரமா வந்தவுகளும் உண்டு, மண்ணுல பிறந்து தெய்வமானவுகளும் உண்டு. சுடலை மாடன், இருளப்பன், மாயாண்டி, மாசானம் எல்லாம் கைலாசத்துலையும் வைகுண்டத்துலையும் இருந்து வந்தவுக. மதுரை வீரன், சின்ன தம்பி, வன்னிய மாடன், கழுமாடன், தளவாய் மாடன், சப்பாணி மாடன், முத்தையா, பட்டவராய சாமியெல்லாம் பூமியில் பிறந்து, கல்யாணம் ஆகியோ, ஆகாமலோ, போர் வீரனாவோ, சுய பலியாகவோ, வல்லடியா வஞ்சனையாலோ, வேறு வழியிலையோ அநியாயமா மாண்டவுக. சிவன்கிட்ட தவமிருந்து கொல்ல வரம் வெல்ல வரம் வாங்கி வந்து தெய்வமானவுக. ஊருக்கு ஊர் நிறைய மாடன்கள் உண்டு"
"ம்ம்ம்"
"கடைசியா கன்னி பெண்ணா மாண்ட சிறுகுழந்தைகள். சிற்றாடைக்கும், புடவைக்கும், பூவாடைக்கும் சொந்தக்காரிக. பெரும்பாலும் அந்த குழுந்தையோடவம்சத்துக்கறாங்க மட்டும் தான் கும்பிட முடியும் சீலைக்காரிகள. பச்சை பிள்ளையை கையில வச்சிருக்கவ மாதிரி இவுகளை பக்குவமா பார்த்துக்கணும், இல்லைனா சடைஞ்சு போவாளுக. பூவும், புடவையும் கேட்டு நிப்பாக. எல்லா பூவும் எல்லாருக்கும் உள்ளதில்ல. அந்த பிள்ளை என்ன பூ கேட்குதோ அதுதான் அதுக்குள்ள பூ. மாத்திக்கொடுத்த வாங்க மாட்டாக . மத்த தெய்வத்தை எல்லாம் எட்ட நின்னு கையெடுத்து கும்பிடலாம், இவுக நம்ம மடியேறி விளையாட்ற விளையாட்டு பிள்ளைக, ஆனாலும் இவுகளும் பரதேவதைக தான் சாதாரணமானவகனு நினைச்சிறாத. கூப்பிட்டா சிரிச்சுக்கிட்டு ஓடி வருவாக, உன் கைய பிடிச்சுக்கிட்டாங்கன்னா அவுகளே உன்னை நீ போக வேண்டிய எடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போயிருவாக. நாமதான் கூப்பிடணும். அவளுக காத்துட்டு இருப்பாளுக நம்ம குரலுக்கு. ஆனா ஒரு வாட்டி உன் கைய பிடிச்சிட்டாகன்னா ஆயுசுக்கும் நீ விட்டாலும் அவளுக விடமாட்டாளுக. நீ போற வழி வார வழியில முன் பின்னும் காவலா பிச்சிப்பூ வாசமா, கால் கொலுசு சத்தமா ஓடுவாளுக, நீ உறங்கையில தலையக் கோதி விடுவாளுக, வீட்டில தலைப்பெண் குழந்தையா திரும்ப திரும்ப பிறந்து நம்மல அப்பா தாத்தான்னு சுத்தி சுத்தி வருவாளுக. இவுகளுக்கும் மஞ்சணை உண்டு. இவுக மஞ்சணையை அவுக வம்சத்துக்காரங்க தவிர இரண்டாம் பேருக்கு தரமாட்டாக"
"மஞ்சணை பேச்சி ராக்காச்சிக்கும், சீலைக்காரிக்கும் மட்டும் தானா ?"
"ஆமா, சூலிக்கும், சுமங்கலியா மாண்டவளுக்கும், சீலைக்காரிக்கும் தான் மஞ்சணை. அதுபோக அவ்வைக்கிழவிக்கும் மஞ்சணையை பிடிச்சு வச்சு சாமி கும்பிடுவாக. வன்கொலையால், தியாகத்தால மாண்ட சுமங்கலிகளும் தெய்வமாவாக. அந்தக்காலத்துலஒரு போர் வீரன் இறந்தா அவன் மனைவியும் உடன் கட்டை ஏறுவா, தீயில் பாய்ந்து மாண்டதால தீப்பாஞ்சினு சொல்லுவாங்க. மாண்ட வீரனையும், அவன் மனைவியவும் சேர்த்து தெய்வமா வழிபடற வழக்கமும் உண்டு. ஒரு குலத்தையே நில நிறுத்தி காப்பாத்தின தம்பதிகளை தெய்வமா வழிபடுவாங்க"
"தாத்தா உங்களுக்கு எல்லா சாமிய பத்தியும் தெரியுமா, சொல்லுங்க.."
"அதுநிறையா இருக்குடா" எனச் இனிய சலிப்போடு சொல்லிவிட்டு தாத்தா பழைய துண்டைஉதறி தோளில் இட்டுக்கொண்டு உள்ளே சென்று விட்டார். சோமி பாட்டி நூல் சுற்றும் சாக்கில் இங்கயே காதை வைத்திருந்தாள் போல "ஏலே சுந்தரம், பேச்சியம்மா கதையைக் கேளுடா, உங்க தாத்தாட்ட" என்று தூண்டிவிட்டாள். பலமுறை கேட்ட கதை தான், அவளுக்கும் நன்றாகவே தெரியும், இருந்தாலும் திரும்ப திரும்ப கேட்பதில் ஒரு ஆசை. ஒவ்வொன்றாக கேட்டு விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு திண்ணையில் சாய்ந்து தூங்கிவிட்டேன் நான்.
சுவாரசியமான துவக்கம்
பதிலளிநீக்குஅருமையான ஆரம்பம். கதையை நேரடியாகவே சொல்லலாம் என்பது எனது கருத்து.
பதிலளிநீக்குஆரம்பமே அய்யனாரோட அருமை
பதிலளிநீக்குமிகவும் தேவையான அறிமுகம். நன்றி
பதிலளிநீக்குபடிக்க தொடங்கும் போது சென்னயில் இருத்தேன் அப்படியே தூக்கி ஊருல கொண்டு விட்டுடீங்க... இன்னும் இன்னும் எழுதுங்க.. எல்லா கதையும் கேட்போம்.
பதிலளிநீக்குஇங்க அல்லாவும், பட்டாணி சாமி எல்லா இரண்டாவது வரிசையில் வராங்க...... பட்டாணி சாமி ங்கறது ஜெய்ன மத சாமியா?
பதிலளிநீக்குhttps://en.m.wikipedia.org/wiki/Pashtuns - Pathan .. இப்ப இர்பான் பதான் எல்லாம் இருக்காங்க இல்ல .. அது போல. பழைய படங்கள்ல ஒரு cone போல தொப்பி போட்டு வருவாங்க.. மைக்கேல் மதன காம ராஜன் படத்துல வரும் "25லட்சமா.. 100 பட்டாணிகாரன் கடனை தீர்க்கலாம்யா.." 😅
நீக்கு
பதிலளிநீக்குமுதுகுல பாணன் தன், யாழுடனும், முழவுடனும், கதை சொல்ல அமர்ந்து விட்டான். எம் மூதாதையும், குல தெய்வங்களும் அவன் நாவில் எழுகிறது.
வாழ்த்துக
அருமையான தொடக்கம் அண்ணா.💐💐💐💐
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=Xs8U-n0bh3s
பதிலளிநீக்கு