ஐயன் பந்தி - 5

புவியேழையும் பூத்தவளே - 1

தாத்தா கேட்டார் ஐயரிடம் “உங்க வீட்லயும் வைத்தியம் உண்டாடா?”

“இல்லடா கோவிந்தா, நம்மாத்துல வைத்தியம் இல்ல. கருப்பன் வந்து எல்லா விவரமும் சொன்ன பிறகு, என் பிதாமஹர்ல யாரோ ஒத்தர், தொண்டிக்கும் காரைக்குடிக்கும் எல்லாம் போய் பார்த்திருக்கா. அவர் தான் முன்னாடி ஆனேகுந்தில இருந்து வந்து கருப்பன் கிட்ட அடைக்கலம் ஆன கதை எல்லாம் தெரிஞ்சிண்டு வந்து சொன்னது. ஆனமந்தி வைத்தியர்  குடும்பம் பேரும் சீருமா நன்னா இருக்காளாம்  காரைக்குடில. சுப்பிரமணிய ஐயன், அவர் சன்னாசிட்டே இருந்து மந்திரம் வாங்கிண்டது, பதினோரு வருசத்துல வைத்திய சாஸ்திரத்த தெரிஞ்சிண்டது எல்லாத்தையும் 108 ஓலைல எழுதிவச்சிருக்கிறார். அவா ஆத்துல அந்த ஓலைக்கட்ட தலைமுற தலைமுறையா படி எடுத்து வச்சிண்டு, அதே முறைப்படி அடுத்தடுத்த தலைமுறைக்கு சொல்லியும் வைக்கிறா. அந்த படி ஓலையில ஒரு கட்ட என் பிதா மஹர் ரொம்ப பிரயாச பட்டு வாங்கிண்டு வந்தாராம். ஆனால் மந்திரம் இல்லாம வெறுமனே ஓலைய படிச்சா ஒன்னும் விளங்காதுனு சொல்லிட்டு கொடுத்தாளாம்.  தெலுகும், சமஸ்க்ரிதமும் கலந்து எழுதினது. அது மட்டும் நம்மாத்துல பூஜா முறியில உண்டு. அதுல சில ஏடுகள படிச்சிருக்கேன். ஆயுர்வேதம்,  ரசம், ரக்தம், மாம்சம்,  மேதஸ், அஸ்தி,  மஜ்ஜை, சுக்கிலம்னு ஏழு ஆதாரங்களால அனது  உடம்புனு சொல்றது. அது ஒன்னொன்னையும் சுப்பிரமணிய ஐயன் ஏழு யோகினிகள்ட்ட இருந்து தெரிஞ்சுண்டது எல்லாம் விஸ்தாரமா எழுதியிருக்கு ஓலைல. ” என்றார் ஐயர்.

“அது யார்  சாமி யோகினிக” என்றேன் 

“கோவிந்தா, பிள்ளை நல்ல கூர் உள்ளவன்டா, பிடிக்கவேண்டியத சரியா பிடிச்சிண்டுடறான்” என்று விட்டு தொடர்ந்தார் ஐயர். “புராணங்கள்ல பலவிதமாவும் இந்த யோகினிகள பத்தி சொல்லிருக்கா. இவால்லாம் பர தேவதையோட உப தேவதைகள், அவளோட வடிவும்னும் சொல்லலாம். மனுஷாளோட ‘நான்’ங்கிற அகங்காரம் இருக்கே, அதுக்கு ஒரு கட்டு இல்லாம போச்சுதுன்னா, அவன் அசுரனாய்டுவன்.  அப்படித்தான் தாருகன்னு ஒரு அசுரன் முன்ன ரொம்ப அட்டகாசமும் அநியாயமும் பண்ணிண்டு இருந்தான். உலகத்தை எல்லாம் தனதுன்னு நினைச்சான், அப்படியே ஆக்கினுட்டான். கீழ் எழும் மேல் எழும் பதினாலு லோகத்தையும் அதிகாரம் பண்ணான், ஆட்டி படைச்சிண்டு இருந்தான். முழு அதிகாரத்தை அடைஞ்ச பிறகு, இனி செய்ய ஒன்னுமே இல்லனு ஆகும். அப்ப அந்த அதிகாரத்த அவசியம் இல்லாத இடத்துலயும் பிரயோகம் பண்ண ஆரம்பிப்பா, அது ஹிம்சையா மாறிடும்.  யானைக்கு அங்குசம் மாதிரி, அதிகாரம் உள்ளவனுக்கு அறம் தளையா இருந்திண்டு இருக்கணும் எப்பவும். அங்குசம் நிமிந்தா யானை அடங்காது. அது மாதிரி, ஒருத்தன், அறத்தோடு அதிகாரியா இருக்கிறவரை சரி, அவனே ஹிம்ஸ பண்ண தொடங்கினா உலகம் நிலை குலைய ஆரம்பிச்சிடும். உலகம் பிறழ  ஆரம்பிச்சிடுத்துனா அது தேவர்கள் வரை துன்பபடுத்தும் ”

“வா வைரம், இப்பத்தான் வரியா, வெள்ளனே வருவனு பாத்தேன்” என்றார் தாத்தா.  மலைக்காணி வைரம் அப்போது தான் வந்தார், தலையில் ஒரு பொதியும், தோள்களில், பக்கத்துக்கு இரண்டாக கட்டி தொங்கவிடப்பட்ட மூங்கில் குடுவைகளுமாக. நீண்ட முடி விரிந்து, அகன்ற தோள்களில் கிடந்தது. கெண்டைச் சதை இறுக, ஊன்றிய பாதங்கள் மண்ணில் உறுதியாக பதிந்திருந்தன. 

“ஆமாம் மூப்பரே, அம்மை இன்னைக்கு உத்தரவு கொடுக்க போதாக்கிட்டா”

“இந்நேரத்துக்கு மேல புடவைய வாங்கிட்டு எப்படி மலை ஏறுவ?” என்று விட்டு “ஏத்தா ஒரு செம்புல தண்ணி எடுத்தா” என்று சொல்லியபடி மீனாட்சி பாட்டியை தேடி திரும்பினார். வைரத்தோட தலையைக் கண்டதும் மோர்  எடுக்க சென்றிருந்தாள் பாட்டி. தலையில் வைத்திருந்த ஓலை பொதியையும், இரு  தோள்களிலும் இரண்டு இரண்டாக தொங்க விட்டிருந்த மூங்கில் குடுவைகளையும் வைரம் இறக்கி திண்ணையில் வைக்கவும், நீர் மோரை நீட்டினாள். வாங்கியவர் மட மடவென குடித்து விட்டு செம்பை வைத்துக்கொண்டு தயங்கினார். பாட்டி அதை வாங்கிகொண்டாள்.

“உட்காருயா வைரம்” என்றாள் பாட்டி. வைரம் திண்ணையில் பொதி அருகில் ஒருக்களித்த படி அமர்ந்து, கால்களை வெளிப்புறமாக விட்டு தரையில் ஊன்றி அமர்ந்தார். 

“அம்மே இத எடுத்து வைக்கணும், மலைக்கம்பும், தேனும்” என்றார் மலைக்காணி. மூங்கில் குடுவைகளை பாட்டியும், பொதியை நானும் எடுத்துக்கொண்டு போய் உள்ளே அரங்கு வீட்டில் வைத்தோம். வரகரிசியை வறுத்து பொடித்து, கருப்பட்டி பாகும், சுக்கும், ஏலக்காயும் இட்டு பிடித்து வைத்திருந்த பிடி உருண்டைகளை ஒரு தட்டில் அடுக்கி  எல்லோருக்குமாக வைத்து விட்டு, ஒரு பித்தளை குத்துபானை நிறைய தண்ணீரையும், இரண்டு செம்புகளையும் கொண்டு வந்து  வைத்தாள் பாட்டி. ஒவ்வொருவராக வெற்றிலை மென்ற வாயை கொப்பளித்து விட்டு உருண்டைகளை உண்ண துவங்கினார்கள்.  

“வைரம் சீலைய கையில வாங்கிட்டான்னா, மலைக்குடிக்கு போய் சேருற வரை வழியில எங்கயும் நிற்கவும் மாட்டான், அன்னந்தண்ணியும் தொட மாட்டான்.  இருட்டு கசமா கிடக்கு ராத்திரிலாம். நாலு நாளுல அமாவாச. இருந்து நாளைக்கு விடிஞ்சு போக சொல்லுங்க”  என்று பாட்டி தான் சொன்னாள். 

“இருந்து காலைல போயேன்யா வைரம்” என்றார் தாத்தா.

“சரி சாமி, கருக்கல்ல கிளப்புறேங்க” என்றான் வைரம்.  

தாத்தா ஐயரிடம், “மலையில இருந்து வாரான்.  நல்ல வைத்தியன்.  விஷக்கடிக்கு, காய்ச்சல், கழிச்சல்னு எல்லாத்துக்கும் மருந்து கொடுப்பான். கைராசிக்காரன், வள்ளியம்மை ஒரு வாட்டி இருமலும் கொடுங்காய்ச்சலும் கண்டு கஷ்டப்பட்டா. காய்ச்சல் விட்டதும் உடம்பெல்லாம் வெளுத்து, மெலிஞ்சிட்டா. இவன் தான் மருந்து கொடுத்தான். ஒரு மரக்கள்ளுல அவன் கொடுத்த வேர் பொடியைக் கலந்து ஒரு மண்டலம் கொடுத்து தான் குணமானா.”  முறுகிய வெல்ல பாகை போல நிறம். நீண்ட தாடியை சுருட்டி வெளியே தெரியாமல் முடிச்சிட்டு தாடையோடகட்டியிருந்தார் மலைக்காணி. இருபது இருவத்தைந்து வயது இருக்கலாம். கைகள் தொடைகளைத் தாண்டி நீண்டு கிடந்தன. 

“அப்படியா” என்று வைரத்தை திரும்பி பார்த்த  ஐயர், “நல்ல தேஜஸ்வி” என்றார் தாத்தாவிடம். 

“வைத்தியம் எல்லாம் செம்பாயியும், இளமூப்பனும் கொடுத்தது சாமி. எங்க அப்பன் மூப்பனுக்கெல்லாம் முன்னால, பல கொல்லம் கழிஞ்சிருக்கும். பலரும் பிறந்து இறந்து போயாச்சு” என்றான் வைரம். அவர் கண்கள் கிளர்ந்து பர பரத்து உருண்டு பின் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கினா. வைரமும் உடன் அமர்ந்து கேட்க, ஐயர் கதையை தொடர்ந்தார். 

"ஈரேழ் பதினேழு உலகமும் கொதிக்க அக்கிரமம் பண்ண தொடங்கினான் தாருகன். அந்த அக்னியில் தகிச்சிண்டு இருந்த தேவர்க வாழ வழியில்லாம, பிரம்மா விஷ்ணுவை முன்னிட்டிண்டு மஹாதேவர்ட்ட முறையிட்டா.  தாருகன்  ஒரு வரம் வாங்கி வச்சுண்டு இருந்தான், தான் ஒரு பெண்ணாலே தான் கொல்லப்படணும்னுட்டு. பலம் கூட கூட அடுத்தவாளோட பலமும் தெரியாது, நம்ம பலத்தோடு எல்லையும் தெரியாது போயி, ஒரு மூடத்தனமும் வந்துடும். அப்படித்தான் தாருகனும் இருந்திண்டு இருந்தான். சிவன் அம்பிகைட்ட கேட்க,  ஒவ்வொரு தேவர்களோட உள்ளையும் பிரம்மா, விஷ்ணு, சிவன்னு மும்மூர்த்திகளோட உள்ளையும் ஒளிஞ்சிண்டு இருந்த தன் சக்திகள்ல இருந்து திரண்டு சம்ஹார ரூபியான ருத்ரனுக்குள் ஒடுங்கி அவர் கண்டத்தில உள்ள ஆலகாலத்தோட வடிவா கரிய திருமேனியா, கையில வாளோட மஹாகாளியா வற்றின முலையோட தோன்றினா. அவ வீசின ஒவ்வொரு வாள் வீச்சிலையும் கோடி கோடியா தலைக சரிஞ்சது. அந்த தலையெல்லாம் முத்து மாதிரி மாலையா கோர்த்துண்டு தானா அவ கழுத்துல வந்து சேர்ந்துத்து.  கோடி கையும் காலும் அறுபட்டு விழ விழ அவ இடுப்பு சுற்றி ஆடையா பின்னின்னுடுத்து. மூனே வாள் வீச்சுல தாருகனையும், அவன் மொத்த படையையும் நிர்மூலமாக்கி, போர் களத்தையம் சுடுகாடாக்கினா.  இனி ஒரு வீச்சு வீசினானா உலகமே அழிஞ்சுடும். அவளோட ஒரு கோடி தலைகளும் ஒரு கோடி சந்திரன்கள சூடி, நுதல் விழியுமா, ஒரு கோடி திசைகள நோக்கிண்டு இருந்துச்சு. கோடி கைகள்ல கோடி விதமான ஆயுதங்கள தாங்கிண்டிருந்தா. ஒரு கோடி கால்க தரையில பதிய  நடந்து வரப்போ, ஒரோர் காலடிக்கும் நூறு நூறு கல்பங்கள் பிறந்து பிறந்து அழிஞ்சதுக. அவ முன்னடி எடுக்கைல ஸ்ருஷ்டினா அவ பின்னடி வைக்கைல பிரளயம். ஒரு காலுக்கு ஒரு கோடினுட்டு கோடி பிரம்மாக்கள் அவ கால் சதங்கைல மணியா தொங்கினா. அவா கோடி சந்தங்கள்ல ஓதின கோடி விதமான வேதங்கள் தான் அவ சதங்கையோட சப்தமா ஒலிச்சது.  கோடி விஷ்ணுக்கள் அவ கண்டத்துல சரங்களா ஆடினா.  அவ ஸ்தனங்கள் எல்லா கோடி கோடி சுரபிகள். கோடி கல்ப விருக்ஷங்கள் அவ ஸ்தனங்களை தாங்கி நாபி கடந்து கீழ் நோக்கி போற ரோம வரிசைகள். அவ தலைமுடி எல்லாம் ருத்ர கோடிகள்.  நஞ்சில இருந்து முளைச்சவ, அத்தனையையும் உண்டு செறிச்சா, அப்பயும் அவ பசியடங்கல. காட்டு தீ நல்லது கெட்டதுன்னுட்டா பார்க்கும்? அகப்பட்டது எல்லாத்தையும் அள்ளி விழுங்கிடாதா? தேவர்கள் அஞ்சி திரும்பவும் சிவனை சரணடைஞ்சா. சிவன் சிறு குழுந்தை வடிவெடுத்துண்டார். அவ வர வழியில போய் கிடந்த அந்த குழந்தை பசிச்சு அழுதுச்சு. அதைக் கண்டதும் மகா காளியோட கோடி முலைகளும் விம்மி, தானா சுரந்து பெரும் மழையா பொழிஞ்சு வெள்ளமா பெருகி பாற்கடலாச்சு. அம்மையா தணிஞ்சா, இரண்டு கைகள் இரண்டு கால்களோடு, ஒற்றை கூன் பிறையும், நுதல் விழியுமா வந்தா. அவளோட பிறந்த கட்கத்த தரையில் விட்டுட்டு, குழந்தைய அள்ளி மடியில வச்சி  ஊட்டினா" 

"நஞ்சும் அமுதுமா அவளுக்குள்ள திரண்ட அத்தனையையும் குழந்தை உறிஞ்சினுடுத்து.  பின்ன அம்மைய தனக்குள்ள ஒடுக்கி தன்னையும் மஹா தேவனுக்குள்ள ஒடுக்கித்து. திரும்ப திரும்ப நஞ்சாகி சிவன் கண்டத்தில தங்குறதும், அதுல இருந்து எழுந்த மாகாளியா முளைக்கிறதும் அவ தான். அத்தனையும் தனக்குள்ள அடக்கி டமருகம் கொடுகொட்டி, கைதழல் ஏந்திண்டு, முயலகன் தாங்க உன்மத்தம் கொண்டாடினார் சிவன். திசையோட வெளியும், சூரிய சந்திரரும், ருத்ர கணங்களும், ரிஷி மார்களும் சித்தரும் அவரைச் சூழ்ந்து ஆடினா. ஓருருவம் கொண்டு சிவன் ஆட ஓராயிரம் வடிவம் கொண்டு அம்பிகை ஆடினா. ஐவகை மலர் சூடி குழலாட, ஆயிரங் கரங்களோட உதிக்கிற ஆதித்யன  திலகமா சூடிண்டு, பச்சை வண்ணமும், பவளச்சீரடியுமா அன்னை ஆட, உடன் அழகன் குமரனும், ஆனைமுகனும் ஆடினா.  திருவோடு, பெருமான் ஆட, வாணியோடு அயனும் ஆடினான். சசிதேவியின் கைபிடித்து இந்திரன் ஆடினான். அந்த பேராடல்ல இருந்து திசைக்கொருத்தரா அசிதாங்கன், ருரு, சண்டன், குரோதனன், உன்மத்தன், கபாலன், பீஷணன், சம்ஹாரன்னு எட்டு வடிவங்கள்ல பைரவன் எழுந்தான். எட்டு பைரவர்களுக்கும் சக்திகளா ப்ராஹ்மி, மஹேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி , சண்டினுட்டு எட்டு அம்மைகளும் எழுந்தா. இவாளத்தான் அஷ்ட பைரவானும் அஷ்ட மாத்ருகானும் சொல்றோம்.  ஓரோர் பைரவன்டே இருந்தும் எட்டு எட்டு வடிவங்கள்ல மேலும் பைரவர்க முளைச்சா. அவாளோட சக்தியா ஒவ்வொரு அன்னைட்டே இருந்தும் எட்டு  எட்டு யோகினிக வந்தா. மொத்தம்  64 பைரவர் 64 யோகினிகனு கணக்கு.  அவா ஒவ்வொத்தருக்கும் ஒரு பொறுப்பும் செயலுமுண்டு. அந்த அறுபத்தி நாலு  யோகினிகள்ல, டாகினி, ராகினி, லாகினி, காகினி, ஷாகினி, ஹாகினி, யாகினினு ஏழு பேர் தான் மனுஷாளோட சரீரத்துல  ரசம், ரக்தம், மாம்சம்,  மேதஸ், அஸ்தி,  மஜ்ஜை, சுக்கிலமா அமைரவா. அவாள்ட  இருந்து தான்  சுப்பிரமணிய ஐயன் உடலை அறிஞ்சிண்டதா எழுதியிருக்கிறார்.“

“நீ சொல்றது,  வைரம் சொல்ற கத மாதிரல இருக்கு. அவுக மூப்பன்மாரும் ஏழு அம்மைக கிட்ட இருந்து தான் வைத்தியத்த, விவசாயத்தெல்லாம் கத்துக்கிட்டு இருக்காக.” என்றார் தாத்தா  

“எல்லாம் அவ விளையாட்டு டா. அவ நினைச்ச இடத்துல நினைச்ச விதத்துல வருவா" என்று விட்டு "வைரம் காலைல தான போகப்போற உன் கதையை சொல்லேண்டா கேட்போம்” என்றார் ஐயர் 

வைரம் ஐயரை பார்த்து திரும்பி “நான் ஏழுகுடி மலைக் காணிகாரங்க. சதுரகிரி தாண்டி எங்க ஏழு மலைகளும் இருக்குது. அந்த மலைகளோட நிழல்ல தான், ஒரு மலைக்கு ஒரு குடினு,  எங்க ஏழு குடியும் ஒதுங்கியிருக்கு. ஏழுமலைத் தாழ்வாரம்னு சொல்லுவாங்க. குடிக்கு ஒரு அம்மைனு, ஏழு அம்மைகளும் இருக்காங்க. ஏழு மலை அம்மைகளுக்கும் கல்லெடுத்து மேல மலையில வச்சி கும்பிடறோம். அவுங்க தான் எங்களுக்கு கம்பையும் தேனையும் கொடுத்து, வைத்தியமும், பச்சிலையும் காட்டி தாராங்க. ஏழு குடியில நான் மேல மலைக்குடிக்காரன்” என்று சொல்லி தன் கழுத்தில் செம்மஞ்சள் நிறத்தில் எதோ விலங்கு முடியில் கோர்த்து கட்டியிருந்த சிறு வட்ட கல்லை தொட்டு “இது எங்க குடி அடையாளம்ங்க சாமி” என்று வைரம் கதை சொல்லத்துவங்கினார். எவர் முகத்திலும் படாது மாடத்தில் விளக்கை மட்டுமே நோக்கிய கண்களோடு, தமிழும் காணி மொழியும் கலந்து அவர் சொன்ன கதை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தது. கதை சொல்லி முடிந்ததை  அறிந்தது போல, பக்ஷிகள் சத்தமிட துவங்கிய கருக்கலில் தாத்தா இரண்டாம் பேர் காணாமல் வெள்ளைத்துணியில் பொதிந்து கொடுத்த செம்பாயியின் புடவையை இருகைகளாலும் வாங்கி தலை மேல் வைத்து  கொண்டு விடை பெற்றார்  மலைக்காணி. 

கருத்துகள்

  1. நண்பரே, உங்கள் பதிவு பலவற்றை புரியவைக்கிறது. நன்றி 👍

    பதிலளிநீக்கு
  2. காளி முன் வரும் குழந்தை.. அழகான ஒரு தருணம்.

    ஒரு மாடு படம் நிறைய எடத்துல பார்த்து இருப்போம்... எல்லா தேவர்கள் சிவன் விஷ்ணு-ன்னு எல்லாரும் மாடுக்குள்ள இருப்பாங்க.. அது போல நமக்குள்ளேயும் யோகினிகள் எல்லாம் இருக்காங்க போல 😲 .. இதெல்லாம் ஒருத்தர் சொல்ல தான் தெரியிது.

    நம்மள எல்லாம் மாடு படம் மாதிரி ஸ்டிக்கர் போட்டுட மாட்டாங்க.. இல்ல.. 😝

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19