ஐயன் பந்தி - 4

வெளி - 2

ராமசுப்பைய்யர் ஆனமந்தி வைத்தியர் கதையை சொல்லி முடிக்கவும், வெற்றிலையையும் பாக்குகளையும் தட்டில் கொட்டி திண்ணை நடுவில் வைத்தாள் பாட்டி. ஐயரும், ஒரு சிறு பாக்கை நான்காக தட்டி வாயில் அதக்கிக்கொண்டு  வெற்றிலையை நரம்பு கிள்ளி சுண்ணாம்பு தடவிக்கொண்டிருந்தார். தாத்தா தான் ஐயரிடம் கேட்டார், "நீங்க  மலையாளத்துல இருந்துல வந்தவுக,  உங்க குலதெய்வம்  தொண்டிலையா இருக்கு?" 

"அதையும் சொல்றேன் டா, கதைய கேளு" என்று மீண்டும் சொல்லதுவங்கினார் ஐயர்.

அதுவரையில் உலகமறியாத பெரும்பஞ்சம் ஒன்று வந்தது தொண்டிகரைக்கு. வயல் எல்லாம் பிளந்து மூச்சு விட ஆரம்பித்து விட்டது, பின்னர் சுனையும், கண்மாய்களும் கூட காய்ந்து பிளந்து விட்டன.  ஊரில் உள்ள ஒவ்வொரு மண்ணும்  தூசும் கூட 'நீர் நீர்' என்று ஓலமிட தொடங்கிவிட்டது. வற்றாத ராக்காச்சி சுனையும் இன்னும் வற்றவில்லை என்னும் அளவிற்கு சேறும் சகதியுமாக இருந்தது. விவசாயம் எல்லாம் அடியோடு போனது. குடி தண்ணீருக்கும் பெரும்பாடு. இரண்டு  சாம தூரம் நடந்து, பெண்டும் பிள்ளைகளும் கலங்கிய சேற்று சுனைகளில் தெளியவிட்டு தெளியவிட்டு அரைக்குடமோ ஒரு குடமோ நீர் பெற்று வரும் நிலைமை. அந்த கலங்கிய நீரைக் குடித்த சிறு பிள்ளைகள் உப்புசமாகி வயிறு வீங்கி திரிந்தன.  நீர் குறையத்துவங்கியதுமே யாதவர் குடியிலிருந்து  ஆயர் தலைவர்களை அழைத்து பசுக்களையும் கன்றுகளையும் அவர்களோடு விட்டு, நீர் உள்ள இடம் பார்த்து அழைத்து போக சொல்லிவிட்டார்கள், மீண்டும் தொண்டிகரையில் மழை பெய்த தகவல் வந்தால், திரும்பி வாருங்கள் என்று கூறி.  வழக்கமாக இடையரோடு மேய்ச்சலுக்கு போகும் மாடுகள், அன்று இனி திரும்ப மாட்டோம் என்று அறிந்தனவோ என்னவோ, தறியில் இருந்து கட்டுக்கயிறை அவிழ்த்த பின்னும் இறங்கவில்லை. உந்தி இழுத்து குச்சியால் குத்தி முடுக்க வேண்டியிருந்தது. நடையிறங்கிய மாடுகள் வீட்டையும் தெருவையும் திரும்பி திரும்பி பார்த்த, "ம்மா,,," என்று ஓலமிட்டு பளிங்கு கல்லுருண்டை கண்களில் திரும்ப அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம் மினுங்க கடந்தன. அதைக்கண்டு கதறி அழுது பிள்ளைகள் காய்ச்சல் கண்டன.  "பசுவும் கன்னும் இப்படி இறங்கி போறத பார்த்த பிறகும் நான் உயிரோட இருக்கணுமாடா, கருப்பா" என்று மூர்ச்சையாகி உயிரை வீட்டார் வைத்தியநாத ஐயர். அவர் பதிமூன்று கழிந்ததும், அவர் குடும்பமே ஊரை விட்டு கிளம்பி விட்டது.

நீருக்கே இந்த பாடு என்றால், உணவுக்கு சொல்ல வேண்டுமா? நாய்க்குட்டிகள் இது உணவாக இருக்குமா அது உணவாக இருக்குமா என்று நக்கி பார்ப்பது போல ஊரே நக்கி பார்த்தது ஒவ்வொன்றையும். விஷப்பூண்டை தின்று உயிர் விடலாம் என்றால் அவைகளும் காய்ந்து பல நாட்கள் ஆகி விட்டன. கடைசி கையிருப்பும் தீர்ந்து போகும் என்று நிலை வரும்போது, ஒவ்வொருவராக  ஊரை விட்டு வெளியேற துவங்கினர். தொண்டி அக்ரஹாரத்தில் இருந்த பல குடும்பங்களும் வெளியேறிவிட்டன. புதுக்கோட்டைக்கும், மன்னார்குடிக்கும் போய் விட்டன. ஆனமந்தி வைத்தியர் குடும்பம் காரைக்குடி பக்கம் போய்விட்டது.  அக்ரஹாரத்தில் வெளியேறாத இரண்டே குடும்பங்களில்  கிருஷ்ணய்யர் குடும்பமும் ஒன்று. குடும்பம் என்றால் அவரும், மனைவியும் மட்டுமே, வேறு யாரும் இல்லை. மற்றோரு குடும்பம் மேலத் தெருவில் ஜோசியர் சுப்பிரமணிய ஐயர் குடும்பம். தன் கைவசம் இருந்த நெல்லையும் தானியங்களையும் வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் பங்கு வைத்தார்கள் கிருஷ்ண ஐயரும் மனைவியும். விதை நெல் வரை தீர்ந்த பின்னும் கிருஷ்ணய்யருக்கு தொண்டிகரையையும்,  வீடையும் நிலத்தையும் விட்டு போக மனம் வரவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஆகாச கருப்பனை விட்டு போகமுடியாதது தான். 

கடைசி மரக்கால்  விதை நெல்லையும் குத்தி அரிசியாக்க மனைவி  பார்வதியிடம் சொல்லிவிட்டு, நாளைய பொழுதுக்கு என்ன செய்வோம் என மலைத்தவராக, வீட்டில் இருந்து கருப்பன்  கோவில் வரை சென்று வரலாம் என நடந்தார்  ஐயர். ஊரில்  பலரும் புலம் பெயர்ந்து விட்டதால், மந்தையும் சாவடியும் வெறித்து கிடந்தன . எங்கு கண்டாலும் தூசும் புழுதியும் அப்பியிருந்தன. மரங்களும்  காய்ந்து  கடைசி இலைகளையும்  கொட்டி ஓய்ந்து கொண்டிருந்தன. சுனைகளும், கிணறுகளும் காய்ந்து  புழுதிக்குழியாக மாறியிருந்தன. வழியெல்லாம் கண்ட வெறுமை கருப்பன்  மேல்  பெரும் கோபமாக மாறியது கிருஷ்ணய்யருக்கு. இப்பொழுதே   மழை பெய்தாலும், அடுத்த வேளை  உணவு கிடைக்க நான்கு  மாதமாவது  ஆகும். இங்கு பிழைக்க இனி வழியே இல்லை என எண்ணி வருந்தி  நடக்கையில், 'கிருஷ்ணன் மாமா, கிருஷ்ணன் மாமா' என  பின்னால்  இருந்து ஜோசியர் சுப்பிரமணிய ஐயர் மகன் பொடியன் அழைத்த குரலைக்  கேட்டு திரும்பினார் . ஓடிவந்த வாக்கிலேயே  பிள்ளை  சொன்னான், "மாமா, இத உங்கட்ட கொடுக்க சொன்னார் அப்பா, கருப்பன் வழிய எல்லாம் அடைச்சிட்டான்னு சொன்னா உங்களுக்கு புரியும்னு சொன்னார், வண்டி கட்டியாச்சு, நாங்களும் புறபடுறோம்" என்று ஜாதகக் கட்டு  ஒன்றை கொடுத்துவிட்டு திரும்பினான்".  

கிருஷ்ணய்யருக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகி 10 வருடங்கள் கழிந்தும் மடி நிறைக்க குழந்தை இல்லை. ஐயர் ஒரே பிள்ளை,  உடன்பிறப்புகள் என யாருமில்லை, சிற்றப்பா பெரியப்பா என்றும் எவருமில்லை.  ஊரில்  இருந்த ஒரே சுக்ல யஜுர் வேதி, கருப்பன் திருவிழாவில்  ஏழாம் நாள் கட்டளையும் அவர்களுடையது . பிள்ளையற்றுப் போனால் அவை எல்லாம் தடைபட்டு போகுமே என்ற ஏக்கம். அதனால கிருஷ்ணய்யர் ஜாதகக் கட்டை ஜோசியர்  சுப்புரமணிய ஐயரிடம் கொடுத்து, ஏதும்,  வழிவகைகள் இருக்கிறதா, பரிஹாரம் எதுவும் செய்யலாமா எனக் கேட்டிருந்தார். அங்கிருந்த அலைப்பறையில் அதை  என்னவென  மீண்டும்  கேட்கவே மறந்துவிட்டது ஐயருக்கு. ஜோசியர் போகிற அவசரத்தில் மகனிடம் முழு விவரமும் சொல்லாமல் குறிப்பாக சொல்லிவிட்டிருக்கிறார் . ஏற்கனவே புழுங்கி வெறுத்து போயிருந்த  மனம், இன்னும் கொதிக்க  விறு விறுனு நடந்து கடைசி சிரங்கைத் தண்ணீரையையும்  உறிந்துக்கொண்டிருந்த ராக்காச்சி சுனையில் காய்ந்து கிடந்த மண்ணை அள்ளி கருப்பன் சந்நிதியை திறந்து அவன்  தலைநிறையக் கொட்டி முழுக்காட்டி , "மண்ணை எல்லாம் மலடாக்கின, இப்ப  என்னையும் மலடாக்கிட்ட, உனக்கு என்ன பூசையும் படையலும், இனி ஏழு தலைமுறைக்கும் உனக்கு பூசை இல்லாம போவட்டும்" என்று ஆத்திரத்தில் என்ன சொல்கிறோம் என்று கூட தெரியாமல்  சொன்னவர்,  வீட்டிற்க்கு சென்று  பாரியாளையும்  கைபிடித்து வீட்டையும், தெருவையும் கூட திரும்பி பாராமல் தொண்டி கரையைத் தாண்டி தெற்கு நோக்கி நடந்தார் " 

மனதிலும், வாக்கிலும் வேதம் உள்ளவனுக்கு அதுவே அன்னமாகும், உடு துணியாகும்,  மாடு மனையுமாகும்,  உறவுமாகும். வேதம் சொன்னபடி வந்த பிராமணனையும் அவன் உடன் வந்த மனைவியையும் நான்கே வீடுள்ள சிற்றூர் கூட வரவேற்று அவர்கள் உண்ணவும்  உறங்கவும் வழி செய்து  உடுக்க  துணி கொடுத்து அவர்கள் விடை கேட்கையில அந்த பஞ்ச காலத்திலும் வழிப்பொருளும் கொடுத்து வணங்கி வழியனுப்பிவைத்தது. கிருணைய்யனும் பார்யாளும் உடுத்த ஒரு துணியும்  மாற்றுக்கு ஒரு துணியுமென அதற்கு மேல் எதையும் வைத்துகொள்ள வில்லை. பொருளென்று எதையும் ஏற்கவில்லை. ஒரு நாளையில் ஒரு வேளைக்கு மறு வேளை உண்ணவில்லை.  அதுவும் ஆளுக்கு நான்கே கைப்பிடி. பஞ்சத்தில் உலகமே தகிக்கும் போது ஒரு பருக்கை அன்னம் அதிகம் உண்டாலும் பாவம் என்று எண்ணினார்கள். காய்ந்து நீண்ட நெடுவழியெல்லாம் கடந்து திருநெல்வேலியில் நெல்லையப்பனையும் காந்திமதியையும் வணங்கி ஒரு நான்கு மாதம் அங்கிருந்தனர். அங்கு பஞ்சத்தை தாமிரபரணி அன்னையாக தாங்கிக்கொண்டிருந்தாள்.  அதை அறிந்து பலரும் பஞ்சம் பிழைக்க அங்கு வந்து கொண்டிருந்தனர். ஐயரும் மனைவியும் நெல்லையில் இருந்து கிளம்பிய வேளையில் மற்ற இடங்களிலும் புது மழை பெய்து பஞ்சம் மாறத் துவங்கியிருந்தது. வள்ளியூரும், ஆரல்வாய்மொழியும் கடந்து நாஞ்சில் நாடு சென்று சேர்ந்தனர்.   நாஞ்சில் மழைவளத்தால் புண்ணியம் பெற்ற மண், அங்குள்ளவர்கள் வடக்கே எங்கோ பஞ்சம் என்றளவிலேயே பஞ்சத்தை பற்றி அறிந்திருந்தார்கள். தெலுங்கு நாட்டில் இருந்து வந்த பட்டன்மார் சிலர் திருவனந்தபுரத்தில் பட்டமும் பதவியுமாக குடியிருப்பதை வழிபோக்கர்களிடம் இருந்து அறிந்து திருவட்டாறும் சேவித்து அனந்தபத்மநாபன் ஆளும் திருவனந்தபுர பட்டனத்துக்கு போய் சேர்ந்தனர். 

தெலுங்கு பட்டன்மார் தெருவை விசாரித்து அறிந்து, அங்கு போய் ஊர் சபையில் முறையிட்டனர் ஐயரும் மனைவியும். கிருஷ்ணய்யர் யஜுர்வேதி சுக்ல சாகை. ஜடை, கணம் வரை பாடம் ஆகி உபாங்கங்களும், பிரயோகங்களும் முறைப்படி கற்றவர்.  அந்த அக்ரஹாரத்தில் அப்போது  சுக்ல யஜுர்வேதிகள் ஒருவர் கூட இல்லை. கிருஷ்ணய்யரின் வேத சம்பத்தைக்கண்டு இடமும் பறம்பும் கொடுத்து குடியேற்றினர். தொண்டியில் இருந்து வந்த குடும்பம் எனபதால் தொண்டி மனை என்ற பெயரும்  உண்டானது. இன்றைப் போல் நாளை என பொழுதும் ஓட பார்வதிக்கு ஏழு ஆண் குழந்தைகள் பிறந்து இறந்தன, ஒன்று முழுதாக பிறந்தது என்றால் ஒன்று குறையாக பிறந்தது. இப்படி ஏழு குழந்தைகள் மாண்ட பின் எட்டாவதாக ஒற்றைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து நிலைத்தது.  கிருஷ்ணய்யர் தொண்டி என்ற பெயரைத் தவிர ஊரைப்பற்றியோ கருப்பனைப்பற்றியோ ஒன்றுமே சொன்னதில்லை. கணவன் சத்தியத்திற்கு தானும் கட்டுப்பட்டவள் என்று கருதியதால், பார்வதியும்  பேசியதில்லை.   மரசெப்பில் அடைத்த முத்தாக அது எங்கோ ஆழத்தில் கிடந்தது. அதை அவர்களே எடுப்பதோ, நோக்குவதோ இல்லை என்றானது. மகன் பேச்சு மொழியாக மலையாளமும், வீட்டு மொழியாக தெலுங்கும் மட்டுமே அறிந்து இருந்தன. அவனுக்கு ஏழாம் வயது நடக்கையில் பூணூலும் இட்டு வேத அத்யயனம் தொடங்கி வைத்தார் கிருஷ்ணய்யர்.  அதோடு கூட தங்கள் தங்களுக்குரிய வேதங்கள் பாடமான மற்ற அக்ரஹாரத்து பிள்ளைகளும், அனந்தபுரி அரசர் வீட்டு பிள்ளைகளும் மேலாக யஜுர் வேதம் சொல்லிக்கொள்ள அவரிடம் வந்தனர். தொண்டி மனை சுக்ல யஜுர் வேத பாடசாலை ஆனது. அடுக்கு பானைகள் அவசியத்துக்கு நிறைந்தன, தொழுவத்தில் ஒரு பசுவும் கன்றும் எப்போதும் நின்றன. அங்கேயே அக்ரஹாரத்தில் முறைப்படி ஒரு பெண்ணை கன்னிகா தானமாக பெற்று மகனுக்கு திருமணமும் விமர்சையாக முடிந்தது.

வாழ்வரசியான பார்வதி இறக்கும் முன் தன்னுடலை சம்ஸ்காரம் செய்கையில் வழக்கத்துக்கு மாறாக வட கிழக்கில் ஈசானத்தில் தலை இருக்கும் படி வைத்து தகனம் செய்ய சொன்னாள். கிருஷ்ணய்யர் தங்கள் மனையில் அக்னிஹோத்ரம் இருந்ததையும், அதை நல்ல வாத்தியாரைக் கொண்டு உரிய பரிகாரங்கள் செய்து மீண்டும் துவங்க வேண்டும் என்று மட்டும் கூறி விட்டு உயிரை விட்டார்.  கிருஷ்ணய்யர் இறந்து பத்தும், பதிமூன்றும் கழிந்து, வருஷாப்தியும் சுபமான பின் அக்னி ஹோத்திரம் துவங்கலாம் என பல அக்னிஹோத்திர மனைகளிலும் ஏறி இறங்கினான் கிருஷ்ணய்யர் மகன் ராமசுப்பையன்.  எந்த மனைக்கு சென்றாலும் எல்லோரும் ஒன்றே போல  "உன் குலதெய்வம் நடையில நிற்கிறது  அதை உள்ளே அழைத்த பின்னே தான் அக்னி ஹோத்திரம் கூட்ட முடியும். அதற்குரிய காலம் இப்போது இல்லை" என்று பிரஸ்ணம் கண்டு சொன்னார்கள்.  அவர்கள் யாராலும் தெய்வம் யாரென்றும், எப்படி அழைக்க வேண்டும் என்று மட்டும் சொல்ல முடியவில்லை. 

ராமசுப்பைய்யன் திண்ணையில் அமர்ந்திருந்த ஒரு சுக்ல பஞ்சமி பிறை எழுந்த அந்தியில் அவ்வழியே வந்த சாமியார் ஒருத்தர் "உன் குலதெய்வம் உன் நடையில் ஈசான திக்கில் நிற்குது,  உள்ளே அழைக்க காத்திருக்குது" என்று மலையாளத்தில் சொல்லிவிட்டு போனார். அப்போதுதான் அம்மை உடலை ஈசானத்தில் தலை இருக்க ஏன் தகனம் செய்யச்சொன்னால் என்று விளங்கியது. ஆனால் பல பேர் மூலமாக பிரஸ்ணமும், ஜோஷ்யமும் பார்த்தும் தெய்வத்தை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை. அறியாத தெய்வத்தை அழைத்து என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அழைத்து, வந்து விட்டால் என்ன கேட்குமோ என்ற பயம் வேறு. மூன்று தலைமுறை ஆன பின்னும் அதுவே தான் பாடு. அவர்கள் வீட்டில் சந்ததி அருபடாமல் ஒற்றைக்கு ஒரு ஆண்பிள்ளையே பிறந்து வந்தது. அதற்கு மேல் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிறந்ததும் இறந்து போயின. பெண் குழந்தைகள் குறைப்பிரசவமாகக் கூட பிறப்பதில்லை. யாராவது வந்து குலதெய்வம் வாசலில் நிற்பதைச் சொல்லி செல்வார்கள். தெய்வத்தின் பேர் என்ன, ஆணா பெண்ணா என்று கேட்டாள் பதில் வராது. எப்பேர்ப்பட்ட தந்திரியாலும், நம்பூதிரியாலும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைக்கு நீ உன் காலத்திலாவது தெய்வத்தை தெரிந்து, அதை அழைத்து அக்னி ஹோத்திரத்தை துவங்கி விடு என்று அறிவித்து மாண்டனர்.

நாலாம் தலைமுறையில்,  பெண் குழந்தை ஒன்று மகாலட்சுமியாக, பெரிய கண்ணும் சுருண்ட கூந்தலுமாக பிறந்தது. விசாலாக்ஷி என பெயரிட்டு சீறாட்டி வளர்த்தார்கள். விசாலம் மஞ்சள் நிறத்தில் பசும்பொன் விக்ரகம் போல வளைய வந்தாள். தொண்டி மனை இல்லத்தில், பட்டு பாவாடையும் சதங்கை கொலுசுமாக முதல் பெண்குழந்தை நடமாடும் ஒலி கேட்க தொடங்கியது. விசாலத்திற்கு ஐந்து வயதானபோது நிலையை பிடித்தபடி நின்று வாசலை  பார்த்துக்கொண்டே  இருப்பாள், சிரிப்பாள், ஏதோ பேசுவாள்.  பின் ஏழு வயது ஆன போது ஒரு நாள் வீட்டினுள்ளே ஏற்றி இருந்த அகலை எடுத்து வந்து மேல்புறத்து திண்ணையில் கிழக்கே பார்த்து வைத்தாள். அங்கேயே தான் பெரும்பாலும் இருப்பாள், அந்த விளக்கோடு பேசுவாள், கொஞ்சுவாள். கொல்லையில் பறித்த எந்த பூவையும் கொண்டுவந்து விளக்கடியில் பரப்பி வைப்பாள். கூடத்தில் இலையில் இருந்து உண்டு கொண்டிருப்பவள் ஒரு பிடி அன்னத்தை எடுத்து வந்து திண்ணையில் விளக்கை நோக்கி நீட்டுவாள். அவள் திண்ணும் வெல்லத்துண்டிலும், மாந்துண்டிலும், அவலிலும் அந்த பெயர்  அறியா தெய்வத்துக்கும் ஒரு பங்கு உண்டு. என்னமோ விளையாடுகிறாள் என்று அவள் அம்மையும் அம்மப்பனும் முதலில் நினைத்தாலும், மெல்ல மெல்ல நடை ஏறையில் இறங்கையில் ஒருமுறை திரும்பி  விளக்கடியை காணாமல் இருக்க முடியவில்லை அவர்களாலும். காணும்போது விளக்கில் திரியோ, எண்ணெய்யோ குறைந்தால் பதறி உள்ளிருந்து எடுத்து வந்து சரி செய்வார்கள். நிலையில் நின்று விளக்கை நோக்கி கையெடுத்து கும்பிட்டுவிட்டு போன காரியம் வெற்றியானது.

ஒரு நாள் விசாலத்துக்கு கருப்பு துண்டு ஒன்று கிடைக்க அதைக்கொண்டுவந்து விளக்கடியில் வைத்தாள். அதைக் கண்ட பித்தனை போல இருந்த வழிப் பரதேசி ஒருவன், "என்ன குதிரைக்காரனுக்கு கருங்கச்சையா?" என்று சிரித்தான். விசாலத்தை பார்த்து "நீ அவனுக்கு பசியாத்தின அம்மையில, நீ சொன்ன இடத்தில நிப்பான்" என்று விட்டு வாசலில் நின்ற விசாலத்தின் தந்தை பரந்தாம ஐயரை பார்த்து "இவளால தான் உனக்கும் உன் வம்சத்துக்கும் விடிவு, இவ நீட்டின பிடி அன்னத்துக்கு, காலம்பூராம் கட்டுப்பட்டு நிக்கான், உன்னையும் உன் வம்சத்தையும் இவ நாளைக்கு  மருமகளா போகப்போற வம்சத்தைதையும் சேர்த்து ஆசிர்வதிச்சிட்டான்" என்றான் பித்தன். கண்ணில் நீர் வழிய கைகூப்பியபடி "யார்" என பரந்தாமா ஐயர் கேட்டதற்கு. "உரிய காலம் வரும் போது தெரியும்" என்று விட்டு போய்விட்டான். பரதேசி போனதும் பட்டென்று வீசிய காற்றில் சந்தனத்தின் மனம் எங்கிருந்தோ வந்து நடையிலும் மனையிலும் நிறைந்தது, ஒற்றை செவ்வரளி பூ ஒன்று பறந்து வந்து விளக்கடியில் இருந்த கருத்துண்டில் விழுந்தது, ஆனால் விளக்கில் தீபம் மட்டும் ஆடவில்லை. பித்தன் வாக்கு சொன்ன  பத்தாம் மாதம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றாள் பரந்தாமா ஐயரின் மனைவி. அதற்கு பின்னும் மூன்று ஆண் மக்களை பெறறார்கள்.

உரிய வயது வந்த போது விசாலத்தை முறைப்படி கன்னிகா தானம் செய்து, ஒரு வேத சம்பத்துள்ள இளம்பிள்ளைக்கு கொடுத்தார்கள். சில பெண் பிள்ளைகள் பிறக்கும் போதே  அன்னையாகவே பிறக்கின்றன. விசாலம் அப்படித்தான். அவளது  சாமர்த்தியத்தையும், குணத்தையும் பார்த்து அவள் வந்த நாளில் இருந்து அவளைக் கொண்டாடினார்கள் அவளது புகுந்த மனைக்காரர்கள். புகுந்த மனை சென்ற பின்னும் விசாலத்திற்கு அவளது பெயர் அறியா குதிரைக்கார சாமியின் மீதான பிரியம் மட்டும் குறையவில்லை. கல்யாணம் ஆனதில் இருந்து விசாலம் குடும்பத்தாரையும் அழைத்து திண்ணையில் குதிரைக்காரனுக்கு அவர்கள் அறிந்த வகையில் மலரும், அவலும் வைத்து வருடத்தில் ஒரு நாள் பூஜை கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார் பரந்தாமா ஐயர். குதிரைக்காரனை கும்பிட கும்பிட விசாலம் வீட்டு ஆட்களுக்கும் வெற்றியும், சம்பத்தும், வித்தையும் கூடி வர அவர்கள் குலதெய்வமான வன துர்க்கையோடு இவரையும் சேர்த்து கும்பிட ஆரம்பித்தார்கள். அவர்கள் வீடே விசாலத்தின் பெயரால் விசாலம் மனை என்ற ஆனது. விசாலம் மனைக்கும் தொண்டி மனைக்கும் தலைமுறைகளாக பெண் கொடுக்கலும் வாங்கலும் தொடர்ந்தது. தொண்டி மனையிலும், விசாலம் மனையிலும் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு விசாலாக்ஷி  என்று பெயர் இடுவதும் வழக்கமானது. இரு மனையும் கொப்பும் கிளையும் விட்டு பல குடும்பங்களாக விரிந்து பரவியது

ஏழு தலைமுறை தாண்டி எட்டாம் தலைமுறையாக தொண்டி மனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எவரோ சொல்ல எங்க கேட்க அந்த குழந்தைக்கு "கிருஷ்ணாபன்" என பெயர் வைத்தார்கள், அவனுக்கு பூணூல் ஆகி வேத அத்தியயனத்தையும் துவங்கிய நாளில், சம்மணம் இட்டு அமர்ந்து இருந்தவன் மடி பிரியாமல் அப்படியே அந்தரத்தில் எகிறி கிழக்கு முகமாக மாறி அமர்ந்தான். கண் சிவக்க உருட்டி 'ஹூம்' என்று கர்ஜித்தான். "இந்த மனைக்கு அக்னி ஹோத்திரம் கூட்ட வேலை வந்திருச்சு" என்று முதல் வார்த்தையை தமிழில் சொன்னான்.  காலும் தலையும் புரியாமல் அத்தனை பேரும் நிற்க. அவனது அத்தை விசாலம் முன்னாள் வந்து 'குதிரைக்காரன்ல வந்திருக்கான்' என்றாள். கிருஷ்ணாபனின் அப்பா இட்ட சம்மணம் பிரியாமல் உடல் துள்ளிக்கொண்டிருக்கும்  பிள்ளை முன் தண்டனிட்டார்.  மொத்த தொண்டி மனையும் விசாலம் மனையும் தண்டனிட்டது. வலது கை கண்ணறியா கைஅரிவாள் ஒன்றை தொடையில் நிறுத்தி ஊன்றியிருக்க, இடது கையை மடியில் குவித்து வைத்திருந்தான்.  யாரோ "ஐயா நீ யாரு" என்று கேட்க 

க்ருஷ்ணாபன் கணீரென்று சொன்னான் "நான் தான் டா கிருஷ்ணாபன், தொண்டிக்கரையில இருந்து வந்த ஆகாசக்கருப்பன்.  காலமுள்ள அளவுக்கும் உன் வம்சத்தக்காப்பேன்னு சத்திய வாக்கு கொடுத்தவன். வாக்கு தவறாதவன்.  தொண்டிகரை விட்டு அன்னைக்கு உன் மூதாதை கிளம்பபையில  அவன் கூட ஓடி வந்தவன்.  மண்ணால அபிஷேகம் செஞ்சு கைப்பிள்ளைய  உதறின மாதிரி என்னை வேண்டாம்னு விட்டு வந்தான் உன் மூதாதை. ஆனால் அவன் மனைவி 'என் மனையில வேதம் அறுபடாமா ஒலிக்கட்டும், அதுக்காக ஒரு வாரிசாவது நிலைக்கட்டும்' னு வேண்டி என் எல்லைய கடந்தா. அவன் உதறினாலும் நான் உதற முடியுமா ? அவுக  நடை இறங்கின நாள்ல இருந்து ஒரு பொழுதும் அவுகளை விட்டு விலகல நான். அவுக மரத்தடியிலதங்கினா , நான் மண்ணில நின்னேன். அவுக நடந்து வழியில எல்லாம் முன்னொருத்தனா, பின்னொருத்தனா    காவ காத்தேன். அவுக மனைத் திண்ணையில உறங்கினா, நான் தெருவழியில நின்னேன். இங்கு பத்மநாபன் கோட்டையில குடியேறின அன்னையில இருந்து நாலு தலைமுறக் காலமா இந்தமன  வாச நடையில நின்னேன். ஒரு சொட்டு தண்ணியும் அருந்தல , ஒரு பிடி அன்னமும்  உண்கல. என் உடு துணியெல்லாம் கீறி இத்துடுச்சு. என் தலை முடியெல்லாம் சடை பத்தி படந்திருச்சு, என் குதிகால் எல்லாம் வேர் விட்டு மண்ணில புதைஞ்சிடுச்சு . ஒரு நா மழையில நனைஞ்சேன்னா, மறுநா வெயிலுல காஞ்சேன். " 

"ஏன்யா இத்தனை வருஷமா நீ நடையேறவில்லை" என்று தொண்டி மனை பெரியவர் ஒருவர் கேட்க.

"அவன் பிறவா அழியா சொல்லுக்கு சொந்தக்காரன் டா, நல்லவன். அவன் சொல் பொய்க்காது, அதான்  ஏழு தலைமுறக் காலம் முகங்காட்டாம இருந்தேன், அனாலும் கையெட்ற தூரத்தில தான். அத்தன பேர் கண்ணையும் மறைச்சேன், யாரையும்  என்ன  அண்ட விடல. தெய்வங்களுக்கும் கூட ஒளிச்சேன். ஆருடத்தாலையும் நெருங்க முடியல என்ன, ஆனா, அம்மைக்கு முன்னால எந்த பிள்ளையால ஒளிய முடியும்?  விசாலம் அம்மையாவே பிறந்தவள்ல. அவ என்ன பார்த்துட்டா , அடையாளம் தெரிஞ்சுக்கிட்டா . மீறவே  முடியாம என்ன கட்டி நிறுத்திட்டா. அழைச்சு, அவ காட்டின  இடத்தில உட்காந்தேன். அவ உண்டத  எனக்கும் ஊட்டினா,உண்டேன். அவ கொடுத்த கா முழத்துண்டு எனக்கு பட்டு பீதாம்பரமாச்சு. வரமோ? சாபமோ? அம்மையால கடக்க முடியாத எல்லைனு ஒன்னு இருக்கா?" கருப்பன் இட்ட சம்மணமோ இருந்த நிலையோ மாறவில்லை, கண்ணீர் மட்டும் பெருகி ஒழுகியது.  முற்றத்தில் சட சடவென மழைத்துளிகள் விழுந்தன.

"ஏழு தலைமுற கடந்தா  அந்த குலமே புதுசாகும். காட்டுத்தீயில வெந்த காடு புதுசா துளிர்க்கிற மாதிரி. கர்ம வினையால எரிஞ்சு புதுசா  முளைச்ச முத தளிரு இது.  உன் மூதாதையும் நான் உன்  வீட்டு நடையேறின அந்தச்சனத்தில   கதி அடைஞ்சிட்டான். இனி உங்களுக்கு அக்னி ஹோத்திரத்தையும் கொடுப்பேன்" என்றான் கிருஷ்ணாபனாகிய ஆகாச கருப்பன். அதன் பின் தொண்டி மனை இல்லத்தில் அவனுக்கு நிலையம் விட்டு, அவன் கேட்டபடி வழக்கம் மாறாமல் தொண்டி  மனைக்காரார்களும்,  விசாலம் மனைக்காரர்களும் இணைந்து பெரும்படையலும் பூசையும் கொடுத்தார்கள் ஒவ்வொரு ஆண்டும்.

பங்குனி மாத உத்திர பெளர்ணமியில் நடுநிசியில் ஆகாச கருப்பனுக்கு பாண்டி நையாண்டி மேளத்தோடு பெருங் கொடை.  மல்லி, முல்லை, பிச்சி, செவ்வந்தி, செந்தாழம் என ஐந்து வகை பூக்களும்,  மரிக்கொழுந்து, தவனம் என்னும் இருவகை இலைகளும் சேர்த்து கட்டிய நிலை மாலைகள் நூறு. மேனிக்கு அக்தர், ஜவ்வாது, பன்னீர், சந்தணம், பூணுகோடு ஐந்து வகை வாசனைகள். நெற்றி திலகத்துக்கு கஸ்தூரி. தலைக்கு செங்கச்சை, உடுக்க கருங்கச்சை. பாதத்துக்கு குறடும், பதிந்த தண்டையும், சதங்கையும். சூரி, அரிவாள், வாள், 9 மணி கட்டின ஒரு வல்லயம், சூலம், வேல், சாட்டை, ஆனைச்சங்கிலி, சுக்குமாந்தடியோடு, தீப்பந்தம் என பத்துவகை ஆயுதங்கள். மாருக்கு இரத்தின பதக்கம், கழுத்துக்கு முத்தாரம், தோளுக்கு வீர வடம், புஜத்துக்கு  வீர வளையம், முன்கைகளுக்கு சுத்த வெள்ளி காப்புகள், பத்துவிரல்களுக்கும் கல் பதித்த மோதிரங்கள், இடுப்புக்கு மணி கோர்த்த உத்தரீயம். 

நிறை மரக்காலில் கமுகுப்பூ  குலை சாற்றி, செவ்வாழை, மட்டி, பூவன்,  நாடன், பேயன் என ஐந்து வகை வாழைக்குலைகள் நிறுத்தி, பதினோரு தலை வாழை இலைகள்  விரித்து,  தேங்காய்கள் இருபத்தொன்று, பழுத்த பாக்குகளோடு ஒரு கவுளி வெற்றிலை வைத்து, பலாச்சுளையில் தேனும் சுக்கும் சேர்த்து பிசைந்து வைத்து. தேனும் தினைமாவும் பிடித்த  மாவுருண்டையும், பச்சரிசியும் வெல்லமும், கைப்பிடி எள்ளும் இட்டு ஊறவைத்த காப்பரிசியும்,  தட்டை, மொச்சை, பச்சை என மூன்று வகை பயறுகளை உப்பில்லாமல் அவித்து வைத்து. பணியாரங்களும், வடைகளும், கொழுக்கட்டைகளும் பதினாறு வகைகள் வைத்து, அவலோடு, பொறியும், சர்க்கரையும் சேர்த்து, பானகமும், மதுரக்கள்ளும், செங்கரும்பும் கூட்டி ஒரு பெரும்படையல்.

பள்ளயம் அடுக்கியதும், வாயோடு மூக்கும் மூடி ஒரு துணியால் கட்டிக்கொண்டு, விசால மனையின் மூத்த மருமகள் ஒரு பிடி சுத்த அன்னம் அவள் கையால் பிடித்து இலையில் வைப்பாள். பின்னர் தொண்டி மனையின் மூத்த மருமகளும் ஒரு பிடி அன்னம் வைப்பாள். தூபமும் தீபமும் காட்டி நைவேத்தியம் ஆகும் போது, கருப்பன் அருளாடி வந்து தொண்டி மனையின் ஒரு பிடி அன்னத்தை எடுத்து விசால மனையின் மருமகளுக்கு பூவோடு சேர்த்து கொடுப்பான், அவள் அதை முந்தானையில் பெற்ற பின்பு, மீதம் உள்ள சேஷமே கருப்பனுக்கு நைவேத்தியம் ஆகும். நைவேத்தியம்  கழிந்த பிறகு விசாலம்  மனை படைத்த அன்ன உருண்டை முதல் பிரசாதமாக தொண்டி மனைக்கு வழங்கப்படும், அதை அம்மனையின் மூத்த மருமகள் மடியில் வாங்கிக்கொள்வாள். இவ்வாறு இன்றைக்கும் விசாலம் கொடுத்த அன்ன சேஷத்தை உண்டு தொண்டி மனையையும், விசால மனையையும் ஒன்றே போல் வாழ்த்தி காவலும் கொடுக்கிறான் ஆகாச கருப்பன்.  

"இப்ப சொல்லுடா கோவிந்தா, நாலு தலைமுறை மழைலையும் வெயிலையும் நின்னு, மூனு தலை முறை திண்ணையில காத்திண்டு இருந்து, அதுக்கு பிறகும் தம் பிள்ளைகளுக்காக மனையேறின இதுனா தெய்வம்,  இதுனா பிரம்மம்,  இதுக்கு மிஞ்சினது ஒன்னு இருக்கா?" ராமசுப்பையர் கண்களில் நீர் பெருகி குரலும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஆகாச கருப்பன் கதையை ராமசுப்பையர் சொல்லி முடிக்கும்வரை, அங்கு வேறு எந்த சத்தமும் இருந்ததாக கூட நினைவில்லை, அவர்  குரல் மட்டும் தான் ஒலித்துக்கொண்டிருந்தது. 

ஐயர் தொடர்ந்தார், "நானும் தொண்டி மனைக்காரன் தான், என் பாரியா பேரு விசாலம். அவ விசால மனைக்காரி. பின்ன ஏதோ ஒரு காலத்தில இந்த ஊருக்கு வந்து சேர்ந்திருக்கோம். இப்பவும் ஆத்துல அக்னி கோத்திரம் உண்டு, வேத பாராயணமும் உண்டு. என் பிள்ளைக்கும் கிருஷ்ணாபன்னு தான் பேர் வச்சிருக்கேன், உனக்கே தெரியுமே. நான் சொல்ற வேதத்தில் ஒவ்வொரு 'க்'கும் 'ம்'மும் ஒவ்வொருவ அக்ஷரமும் அவனைத்தானே சொல்லறது. என் அக்னி ஹோத்திர ஆராதனை எல்லாம் அவனுக்கு காட்டுற கற்பூர ஆரத்தி தானடா. நான் யாகத்துலையும் ஹோமத்துலையும் கொடுக்கிற பூர்ணாஹூதிய  அந்தந்த தேவதையா வந்து கை நீட்டி வாங்கிண்டறது ஆகாஷ கருப்பன்  தான,  நான் விடற ஹவிஸ் எல்லாம் அவனுக்கான பெரும்படையல்  தான? அவன் இல்லாம இந்த வேதத்துக்கும், பூஜைக்கும் எல்லாம் என்ன அர்த்தம்" ஜயர் கலங்கிய கண்களை துண்டால் அழுந்த துடைத்தார். பாட்டி விருட்டென்று சென்று நிறைகுடத்தில் இருந்து செம்பில் நீர் முகர்ந்து வந்து நீட்டினாள் ஐயரிடம்.

கருத்துகள்

  1. ஊரை காலிசெய்துவிட்டு வரும் அத்தனை குடும்ங்களின், குல தெய்வங்கள் இப்படித்தான், நம்மை சூழ்ந்து கொள்கிறது
    "அவுக நடை இறங்கின நாள்ல இருந்து ஒரு பொழுதும் அவுகளை விட்டு விலகல நான். அவுக மரத்தடியிலதங்கினா , நான் மண்ணில நின்னேன். அவுக நடந்து வழியில எல்லாம் முன்னொருத்தனா, பின்னொருத்தனா காவ காத்தேன். "

    பதிலளிநீக்கு
  2. பலமுறை கண் கலங்கி விட்டது. சரளமான காட்சிபடுத்துதல். நன்றி !

    பதிலளிநீக்கு
  3. "பூர்ணாஹூதிய அந்தந்த தேவதையா வந்து கை நீட்டி வாங்கிண்டறது ஆகாஷ கருப்பன் தான, நான் விடற ஹவிஸ் எல்லாம் அவனுக்கான பெரும்படையல் தான? அவன் இல்லாம இந்த வேதத்துக்கும், பூஜைக்கும் எல்லாம் என்ன அர்த்தம்"

    தெய்வகள் எல்லாம் ப்ரம்மம் 🙏🏾

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19