ஐயன் பந்தி - 3

வெளி - 1

"மீனாட்சி, கொஞ்சம் மோர் இருந்தா எடு தாயீ" என்று ராமசுப்பையர் குரல் கேட்டு வீட்டிலிருந்து வேகமாக இறங்கி கோவிந்தன் தாத்தா வீட்டுக்கு போனேன். கோவிந்தன் தாத்தாவும் ஐயரும் பேசிக்கொள்வதே விசித்திரமாக இருக்கும். நல்ல நடு உச்சி பொழுதாகி இருந்தது. கீழ் புறம் திண்ணையில் ஐயர் உட்கார்ந்து காலை வெளியே தொங்கவிட்டு இருந்தார். தாத்தா மேல் புறம் திண்ணையில் எழுத்து மேசைக்கு முன்னாள் உட்கார்ந்து அவரை பார்த்துக்கொண்டு இருந்தார். பாட்டி மோரை பித்தளை லோட்டாவில் ஐயருக்கு கொடுத்துவிட்டு படியிலேயே அமர்ந்தாள். நான் பாட்டி அருகில் போய் அமர்ந்துகொண்டேன். பொதுவாக ஐயர்கள் அரிசியும் பருப்பும் தான் வாங்கிக்கொள்வார்கள். உணவோ, மோரோ  வாங்கி உண்ணமாட்டார்கள். ஆனால் ராமசுப்பையர் வித்தியாசமான ஆள். அவரை தாத்தாவும் பேர் சொல்லியே அழைப்பார், அதுவும் வழக்கத்தில் உள்ளதில்லை. 

"ஐயமார்க எங்க வீடுகள்ல அரிசியும் பருப்பும் தான் வாங்குவாக, நீ என்னடா மோரக் கொடு நீச்சத்தண்ணியை கொடுனு வாங்கி குடிக்கிற" என்றார் தாத்தா.

ராமசுப்பையர் வளர்ந்தவர், திண்ணையில் அமர்ந்து  கால்களை தரையில்  ஊன்றி இருந்தார், பெரும்பாலானவர்களுக்கு எட்டாது. நல்ல பெரிய கண்கள், கூர்த்த நாசி, முடியை பின் குடுமியாக கட்டியிருந்தார், பச்சைக்கரையில் ஒரு வேட்டியை கச்சம்வைத்து கட்டியிருந்தார். ஒருபுறம் சிவப்பு கரையும் மறுபுறம் பச்சைக் கரையுமாக ஒரு துண்டை தோளில் இட்டிருந்தார். பூணூல் குறுக்காக கிடந்தது. நெற்றியில் பட்டையாக இட்டிருந்த திருநீறு வியர்வையில் பாதி அழிந்திருந்தது, நடுவில் ஒரு குங்குமப் பொட்டு. மோரை ஒரே மூச்சாக குடித்து விட்டு, தாத்தா கேட்ட கேள்வியை சட்டையே செய்யாமல் இருவருக்கும் இடையில் அமர்ந்திருந்த என்னையும் பாட்டியையும் பார்த்து திரும்பி, உள்ளங்கையில் என்னமோ வைத்திருப்பது போல நீட்டி விரல்களை சன்னமாக விரித்து என்னைக்காட்டி 

"மீனாக்ஷி, இந்த ஆடி வந்தா இவனுக்கு 14 வயசு திகையுமோ இல்லியோ, கடக ராசிக்காரன் நல்ல வித்தையும் ஞானமும் உண்டு" என்றார். "ஆமாம்" என்றாள் பாட்டி. ஐயருக்கு எங்கள் அத்தனை பேர் ஜாதகமும் பிறந்த நேரமும் தெரியும். தெருவில் குழந்தை பிறந்ததும் ஐயருக்கு சொல்லிவிட்டு விடுவார்கள். அவர் குறித்து வைத்துக்கொள்வார். பின் எப்போதாவதும் ஜாதகம் வேண்டும் என்று கேட்டால், குறிப்பை வைத்து ஜாதகத்தை எழுதிக்கொடுப்பார். பெரும்பாலும் கல்யாணத்திற்கு தான் ஜாதகம் கேட்டு போவார்கள். பெரிய சங்கடங்கள் வரும்போது ஜோசியம் பார்க்கலாம் என்று ஜாதகம் கேட்டு செல்பவர்களும் உண்டு. ஜாதகத்தையும் அவரே பார்த்து பரிகாரமோ பலனோ சொல்லி அனுப்பிவிடுவார்.

அதற்கு பிறகு தாத்தாவை பார்த்து திரும்பி "டேய் கோவிந்தா, சுவாமியே சேஷப்பட்ட எச்சில் அன்னத்தை வாங்கி உண்டுட்டு, ஏழ் ஏழ்  தலைமுறைக்கும் ஆசிர்வாதம் பண்ணிடுது, நான் எம்மாத்திரம்,  மீனாக்ஷி  சாக்ஷாத் பரதேவதைனா, அம்பிகைனா, அதான் அவ கையால மோர் வாங்கி குடிக்கிறேன்" என்றார் 

"அது என்ன கதை சாமி சொல்லுங்க" என்றாள் மீனாக்ஷி பாட்டி. ராமசுப்பையர் கதை சொல்ல துவங்கினார்.  

"பல வருஷங்களுக்கு முன்ன வடக்க துங்க பத்ரை கரையிலேருந்து தெலுகு பேசுறவா  சிலர், பஞ்சம் பிழைக்கவும், அந்நிய ராஜாக்களின் தாக்குதல்ல இருந்து தப்பிக்கவும், பெண்களையும், பிள்ளைகளையும் கையில பிடிச்சுண்டு, தேவையான பொருட்கள மட்டும் வண்டி சுமையும், தலைச்சுமையுமா எடுத்துண்டு தெற்கு நோக்கி வந்தாளாம். அதில ஐந்தாறு பிராமணர் குடும்பங்களும் உண்டு. வேதம் படிச்சவா. வழி நடையிலும், அவா வேதத்தையும், மூணு வேளை சந்தியையும் விடல. காஞ்சிபுரம், தஞ்சாவூர் எல்லாம் தாண்டி ஒரு சுக்ல பக்ஷத்து பஞ்சமி நாள்ல  தொண்டிக்கரைக்கு வந்து சேர்ந்தப்ப அங்க ஒரு ஆலமரத்தடியையும் சுனையையும் பார்த்திருக்கா.  அந்தி மயங்கி, பச்சிக அடையற நேரமானதால அங்கேயே தங்கி இளைப்பாறலாம்னு எண்ணி  வண்டி பாரம் இறக்க துவங்கினா. அவா கொண்டு வந்ததில் முதல் பெட்டியில அவாளோட  குலதெய்வமான சுப்பிரமணிய சுவாமியும் உண்டு. அவா குலதெய்வ பெட்டியை இறக்கி மண்ணில் வைக்க போனப்போ, 9 வயதும் திகையாத பாலகன், பிரம்மச்சாரி, ஒத்தை துண்டை மட்டும் அரையில் கட்டியிருந்தவன் ஒருத்தன் அரற்றி அலறி "யார் நீங்க, என் எல்லைக்குள்ள அத்து மீறி  வரீங்க" என்றபடி திடும்னு முன்னோடி வந்து நின்னிருக்கான். பிள்ளை தெலுங்கும்,  வடமொழியும் மட்டும் படிச்சவன், ஆனால் தமிழ்ல பேசினானாம் . அந்த கூட்டத்தில அரவ பாஷை தெரிஞ்ச ஒரே ஒருவர் ராமய்யர் மட்டும்  தான்,  ஆழ்ந்த கல்வியும், ஞானமும் உடையவர், வாக்கில் வன்மையும் சாதுர்யமும் உண்டு. அவர் முன் வந்து, வந்திருப்பது தெய்வம்னு அறிஞ்சுண்டு, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி,  அவா  வாழ்ந்த கதையும்,  பட்ட கதையும், இங்கு வந்த அடைஞ்ச கதையும் எல்லாம் எடுத்து சொன்னாராம் . சொல்லி முடிக்கவும்  'நான் ஆகாச கருப்பன்டா, கருங்கச்சைக்காரன், இந்த ஆலமரம் என் சந்நிதி, இந்த சுனை  ராக்காச்சியோடது, இது என்னோட கோட்டை, தொண்டி பட்டணம் முழுதும் என் காவல்' என்று உறுமியபடி சொல்லியிருக்கான் பிள்ளை".

ராமய்யர்  படக்கென்று தன் உடன் வந்தவர்களுக்கு எல்லாம் கை காட்டி விட்டு தானும் தன் உடல் முழுதும் மண்ணில் பட தண்டம் போல மீண்டும் விழுந்தார். "காப்பாத்தணும் சாமி" என்று தெலுங்கில் கதறியபடி, பால்குடி மாறாத பச்சைக் குழந்தைகளையும் மண்ணிலிட்டு, ஆணும் பெண்ணும் ஒருவரைக்கண்டு ஒருவர் என அத்தனை ஜனமும்  அடியற்ற மரம் போல "சரணம் சரணம்" என மண்ணில் விழ, கருப்பன் வலக்காலை ஓங்கி உதைத்து நின்ற ஒலியில் அதிர்ந்த ஆலமரத்தில் பச்சிகள் பறந்து சிலம்பின. காலில் சதங்கைகள் சிதறி நால்  புறமும் ஓடும் ஒலி கடலும் கரையும் தாண்டி எங்கோ கேட்டது,  கணத்த சங்கிலி ஒன்றை உலைத்து மாறி மாறி வீசும் குலுங்கல் சத்தமும் 'நங் நங்'கென உடலில் விழும் சத்தமும் கேட்டு அங்கிருந்த அத்தனை பேரும் உடல் சிலிர்த்தனர். காண்ட மணி ஒன்று மீண்டும் மீண்டும் முழுங்கி நீண்டு ரீங்கரித்தது. "ம்ஹ்ம்" என்ற ஒற்றை ஹூங்காரத்தில் மொத்த கூட்டத்தையும் எழுப்பி விட்டவன், "தென் கிழக்கில வீதியும் மனையும் கட்டி குடியேறுங்க, உங்க வம்சத்துக்கு இனி நானே காவல், எனக்கே முத பூச,  நீங்க கொண்டுவந்த சாமிக்கும் என் கோட்டையிலயே வலது புறத்தில நிலையம் விட்டு பள்ளயம் போடுங்க, இது முக்காலும் சத்தியம்" என்று விட்டு மூர்ச்சையாகி சரிந்தான். மூர்ச்சாயாகி சரிந்தவன் உடலில் ஒட்டியிருந்த ஒற்றைத் துணியும், கருப்பனின் வெப்பத்தாலும், ஆங்காரத்தாலும், நூல் நூலாக  இற்று போயிருந்தது. வேறு  துணியை போர்த்தி அவனை எழுப்பிவிட்டார்கள். கருப்பன் உத்தரவு விவரம் அறிந்து வந்த சேதுபதி  மன்னன் அவர்கள் குடியேற இடமும் கொடுத்து,  இறையிலியாக நிலமும் கொடுத்து சாசனம் எழுதினார். இவ்வாறாக தொண்டிக்கரையில் ஒரு அக்ரஹாரம் உருவாகியது.

தொண்டிகரையில் அரசன் கொடுத்த நிலத்தை உரியவர்களை வைத்து திருத்தி,  நெல்லும், பயிரும் விளைவித்து வாழ்ந்து வந்தார்கள். ஆகாசக் கருப்பனுக்கு தலைக்கு செங்கச்சையும், இடுப்புக்கு கருங்கச்சையும், வாளும், வேல்கம்பும், வீச்சரிவாளும் சார்த்தி, பதினாறு வகை பக்ஷணத்தோடும், பழவகைகளோடு, பொங்கலும் வைத்து பெரும்படையல் இட்டார்கள். மாசி களரிக்கு ஒவ்வொரு ஆண்டும். அப்படி வாழ்ந்து வந்த காலத்தில், ஒரு முறை பாண்டிய நாடு முழுதும் பெயர் அறியாத கொள்ளை நோய் ஒன்று வந்து சிறு பிள்ளைகள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். நின்ற பிள்ளை நிலத்தில் விழுந்து மாள, இடுப்பில் இருந்த பிள்ளை இருந்தபடியே மூச்சை விட்டது. ஒரு மருந்துக்கும் ஒரு சொல்லுக்கும் அடங்காத பெரும் நோயால் தொண்டி பட்டணமே கதிகலங்கியது. இனியும் சின்னாள் போனால், மொத்த ஊரும் குடியும் படையும் இழந்து போகும் என்ற நிலையில், எல்லோரும்  கூடி ஆகாச கருப்பனின் ஆலயத்தில், நிறைந்த அமாவாசை இரவொன்றில், நடு ஜாமப் பூஜை கொடுத்து, பம்பையும் உடுக்கையும் வைத்து    நையாண்டி கொட்டி, என்னவென கேட்க, அழுதபடி அரற்றியபடி வந்த கருப்பன்,  "காக்க வழியில்லாம கலங்கி நிக்கேனே என் மக்கா, பூத்து முழுக்காத மொட்டெல்லாம் உதிருதே, கருவறை விட்டுவந்த பிஞ்செல்லாம் காயாகாம கருகுதே" என்று அழுது புலம்பியபடி தன் அங்கம்மெல்லாம் புண்ணாக வலக்கரத்து சாட்டையாலும், இடக்கரத்து சங்கிலியாலும் மாறி மாறி வீசிக்கொண்டான். யாராலும் அருகிலனைய முடியவில்லை. மூத்த அம்மைகள் இரண்டு பேர் பதறி கூட்டத்தை விலக்கிக் கொண்டு அருகில் போக, அவர்கள் மேல் படுமோ என்று சற்று தயங்கி, ஓங்கிய சாட்டையையும் சங்கிலியையும்  நிலத்தில் விட்டான் கருப்பன். அந்த இடைவெளியில் நுழைந்த நான்கு பேர் கருப்பனை சேர்த்து அழுத்தி பிடித்து கொண்டு  'நீ ஆனையய்யா சாமி, உன் குதிரை பச்சக்குழைந்தயில்ல, ஆசானமா ஆடணும்,  கெதி கலங்கி நிக்கையில வழி காட்டாமா இது என்ன" என்று  அதட்டலும் மன்றாடலுமாக அடக்கினார்கள் கருப்பனை.

"தெற்க இரண்டு சாம தூரத்துல பதினோரு ருத்திரன்மார் சன்னாசிகளா வந்து நிக்காக. சேதுக்கரையில ஜல சமாதியாகப் போறவுக, முக்காலமும் அறிஞ்சவக, அவுக தான் ஒரே வழி. உடனே போய் அவுகளக் கூட்டிவாங்க. அவர்கள் கேட்டபடி படையல் வச்சு, சிவன் பேரைச் சொல்லி அவுகளைக் கும்பிட்டு கூட்டிட்டு வரணும். முன்னாடி நான் போறேன், நீங்களும் வாங்க" என்றபடி கருப்பன் விலகினான்.

உலகே ஓய்ந்து கிடந்த நள்ளிரவில்,  தொண்டிக்கரையே திரண்டு, இடுப்பு பிள்ளைகளையும் சுமந்துகொண்டு,  நிறைசூலியா நின்றவர்களையும் கூட்டிக் கொண்டு, அடி எடுத்து வைக்க முடிந்த அத்தனைபேரும் சன்னாசிகளை  தேடிப் தெற்கு நோக்கி போனார்கள், முன்னும் பின்னும் இரண்டு பந்தங்களும், வானத்தில் கண் கொட்டும்  நட்சத்திரங்கள் தவிர வேற எந்த ஒளியும் இல்லை.  இரண்டு சாமம் நடந்த போது,  பழம் மண்டபம் ஒன்றில், தூணில் கட்டிய பந்த வெளிச்சத்தில்,  ஏழு வயதில் ஒரு வடுகனில் இருந்து, இளந்தாரியும், திரண்ட ஜடையை முடியாக கட்டி சாம்பல் பூசி முற்றாய் முழுத்து திகம்பரனாய் நின்ற பழுத்த சாமியார் வரை என பதினோரு ருத்திரன்மாரைக் கண்டார்கள். வெவ்வேறு தேசத்துக்காரர்கள். ஒருவர் போல ஒருவர் இல்லை. ஒரே வயதுடைய இருவர் இல்லை.  மஞ்சள் முகமும் சிற்றுருவமும் என ஒருவர் ,  கருங்காலி கட்டை போல ஒருவர், செவ்வந்தி பூ நிறத்தில் ஒருவர், தும்பை நிறத்தில்  ஒருவர், முழுக்க உடலைச் சாம்பலில் மூடியவர் ஒருவர்,  மாம்  பூ  நிறத்தில் ஒருவர், குங்கமத்தில் சிவந்த ஒருவர்.  சிலர் கண்கள் சிவமூலிகையால்  சிவந்திருந்தன.

பதினோரு பேர்களில் கமண்டலமும், தோல் கோமணமும், தண்டமுமாக  இருவர்,  வடுகனோடு சேர்த்து ஆடை இல்லாமல் இருவர். ஜடை முடி கற்றையாக உடலில் கிடக்க, மண்டையோட்டு மாலையோடு ஒருவர், காசாயம்  கட்டி, நெஞ்சு வரை நீண்ட தாடியும். பிரிப் பிரியாக சடை பிடித்த கூந்ததலுமாக சிலர். அவர்கள் பார்வையும் கூர்மையம் எதிர்த்து வரும் எவரையும் உடல் கூச வைக்கும்.  பித்தேறிய செந்நாயும்  கருநாயும் கூட வாலை  சுழற்றி கவைக்குள் வைத்து ஆசன வாய் மறைத்து ஒடுங்கும்,  கருடன் அஞ்சி வலமாகப் போகும், மற்ற பறவைகள் எல்லாம் குரலொடுக்கி கூடடையும். சிறு பிள்ளைகள் அன்னை மடியில் புதையும், கருவில் குழந்தைகள் மலர்ந்து சிரிக்கும். அன்னையை  கட்டியணைக்க வரும் சிறு பிள்ளை போல குறி ஆட முன்னாள் ஓடி வந்த வடுகன்,  இரு கால்களையும் ஊன்றி நின்றுகொண்டு இடது கையில் பிடித்திருந்த சிறு தண்டத்தை நீட்டி "என்ன" என்றான். பிஞ்சு பாதம் தான் என்றாலும் வைத்த அடி ஒவ்வொன்றும் யானையினுடையது. குழறல் மொழி தான் என்றாலும் கர்ஜனை, சிங்கத்தினுடையது. அவனை எதிர்கொள்ள ஒருவருக்கும் திராணியில்லை. அனைவரும் உடல் உறைந்து போய் நின்றனர். கிழக்கில் இருந்து வந்த குளிர் காற்றில் அவர்கள் உடலில் பூத்திருந்த வியர்வையும் குளிர்ந்து சில்லிட்டது.

நிறைமாத சூலி ஒருத்தி முன்னேறி வந்து "என் தலைச்சன் பிள்ளையை சுமந்து நிக்கேன், மடி நிறைச்சு பாலூட்டுவேனானு தெரியல, கண்ணறியாத நோய் ஒன்னு எங்க பிள்ளைகளை  எல்லாம் கொல்லுது, என்னையும்  என் பிள்ளையும் ஏத்துக்கிட்டு இந்த ஊரக்காப்பாத்துங்க" என்றாள். 

பழுத்த வாழ்வரசி ஒருத்தி முன் வந்து "ஆண்டதும் அழிஞ்சதும் பார்த்துட்டேன் சாமி, நான் நிக்க என் கொடியில பூத்த பூவும், காயும், பிஞ்சும் எல்லாம் கருகுது என்னை கொண்டு இந்த தொண்டிக்கரைய நீங்க தான் காக்கணும்" என்றாள் 

புதுசா புடவை கட்டினவ ஒருத்தி மூன்றாவதாக வந்து "பூத்து 16 நாள் கழிஞ்சாச்சு, என் புருஷன் மனை இன்னும் போகல, என் மாமி வீட்டு சீருணவும் உண்கல, என் உசுரையும் எடுத்துக்கோங்க" என்றாள்   

வடுகன் தண்டம் தாழ்த்தி, வலது கை உயர்த்தி, மூவரையும் ஒன்றே போல் வாழ்த்தி "உங்கள் வம்சம் தழைக்கட்டும்" என்று விட்டு. "ஊருக்குள் நாங்கள்  வருவதில்லை, புறத்தில் உங்க  குல தெய்வக்கோட்டைக்கு அழைத்து  செல்லுங்கள், வருகிறோம்" என்றான்.  பதினோரு சன்னாசிகளும் தொண்டி பட்டணம் நோக்கி சென்று கருப்பன் கோட்டையை அடைந்தனர். 

அன்னை என ஆனவள் தன்னையே பலி வைக்க மாட்டாள் தன் பிள்ளைக்கு தான் வேண்டும் என்று. தன்னையே  வைக்கும் போதும் தன் பிள்ளையை பலி வைக்க மாட்டாள் ஒருநாளும். அவள் தியாகம் கண்டு மகிழ்ந்த, மூத்த சன்னாசி ஒருவர், நிறைமாத சூலியின் கணவன் சுப்பிரமணிய ஐயனை அழைத்து அவனுக்கு மந்திரமும் நீறும் கொடுத்து வைத்தியமும் ரகசியமாக சொல்லி வைத்தார். அந்த முறை கொண்டு சுப்பிரமணிய ஐயன் கொள்ளை நோய்க்கு வைத்தியம் செய்ய, அந்த பெயர் அறியா கொடுநோய் தொண்டிக்கரையை விட்டு ஓடியது. மூன்று இரவுகள் மட்டும் அங்கு தங்கிய சன்னாசிகள் நாலாம் பகலில் விடை பெற்றனர். அவர்கள் அடுத்தவர் சமைத்ததை உண்ணாதவர்கள். அவர்கள் உணவுக்கு வேண்டி நார் உரியாத தேங்காய்களையும்,  நனையாத பச்சரிசியையும்,  அதோடு கூட முழு மண்டை வெல்லத்தையும் படைத்தனர் ஊர் மக்கள். நாலாம்  நாள் விடை கேட்டு நிற்கையில் ஆணும் பெண்ணும் அழுது பெருக்கி உடன் இருக்க சொல்லி வற்புறுத்தினர். அதற்கு சன்னாசிகள் "இந்த உலகத்தில எங்க  கடைசி கடனும் தீர்ந்தது, நாங்கள் சேதுக்கரையில் உடலை விடணுங்கிறது விதி. எங்க அடையாளமா கமண்டலத்தையும், தண்டங்ககளையும் விட்டுட்டு போறோம், உங்க கருப்பன் பந்தில எங்களுக்கும் பீடம் கொடுத்து சமைக்காத பொருளை மட்டும் படையலா வச்சு கும்பிட்டுட்டு வாங்க, எங்க ஆன்ம சொரூபம்  உங்களுக்கும்  வம்சத்துக்கும் காவலும் ஆசிர்வாதமுமா நிக்கும்" என்று விடை வாங்கி தெற்கே சேதுக்கரை நோக்கி சென்றனர். ஊர் அவர்களை அதன் பிறகு திரும்ப கண்டதே இல்லை. 

சன்னாசிகள் கொடுத்த மந்திரம், உரு ஏற  உரு ஏற சுப்பிரமணிய ஐயனுக்கு 11 ஆண்டுகளில் 11 படியாக சித்தி ஆனது.  ஒன்றாம் ஆண்டில்  வாத கபம் பித்தம் என்னும் மூன்று தோஷங்களாலும்,  ரசம்,  ரத்தம், மாம்சம், மேதை, அஸ்தி, மஜ்ஜை, சுக்கிலம் என்னும் ஏழு தாதுக்களாலும், மூத்திரம், மலம் மற்றும் வியர்வை என்னும் மூன்று மலங்களாலும் மற்றும் உடலின் இயங்கு சக்தியான அக்கினியாலும் ஆன உடலை அறிந்து கொண்டான்.  இரண்டாம் ஆண்டில் நிலம், நீர், காற்று, நெருப்பு, வெளி என்னும் ஐவகை பூதங்களும் அவ்வவற்றுக்கான பங்குகளில் சரியாக கலந்தும் ஒடுங்கியும் உண்டாவதே உடல் என்று அறிந்து கொண்டான். மூன்றாம் ஆண்டில் மனதையும், புத்தியையும் அறிந்தவன் ஆனான். நான்காம் ஆண்டில் எது உணவென்றும், எது உணவாகாது என்றும் அறிந்துகொண்டான்  ஐந்தாம் ஆண்டில் உடலின் கூறுகளில் உள்ள சம நிலைக்குலைவே நோய் என்று கண்டு கொண்டான். நோய்க்குறியை கண்டடைபவன் ஆனான். ஆறாம் ஆண்டில் ஜோதிடம் கைவந்தது. ஏழாம் ஆண்டில் மருத்துவ நூல்களும், ஓலைகளும், சித்தர் பாடல்களும் எல்லாம் தானாக அவனை வந்தடைந்தன. ஞானிகளும், சித்தர்களும் அவனைத் தேடி வந்து அவனுக்கு அருளினர். எட்டாம் ஆண்டில், தாவரங்கள், வேர்கள், பாசாண வகைகள், புலால் முதலாக பலவற்றில் இருந்தும்  பெறும் அத்தனை மருந்து பொருள்களையும் அறிந்தான். அதன் சாத்தியங்களையும் வீர்யங்களையும் அறிந்துகொண்டான். ஒன்பதாம் ஆண்டில் சோதனம், சமணம், பத்யம்,  நிதன பரிவர்ஜனம்,  சத்வவஜாயம், ரசாயணயம் முதலான ஏழு வழிகளில் நோய் போக்கும் முறைகளை அறிந்துகொண்டான். நோய்குறி தெளிந்து,  உரிய மருந்து கொடுப்பதற்கான அறிவும் சமயோஜிதமும் நுண்மையானது. பலிதம் கைவந்தது, பேர் பெற்ற வைத்தியன் ஆனான். பத்தாம் ஆண்டில் ஆத்மனை  உள் உணர்ந்தான் அவனையே கண்டு கொண்டான். பதினோராம் ஆண்டில் உடலின் மரணத்தையும் அதன் முன்னான கையறு  நிலையையும், மரணமின்மையையும் ஒன்றே போல் உணர்ந்தான். 

முன்னர்  மூத்த சன்னாசி மந்திரத்தை கொடுத்த சமயத்தில் , "இந்த மந்திரம் முற்றிலும் பலிக்கும் போது  வடுகன் உன்முன் வருவான்" என்று அருளியிருந்தார். பதினோரு ஆண்டுகள் கடக்கும் தருவாயில் வடுகனைக்கண்டான் சுப்பிரமணிய ஐயன். கரு நாய் பின் நிற்க, தலை முடியெல்லாம் பிரபா வளையமாக,  பத்துக்கைகளில் வலப்புறத்தில்  சூலம், சக்கரம், கதை, வாளொடு, மழுவும் ஏந்தி இடக்கரங்களில் கப்பரை, சங்கு, உடுக்கை, கபாலம், பாசமும் ஏந்தி, முகம் கொள்ளா சிரிப்பும், சிறு மணியாக குறியும்,  பாம்பொன்று அரைஞாண் ஆக, கால்களில் வீரக்கழலும், தலையில் கங்கையும், தாராச்சந்திரனும், நுதல்விழியும், நெருப்பில் எலும்பு உருகும் வாசனையுமாக வந்தான் வடுகன். அதற்கு பின் அந்த மந்திரம் வெறும் சொல்லானது, அதைச் சுருட்டி அவன் ஆழத்தில் வீசிவிட்டு சன்னாசிகளையும், ஆகாச கருப்பனையும் முழுதாக சரணடைந்தான்.  அவன் செய்ய அதுவே எஞ்சியிருந்தது.

"செண்பக பூவிரிஞ்சா, காடுகொள்ளாதோன்னோ? ஒருத்தர் சொல்லி ஒருத்தர்னு சுப்பிரமணிய ஐயன் புகழ் நாலாபுறமும் பரவி, தொண்டி கரை தாண்டியும் பல தேசத்திலே இருந்தும் வைத்தியத்துக்கும், பார்வை பார்க்கிறதுக்கும் பல பேரும் வர ஆரமிச்சா. தலைமுறை தலைமுறையா அது தொடர்ந்துடுத்து. அவா  வம்சத்துக்காரா எல்லாம் முகக்குறி கண்டு நோய்க்குறி சொலறவாளாய்ட்டா. அவா சொல்லே மந்திரம், கொடுக்கிறதே ஒளஷதம்னு ஆயிடுத்து. ஆனேகுந்தியிலே  இருந்து வந்தவா, அதனால  'ஆனேகுந்தி  வைத்தியர் வீடு'னு இருந்தது, காலப்போக்கில  உள்ளூர் மனுஷாளால  'ஆனமந்தியார் வைத்திய சாலை'னு மாற அதுவே பேரா நிலைச்சிடுத்து. அவாளும்  ஆத்துல குழந்த பிறந்து ஜாதகம் குறிக்கையில மட்டும்தான்  ஆனேகுந்தி சர்மா சுப்பிரமணியன்னோ ராமய்யன்னோ போட்டுக்கிறா, வெளிய ஆனமந்தியார்னு தான் சொல்லிக்கிறா பெருமையா"  என்று ராமசுப்பையார் கதையை சொல்லி முடித்த போது, வெயில் மெல்ல சரியத் துவங்கியது. அதுவரையும் ஒருவரிடமும் ஒரு அணக்கமும் இல்லை, யாரும் இடைமறிக்கவும் இல்லை.

 

கருத்துகள்

  1. சரளமான நடை. மந்திரமும்,அயுர்வேதமும்,,இணையும் தருணம். பிரமாதம்

    பதிலளிநீக்கு
  2. சிவ தரிசனம்..
    ஹர ஹர மஹாதேவா🙏🏾
    உள்ளத்தை தைக்கும் எழுத்து 👏🏾👏🏾👏🏾

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமை. பலமுறை படித்துவிட்டேன். நீங்கள் அறிந்த எல்லாவற்றையும் பதிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் 🙏🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐயன் பந்தி - 17

ஐயன் பந்தி - 16

ஐயன் பந்தி - 19