ஐயன் பந்தி - 2
பந்தி வரிசை - 2
தாத்தா சொன்னார் "மழையில ஒவ்வொரு துளியும் மழையே தான, துளித்துளியா விழாம மொத்தமா விழுந்தா நம்மால தாங்க முடியுமா? அதனாலதான் துளி துளியா விழுது. ஒரு துளி வயல்ல விழுது, ஒரு துளி சாக்கடைல விழுது, விழாம அந்தரத்தில் நிக்கிற வரை எந்த துளிக்காவது வித்தியாசம் இருக்கா ? இது எல்லாம ஒன்னா வானத்தில மேகமா நின்னுச்சே அதுக்கும் இந்த துளிக்கும் என்ன வித்தியாசம்? அது மாதிரி இந்த தெய்வங்கள்ல சிலது மண்ணில முளைச்சு மேல வந்தது, சிலது வானத்துல முளைச்சு கீழ வந்தது, அந்தரத்தில் நின்னுட்டு இருக்குதுக. அது அத்தனையும் அந்த ஆதி மூலத்தோட ஒரு துளி தான், அந்த ஆதி மூலந்தான் நமக்காக துளித்துளியா பெய்து". பாட்டி மாடத்தில் விளக்கிட்டிருந்தாள், திண்ணையில் மஞ்சள் ஒளி பரவியிருந்தது. தாத்தாவுக்கு துணையாளாக மடி மடித்துக்கொண்டிருந்தேன். நான்கு துண்டு சேர்ந்தது ஒரு மடி. எப்போதும் போல லாவகமாக இரு எதிர் எதிர் முனைகளை இழுத்தும், பின் குறுக்கே கஜக்கோலை விட்டு இரண்டாக மடித்து, ஓரத்தில் பிசிறு தட்டாமல் இருக்க, உள் தட்டை சரியாக ஒரு விரற்கடை அளவு உள்ளே ஒதுக்கி வைத்து கச்சிதமாக, இரண்டாக மடித்து, பின் நாலாக மடித்தார். ஒரு மடியை இப்புறமாக ஒரு மடியை மறு புறம் என்று மாற்றி மாற்றி வைத்துக்கட்டினார். கட்டிவிட்டு மேலே இரண்டே தட்டு தட்டினால், அது 'மீனாக்ஷி' என்று கேட்குமோ என்னவோ, பாட்டி சரியாக வந்து மடிகளை எடுத்துக்கொண்டு போய் அரங்கு வீட்டில் வைத்துவிட்டு வருவாள். வந்து கால் நீட்டி அமர்ந்து வெற்றிலை உரலை இடிக்கத்துவங்கினாள் என்றால், அதன் பிறகு வாய்கொள்ளா சிரிப்பும் பேச்சும் தான். திண்ணை நிறைய தெருவாட்கள் எல்லாம் கூடி விடுவார்கள். அவர்கள் வரும் வரை தாத்தா பல விசயங்களை கண் இடுக்கி என் முகத்தைப் பார்த்தபடி சொல்லிக் கொண்டிருப்பார். கண் அங்கிங்கு நகராமல் கவனமாக கேட்க வேண்டும். மற்றவர்கள் வந்துவிட்டால் அவற்றையெல்லாம் பேசமாட்டார். யாராவது வந்து விட்டால் பேச்சு அப்படியே நின்றுபோகும். விட்ட இடத்தில் இருந்து இன்னொரு நாள் துவங்குவார்.
"தாத்தா, ராமசுப்பையர் அன்னைக்கு முப்பத்து முக்கோடி தேவர்கள்னு கதைல சொன்னாரே அதுல இந்த 21 பந்தியும் சேருமா"
"ஆமாம் எல்லாம் ஒன்னு தான், பண்ணெண்டு ஆதித்யர்கள், பதினோரு ருத்திரமார்கள், அஷ்டவசுக்கள் எட்டுபேர், மருத்துக்கள் இரண்டு பேர்னு முப்பத்தி மூனு பேர் தேவர்க. அதில் ஒருத்தருக்கு ஒரு கோடி படைனு முப்பத்து முக்கோடி தேவர்கனு ஒரு கணக்கு. அவுக எல்லாம் வானத்து தெய்வங்க. 21 பந்தி 63 சேனைங்கிறது இன்னொரு கணக்கு. இங்கயும் ஒரு சேனைக்கு ஒரு கோடி சேர்த்துக்கோ, அறுபத்து முக்கோடி தெய்வங்க. இந்த அறுவத்து மூனுகோடியில வானத்து தெய்வங்களும் உண்டு, பாதாளத்து தெய்வங்களும் உண்டு, தெய்வம்னு ஆனதுல என்ன பேதம்?" என்றார் தாத்தா. பாட்டி கண்கள் மினுங்க தாத்தவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தாத்தா கொஞ்சம் சுமார் தான், ஆனால் பாட்டி பின் கச்சம் வைத்து கண்டாங்கி கட்டி காலில் தண்டை இறுக நடந்தாள் என்றால் இன்றைக்கும் மகராசி தான். தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் ஒன்றும் சொல்லி அழைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவருக்கு எதாவது பேச விசயம் இருக்கும் போது, மற்றவர் அழைத்தது போல எதிரே வந்து நின்றிருப்பார்கள். எப்பொழுதாவது பாட்டி 'பெரியவரே' என்று அழைத்தாள் தாத்தா என்ன என்பது போல பார்ப்பார், வழக்கம்போல அவர்கள் என்ன பேச வேண்டுமோ அதற்குள் போய்விடுவார்கள். தாத்தாவும் எப்போதாவது 'பெரிய மனுசி' என்று அழைப்பார், அதற்கு பாட்டியின் எதிர்வினையும் அவ்வாறே.
"ஏலே சுந்தரம்" என்றார் தாத்தா அழுத்தமாக. அதற்கு இன்னும் முக்கியமான ஏதோ ஒன்றை சொல்லப்போகிறார் என்று அர்த்தம். "மனுசன் உண்டான நாளிலிருந்து, அவனுக்கு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு ஆசை, என்ன அறிஞ்சும் தீரல, இனி தெரிஞ்சு என்ன செய்யப்போறோம்னு ஓஞ்சு உட்கார்ந்தவக சில பேர். சிலரு தெரிஞ்சது எல்லாத்தையும் கலைச்சு போட்டு விதமா விதமா அடுக்கிபார்த்தாக. சில பேர் தெரிஞ்சதை எல்லாம் தொலைக்க நினைச்சாக, ஒவ்வொன்னா தொலைச்சா, தொலைக்க தொலைக்க என்ன தொலைச்சோம்ங்கிற நினைப்புதான் கூடுச்சு. நினைவும் இல்லாம இருக்கணும்னு கண்டுபிடிச்சவன ஞானிங்கிறாக. ஆத்துல தண்ணி ஓடறாப்புல அத்தனையும் விட்டு உட்கார்ந்தாக சிலபேர். கட்டி வெல்லத்தை, பாதம் மட்டும் நனைய மெதுவா ஓடுற ஓடை வெள்ளத்தில விட்டா, கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு, ஒன்னும் இல்லாம ஆயிரும்ல, அதுமாதிரி ஆனவர்களைத்தான் யோகினு சொல்லுவாக. அது தான்டா நம்ம ஐயன் அவன் முழுசா கரைஞ்சவன், காத்துவெளியெல்லாம் நிறைஞ்சவன், வேணும்னா அங்க இருந்து திரும்பவும் உருத்திரண்டு வரவும் செய்வான்."
"அப்ப மற்ற சாமிக எல்லாம்?"
"சிலர் கடைசி துளியும் கரையும் முன்னம் இங்க திரும்பி வந்தாக. வந்தவக எல்லாம் தெய்வம் தான், அவுக போன தூரத்தால. ஆனா முழுசா கறையாததால அந்தரத்தில் நின்னாக. அவங்க ஆழத்துல என்ன மிஞ்சுச்சோ, அந்த ஒத்த ஒரே குணத்தை மட்டும் சுமந்து இங்க வந்தவக. வயல்லையும், சேத்துலையும் பிரண்டு திரிஞ்சாலும், தன் குட்டிய கவ்வ வார நாய முட்டி குடலையும் குந்தாணியையும் சரிச்சிறும்ல பன்னி, அப்படி ஆத்தாளா மட்டும் வந்தவ ஒருத்தி. அத்தனையும் தொலைச்சப்பையும், அம்மைங்குற நினைப்ப தொலைக்க முடியாத தெய்வம். ஒன்னு ஞானமா, இன்னொன்னு அடங்காத சக்தியா, ஒன்னு குழந்தையா, ஒன்னு முணுக்குனு வர கோபமா, ஒன்னு நெஞ்சு கொதிக்கிற வஞ்சமா, ஒன்னு கோரமா, ஒன்னு வெறியா, ஒன்னு விளையாட்டா, ஒன்னு ஆசையானு, ஒவ்வொன்னும் தனித்தனியா வந்து சேர்ந்துச்சு."
தாத்தா தொடர்ந்தார் "மனுசன் ஆழ்மனசு ஒரு கலவை, ஒன்னு இழுக்கும், ஒன்னு பறிக்கும், பலதும் கலந்திருந்தா தான் சமநிலை. ஏதாவது ஒன்னு மட்டும் தனிச்சு நின்னா கட்டுப்பாடு இல்லாம போயிரும். சீறிப் பாயும், வேணும் வேண்டாததுனு எதுவும் இல்லாமாயிடும் . வெறியும் வீரியமும் கூடிப்போகும். பூரணத்தில் ஒரு இழை குறைஞ்சதால தழும்பும். ஆற்று வெள்ளம் அமுதம் தான், ஆனால் கரை உடைஞ்சா அதுவே உசுரை எடுக்கிற எமனாகிடும்ல. அதனால அதுக்கு கரையா அதையெல்லாம் அடக்க, சிவனுக்கும், பெருமாளுக்கும், உலகத்துக்கு எல்லாம் எது ஆதாரமா இருந்திச்சோ, அதுதான் இறங்கி வரணும். ஞான வடிவம்னு சொல்லுவாக. அதோட இரண்டு காலும் மண்ணுல படல. உலகத்துக்கு வந்ததாலையே உலக இயக்கத்துக்காக தன்னை ஆணுன்னும், தனக்குள்ள ஒடுங்கி இருக்கிற ஆசையையும், செயலையும் இரண்டு பெண் சக்தியாவும், மூனா உருவாக்கி அமைச்சது. மூனும் ஒன்னா இருந்தாலும் அது பூரணம் தான் . மூன்றும் பிரிந்து நின்னாலும் அப்போதும் பூரணம் தான். அப்படி மூனா நிக்கிறதும் நமக்காக அது இட்டுக்கிற வேஷம் தான். அதுனால ஒருத்திக்கு பூரணம்னே பேரு, இன்னொருத்தி அந்த பூரணமே பூத்து கொடியானவ அதனால பொற்கொடினு பேரு. அவுகளைத்தான் நாம ஐயனார், பூரணை, பொற்கொடினு கும்பிடறோம். அரசனும் அரசிமாருமா அரியணை எறி, அந்தரத்தில் நிக்கிற அத்தனை தெய்வங்களையும் அடக்கி ஆளுறாக மூணு பேரும். ஐயன் இறங்கி வந்தாலும் யோகிதான், அதனாலதான் யோகப் பட்டம் கட்டி இருக்காரு. அவர் மேல வச்சிருக்கிற காலுக்கு கீழ அண்ட சராசரமும், அதுல உள்ளது அத்தனையும் சூட்சுவமா விதையா அடங்கி ஒடுங்கியிருக்கு. அது தான், அவரோட ஞான ரூவத்தையும், அவர்தான் அத்தனைக்கும் உடைமையாளங்கிறதையும் காட்டுது. கீழ ஒரு கால வச்சிருக்கிறாரே அது நமக்காக இறங்கி வந்து பூமியில வச்சது. கருணையால நம்மள ஆள வந்த பாதம்.. அதை நாம பிடிச்சுக்கணும் கேட்டியா ? அந்த ஒரு பாதம் மட்டும் மண்ணில இல்லைனா இங்க ஒண்ணுமே அத அதோட இடத்தில நிக்காது, நெருப்பு தலை கீழாவும் எரியும், கடலெல்லாம் கரையைத் தாண்டிடும்" என்றார்.
"ம்ம்ம்" என்றேன் குழப்பமாக, ஒன்றுமே விளங்கவில்லை.
இடித்த பாக்கை தாத்தாவுக்கு கொடுத்துவிட்டு, பாட்டி மெல்ல சிரித்து விட்டு என்னிடம் சொன்னாள் "புரியாட்டா சும்மா கேட்டுக்கடா, தாத்தா சொல்றதை, ஒருநா விளங்கும்" என்றவள் தாத்தாவிடம் திரும்பி "எதாவது கதையை சொல்லுவீகனா என்ன செய்றீக?" என்றாள். "அவனும் உங்களை மாதிரி காடும் மேடும் அலையவா? சாமியாரு, மாயக்காரனுவ கூடனு சுத்திக்கிட்டு, உள்ள சோலியா பார்க்கீக?" என்று சடைந்து கொண்டாள். தாத்தாவுக்கு பல விதத்திலும் சேக்காளிகள் உண்டு. அவரைத்தேடி பல விதமான ஆட்களும் வருவார்கள். விசித்திரமான கொண்டையும், தோளில் உடுக்கும் தொங்க வரும் மேதாவிக்கோடங்கியும் அதில் ஒருவர். கண் எப்போதும் சிவந்திருக்கும் அவருக்கு. சில நேரம் மடவையில் சாமியார் மடத்துக்கு போனார் என்றால் தாத்தா திரும்பி வர நாலைந்து நாள் கூட ஆகும். கிழக்கே ஐயமார் தெருவில் இருந்து வரும் ராமசுப்பையர் திண்ணையில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார் தாத்தாவிடம். காஞ்சிபுரத்தில் இருந்து சாமியார்கள் வந்தாலும் தாத்தா தான் அவர்களுடன் சதுரகிரி மலை ஏறுவார். கார்த்திகைக்கு கார்த்திகை திருப்பரங்குன்றப் பயணம். அங்கும் அவருக்கு நண்பர்கள் உண்டு. ஊர் சபையிலும் தாத்தா பேச்சு தான் எடுபடும். எப்போது சபையில் பேசுவார் என்றே கண்டுபிடிக்க முடியாது, சில நேரம் பேசவே மாட்டார். ஆனால் அவர் பேசினால் அவர் சொல்லுவதற்கு ஊரே சம்மதித்து விடும். சில நேரம் பஞ்சாயத்தில் நமக்கு ஏண்டு பேசமாட்டாரா என்று மக்கள் அவர் முகத்தை முகத்தை பார்ப்பார்கள். ஆனால் அவருக்கு என ஒரு தேர்வு உண்டு, அதில் ஞாயமும் இருக்கும் அப்போது மட்டும் தான் பேசுவார். அது எப்போது என்று யாருக்கும் புரியாது. அவர் பேசிய பிறகு அது தான் சரி என்று மட்டும் புரியும்.
தாத்தா, "நாய் குட்டிய பார்த்தா தெரிஞ்சிறாதா இது வேட்டைக்கு ஆகுமா ஆகாதானு, இது சொனை உள்ள குட்டித்தா, பெரியாளா வரும்" என்று என் தோளில் வலது கையை வைத்து எழுந்து, மேலே மோட்டு வளையில, தூக்கணாம் குருவிக்கூடு போல மூங்கில் பிளாச்சில் அவரே கட்டிய கூடைக்குள் மண்கலையத்தில் இருந்து சுண்ணாம்பை எடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து ஆச்சியிடம் நீட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டார்.
"தாத்தா, நீங்க அன்னைக்கு ஐயன சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மகன்னு சொன்னீக, இப்ப யோகிங்கிறீக?"
"உலகம் இன்னைக்கு இருக்கு, இது இல்லாமலும் இருந்துச்சு முன்னால, ஒன்னுமே இல்லாம இருந்தப்போ எது மிஞ்சுச்சோ அதத்தான் பிரம்மம்னு சொல்றாக. அதுக்கு ஆண் பெண்ணுங்கிற பேதம் எல்லாம் இல்ல, அது அப்படியே இருந்துச்சு. அது என்னனு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே அதுக்கும் இல்ல. சரினு ஒரு நா சிங்க குட்டி சிலுப்பினாப்பல சிலுப்பி அது எந்திச்சப்போ, அது தன்னை தான்னு தெரிஞ்சுக்குச்சு. இளங்குருத்துல, குட்டிச்சிங்கம்ல, ஒரு நிலை கொள்ளுமா, அங்க ஓடும் இங்க ஓடும், அம்மை மேல ஏறிக்குதிக்கும்ல, அது அங்கையும் இங்கையுமா குதிச்சப்போ மூனாச்சு, அத ராஜசம், தாமசம், சத்துவம்னு சொல்றாக. அந்த மூனும் பல கூறா பிரிஞ்சு, ஒன்னோட ஒன்னா கலந்து பலதும் உண்டாச்சு, அப்படி உண்டானத படைப்புனு சொல்றாக."
"எல்லாம் அந்த சிங்க குட்டியோட விளாட்டு"
"ஆமாடா, அப்படி போடு, பாத்தியாத்தா" என்று மீனாக்ஷி பாட்டியை பெருமையாக பார்த்துவிட்டு தாத்தா தொடர்ந்தார், அந்த விளாட்டத்தான் லீலைனு சொல்றாக, விளையாட்டுனா வரமுறை வேணும்ல, அதுமாதிரி இதுக்கும் உண்டு, ஆனால் இன்னதுதான்னு அளந்து சொல்ல வழியில்ல. அதுமாதிரி இந்த விளயாட்டுக்குள்ல பிரம்மம் இறங்கி வரும், அப்பப்போ அவதாரமா காரணத்தோட, சில நேரம் காரணமே இல்லாமலும் வரும். அது அதோட இஷ்டம் தான்."
"ஆங் ராமர், கிருஷ்ணர் மாதிரி"'
"ஆமாம், அதே மாதிரி தான். சாஸ்தா அவதாரமா சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மகனா வந்தாரு. ஆனால் இதெல்லாம் ஒரு கதை மாதிரி தான். ஐயனுக்கு ஆதியும் அந்தமும் இல்ல, அவன் பிறக்கிறதும் இல்ல இறக்கிறதும் இலல. ஆத்துல போற தண்ணிய செம்புலையோ குடத்திலையோ அள்ளினாத்தான நம்மால குடிக்க முடியும். இதெல்லாம் நமக்கு புரியுறாப்புல அவனுக்கு நாம போட்டுக்கிற அடையாளம், அவ்வளவு தான். பிரம்மத்திலே ஒடுங்கினவுக எல்லாம் யோகி தான். நூல் தான சேலையாச்சு, சேலை நூலாவும் ஆகும். அப்ப நூலா இருந்ததும் சேலையா இருந்ததும் ஒன்னு தான. அதையே மாத்தி போட்டுக்க, முதல்ல புடவை மாதிரி ஒன்னா இருந்தது இழை இழையா பிரியிறதும், பின்ன இழையெல்லாம் சேர்ந்து ஒண்ணாவுறதும் எல்லாம் அதோட விளையாட்டு"
மேல வீட்டு பெரிய தாத்தாவும், தெற்கு தெருவில் இருந்து மாயாண்டி தாத்தாவும் ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள். இனி அரைக்கவுளி வெற்றிலையும், காலரைக்கால் படி களிப்பாக்கும் கண்ட இடம் காணாமற் போய்விடும். மாயாண்டி பெருசு ஒவ்வொருமுறை வெற்றிலை இடும் போதும் ஒரு துண்டு வெல்லத்தையும் சேர்த்துக் கொள்வார். ஆச்சி "மாயாண்டி வாரான்" என்று விட்டு உள்ளே அடுக்கு பானையில் வெல்லம் எடுக்க சென்றாள். ஒரு வாயிற்கு தக்கபடி சிறு சிறு துண்டுகளாக வெல்லத்தை தட்டி துண்டாக்கி வைத்திருப்பாள். மாயாண்டி தாத்தா, பாட்டிக்கு தம்பி முறை. "பச்சப்பிள்ளைக்கு மருந்து கொடுக்கிறமாதிரி, இந்த மாயாண்டி பையலுக்கு வெல்லம் வேணும் வெத்தலை போட" என்று சலித்துக் கொள்வாள். மாயாண்டி தாத்தா நன்றாக பாடுவார். சில நேரம் ஏதாவது பாரதக் கதையை சொல்லி பாட்டும் பாடிக்காட்டுவார். பின்னால் கட்டிய குடுமியும், கருத்த முகமுமாக தாத்தா அழகர். காதில் கெம்புக்கல் கடுக்கன் கிடக்கும். வெற்றிலை கரையேறிய பல் என்றாலும் அத்தனை சீராக இருக்கும். அவரைக் கட்டிக்கொள்ள நான் நீ என பல பேர் போட்டியாம் அந்தக்காலத்தில். முத்தம்மா பாட்டி முறை காரி தான் மாயாண்டி தாத்தவுக்கு, ஆனால் அவுக ஐயா ஏனோ மாயாண்டி தாத்தாவுக்கு பெண்கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். எல்லோரும் திருச்செந்தூருக்கு மாசி மகத்துக்கு போன இடத்தில் முத்தம்மா பாட்டிக்கு யாருக்கும் தெரியாமல் திருப்பூட்டி வில்லு வண்டியில் புதுப்பெண்ணை ஏற்றிக்கொண்டு மற்றவர்களுக்கு ஒரு சின்னப்பயலிடம் தகவலும் சொல்லி அனுப்பி விட்டு ஊருக்கு வந்துவிட்டார். மாயாண்டியை ஜெயிக்க யாரால் முடியும் என்று மற்றவர்கள் திருவிழா முடிந்துதான் திரும்பினார்கள். முத்தம்மா பாட்டியின் ஐயாவுக்கு மட்டும் தான் சடவு. முத்தம்மா பாட்டி செக்கசெவேல் என்று சிந்தாமணி சீனிக்கிழங்கை போல இருப்பாள், 'பாப்பாத்தி' என்று பட்டப்பெயரும் உண்டு. மாயாண்டி தாத்தாவும், முத்தம்மா பாட்டியும் இப்போது சேர்ந்து வந்தாலும், கோவிந்தன் தாத்தா "வைகுண்டத்தில இருந்து வாராப்புல இருக்கு" என்று கேலியாக சொல்லுவார், கருப்பும் சிவப்புமாக வருவதை. மீனாக்ஷி பாட்டி "சும்மா இருங்க கண் படும்" என்பாள். அதற்கு தாத்தா "ஆமா, உன் தம்பி இன்னும் இளந்தாரி, கண்ணு வேற படுது, போ" என்பார்.
***
பேச்சு மட்டும் அல்ல, தாத்தாவின் செயல்களும் விசித்திரமானவை தான். மடவையில் 100 குழி நிலம் உண்டு தாத்தாவுக்கு. பெரியகுளம் கண்மாய் பாசனத்தில். ஒரு போகம் நெல் பொய்க்காது. இரண்டாம் போகம் தட்டையோ, உளுந்தோ வரும். நெல்லறுத்து கூலி கொடுத்து நெல்லைக்கொண்டு வர சண்முகம் பெரியப்பா தான் போக்கும் வரவுமாக இருந்தார். இந்த முறை நல்ல மழை, காலம் கெட்ட நேரத்தில், கார்த்திகை கரிக் கண்டும் மழை விடவில்லை. கண்மாய் பெருகி, கரை உடைந்து பால் பிடித்த பயிரெல்லாம் வெள்ளத்தில் அழுகியது. ஒன்றுக்கு கால்பங்கு தான் அறுத்து களம் வந்தது.
"சம்முவம், கூலிய சரியா அளந்து போட்டுட்டு வா, உங்க கருப்பையா மாமன், மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்னு வந்தான், வேண்டிய நெல்லை வாங்கிக்கோடானு சொல்லி அனுப்பிச்சேன் , அவனுக்கும் கேட்டு கொடுத்துட்டு வா. வேற யாருக்கு எல்லாம் அளக்கணுமோ அளந்துட்டு மிச்சத்தை கொண்டு வந்தா போதும்" என்றார் கோவிந்தன் தாத்தா .
அப்பா இதைத்தான் சொல்வார் என்று அறிந்தவராக பெரியப்பா, "சரிங்கய்யா, நம்ம வீட்லயும் வள்ளிக்கு கல்யாணம் பேசியிருக்கு" என்றார் தயங்கிய படி
"இருக்கட்டும் டா, அது ஐயன் விட்ட வழி, நம்ம வாக்க நம்பி கடனை வாங்கி வச்சிருப்பாக, திருப்பூட்ட நாள் குறிச்சிருப்பாக, இன்னைக்கு இல்லைனு சொன்னா அலமோதுவாக"
"மழையும், வெள்ளமும் வந்தா நாம என்ன செய்றது" என்றார் சற்று எரிச்சலாக பெரியப்பா
"அது கொடுக்கேன்னு சொல்லும் முன்ன தெரியல, சரினு சொல்லிட்டேன். என்ன செய்ய? சும்மா கொடுக்கமோ , கடனா கொடுக்கமோ, கொடுக்கேன் சொல்லிட்டா கொடுத்திறணும். ஒரு வாட்டி வாக்கு மாறிட்டம்னா, அடுத்து எதையும் மாத்தலாம்னு தோணும். எல்லாமே வாக்கு தானடா? சிலத உரக்க சொல்றோம், சிலது மனசுல நினைப்பா உரைச்சிருது."
"மாமாதான சொன்னா புரிஞ்சுக்குவாரு" என்றார் பெரியாப்பா .
"கருப்பையாவும் அதையேதான் தான நினைப்பான், மச்சான் எப்படியும் கொடுத்துவிடுவாருனு. பெண்ணா வாரவள தாலி கட்டி கூட்டி வாரப்பையாவது ஊரறிய சாட்சி வச்சு கூட்டிவாறோம். பிள்ள பிறந்து கைல தூக்கிறோமே, அப்ப உன்ன வளக்க வானத்தையும் வில்லா வளப்பேன்னு தோணுது, ஏறாத மலையும் ஏறுவேன்னு தோணுது, அதுவும் வாக்கு தான, மனசுக்குள்ள கொடுத்துக்கிறோம். சேக்காளிக கூட கூடுறதும், ஆடுறதும் கூட அப்பிடித்தான், எல்லா உறவும் ஒரு வாக்கு தான்யா. சில வாக்கு நாம கொடுக்கிறது, சில வாக்கு பிறப்பால, பிறந்த இடத்தால வாரது, பிறவிக்கடன். இந்த வாக்கு எல்லாம் அடிக்கி வைச்ச செங்கல் மாதிரி. எது மேல இருக்கு, எது கீழ இருக்குனு தெரியாது. மேக்கல்ல உருவி எறியலாம். உருவி எரிஞ்ச கை ஒரு நா அடிக்கல்ல உருவிடுச்சுனா, மொத்தமும் சரிஞ்சுடும். சரிச்சும் அடிக்கியும் விளையாடிக்கிட்டே இருக்காக எல்லாரும்" என்றார்
"சரி" என ஒற்றை வாக்கில் பதில் சொல்லிவிட்டு சண்முகம் பெரியப்பா போய்விட்டார்.
நெல் அறுவடையாகி ஒற்றை மாட்டு வண்டியில் வந்தது, ஒரு வண்டிக்கும் குறை வண்டி. முதல் நெல்லை கதிரோடு சுற்றி, கன்னி மூலையில் கட்டிவைத்தார்கள் ஐயனார் பெயரைச் சொல்லி. கொல்லங்கொண்டான் கோவிலுக்காக. வந்த நாலாம் நாள், மடவையில இருந்து சாமியார்கள் வந்தார்கள். அறுவடையானால் எங்கள் நான்கு வீடுகளிலும் வருடத்துக்கு ஆளுக்கு 27 மரக்கால் நெல் மடத்துக்கு கொடுக்க வேண்டும் என்பது கடமை. அதை மட்டும் எப்போதும் அவர்கள் வீட்டில் வந்து தான் வாங்கிச்செல்வார்கள். மடத்துக்கு வீட்டில் அளந்து கொடுக்க வேண்டும் என்று வழக்கம் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
"ஏல கோவிந்தா, அடுத்தாண்டு போகத்துல வாங்கிக்கிறேன், இதெல்லாம் என்ன எழுத்தா? சாசனமா?" என்றார் பெரிய சாமி. சாமிக்கு உள்ள விவரம் எல்லாம் தெரியுமே. மடத்துக்கு போகும் நெல் சாமிகளுக்கு மட்டும் அல்லாமல், வழி போக்கர்கள் வந்தாலும், வேறு சாமியார்கள் வந்து தங்கினாலும், அவர்கள் உணவுக்கும், மடத்து மராமத்துக்கும். மடமே தாத்தாவின் ஐயா கொடுத்த 10 குழி நிலத்தில் தான் இருக்கிறது. வெள்ளைச் சாமியார் மடம் என்று பெயர். காஞ்சி புரத்தில் இருந்து, வந்த சாமிகளில் ஒருவர் இங்கேயே தாத்தா நிலத்தில் நின்ற ஒற்றை மரத்தடியில் தங்கி விட்டார், மரத்தடிச் சாமி என்றும் சொல்வார்கள் சமாதியும் ஆனார். அவர் நினைவாக மேலவீட்டு தாத்தாவுக்கு குருசாமி என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.
"இல்ல சாமி, உள்ளத அளக்கேன், வேண்டாம்னு சொல்லாம வாங்கிக்கணும், நான் கொடுக்காம விட்டதால, யாராவது ஒருத்தருக்கு, நீங்க அன்னம் இல்லனு சொல்ல வேண்டி வந்தாலும், அது ஏழு தல முறைக்கும் எனக்கு பாவமா வந்து சேரும்" என்றார் தாத்தா.
சண்முகம் பெரியப்பா தான் கூடத்தில் நெல்லை அளந்து கொட்டினார், இருபத்தோரு மரக்காலானது , இருபத்திரண்டும், இருபத்தி மூன்றும் அளந்து கொட்டிக்கொண்டிருந்தார் பெரியப்பா. இனி குறை மரக்கால் தான் வரும். தாத்தா வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார்.
"போதும் கோவிந்தா" என்றார் சாமி.
இருப்பத்தி நான்காம் மரக்கால் அளக்கும் முன்னே, விதைக்கு பாடம் செய்து வைத்திருந்த நெல்லை எடுத்து கூடையோடு கொட்டினாள் மீனாட்சி பாட்டி. இருபத்தி ஏழு மரக்காலும் அளந்த பிறகு, தாத்தா எழுந்து பாட்டியோடு சேர்ந்து விழுந்து கும்பிட்டு, "சாமிக, காணிக்கைய ஏத்துக்கணும்" என்றார். சாமியார் குவிந்திருந்த நெல்லில் இருந்து ஒரு பிடி அள்ளி கூடைக்கும், ஒரு பிடி அள்ளி மரக்காலுக்கும் போட்டு, பாட்டியை மடி விரிக்கச் சொல்லி, மூன்று முறை இரு கைநிறைய அள்ளி "உன் குலதெய்வத்துக்கு, உனக்கு, உன் வம்சத்துக்கு" என்று போட்டார். வண்டி கட்டி அளந்த நெல்லைக்கொண்டு போய் மடத்தில் சேர்த்துவிட்டு வந்தார் பெரியப்பா.
தாத்தா அப்படித்தான், அவர் யோசிக்கிற விதமே புரியாது. ஒரு நாள் விளக்கு வைத்து இரண்டு ஜாமத்துக்கும் மேல் ஆகியிருக்கும் வாசலில் அமர்ந்து தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள் மீனாக்ஷி பாட்டி.
"என்ன ஆச்சி" என்றேன்
"உங்க தாத்தா எங்க போனாலும் சொல்லிட்டு தான் போவாரு, இன்னைக்கு ஒன்னும் சொல்லல. இடிச்ச பாக்க வாங்கி அதக்குனவரு, வெத்தலைக்கு கூட கை நீட்டாம, விருட்டுனு எந்திச்சு, மடிச்சு வச்ச புடவைல நால எடுத்துக்கிட்டு கிழக்காமா ஓடுனாரு. இன்னும் வரல. விளக்கு வச்சதும் போனவரு" என்றாள்
நன்றாக இருட்டி நடுச்சாமம் ஆகும் போது தான் தாத்தா வந்தார்.
"எங்க போனிக" என்றாள் பாட்டி
"காலையில பிள்ளமார் தெருவில இருந்து, சுப்பையா பிள்ளை மக பேச்சியம்மா வந்தா"
"ஆமாம் நீங்க தறியில இருந்தப்ப வந்தா" என்றாள் பாட்டி. பாட்டி செம்பு நிறைய தண்ணீர் எடுத்து வைத்திருந்தாள் தாத்தாவுக்காக, அதை மட மடவென குடித்து விட்டு சொன்னார்,
"இந்த கடைசி புடவைய அடசி, பட்ட வெட்டிக்கிட்டு இருந்தேன், இந்த பாவில நெச எல்லா புடவையும் ஏற்கனவே வித்திருச்சு" என்று கையில் இருந்ததில் ஒரு புடவையை எடுத்து பாட்டியிடம் நீட்டினார் தாத்தா. ராமர் பச்சை நிறத்து புடவைக்கு, அரக்கு நிறத்தில் கிளி புட்டா போட்டு, அரக்கும் மஞ்சளுமா தேன் கூட்டுக் கரை. புடவைய ஆசையா பாத்துச்சு , பிள்ளைக்கு பிடிச்சு போச்சு போல, மாமா, இந்த புடவை எனக்கு தான் வேணும், மாரியம்மனுக்கு முளைப்பாரி எடுக்கையில கட்டிக்கிடனு சொன்னா, நானும் புடவைய அறுத்து மடிச்சு வைக்கேன், நாளைக்கு வந்து வாங்கிக்கோனு சொல்லிட்டேன். புடவைய அறுத்ததும் அத மட்டும் தனியா மடிச்சு ஒரு நூலை அடையாளத்துக்கு சுத்தி வச்சேன். உடனேயே அறுத்து பிள்ளை கையில கொடுத்துவிட்டிருக்கணும், என் தப்பு"
"அதுக்கு ஏன் கிழக்காம ஓடுனீக"
"மத்தியானம், சாத்தூர்ல இருந்து சுயம்புலிங்க யாவாரி வந்தாரு. வழக்கமா சரக்கு எடுக்க வாரவரு தான் இருபத்தஞ்சு சேலையும், பத்து முழ வேட்டி பதினஞ்சும், துண்டு இருபதும்னு, எல்லாம் சரியா கணக்கு பார்த்து காசும் கொடுத்துட்டு போனார், வண்டியில சம்முவத்தை தான் ஏத்தச் சொன்னேன் கட்டையெல்லாம். பழைய கதையெல்லாம் பேசி அவர் கிளம்பையில விளக்கு வைக்க இரண்டு சாமம் இருக்கும். திருப்பதிக்கு வடக்க என்ன என்னமோ கலவரமா? சிப்பாய்மாரெல்லாம் துரமார்கள எதுத்துச் சண்டை போட்டாகலாம். தில்லிக்கு பக்கத்துல எதோ மீரட்டாம் அங்கதான் ஆரம்பிச்சததாம், சாய்புமார்களும் இந்துக்களும் எல்லாம் சேர்ந்து ஒரே சண்டையாம். இங்க பட்டணக்கரை வரைக்கும் வந்து, திருவல்லிகேணிங்கிற ஊர்ல ஆற்காட் நவாப்பு அறமன முன்னாலையும் சாய்புமாருக எல்லாம் கூடி போராடினாகலாம். அதுக்கு பிறவு தான் பரங்கி நாட்டுல விக்ட்டோரிய மஹாராணி நம்ம நாட்டுக்கும் சேர்த்து அரசியா பட்டம் சூட்டிக்கிட்டாகளாம். சுயம்புலிங்க வியாவாரி நாலு ஊரு போறவரு, அவரோட பேசிட்டு இருந்ததுல பொழுது போனதே தெரியல, காலையில பேச்சியம்மா வந்ததையும் புடவைய எடுத்து வச்சதையும் மறந்துட்டேன். அவர் போன பிறகு திடுக்குனு நினைவு வந்து அரங்குல போய் பார்த்தா, பேச்சியம்மாவுக்கு எடுத்து வைச்ச சேலையும் அவர் கட்டோட போயிருச்சு. அதான் வேற புடவைய எடுத்துக்கிட்டு ஒரெட்டு போய் வாங்கிட்டு வந்துட்டேன்"
"அவுக அப்பவே போயிட்டாகளே, அதுவும் வண்டியில, சாத்தூருக்கா போய்ட்டுவாறீக" என முகவாயில் கைவைத்தபடி கேட்டாள் பாட்டி.
"இல்லத்தா, அவுக சிவகாசில உள்ள சோலிய எல்லாம் முடிச்சிட்டு, சிவகாசி தாண்டி, வழியில ஒரு கிணத்தடியில மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு, அவுகளும் சாப்பிடலாம்னு நின்னாக. இருட்டுக்குள்ள நான் ஓடி வாரத பார்த்த யாவாரி, முதல யாரோ களவானிப்பயனு நினைச்சு, வேட்டிய தார்பாச்சி, வண்டி மொகட்டுல சொருகியிருந்த கம்பையும் எடுத்துட்டாரு. நல்லா கம்பு சுத்துவாரு சுயம்புலிங்கம், அடவு வரிசையெல்லாம் கத்தவரு. அவுக ஊர்ல இரட்டை வால் கட்டி புலி வேஷம் போட்டு ஆடுவாராம். எங்கையும் ஒத்தைல யாவாரத்துக்கு போவாரு, வருவாரு. எதுக்கும் அஞ்சாத மனுசன். நான் யாவாரியைக் கண்டுக்கிட்டதும், தூரத்தில இருந்தே அவயம் போட்டுகிட்டே போனேன். என் குரலை தெரிஞ்சுக்கிட்டார். கூப்பிட்டு குடிக்க தண்ணி கொடுத்து என்னனு கேட்டார், விவரத்தை சொல்லி புடவைய கேட்டேன். கொண்டு போனதில ஒரு புடவைய கொடுத்திட்டு. யாவாரி சிரியோ சிரினு சிரிக்காரு. இதுக்கா, அண்ணாச்சி இந்த ராத்திரில ஓடி வந்தீகனு. கூட சேர்ந்து வண்டிக்காரனும் சிரிக்கான்"
பாட்டியும் சிரிச்சு மாய்ந்தாள். "அதுக்கு இப்படி ரவையிலயா ஓடுவீக, கைவிளக்கும் எடுக்காம, வேற புடவை எதாவது கொடுக்க வேண்டியது தான பேச்சியம்மாவுக்கு" என்றாள் பாட்டி.
தாத்தாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அடக்கிக்கொண்டார். கண்களில் சிரிப்போடு என்னையும் பாட்டியையும் பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. பொழுது விடிந்ததும், முதல் வேலையாக சுப்பையா பிள்ளை வீட்டுக்கு போய் பேச்சியம்மா சித்தியிடம் புடவையையும் கொடுத்துவிட்டு தான் ஓய்ந்தார்.
***
என் ஊர் மக்களை பார்ப்பது போல் உள்ளது 😪. தொடர்ந்து எழதுங்கள்.
பதிலளிநீக்குஸ்ருஷ்டி கீதத்தின், கிராமத்து வடிவம், அருமையாக, வந்துள்ளது. தொடர்க நண்பரே
பதிலளிநீக்குஇந்த பகுதி மிகவும் அருமையாக வந்துள்ளது அண்ணா
பதிலளிநீக்குகதைகள் வளர ஆரம்பித்து விட்டது... மேலும் மேலும் கேட்க ஆவலாக இருக்கோம்..
பதிலளிநீக்குவாக்கு பற்றிய விவரணை அருமை
பதிலளிநீக்கு