ஐயன் பந்தி - 12
புவியேழையும் பூத்தவளே - 8 செண்பகமும், மனோரஞ்சிதமும், செந்நிறத்தில் பூத்த அலரியும், காந்தளும், இளம் பொன்னிறத்தில் மகிழமும், கண்ணாயிக்குரிய செந்தாழை மடல்களும், செருவிளமும், கருவிளமும், வெண்ணிறத்தில் பலவகை மலர்களோடு கூட பவள மல்லிகை மலரும் கூட்டி தொடுத்த கதம்பத் தொடையை சாற்றி, பல வண்ணங்கள் கொண்ட தானையோடு செல்லியாயிக்கு பூசை. எழுவரிலும் இளையவள். அதனாலயே அனைவருக்கும் இனியவள். எண்ணி முடியாத முகங்கள் அவளுக்கு. புன்னகைக்கும் எவர் முகத்திலும் அவள் முகமே அக்கணத்தில் தோன்றி மறையும் என்பார்கள். சிறுபிள்ளைகள் சிரித்து விளையாடுவது கண்டால் காற்றாக மாறி அவர்கள் தலைகள் கோதி தானும் அவர்களோடு விளையாடுவாள். அவர்கள் இடும் கூச்சலாகி மலைகளில் மோதி எதிரொலிப்பாள். சிறுக்கி என்று இருந்தவள் உடலை பூக்கவைத்து பெண் என்று மலர்விப்பாள். சிறுவர்கள் கனவுக்குள் சென்று அமுதத்தின் மடை திறந்து, ஆண் என்று அறியவைப்பாள். இவள் தீண்டும் வரை மழலை என்று இருந்தவர்கள், இள வியர்வை மணமும், முகத்தில் பூங்குருக்களும் கொண்டு இனிமை கொள்வார்கள். ஆணை பெண்ணுக்கும் பெண்ணை ஆணுக்கும் அறிவிப்பவள் அவ...