ஐயன் பந்தி - 9
புவியேழையும் பூத்தவளே - 5 ரக்தாக்ஷி ஆண்டு சைத்ர மாதம், சித்ரா நக்ஷத்திரமும் பூர்ண பொர்ணமியும் கூடிய புதன் கிழமையில் ஆனேகுந்தி சுப்பிரமணிய சர்மனாகிய நான் குலதெய்வமாகிய தொண்டிக்கரை ஆகாச கருப்பனின் அருளாலும் சன்னாசிகள் கொடுத்த மந்திரத்தின் பலத்தாலும் சப்த தாதுக்களில் நான்காவதாய் அமைந்த மேதஸின் அபிமான தேவதையாகிய காகினி தேவியை கண்டேன். மாலை கனிந்து இரவு அணையும் வேளையில், சன்னாசிகள் கொடுத்த மந்திரத்தை உருவேற்றியிருந்த போது கூடத்தில் இட்டிருந்த நான்முக விளக்கில் எரிந்த சுடர்கள் நான்கிலிருந்தும் ஒளியென இறங்கி ஓர் உருவம் கொண்டு என் முன் அமர்ந்தாள் காகினி தேவி. "துஷ்டி புஷ்டி மதி த்ருதி என்னும் நான்கும் என்னுடைய முகம்" என்றாள். "உடலில் மேதஸ் என்னும் கொழுப்பின் வடிவில் இருப்பவள். அனைத்தையும் உடையவள் என்னும் நிறைவும், அனைத்தினுள்ளும் நிறைந்து பலம் என்றும், அனைத்தையும் அறிகின்ற அறிவென்றும், உடலிற் செயலில் வெளிப்படும் தைரியம் என்றும் விளங்குபவள் நானே. அன்னை என்றே உன் முன் வந்தேன். அன்னை என்பதாலேயே நிறைந்த கர்வம் உடையவளானேன். அதிகர்விதா என்று என்னை அழைக்...