ஐயன் பந்தி - 5
புவியேழையும் பூத்தவளே - 1 தாத்தா கேட்டார் ஐயரிடம் “உங்க வீட்லயும் வைத்தியம் உண்டாடா?” “இல்லடா கோவிந்தா, நம்மாத்துல வைத்தியம் இல்ல. கருப்பன் வந்து எல்லா விவரமும் சொன்ன பிறகு, என் பிதாமஹர்ல யாரோ ஒத்தர், தொண்டிக்கும் காரைக்குடிக்கும் எல்லாம் போய் பார்த்திருக்கா. அவர் தான் முன்னாடி ஆனேகுந்தில இருந்து வந்து கருப்பன் கிட்ட அடைக்கலம் ஆன கதை எல்லாம் தெரிஞ்சிண்டு வந்து சொன்னது. ஆனமந்தி வைத்தியர் குடும்பம் பேரும் சீருமா நன்னா இருக்காளாம் காரைக்குடில. சுப்பிரமணிய ஐயன், அவர் சன்னாசிட்டே இருந்து மந்திரம் வாங்கிண்டது, பதினோரு வருசத்துல வைத்திய சாஸ்திரத்த தெரிஞ்சிண்டது எல்லாத்தையும் 108 ஓலைல எழுதிவச்சிருக்கிறார். அவா ஆத்துல அந்த ஓலைக்கட்ட தலைமுற தலைமுறையா படி எடுத்து வச்சிண்டு, அதே முறைப்படி அடுத்தடுத்த தலைமுறைக்கு சொல்லியும் வைக்கிறா. அந்த படி ஓலையில ஒரு கட்ட என் பிதா மஹர் ரொம்ப பிரயாச பட்டு வாங்கிண்டு வந்தாராம். ஆனால் மந்திரம் இல்லாம வெறுமனே ஓலைய படிச்சா ஒன்னும் விளங்காதுனு சொல்லிட்டு கொடுத்தாளாம். தெலுகும், சமஸ்க்ரிதமும் கலந்து எழுதினது. அது மட்டும் நம்மாத்துல பூஜா முறியில உண்டு. ...