ஐயன் பந்தி - 22
நெருப்பு திருவாடல் - 9 தூயதை மட்டும் கோரும் தெய்வங்களுக்கு கொடுக்க நம்மிடம் எதுவுண்டு? இனி வருபவளோ பெருங்கருணையின் பேரூற்று, எளியவள், எச்சிலும், மிச்சிலும் கூட போதும் என வந்தவள். நம் மனதை விட எச்சிலான பண்டம் எது? அதை விடவும் அழுக்கும் குப்பையும் நிறைந்த இடமொன்று உண்டா? நம் மனமெனும் குப்பைக் குவியலின் மேல் அரியணையென வீற்றிருந்து யாழ் மீட்டுபவள். இவளைப்போல் மானிடரின் குறை அறிந்து ஏற்கும் இன்னொரு தெய்வம் இவ்வுலகிலில்லை. குற்றங்கள் மட்டுமே கொண்டவரையும் விலக்காமல் அவர் குற்றங்களையே குணங்கள் எனக் கொள்பவள்! நாமனைவரும் எளிய கை கால் உதறி விளையாடும் மழலைகளே அவள் மடியில். அவள் வயிற்றில் சுமந்திருக்கும் கருவுக்குள் நிறைந்து, அவளையே உண்டு அவளின் உள்ளேயே உறங்கும் குழந்தைகள். எதன் பொருட்டும் கைவிடாத ஒரே தெய்வம். குறைகள் முற்றும் இல்லாத முழுமையும் தூயதான ஒருவன் அவளைக் கடந்து போகக்கூடும். அப்போதும் அவள் கைவிட்டதால் அல்ல. இவளே உங்களுக்கு மூன்றாம் மகவாக பிறப்பாள். முறிந்த பழஞ்சுளவால் ஏந்தி, பழந்துணியால் சுற்றி வையுங்கள...