ஐயன் பந்தி - 21
நெருப்பு திருவாடல் - 8 மகிஷனின் கொடும் படையெடுப்பையோ, அதன் மூலமாக நிகழ்ந்த அட்டூழியங்களை பற்றியோ எதுவும் அறியாது, ஏழாம்கருங்கடலின் ஆழத்தில், ஒளி ஊடுருவி அலைபாயும், பளிங்கு மாளிகையில் வாசுகி, ஆதிசேஷன், கார்கோடகன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மகாபதுமன் என்னும் எட்டு நாகங்களையும் அவர்களின் பத்தினிமார்களோடு நிலைநிறுத்தி, மழலை வேண்டி தவம் இருந்தனர் நாககன்னி என்னும் நாக அரசியும், அவள் கணவனான நாகராஜனும். அவர்கள் ஒருவருக்கொருவர் அல்லாது வேறொருவரையும் காணாத, வேறொருவருடனும் உரையாடாத நோன்பு நோற்றிருந்தனர். தக்ஷக பெருங்குலத்தில் பிறந்து, அனந்தர் குலத்தில் உதித்த நாகராஜனை மணமுடித்த நாளில் இருந்து, நாககன்னி ஒரு குறையும் கொண்டதில்லை. ஆனாலும் மணமுடித்து பன்னிரு வருடங்கள் ஆகியும் மழலைச்செல்வம் மட்டும் தங்கவில்லை. நாகராஜன் அரச குலத்தில் பிறந்தவன் அல்ல, அனந்தர் குலத்தில் பிறந்த எளிய காவலன், நாககன்னியோ தக்ஷக மன்னரின் பட்டத்து இளவரசி. அவள் தந்தையாகிய அரசன் தக்ஷகன் நடத்திய மகள் வேட்டல் பந்தலில் அஷ்ட நாகவினங்களின் பல அரச குலத்தவர்கள் வந்து பல விதமான வரிசைகள் ...