ஐயன் பந்தி - 16
நெருப்பு திருவாடல் - 3 முதல் நாள் கதை முடிந்து வீடு திரும்பிய போது, வானம் புலர சிறு பொழுதே இருந்தது. இன்னும் ஏழு நாள் கதை மீதம் இருக்கிறது. அக்கா குருவிகள் கொல்லைகளில் மரத்துக்கு மரம் அமர்ந்து சிலம்பும் அக்கோவ் குரல்கள் கேட்க தொடங்கியிருந்தன. நான் கோவிந்தன் தாத்தாவீட்டு திண்ணையிலே கையை தலைக்கு வைத்து படுத்து உறங்கிவிட்டேன். ஆச்சி தான் எழுப்பி உமிக்கரியும் செம்பில் நீரும் கொடுத்து பல் விளக்கச்சொல்லி, நீராகாரமும் கொடுத்தாள். என்றும் இல்லாத வழக்கமாக ஐயர் காலையிலேயே தெருவுக்குள் வந்தார். தாத்தா வழக்கம் போல கருக்கலிலேயே நீராடி நெற்றியில் இட்ட திருநீற்றோடு, முந்தைய இரவின் உறக்க சடவே இல்லாமல், அமர்ந்திருந்தார். ஐயர் திண்ணையில் அமர்ந்தபடி, உறக்கம் முழுதும் கலையாத என்னைப்பார்த்து, "என்னடா அம்பி வில்லடியா நேற்று" என்று விட்டு தாத்தாவிடம், என்ன கதைடா படிச்சான் என்றார். "அஷ்ட காளி கதை" என்றார் கோவிந்தன் தாத்தா. "ஏன் டா, அம்பி சுந்தரம் நீ கேட்ட கதையை சொல்லேன் கேட்போம்" என்றார் ஐயர். நானும் நினைவில் இருந்து கதையை திரட்டி சொல்லத்துவங்கினேன். பாட்டியும் தாத்தாவும் கூட அ...